எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 அக்டோபர், 2026

புரட்சி ராணி கிளர்ச்சியின் பேரணி மஹாராணி ஜிந்த் கவுர்

புரட்சி ராணி கிளர்ச்சியின் பேரணி மஹாராணி ஜிந்த் கவுர்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரிட்டிஷார் இந்தியாவின் பல்வேறு சமஸ்தானங்களையும் தங்கள் கைப்பிடிக்குள் கொண்டு வந்தனர். நேபாளத்தின் பிரதமர் பீம்சென் தாபாவும், சீக்கிய இராஜ்ஜியத்தின் மஹாராஜா ரஞ்சித் சிங்கும் ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு ரகசியக் கூட்டணியை அமைத்தனர். காபூலில் இருந்து காஷ்மீர் டெல்லி வரை பரவி இருந்தது மஹாராஜா ரஞ்சித் சிங்கின் ஆட்சி.

ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட இந்தியப் பேரரசர்கள் ஒன்று பதவி நீக்கம் செய்யப்பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர். 1948 இல் ஹைதராபாத நிஜாம் ஆஸ்திரேலியாவுக்கும், 1857 சிப்பாய்க் கலகத்துக்குப் பின் முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபர் பர்மாவுக்கும், 1799 இல் மைசூர் புலியான திப்பு சுல்தான் கல்கத்தாவுக்கும் நாடு கடத்தப்பட்டனர்.

இந்த வரிசையில் முதன் முதலில் தன் மகன் துலிப் சிங்குக்கு ரீஜண்டாகவும் பின் லாகூரிலிருந்து பஞ்சாபுக்கும் நாடு கடத்தப்பட்டவர் ராணி ஜிந்த் கவுர். இரும்புப் பெண்மணி, பஞ்சாபின் சிங்கம் ரஞ்சித் சிங்கின் மனைவி, புரட்சி ராணி, ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்த முதல் சீக்கிய ராணி என்றெல்லாம் புகழப்படும் இவரின் ஆளுமைத் தன்மை வியக்கத்தக்க ஒன்று. எத்தனையோ துரோகங்களையும் சோகங்களையும் வாரிசுச் சண்டைகளையும் எதிர்த்துத் துடிப்பாக வாழ்ந்தவர். தானொரு ரப்பர் ஸ்டாம்பு ராணி அல்ல என நிரூபித்தார், அந்தத் துணிச்சலான ஆளுமை.

மஹாராணி ஜிந்த் கவுர் 1843 முதல் 1846 வரை மூன்றே ஆண்டுகள்தான் சீக்கியப் பேரரசின் முதல் பெண் ஆட்சியாளராக இருந்தார். தான் எண்ணியவற்றைச் செய்யும் வலிமையும் அரசியல் தந்திரமும் வாய்க்கப்பெற்றவர். ஆனால் ஆங்கிலேயர்களை நடுங்கச் செய்த முதல் சீக்கிய ராணி.  அவரின் அரசியல் சதுரங்கத்தைக் கண்டு மிரண்ட ஆங்கிலேயர்கள் ”பஞ்சாபின் மெஸலினா” என்று பெயரிட்டார்கள். சீக்கியப் பேரரசர் பஞ்சாபின் சிங்கம் என்று புகழப்பட்ட முதல் மகாராஜா ரஞ்சித் சிங்கின் இளைய மனைவி, கடைசி மகாராஜா துலிப் சிங்கின் தாய்.  இவரது அழகும் ஆற்றலும் புத்திசாலித்தனமும் காண்போரை வியக்க வைக்கும்படி இருந்தது. .

