பட்டாளத்து வீடு
சமீபத்தில் படித்த மிகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பு சாம்ராஜின் பட்டாளத்து வீடு. வெகுஜன வாசிப்புக்கு ஏற்ற அதே சமயம் நுண்ணிய இலக்கியத் தரமும் இயைந்து இருக்கும் நூல் இது.
மொத்தம் பத்துச் சிறுகதைகள். நவரசம் என்பது போல் பத்தும் பத்துவிதம். குழந்தைகளின் வாழ்வியல் பார்வையிலிருந்து சொல்லப்பட்டுள்ளன அநேகம் கதைகள். குழந்தைகள் எதிர்கொள்ளும் துயரம், அவர்களின் மனப்பாடுகள், அவர்கள் சமூகத்தினாலும் தனிமனிதர்களாலும் எதிர்கொள்ளும் அபாயங்கள் என வித்யாசமான கதைக் களங்கள். ஆனால் புள்ளிவிவரமாக அடுக்காமலே ஒவ்வொன்றிலும் துல்லியம். சுவாரசியம் குன்றாது ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.
எந்தச் சொல்லை நிகழ்வை எழுதினாலும் அதன் தொடர்பாகவே அடுத்த நிகழ்வுகள் அமைகின்றன. எழுதும் ஒரு எழுத்து கூட புகுத்தப்பட்டதாகவோ மிகையாகவோ இல்லை என்பது நான் உணர்ந்த ஒன்று. கதையில் ஒரு துப்பாக்கி சுவரில் பொருத்தியிருப்பது வந்தால் ஒரு கட்டத்தில் அது சுடவேண்டுமென்று எங்கோ படித்திருக்கிறேன். அதுபோல் இந்நூலில் சாம்ராஜ் எழுதியிருக்கும் ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு எழுத்துமே மிக மிக முக்கியமானதாகிறது. சொல்லவந்த கருத்தை முன்மொழிவதாகவும் வழிகாட்டி இழுத்துச் செல்வதாகவுமே அமைகிறது.
நாயீஸ்வரன் பிரிந்த பறவைகளின் மொழியில் வருத்தத்தோடு முடிகிறது. கைலாசபுரம் புதுப்பேட்டையைப் போல ( பாதிதான் பார்த்தேன் இப்படத்தை ) ஒருவிதமாய் பட்டையைக் கிளப்பி அதன் பின் தோழர்களின் இணைவோடு மருத்துவமனை ஆதிக்கத்தை எதிர்ப்பதாக முடிகிறது.
பார்வதிக்குட்டி எதிர்பாராத முடிவு. அவளது எண்ணப் போக்கில் டைம் மிஷின் இருந்தால் நாம் கூட அவளைக் கொண்டு வந்து திரும்ப அதே ஷூட்டிங்கில் விட்டுவிடலாம் என்று கூட எண்ண வைத்த கதை. நன்றாக நடிக்கும் நடிகையர் பலர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாவதும் பின் நடிக்க வரும்போது பொதுஜனம் அங்கலாய்ப்பதும் நடக்கும். நடிப்பு என்பதைத் தொழில் என்றும் ஒரு பெண்ணுக்கு அவளுக்கு ஆர்வம் இருக்கும் தொழிலில் ஈடுபட முழு உரிமை இருக்கிறதென்றும் நினைப்பேன். இக்கதையின் முடிவு துணை நடிகையாயிருந்து இல்லத்தரசியான அவள் அதுவரை பட்ட துயரத்தினால் எடுக்கப்பட்டதாக இருக்கிறது.
இயற்கை ரொம்பவே யோசிக்க வைத்த கதை. பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்பது போல் எதையும் இப்படிக் கட்டம்போட்டுச் சட்டம் போட்டு அடக்கிவிட முடியாது என்று தான் விரும்பிய பெண்ணை விட்டு ஒருவன் வெளியேறும் கதை. முடிவிலும் அவன் அவளின் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுக்கிறான். இன்றைய பெண்களின் எதிர்பார்ப்புகளும் கொள்கைகளும் அசல் வாழ்விற்கு எவ்வளவு முரணாகின்றன என்பதையும் உணர்த்தியது.
