செவ்வாய், 4 ஏப்ரல், 2017

தொ. பரமசிவனின் அழகர் கோயில் - ஒரு பார்வை.

டாக்டர் தொ. பரமசிவன் அவர்களின் இந்த ஆய்வுநூல் ஒரு ஆவணப் பதிவு எனலாம். மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறையால் பதிப்பிக்கப்பட்ட இந்நூலில் முழுக்க முழுக்கப் புள்ளிவிபரங்கள் நிறைந்த ஆதாரக்குறிப்புகள் விரவி உள்ளன.

மதுரையைச் சுற்றி உள்ள ஊர்களில் இருக்கும் பள்ளிக்குழந்தைகளுக்கு பிக்னிக் ஸ்பாட் என்றால் பள்ளியில் அழைத்துச் செல்லும் இடம் இதுவாகத்தான் இருக்கும். அழகர் கோயில், பழமுதிர் சோலை, ராக்காயி அம்மன் கோயில், பதினெட்டாம்படிக் கருப்பர் ஆகியோரை நாங்களும் தரிசித்து  வந்திருக்கிறோம் என்றாலும் மதுரை நகர் விட்டுத் தள்ளி தனிப்பட்ட மலைசார்ந்த வனாந்திரமான ஓரிடத்தில் அமைந்திருக்கிறது இக்கோயில்.

ஒரு முறை இக்கோயிலில் ஒரு முறை அரிவாள் வேண்டுதல் செலுத்தப்பட்டபோதும் கடந்து சென்றிருக்கிறோம். இந்நூலில் அனைத்தும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. 76 - 79 ஆகிய மூன்று ஆண்டுகளில் நிகழ்த்திய ஆய்வின் விளைவாக எழுதப்பட்டநூல் இது. நான்கு  பாகமாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது.முதல் பாகத்தில் அழகர் கோயிலின் அமைப்பு, தோற்றம், இலக்கியங்களில் இது பற்றிக் கூறப்பட்டிருப்பது, சமூகத்தொடர்பு, பல்வேறு சாதி சமயத்தாருடன் தொடர்பு, திருவிழாக்கள், மரபுக் கதைகள், செவிவழி வர்ணிப்புப் பாடல்கள், நாட்டுப்புறக்கூறுகள், பரம்பரைப் பணியாளர்கள், பதினெட்டாம்படிக் கருப்பசாமி, பழமுதிர்சோலை, வாலி வழிபாடு, கல்வெட்டுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன.

இரண்டாம் பாகத்தில் அழகர் அகவல்,வண்ணம், வர்ணிப்பு, வலையன் கதை, பதினெட்டாம்படிக் கருப்பர் உற்பத்தி வர்ணிப்பு, பிறப்பு வளர்ப்பு வர்ணிப்பு, ராக்காயி வர்ணிப்பும் கருப்பசாமி சந்தனம் சாத்தும் வர்ணிப்பு இடம் பெறுகிறது.

மூன்றாம் பகுதியில் வெள்ளியக்குன்றம் பட்டயம் 1, 2, தொழில் அட்டவணை, ஆட்டவிசேஷம் , கோடைத்திருநாள்  சித்திரைப் பெருவிழா, வெள்ளையத்தாத்தா வீட்டுப் பட்டய நகல் ஓலை இடம் பெற்றுள்ளன.

நான்காம்பாகத்தில் வேடமிட்டு வழிபடும் அடியவர்கள், வினாப்பட்டியும் விடையளித்தோர் பட்டியலும், சித்திரைத் திருவிழாவுக்கு மாட்டுவண்டி கட்டி வந்த அடியவர்களின் ஊர்கள், வரைபடங்கள், துணைநூற்பட்டியல், புகைப்படங்கள் என முழுமையான ஆய்வு நூலாகத் திகழ்கிறது.

கோயில் பற்றிய நூல்களில் இது அடியவர்களுடன் உள்ள உறவு, சமூக நம்பிக்கை, கர்ணபரம்பரைப் பாடல்கள், செவிவழிக் கதைகள், ஆகியவை பற்றியும் கூறுவதாக குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

கோயிலுடன் அனைத்துச் சாதியினருக்கும் உள்ள உறவு சித்தரிக்கப்படுகிறது. சிறு தெய்வ வழிபாட்டை முதன்மையாகக் கொண்ட மக்களின் பெருந்தெய்வக் கோயில் கொண்டுள்ள உறவினையும் உறவின் தன்மையையும் இந்நூல் விளக்க முற்படுகிறது.

பௌத்தக் கோயிலாக இருந்து வைணவக்கோயிலாக மாறியது என்ற கருத்து, நாட்டுப்புற மக்களை வைணவ அடியவராக்கி சமய முத்திரை பெறச் செய்வது, இந்திர வழிபாட்டிலிருந்து பலராம வழிபாடு மூலம் திருமால் நெறிக்குள் வந்தவராக பிற சாதியினர் சித்தரிக்கப்படுவது, அழகர் கோயிலில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை இருந்தது என்னும் நம்பிக்கை ஆகிய சர்ச்சைச் செய்திகளுக்கும் பஞ்சமில்லை.

அழகர்கோயில் இரணியன் கோட்டை, அழகாபுரிக் கோட்டை என இரண்டு கோட்டைக்குள் அமைந்த கோயில்.பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் பூதத்தாழ்வார், ஸ்ரீ ஆண்டாள் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத்தலம். ஒன்பதாம் நூற்றாண்டில் பௌத்தக் கோயிலாயிருந்து வைணவக்கோயிலாய் மாறியதற்கான சான்றுகள் சுட்டப்படுகின்றன. இங்கே மொட்டை போடுதலும் சமணர்களின் பழக்கத்தோடு ஒப்புமை சொல்லப்படுகிறது.