ஜிந்த் கவுர் ஔலாக், 1817 இல் குஜ்ரன்வாலாவின் சாச்சர் என்னும் ஊரில் மன்னா சிங்க் ஔலாக்கின் மூன்றாவது மகளாகப் பிறந்தார். மன்னா சிங் அரச குடும்பங்களின் மேற்பார்வையாளராகப் பணிசெய்து வந்தார். ஜிந்த் கவுரின் சகோதரர் ஜவஹர் சிங் ஔலாக். மூத்த சகோதரி பதானாவின் தலைவரான சர்தார் ஜ்வாலா சிங் பதானியாவை மணந்தார். தன் மகள் ஜிந்த் கவுரின் அழகையும் எழிலையும் நற்பண்புகளையும் மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் மன்னா சிங் புகழ்ந்து கூறினார். இதனால் கவரப்பட்ட மன்னர் தன் ‘அம்பு மற்றும் வாளை ’சாச்சருக்கு அனுப்பி ஜிந்த் கவுரைத் திருமணம் செய்து கொண்டார். செப்டம்பர் 6, 1838 இல் அவர்களுக்கு துலிப் சிங் என்றொரு மகன் பிறந்தார்.

எதிர்பாராத விதமாக மஹாராஜா ரஞ்சித் சிங் இறந்ததும் சீக்கிய ராஜ்ஜியம் சிதறியது. துலிப் சிங் குழந்தையாக இருந்ததால் மஹாராஜா ரஞ்சித் சிங்கின் மற்ற மூன்று மனைவியரோடு ஜிந்த் கவுர் சதி என்னும் உடன்கட்டை ஏறவில்லை. மஹாராஜாவின் சகோதரர் குலாப்சிங்கால் ஆளப்படும் ஜம்முவில் ராஜா தியான் சிங்கின் பராமரிப்பில் மறைந்து வாழ்ந்தனர்.

ரஞ்சித் சிங்கின் முதல் மூன்று மகன்களும் இறந்துவிட மஹாராஜா ஷேர் சிங் ஆட்சிக்கு வந்தார். செப்டம்பார் 16, 1843 இல் ஷேர் சிங்கும் அவரது வசீரும் கொல்லப்பட துலிப் சிங் தனது ஐந்தாவது வயதில் செப்டம்பர் 5, 1843 இல் இராணுவத்தினால் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கப்பட்டார். இதனால் ஜிந்த் கவுர் தனது மகனின் சார்பாக ரீஜண்ட் ஆனார். துலிப் சிங்கின் ஆலோசகராக ஹிரா சிங் நியமிக்கப்பட்டார். ஆனால் முதலில் ஹிரா சிங் இளம் மகாராஜாவையும், அவரது தாயையும் ஒரு பொருட்டாகவே கருதாமல் ஆட்சியை நடத்தி வந்தார்.

இதனால் கோபமுற்ற ஜிந்த் கவுர் தனது மகனின் உரிமைகளையும், தனது பதவியையும் உரிமையையும் பாதுகாக்குமாறு இராணுவத்தினரிடம் கேட்டுக் கொண்டார். மகாராஜாவின் உண்மையான வாரிசு துலிப் சிங்தான். இதை கல்சா உறுதி செய்தது. சபை அவளை ஆதரித்தது. கல்சா இராணுவம் சுமார் 80,000 வீரர்களுடன் பலமாக இருந்தது. சமீபத்தியத் தொழில் நுட்பத்துடன் கல்சா இராணுவம் 1,20,000 வீரர்களாக விரிவடைந்தது. இதனால் ஜிந்த் கவுர் இராணுவத்தின் உதவியுடன் படிப்படியாக ஆட்சி அதிகாரங்களைக் கைவசப்படுத்தினார். தனது முக்காட்டைத் துறந்தார்.

கல்சாவின் உச்ச கவுன்சிலை மறுசீரமைத்தார். இராணுவத்திற்கும் ஆட்சி பீடத்துக்கும் இடையில் சமநிலையைக் கொண்டு வந்தார். நீதிமன்றத்தையும் நடத்தினார். இராணுவத்தினரின் பலத்தைப் பெருக்கி அவ்வப்போது அவர்களோடு எழுச்சி உரையும் ஆற்றினார். மேலும் பல்வேறு வியாபாரங்களையும் அரசு நிர்வாகமே பொதுவில் ஏற்று நடத்தும்படிச் செய்தார். 