நிறையக் கதைகளில் மலையாளப் பின்புலம். நான் சென்று வந்த திருவனந்தபுரம், கோயில் பீச் ஏரியாக்களில் இன்னுமொரு முறை உலாவந்தேன் அனந்தசயனபுரியில். தம்பதிகளுக்கிடையேயான பிணக்கு எதனால் ஏன் பிரிந்திருக்கிறார்கள் எனப் புரியவில்லை. இருந்தும் குழந்தையைக் கூடப் பார்க்க விடாமல் அனுப்பும் அளவு பெண் ஜீனியஸாகவும் ஆண் தோற்றுத் திரும்புபவனாகவும் காட்டப்பட்டது ஏனோ வலித்தது.
பட்டாளத்து வீடு முடிவில் புரையேறும் அளவு சிரித்த கதை. தாமஸ் இழிவரல் வைத்த கதை. ஆமாம் தாமஸுக்கு என்னாகிறது. இருவர் தற்கொலை செய்ய முடிவெடுக்க ஒருவன் தப்பிக்க இன்னொருவனுக்கு என்ன ஆச்சுன்னே சொல்லாமல் முடிந்துள்ளது. அவன் வரவேயில்லை என்றால் வேறு எங்கோ மாறிச் சென்றுவிட்டதால் வரவில்லையா அல்லது ராஜா சொன்ன முடிவை எடுத்துவிட்டானா ? அப்படியானால் ஒரு சின்னக் குழந்தை எப்படி அதைச் செய்யும் ? வீட்டை விட்டுக் காணாமல் போய்விட்டானா ?
களி தான் கொண்ட கொள்கைக்காக அதே இடத்தில் இருந்து போராடும் கதை. கதையின் சம்பவங்களில் கோர்வை இருந்தாலும் கதை நாயகனான பாண்டி இயக்கத்தில் ஈடுபடுவதற்கான வலுவான சுயகதையோ கொள்கைப் பின்புலமோ இல்லை. யாரால் எதால் இயக்கத்தில் ஈர்க்கப்பட்டான் ?
பொன்வண்டின் முடிவு கௌரவக் கொலையைச் சுட்டியதாக எண்ணுகிறேன். எல்லாவற்றின் முடிவையும் ஆசிரியர் படிப்பவர்களின் தீர்மானிப்புக்கே விட்டுவிடுகிறார். 13 குழந்தைகளைப் பாலுறவுக்குப் பயன்படுத்தும் வெளிநாட்டு ஆசாமியின் கதை. அநேக கதைகளில் கதை மாந்தர் அப்பாவி போலவே இருக்கிறார்கள். முடிவில்தான் சுயரூபம் வெளிப்படுகிறது.
இடதுசாரிக் கொள்கைகளைச் சில கதைகள் பிரஸ்தாபிக்கின்றன. எதையோ தேடி அலைந்து எங்கோ போகும் மனிதர்கள் சில கதைகளின் கதை மாந்தர்கள். பிரச்சனை இன்னதுதான் என்று கோடுமட்டும் காண்பிக்கிறார் ஆசிரியர். தீர்வு இதுதான் என்று எங்குமே முன் வைப்பதில்லை.
இயற்கை நேசம், பெண்களின் அகப் புறப் போராட்டம், அதை ஈடுகட்டப் பாடுபடும் ஆண்களின் அவசம், பொதுவுடமை சித்தாந்தம், கௌரவக்கொலை, குழந்தைகளைப் பாலியல் தேவைக்குப் பயன்படுத்துவது என்று இன்றைய எரியும் பிரச்சனைகளையும் சிக்கல்களையும் பேசியிருக்கும் மிகச் சிறந்த கதைத் தொகுப்பு இது.
நூல்:- பட்டாளத்து வீடு
ஆசிரியர்:- சாம்ராஜ்
பதிப்பகம்:_ சந்தியா
விலை :- ரூ 100/-

நல்லதொரு அறிமுகம். நன்றி.
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!