எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 12 அக்டோபர், 2026

தெனாலி ஜெயராம்

தெனாலி ஜெயராம்


கி கம். ந க த ர காம். தி ரி கி ட ந க த ர கம். ந க த ர கம். தி கம் தி த் தி ரி கி ட ந க த ர கம். என்று ஓங்கி ஒலிக்க ஆரம்பிக்கின்றன செண்டை வாத்தியங்கள். நெஞ்செல்லாம் அதிர்ந்தது. திரிகிடநகதரகம். திரிகிடநகதரகம். என்று அவர்கள் வாசித்த அரைமணி நேரமும் அங்கே இங்கே அசையமுடியவில்லை.அதைக் கேட்கக் கேட்க ஒரு மாதிரி தெய்வத நிலை அடைந்து சன்னதம் வந்துவிடும்போலிருந்தது. அவ்வளவு பவர்ஃபுல் வாத்தியம். துவஜஸ்தம்பம் எல்லாம் அதிர்ந்தது .. ஆர்த்தது. தீபங்கள் நிருத்தியமாடின. யானைகளின் முகபடாம்களின் மேல் வண்ணக் குடைகள் ஆலவட்டம் போட்டுக் கொண்டிருந்தன.

அது ஒரு பூரம் திருவிழா. பஞ்சவாத்தியத்துடன் அணி அணியாக நின்று செண்டை வாசித்தவர்களைத் தொலைக்காட்சி நெருக்கத்தில் காட்டியது. பரிச்சயமான முகம் ஒன்று. அட அது நடிகர் ஜெயராம்தான். மிகுந்த பக்தி சிரத்தையோடு முன்புறம் மாட்டிய செண்டையில் அநாயசமாக அதிரடியாக லயித்துப் போய் வாசித்துக் கொண்டிருந்தார். இவரின் குரு பல்லாசனா நந்தகுமார்.

மலையாளக் கரையோரம் எனக்குப் பிடித்த விஷயங்களில் குமாரன் ஆசான், வைக்கம் முகம்மது பஷீர், அடூர் கோபாலகிருஷ்ணன், அத்தப்பூக் கோலம், செம்மீன், அடப் பிரதமன், ஆற்றுக்கால் பகவதி, அனந்த பத்மநாப சுவாமி, கதக்களி, களரி, குமரகம், ஓணம் என்று பலவும் உண்டு. அந்த வரிசையில் நடிப்பில் ப்ரேம் நசீர், பாலாஜி, மம்முட்டி, லாலேட்டன், ஜெயராமையும் பிடிக்கும்.

இவர் பிறந்தது டிசம்பர் 10, 1965. பெற்றோர் சுப்ரமண்யம், தங்கம். அழகான சதுரவெட்டான அப்பாவி முகம், ஜைஜாண்டிக் உருவம். மிமிக்ரி ஆர்டிஸ்ட் என்பதால் மாடுலேஷனோடு அவர் செய்யும் நகைச்சுவை சிறப்பு. ஒரு முறை தனது வீட்டில் வேலை செய்யும் பெண்ணைப் பற்றி இவர் கூறிய கருத்தைப் படித்து இவர் மேல் கோபமும் அடைந்திருக்கிறேன்.

காலடியில் ஸ்ரீ சங்கரா கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தபின் கலாபவன் என்னும் மிமிக்ரி குழுவில் இணைந்தார். இந்தக் குழுவிற்காக அவர் ஏறிய மேடைகளே அவருக்குத் திரைப்பட வாய்ப்புக்களைப் பெற்றுத் தந்தன.

வீட்டில் யானைத்தந்தங்கள் எல்லாம் வைத்து அழகு படுத்தியுள்ளார். நடிகை பார்வதி இவர் மனைவி. இரு குழந்தைகள், காளிதாஸ், மாளவிகா. வெளியில் செல்லும்போதெல்லாம் பாதையைச் சரிவரப் பார்க்காமல் அடிக்கடி இவர் மனைவி கீழே விழுந்து காலை உடைத்துக் கொள்வார் என்று இவர் ஒரு பத்ரிக்கையில் பேட்டி கொடுத்திருந்தார். இதைப் படித்துவிட்டு அவ்வாறே அடிக்கடி நானும் காலை உடைத்துக் கொள்வதை எண்ணிச் சிரித்து வைத்தார் என் கணவர்.