இத்துடன் முடிந்துவிடவில்லை ராணியின் போராட்டம். குடும்ப உறவினர்களின் குழப்படிகளையும் நிர்வாகக் கோளாறுகளையும் சமாளித்தார். துலிப் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரரான பஷௌரா சிங் கன்வர் துலிப் சிங்கிற்குப் பதிலாகத் தான் பதவி ஏற்க முயன்றார். நிலவுடைமைப் பிரபுக்கள் ஹீரா சிங்கால் போடப்பட்ட வரிவிதிப்பைக் குறைக்கவும், தங்கள் நிலங்களை மீட்டெடுத்து அவற்றுக்கான மானியம் பெறவும் விரும்பினர். இராணுவத்தில் சம்பளப் பற்றாக்குறை.  நிர்வாகச் செலவோ அதிகரிக்க வரவோ ஒன்றுமில்லை என்னும் நிலை.

ஜம்முவின் ராஜாவான குலாப் சிங் டோக்ரா லாகூரின் கருவூலத்தைக் கவர்ந்து கொண்டார். சீக்கியர்களின் பல்வேறு பிரிவினரிடையே அதிகாரப் போட்டிகள் வேறு நீடித்தது. இதில் பலர் எல்லையில் குவிந்து நாட்டைக் கபளீகரம் செய்யக் காத்திருக்கும் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் இரகசியமாகக் கை கோர்த்தனர்.

அரசியலில் பக்குவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் இராணுவத் தலைவர்களின் ஆலோசனை மற்றும் ஆதரவைப் பெற்று மகாராணி அனைத்தையும் சமாளித்தார். இராணுவத்தின் ஊதியம் உயர்த்தப்பட்டது. தனது அதிகாரத்தை வலுப்படுத்த ஹசாரா மாகாணத்தின் ஆளுநரும், சீக்கிய பிரபுக்களில் வலிமை வாய்ந்தவருமான சத்தர் சிங் அடாரிவாலாவின் மகளை துலிப் சிங்கிற்குத் திருமணம் செய்து வைத்தார்.

குலாப் சிங் லாகூருக்கு வரவழைக்கப்பட்டார். 68 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தி நன்னடத்தைக்கு உறுதி அளித்தபின் ஜம்முவுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டார். ஹீரா சிங்கிற்குப் பதிலாக ஜவஹர் சிங் அரசரின் ஆலோசகராக ஆக்கப்பட்டார். 1845 இல் பஷௌரா சிங் திரும்பவும் பதவி ஆசையில் லாகூருக்கு வந்தார். அவருக்கு அதிகப்படியான நிலம் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டும் ஜூலையில் அவர் அட்டோக் கோட்டையைக் கைப்பற்றித் தன்னைப் பஞ்சாபின் ஆட்சியாளராக அறிவித்தார். உடனே சத்தர் சிங் தலைமையில் ஒரு படை அக்கோட்டையை முற்றுகை இட்டு அவரைச் சரணடையக் கட்டாயப்படுத்தியது.

1845 செப்டம்பர் 21 ஆம் தேதி மகாராணியின் சகோதரர் ஜவஹர் சிங் பஷௌரா சிங்கைக் கொன்று விடும் நோக்கில் ரகசியமாக அட்டோக் கோட்டைக்குச் சென்று அவரைக் கொன்றார். எப்படியோ அவரது நடவடிக்கையைத் தெரிந்து கொண்ட பஞ்ச்கள் எனப்படும் படை வீரர்கள் மஹாராஜாவின் வாரிசை ஒரு வசீர் கொல்வதா எனக் கொந்தளித்தனர். ராணியின் முன்னிலையிலேயே அவரது சகோதரர் ஜவஹர் சிங் செப்டம்பர் 21, 1845 இல் லாகூர் கோட்டைக்கு வெளியே தூக்கிடப்பட்டார்.

1845 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் சர் ஹென்றி ஹார்டிங் சீக்கியர்களுக்கு எதிரான போரை அறிவித்தார். இது முதல் ஆங்கிலோ சீக்கியப் போர் எனப்படுகிறது. எதிர்த்துத் தாக்கத் தவறிய லால் சிங், மற்றும் ராஜா தேஜ் சிங் ஆகியோரின் துரோகத்தால் சீக்கியர்கள் ஆங்கிலேயர்களிடம் தோல்வியைத் தழுவினர். 10 ஃபிப்ரவரி 146 இல் சோப்ரான் போரில் சிக் கல்சா இராணுவத்தின் 20,000 சீக்கிய வீரர்கள் சட்லஜில் படகுகளோடு மூழ்கடிக்கப்பட்டனர்.

