எனது நூல்கள்.

செவ்வாய், 14 ஜனவரி, 2020

கம்பர் எழுதிய இராமகாதை ( அயோத்திக் காண்டம்) - ஒரு பார்வை.

கம்பர் எழுதிய இராமகாதை ( அயோத்திக் காண்டம்) - ஒரு பார்வை.


கம்பர் அருளிய இராமகாதை ( அயோத்திக் காண்டம்) – ஒரு பார்வை.

இராமாயணத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். அதுவும் ஒவ்வொருவர் வசப்பட்டும் அதுவரை தென்படாத வித்யாசமான பாதை ஒன்றிற்கு அழைத்துச் செல்லும். இந்த நூலைத் தொகுத்து உரை கண்ட சொ முருகப்பனார் அது நூலாக்கம் பெறுமுன்பு இறைவனடி சேர்ந்ததால் இதற்கு நூல்முகம் எழுதியதாகக் குறிப்பிட்டு இருக்கிறார் ராய. சொ. அவர்கள்.


இராமாயணத்தில் பிற்காலத்தில் பல பாடல்கள் பலரால் புகுத்தப்பட்டுள்ளன என்று ஆய்ந்த சொ முருகப்பனார் அவர்கள் கம்பர் பாடல்கள் என்று தாம் கண்டுணர்ந்தவற்றை மட்டும் வைத்துக் கதைத் தொடர்பு விடாமல் ஆறு காண்டங்களையும் தொகுத்திருக்கிறார். இதில் பால காண்டம் முன்பே வெளியாகி விட்டது.

எல்லாக் காண்டத்துக்கும் பாடல்கள் தொகுத்த அவர் அவற்றுக்கு உரை எழுதுமுன்னே மறைந்தது துரதிர்ஷ்டமே. பத்தாயிரத்து ஐநூறு பாடல்களில் அவர் 3,248 பாடல்கள் மட்டுமே கம்பன் இயற்றியது என்று இனங்கண்டிருக்கிறார்.

பாலகாண்டம் – 402, அயோத்திக் காண்டம் – 623, ஆரணீய காண்டம் – 485, கிட்கிந்தைக் காண்டம் – 300, சுந்தர காண்டம் – 370, இலங்கைக் காண்டம் – 1068. ஆக மொத்தம் – 3,248.

கம்பர் எனை அறிந்து கையாண்டு கொண்டுவிட்டார்:
உம்பர் உவப்ப உரை காண்பேன்: இம்பர்இனி
வாழ்வார்க்கு இராமகதை வான்மருந்து: கேட்போரின்
ஊழ்போக்கும் என்றே உவந்து !.

உரைராம காதைக்கு உரைப்பன் என நின்றேன்:
வரையாதுஎன் ஆயுள் வகுப்பாய்! – வரைஉளதேல்
வரைக்குள் உரைமுடிய வன்மை அருள்வாய்!
தரைக்குள் புகழ்பெருகத் தான்.

இவ்வளவெல்லாம் ஆவலோடு இராமகாதை ஆறு காண்டத்துக்கும் உரை எழுத எண்ணியிருந்த சொ முருகப்பனாரை பாதி பூர்த்தி செய்யுமுன்னர் இறைவன் மிக விரைவில் தன்னிடம் அழைத்துக் கொண்டது வருத்தத்திற்குரியதே.

கடவுள் வணக்கம், மந்திரப் படலம், மந்தரை சூழ்ச்சிப் படலம், கைகேயி சூழ்வினைப் படலம், நகர் நீங்கு படலம், தைலம் ஆட்டுப் படலம், கங்கைப் படலம், வனம் புகு படலம், சித்திர கூடப் படலம், பள்ளி படைப் படலம், ஆற்றுப் படலம், குகப் படலம், கிளை நீண்டு நீங்கு படலம், கதைச்சுருக்கம், கதைப்பாத்திரங்கள், கதைக் குறிப்புகள், பாட்டு முதற் குறிப்பு என இதன் உட்பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 640 பக்கங்கள்.

”மந்திரக் கிழவரை வருகென்று ஏவினான்”. என்ற இடத்தில் ஆறாயிரம் மந்திரிகள் இருந்தாலும் அவர்கள் கருத்தால் ஒன்று பட்டிருப்பார்கள் என்று மந்திரக் கிழவரை வருகென்று ஏவினான் என்று ஒருமையில் மன்னன் அழைத்திருக்கிறார் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இதேபோல் வசிட்டரை நான்காவது மூர்த்தி ( கடவுள்) என்றும், 60,000 மனைவியர், 60,000 மந்திரியர், 60,000 அக்குரோணி சேனை என்று குறிப்பிடப்படுவதெல்லாம் மிகுதியைக் காட்டும் எண்ணாகக் கொள்ளப் பட்டிருக்கிறது என்கிறார்.