கோகுலம், புருஷலட்சணம், பிரியங்கா, கோலங்கள், முறைமாமன், பத்தினி, துப்பாக்கி, தலையணை மந்திரம், சுபயாத்திரை, பட்டாபிஷேகம், ஃப்ரெண்ட்ஸ், உத்தமன், மயிலாட்டம், பஞ்சாமிர்தம், ரகஸ்ய போலீஸ், பொன்னர் சங்கர், பொன்னியின் செல்வன், தெனாலி, பஞ்சதந்திரம், ஜூலி கணபதி ஆகியவற்றில் நடித்துள்ளார்.

மலையாளத்தில்  200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதப் படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் மேலப்பரம்பில் ஆண்வீடு படத்தின் மூலம் மலையாள சூப்பர் ஸ்டாராக ஆனவர்! தமிழில் சிறந்த புதுமுகம் என்று கோகுலத்துக்காகவும், சிறந்த துணை நடிகர் என்று பஞ்சதந்திரத்துக்காகவும், தெனாலிக்காக சிறப்பு விருதும் பெற்றுள்ளார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றிருக்கிறார்!


1992 இல் கோகுலத்தில் அறிமுகம். இதில் அர்ஜுனோடு இரண்டு ஹீரோக்களில் ஒருவராக, புருஷ லட்சணத்தில் மனைவியை சந்தேகப்படும் கணவனாக, ப்ரியங்காவில் நீதிக்குப் போராடும் மனைவிக்கும் தன் பெற்றோருக்கும் நடுவில் தவிப்பவனாக, கோலங்கள், புருஷலட்சணத்தில் குஷ்பூவின் கணவராகப் பாத்திரமேற்று நடித்திருக்கிறார்.

துப்பாக்கியில் மேஜர் ரவிச்சந்திரன், பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான், முதல்வரின் குரலை இமிடேட் செய்து அவரைச் சிக்கலில் ஆழ்த்தும் மிமிக்ரி ஆர்டிஸ்டாக சாணக்யன், வில்லன் ஏசிபியாக சரோஜா, போதைப் பொருள் கடத்தத் துணைபுரிந்து முடிவில் மடியும் தூதரக அதிகாரியாக தாம்தூம், மறதியுடைய கல்லூரி முதல்வராக ஏகன் ஆகியவற்றில் நடித்துள்ளார். என்ன ஒன்று சரத்பாபு போலத் தமிழ்ப் படங்கள் இவரை ஊறுகாயாகவே பயன்படுத்தி உள்ளன.

எனக்குப் பிடித்த படங்கள் ஜூலி கணபதி, பஞ்சதந்திரம், தெனாலிதான். மிஸரி என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் ஜூலி கணபதி. இதில் தென்காசி பாலகுமாரன் என்ற எழுத்தாளர் கதாபாத்திரம் ஜெயராமுக்கு. வால்யூம் வால்யூமாக அவர் எழுதி வரும் மங்கா என்ற தொடரைச் சேகரித்து வரும் ஜூலி கதாபாத்திரத்தில் சரிதா. அந்தத் தொடரின் கடைசி சில அத்யாயங்களை எழுத அவர் மலைப்பாங்கான இடத்துக்குச் செல்கிறார். அங்கே விபத்தில் சிக்கும் அவர் ஜூலியால் காப்பாற்றப்படுகிறார். ஆனால் என்ன கொடுமை! அதே ஜூலியே அவரைக் கைதியாக அடைத்துத் தொடரின் முடிவைத் தான் விரும்பும்படி மங்காவுக்கு உயிர்கொடுத்துத் திரும்ப எழுதும்படி மிரட்டித் திட்டுவதெல்லாம் தண்டுவடத்தைச் சிலீரென அடிக்கும் நடிப்பு.  