முதலாம் ஆங்கிலோ சீக்கியப் போரில் ஜிந்த் தோல்வியடைந்த பின்பு டிசம்பர் 1846 இல் ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் அவர் பதவியில் இருந்து கீழிறக்கப்பட்டார். இருந்தும் சீக்கிய எதிர்ப்பை ஒருங்கு படுத்திய அவரது சக்தியையும் செல்வாக்கையும் பறிக்க முடியவில்லை.

1846 , மார்ச்சில் லாகூர் உடன்படிக்கை கொண்டு வரப்பட்டது. அதன்படி ஏழு வயது துலிப் சிங் பஞ்சாபின் மஹாராஜாவாக நீடிக்கலாம். ராணி ரீஜண்டாகப் பொறுப்பேற்கலாம். ஆனால் கவுன்சில் ஆஃப் ரீஜென்ஸியால் அவரது அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டு ஆண்டுக்கு 1,50,000  ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 1847 இல் துலீப் சிங், தேஜ் சிங்கை சியால்கோட்டின் ராஜாவாக ஆக்க மறுத்தபோது ஹென்றி லாரன்ஸ் மகாராணியை சம்மன் கோபுரத்தில் சிறைப்பிடித்தார். அங்கிருந்து ஷேகுபுராவின் கோட்டைக்கு மாற்றி ஓய்வூதியத்தை 48,000 ரூபாயாகக் குறைத்தார்.

இராணிக்கு அவரது ஒன்பது வயது மகனை அவரிடமிருந்து பிரித்ததுதான் ஏக்கத்தை உண்டு செய்தது. லாரன்ஸுக்கு யாருடைய பராமரிப்பில் மகன் இருக்கிறானோ என்று மனம் பதைத்துக் கடிதம் எழுதியும் அவன் துலிப் சிங்கைத் திருப்பி அனுப்பவில்லை. இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட தன் மகனை அதன் பின் பதிமூன்றரை ஆண்டுகள் கழித்துத்தான் மஹாராணி சந்தித்தாள். 

அடுத்த ஆண்டே சர் ஃப்ரெடரிக் க்யூரி அவளைக் கிளர்ச்சியின் மொத்த வடிவம் என்று கூறி பஞ்சாபிலிருந்தும் நாடு கடத்தி வாரணாசியில் இருந்து சுமார் 45 கிமீ தொலைவில் உள்ள சுன்னார் கோட்டைக்கு மாற்றினார். அங்கே அவளது நகைகள் பிடுங்கப்பட்டன. ஆங்கிலேயர்கள் அவளை நடத்திய விதத்தைக் கண்டு சீக்கியர்கள் வெறுப்புற்றார்கள்.

ஒரு வருடத்துக்குள் அவள் கடுமையான கட்டுக்காவல் மிக்க சுன்னார் கோட்டையிலிருந்து வேலைக்காரி போல் மாறுவேடமிட்டுத் தப்பித்தாள். சுமார் 800 மைல்கள் காடு, மலை வழியாகப் பயணித்து 1849 இல் நேபாளத்தின் காட்மாண்டுவிற்குப் புகலிடம் கேட்டுச் சென்றாள். அவரது மகன் துலிப் சிங்கை இங்கிலாந்துக்கு அனுப்பி விட்டு ஜிந்தை லாகூரிலிருந்து பஞ்சாபுக்கு நாடு கடத்தினார்கள்.

நேபாளப் பிரதமர் மற்றும் ஜங் பகதூர் ராணி ஆகியோர் ராணிக்கு அடைக்கலம் கொடுத்தனர். நேபாள அரசு கொடுத்த ஊக்கத் தொகையுடன் பதினோரு ஆண்டுகள் சார்புர்ஜா தர்பார் என்ற புத்தம் புதிய குடியிருப்பில் ராணி தங்கி இருந்தார். அத்தனை வருடமும் அங்கேயும் அவள் சீக்கிய வம்சத்தைப் புத்துயிர் பெற வைத்துவிடுவாளோ என்றெண்ணி ஒரு பிரிட்டிஷ் உளவாளி அவளைக் கண்காணித்தபடியே இருந்தார். அப்படி இருந்தும் அவள் அனைத்துக் கிளர்ச்சியாளர்களுடனும் தொடர்பில் இருந்தார்.