பரிபாடல்,  சிலம்பு , ஆழ்வார் பாசுரங்கள், அந்தாதி, கலம்பகம், தூது, பிள்ளைத்தமிழ், குறவஞ்சி, அலங்கார மாலை , அம்மானை, தசாவதார வர்ணிப்பு  போன்ற பல்வேறு சிற்றிலக்கியங்களில் இக்கோயிலின் பெருமை பாடப்படுகிறது. விமானம், ஸ்தல விருட்சம், புஷ்கரணி பல்வேறு தெப்பக்குளங்கள், தீர்த்தங்கள், அருவிகள் சுனைகள் பற்றியும் விளக்கப்படுகின்றன. வெள்ளியங்குன்றம் ஜமீந்தார், வாணாதிராயர்கள் ஆகியோர் கோயிலுடன் கொண்ட தொடர்பு விளக்கப்பட்டுள்ளது.

ஆண்டாரின் சமய அரசாங்கம், 18 சமயத்தார், கள்ளர் பெயர்க்காரணம் & திருக்கோலம், வளரி , வழிமறிப்புச் சடங்கு, இடையர், பள்ளர், பறையர் , வலையர் ஆகியோர் கோயிலுடன் கொண்ட தொடர்பு, வலையர் கண்டுபிடித்த அழகர்.நூபுர கங்கை, வேடுபறித்திருவிழா, ஆண்டாள் சூடிய மாலையை ஏற்றல், மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம், மீனாட்சி திருக்கல்யாணம், துலுக்க நாச்சியார் , சீர்வரிசை  , இஸ்லாம் மக்களும் திருவிழாவில் பங்கேற்பது ,திரியெடுத்தாடுவோர், திரியின்றி ஆடுவோர், சாட்டை அடித்தாடுவோர், துருத்திநீர் தெளிப்போர், சேவற்சண்டை, சாமியாடிகள், வைகானசர், பாஞ்சராத்திரர் வேறுபாடு, சமஸ்காரம்,  ராக்காயி, பதினெட்டாம்படிக் கருப்பு , சேஷப் ப்ரசாதம் , யாக்ஞோபவீதம் பற்றிய தகவல்கள் வியப்பூட்டக்கூடியன.

வரலாற்று ரீதியான சைவ வைணவப் போராட்டம், அதை ஐக்கியப் படுத்தும் முயற்சி, கள்ளர்களுக்கும் மதுரை நாயக்க மன்னர்களுக்குமிடையேயான அரசியல் ரீதியான போராட்டம், உயர்சாதி தாழ்ந்தசாதி மக்களுக்கிடையேயான ஒரே கடவுள் வழிபாட்டுக்கிடையில் நடந்த போராட்டம் ஆகியவற்றை நீக்க இத்திருவிழாக்களை திருமலைநாயக்கர் உருவாக்கிப் பயன்படுத்திக்கொண்டார் என்ற நோக்கில் ஆய்வு செய்திருப்பது பல்வேறு நுண்ணிய தகவல்களை அளிக்கிறது.

அழகர்கோயிலை ஆன்மீக சரித்திர சமூக நோக்கிலும், சுற்றுலா வந்தது போலும் படித்துக் களிக்க இந்நூல் உதவுகிறது.  சாதி சமய வேறுபாடுகளற்று அழகர் கோயிலில் அனைவரும் கூடுவது,அதே சமயம் கள்ளழகர் மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்துவிடுவதால் ஆற்றைத் தாண்டாமல் திரும்புவது, கருப்பருக்கு சேஷபிரசாதம், அவர் கிருஷ்ணரின் தம்பி, வைகானசர், பாஞ்சராத்திரருக்குள்ளே வித்யாசம் என்பது எல்லாம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் கொள்கையை எனக்குப் படிக்கும்போது நினைவுறுத்தியது.

நூல் :- அழகர் கோயில்
ஆசிரியர்:- தொ. பரமசிவன்.
பதிப்பித்தோர் :- பதிப்புத்துறை, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், ( மீரா பிரிண்டர்ஸ், மதுரை -3. )
விலை - ரூ 40/-

5 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான விமர்சனம்
வாய்பிருப்பின் அவசியம் வாங்கிப் படிப்பேன்
நன்றி சகோதரியாரே

பரிவை சே.குமார் சொன்னது…

அழகர் எங்கள் குலதெய்வம் அக்கா..
அடிக்கடி செல்லும் கோவில் இப்போது வருடம் ஒரு முறை...
முன்பு எங்க ஊரில் இருந்து வண்டி கட்டிப் போவார்களாம்... இன்னும் பக்கத்து ஊரில் இருந்து போகிறார்கள்.
நாலைந்து ஊர் சேர்ந்து கட்டியிருக்கும் கோவிலுக்கு திருவிழா நடத்த அழகர் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரவேண்டும் என்பது நடைமுறை.

புத்தகம் குறித்த விவரம் அறிந்தேன்.
கண்டிப்பாக வாங்க வேண்டும்.

கோமதி அரசு சொன்னது…

அருமையான நூல் விமர்சனம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு நூல் அறிமுகம். நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி குமார் சகோ. அப்படியா ! சுவாரசியமான தகவல்கள் :)

நன்றி கோமதி மேம்

நன்றி வெங்கட் சகோ


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...