டாக்டர் கைலாஷாகத் தெனாலியிலும், ஐயப்பன் நாயராகப் பஞ்சதந்திரத்திலும் கலக்கி இருப்பார். மாடர்ன் ஸ்லாப்ஸ்டிக் வகைக் காமெடி பஞ்சதந்திரம். மனைவியை விட்டுப் பிரிந்திருக்கும் நண்பனை மனைவியோடு சேர்த்து வைக்கிறேன் என்று ஐந்து நண்பர்கள் அடிக்கும் லூட்டியே படம். இதில் ஐயப்பன் நாயராக ”என் மகனுக்கு நெஞ்சில் ஓட்டை” என அடிக்கடிப் புலம்புவதும், வைரம் பற்றிய ரகசியத்தைக் கசியவிட்டபின் “உன் மகனுக்கு நெஞ்சிலதான் ஓட்டை உனக்கு வாயிலே ஓட்டை” என்று ரம்யா கிருஷ்ணன் கிண்டலடித்துச் சிரிப்பதும் காமெடி.  

தெனாலி. உடலசைவிலும் டயலாக் டெலிவரியிலும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் வகையைச் சேர்ந்த காமெடி இது. அதிலும் சார்லி சாப்ளின் வகைக் காமெடியில் கலக்கும் கமலுக்கே போட்டியாக இவர் நடித்துள்ள தெனாலி பார்த்து தியேட்டரே அதிரச் சிரித்தது. இலங்கைப் போரின் உச்சக்கட்டத்தில் பயம் என்னும் மனநோய் பீடித்த நோயாளியான தெனாலி டாக்டர் பஞ்சபூதத்திடம் வருவதும் அவர் கைலாஷிடம் தன் குணப்படுத்த முடியாத நோயாளியைக் கையகப்படுத்தி அவர் படும் இடையூறுகளை ரசிப்பதும்தான் படம். இதில்தான் ஜெயராமின் நடிப்பு மெருகேறி உள்ளது.

கமல் கிழித்துப் போடும் ஃப்ளைட் டிக்கெட்டைப் பார்த்துப் பரிதவிப்பதில் ஆகட்டும், போலீஸ் ஸ்டேஷனில் கோபப்படும் இவரைப் பாத்துப் பயப்படும் கமலிடம் ”ட்ரீட்மெண்ட்” என்று கண்சிமிட்டி  நாக்கைச் சுழட்டுவதிலாகட்டும், தங்கையோடு மலை வீட்டுக்குத் திரும்பி வரும் கமலைக் கண்டு பதைப்பதிலாகட்டும், தெனாலியுடன் குடும்பத்தார் கொண்ட நெருக்கத்தைப் பார்த்து மனைவியும் தங்கையும் தெனாலியுடன் ஆடிப் பாடுவதாகக் கனவு கண்டு வெறுப்படைவதிலாகட்டும், டைமண்ட் பாபு என்று நினைத்துப் போர்த்திப் படுத்திருக்கும் கமலை மாப்பிள்ளை மாப்பிள்ளை என்று அழைத்து மகிழ்ச்சியோடு பேசுவதிலாகட்டும், டைம்பாமை வீட்டுக்குள் வைத்துவிட்டு வரும் கமலையும் வெடித்துச் சிதறும் வீட்டையும் பார்த்துப் பதறிச் சிதறுவதாகட்டும், பாரலிடிக் அட்டாக்கோடு சேரில் அமர்ந்திருக்கும் இவரிடம் ஆசீர்வாதம் வாங்கக் கமல் ஜோதிகா ஜோடி வரும்போது வாயைக் கோணி ”நல்லாவே இருங்க” என்று வாழ்த்துவதிலாகட்டும், இஞ்சாருங்கோ என்று மீனா வரும்போது “என் தங்கச்சி வாழ்க்கையை ஏண்டா கெடுத்தே” என்று ஓடிவருவதிலாகட்டும், எல்லாமே சிறப்பு. தமிழில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் இந்தப்படத்தாலேயே அவர் ரசிகர்களால் என்றும் நினைவுகூரப் பெறுவார் என்பதால் நடிகர் ஜெயராமுக்கு வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)