இங்கிலாந்தில் வாழ்ந்த மகனுடன் இணைய அவர் செய்த முயற்சிகள் தோல்வியைத் தழுவின. 1861 இல் துலிப் சிங் தானே முயன்று தாயைக் காணக் காத்மாண்டு வந்தார். அப்போது பார்வைக் குறைவினால் ராணி பாதிக்கப்பட்டிருந்ததாலும் உடல் நலிவுற்று இருந்ததாலும் அவள் ஆங்கிலேயர்களுக்கு இனியும் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என நம்பி மகனைப் பார்க்க அனுமதிக்கப் பட்டார்.

அவள் தன் மகனைக் கல்கத்தாவில் ஜனவரி 16, 1861 இல் ஸ்பென்ஸஸ் ஹோட்டலில் சந்தித்தபோது தாய் , மகன் இருவரிடமும் ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கு அளவில்லை. அந்த நேரத்தின் சீனப் போரின் முடிவில் கல்கத்தா வழியாகத் தாயகம் திரும்பிய சீக்கியப் படைகள் இருவரின் இணைப்பையும் அறிந்து கொண்டாடித் தீர்த்தன.

தொடர்ந்து இங்கிருந்தால் மஹாராஜாவைத் தூண்டி ஆட்சிக் கட்டிலில் அமரும் ஆசையைத் தூண்டி விடுவாளோ என்றெண்ணிக் கவர்னர் ஜெனரல் லார்ட் கேனிங்க் இங்கிலாந்துக்கு அவளை அழைத்துச் செல்லும்படி மஹாராஜாவிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி துலிப் சிங் தாயைத் தன்னுடன் இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றார். அவள் தன் மகனை விட்டுப் பிரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். தன் வாழ்வின் கடைசி இரண்டு வருடங்களில், மகாராஜாவின் சீக்கிய பாரம்பரியத்தை நினைவூட்டி, ஒரு காலத்தில் அவனுடைய புகழ்பெற்ற சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிச் சொன்னாள்.

அவர்கள் மீண்டும் இணைந்த சிறிது காலத்திலேயே சிறுவயதில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய துலிப் சிங் சீக்கிய மதத்திற்குத் திரும்பினார். மேலும் தாயின் போதனைகளால் தூண்டப்பட்ட துலிப் சிங் தனது ராஜ்ஜியத்தை மீட்டுத்தர இந்தியாவின் மீது படை எடுக்குமாறு ரஷ்ய ஜார் மன்னரின் உதவி கோரி செயல்பட்டார். பிரிட்டிஷ் உளவாளிகள் அவரைக் கண்காணித்து வந்ததால் அவரது முயற்சிகள் தோல்வியைத் தழுவின.  

ஜிந்த் கவுர் 1817 முதல் 1863வரை 46 ஆண்டுகள் வாழ்ந்தார். வாழ்நாள் முழுவதும் தான் எதிர்த்த ஆங்கிலேயர்களின் நாட்டில், லண்டனில் உள்ள கென்சிங்டனில் இரு வருடங்கள் மகனுடன் வாழ்ந்து ஜிந்த் தனது 46 ஆவது வயதில் ஆகஸ்ட் 1, 1863 இல் இறந்தார். அங்கே கென்சல் க்ரீனில் அடக்கம் செய்யப்பட்டாலும் பின்னர் 1864 இல் இந்தியாவுக்கு எடுத்து வரப்பட்டு மும்பைக்கருகில் நாசிக்கில் தகனம் செய்யப்பட்டார். அவரது அஸ்தி லாகூரில் அவரது கணவர் ரஞ்சித் சிங்கின் சமாதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வாழும் வரை தீரத்துடனும் வீரத்துடனும் வாழ்ந்த அந்த இரும்புப் பெண்மணிக்குக் கென்சல் க்ரீனில் உள்ள தேவாலயத்தில் நினைவுச் சின்னம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)