திருமாலுக்கு ஸ்ரீதேவி பூதேவி போல் இங்கே ராமனுக்கு சீதையையும் அடுத்து நிலமகளையும் மணம் செய்து வைக்க வேண்டுமென்று தயரதன் கூறுவது வித்யாசம். இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்றதும் கூனி கிளம்பினாள் என்று சொல்லுமிடத்திலேயே

இன்னல்செய் இராவணன்
இழைத்த தீமைபோல்
துன்னரும் கொடுமனக்
கூனி தோன்றினாள் என்றும்

எல்லா நூல்களிலும்

பூழிவெங்கானம் என்று இருக்க இதிலோ ஆசிரியர் அது ”பூழ்இரும் கானம் நண்ணி” என்கிறார். ஏனெனில் அது வெங்கானம் அல்லவாம் தண்ணிய கானம்தான் என்று அறுதியிடுகிறார். அருந்தவம் என்றால் மனைவியையும் விட்டுப் பிரிந்து தனித்திருந்து செய்யும் தவம். அதனால் ராமனுக்குப் பதினான்கு ஆண்டுகள் கழித்தே பிள்ளைப்பேறு ஏற்பட முடியும்.அதையும் தவிர்த்து விடலாம் என்றுதான் அருந்தவம் என்று கூறினாளாம்.

அதேபோல் ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள.. என்று சொல்லும்போது பதினான்கு ஆண்டுகள் மட்டுமல்ல இனி எப்போதுமே அவன் தான் ஆள்வான் என்ற பொருளிலும், நீ போய் வந்து அரசாட்சியை எடுத்துக் கொள் என்று கூறாமல் ”ஏழிரண்டாண்டின் வா “ என்று கூறினான் அரசன் என்று மட்டுமே கூறுகிறாள். படிக்கப் படிக்க கைகேயியை கூனி எப்படித் தீயினும் சிறந்த தீயாளாய் உருவாக்கினாள் என்று அச்சப்படுகிறோம்.

இழைக்கின்ற விதி முன்னே செல்ல, தருமம் அவன் பின்னே இரங்கி ஏக இராமன் கோசலையைப் பார்க்கச் சென்றதையும் சாமரம் வீசி வெண்கொற்றக்குடை பிடித்து வீரர் வர மகுடமணிந்து மகன் வரப்போகிறான் என்று அவள் ஆவலுடன் காத்திருக்குமிடத்தில் ஆவலால் தன் உள்ளம் ஒவ்வொரு சாண் உயர்ந்து கொண்டிருக்கிறாள் என்ற விளக்கத்தைப் படிக்குமிடத்துக் கண்கசிந்தது உண்மை. அதேபோல் தயரதன் “ உன்னின் முன்னம் புகுவேன் உயர்வா னகம்யான்” என்றான்.. என்ற இடத்தைப் படிக்கும்போதும் கலங்கியது.

நதியின் பிழையன்று என்று இராமன் இலக்குவனிடம் சமாதானம் கூறுமிடத்தும், பரதனைக் குகனும் குகனைப் பரதனும் வீழ்ந்து வணங்குமிடத்தும் கைகேயியைப் (அரசியல் கோட்பாடுகள் ) பற்றிக் குகனிடம் பரதன் உரைக்குமிடத்தும் உரையாசிரியர் தன் விளக்கங்களால் வியக்க வைக்கிறார். 

அரசர்கள் தவம் செய்யச் செல்லும்போது வில்லுடன் சென்றார்கள் என்பதற்கு ஆசிரியர் இராமனோடு அர்ச்சுனனை ஒப்புமை கூறியிருக்கிறார். இராமன் அரக்கர்களை அழித்து முனிவர்களின் தவத்தைக் காப்பதற்காக வில்லுடன் சென்றான் என்கிறார். இதற்கு 550 ஆவது திருக்குறளையும் ( கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ், களைகட்டதனோடு நேர் ) எடுத்துக்காட்டாய்ச் சுட்டுவது சிறப்பு.

பாட்டு முதற் குறிப்பு, கதைச் சுருக்கம், பாடல்களில் காணப்படும் கதைக் குறிப்புகள் ( கஜேந்திர மோட்சம்,சகரர்கள், இராகு கேது, வாமனன் உலகளந்தது ) ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் பற்றியும் விவரித்திருக்கிறார். “ அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தவாத்தொழில் தூதுவர்,சாரணர் என்றிவர் பார்த்திபர்க் கைம்பெருங் குழுவெனப் படுமே “ “கரணத்தியலவர், கருமவிதிகள், கனகச் சுற்றம், கடைகாப்பாளர், நகர மாந்தர், நளிபடைத் தலைவர், யானை வீரர், இவுளி மறவர், இனையர் எண்பே ராயமென்ப “ ( திவாகரம் ) இதுபோல் அரிய தகவல்கள் அடங்கிய தொகுப்பு இது.

அடுத்த பதிப்பு கொணரலாம். அப்படி வந்தால் படிக்கத் தவறவிடாதீர். குகனும் பரதனும் உரையாடும் இடங்களில் 7 பாடல்கள் மட்டும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமும் இடம்பெற்றுள்ளன. மற்றவையும் விருத்தப் பாக்களே. மொத்தம் 96 வகைப் பாக்கள் இடம் பெற்றுள்ளனவாம் !

நூல் :- கம்பர் அருளிய இராமகாதை. (அயோத்திக் காண்டம் )
உரையாசிரியர் :- சொ. முருகப்பன்
பதிப்பகம் :- கம்பர் பதிப்பகம்
விற்பனை உரிமை:- செல்வி பதிப்பகம்
முதற்பதிப்பு :- 1956
விலை :- ரூ 7-8-0

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...