திங்கள், 17 ஏப்ரல், 2017

கொடையின் கதை - ஒரு பார்வை.

எல் கே ஜி , யூ கே ஜி வகுப்புகள் அந்த அழகான குடில்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு குடிலின் வெளியிலும் போகன்வில்லா மரங்கள். வெள்ளை மையத்தோடு ரோஸ் நிறக் காகிதப் பூக்கள். பிரித்துப் பிரித்து வாயில் வைத்துத் தடவிக் கொண்டிருந்தார்கள் சில குழந்தைகள். நீ பிங்க். நீ பிங்க் என்ற இரைச்சல் வேறு. ஆயாம்மா வந்து வரிசையில் ஓட்டிக் கொண்டு போய் அமரவைத்து டிஃபன் தூக்குச்சட்டியைப் பிடித்துக் கொடுத்தார்கள். மேலே பொரியல் கிண்ணம், கீழே தயிர்சாதம். வாய் எல்லாம் அப்பி சாப்பிட்டு முடித்ததும் ஒவ்வொருவருக்காய் வாய் கழுவி டப்பாக்களைக் கூடையில் போட்டு அந்த ஆயாம்மா வகுப்பில் கொண்டு விடுவார்கள். ஏதேதோ ரைம்ஸ் சொன்ன ஞாபகம். படிப்பு என்பதே ஒரு விளையாட்டுப் போன்ற அனுபவமாய் இருந்தது. ரொம்ப கஷ்டமான வீட்டுப்பாடங்கள் இல்லவே இல்லை. (அதன் பின் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பள்ளிகள், கல்லூரியில் பயின்றேன்) .

சைக்கிளில் முன் சீட்டில் கால் கூட்டி உட்கார்ந்து  வெங்கிட்டு மாமாவோடு அழகப்பா கல்லூரி ஸ்டேடியத்துக்குப் போய் ஸ்போர்ட்ஸ் பார்த்ததும் வாசனையாக காண்டீனில் காஃபி குடித்ததுமான கலவை ஞாபகம்.

-- அழகப்பா மாண்டிசோரி பிரிப்பரேட்டரி பள்ளியில் எல்கேஜி யூகேஜி படித்தபோது நிகழ்ந்தவை இவை. அதன் பின் பல ஆண்டுகள் பல முறை அந்தப் பகுதியைக் கடந்துதான் காரைக்குடிக்குள் வந்திருந்தாலும் , அங்கொன்றும் இங்கொன்றுமாக அவர் பற்றிய தகவல்கள் கேள்வியுற்றிருந்தாலும் வள்ளல் அழகப்பர் பற்றிய முழுமையான விபரங்கள் தெரியாது.

என் பையன் அழகப்பா மெட்ரிக்குலேஷனில் ப்ளஸ்டூ படித்தான். என் மாமாக்கள் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து பெரிய மாமா பொதுப்பணித்துறையில் சிலகாலம் பணியாற்றினார். வள்ளல் அழகப்பரிடம் கல்லூரி விழா ஒன்றில் எங்கள் சுப்பையா மாமா ஏதோ விருது/ பரிசு வாங்கும் அரிய புகைப்படம் எங்கள் ஆயாவீட்டை அலங்கரிக்கிறது. காரைக்குடியைக் கல்விக் குடியாக மாற்றியதில் பெரும்பங்கு வள்ளல் அழகப்பருக்கு உண்டு.


அவரது வாழ்க்கைச் சரிதம் புதுக்கவிதைத் தொகுப்பாக நலந்தா பதிப்பகத்தில் வெளியாகி உள்ளது. 1909 முதல் 1957 வரை வெறும் 48 ஆண்டுகளே வாழ்ந்து ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் ,  சிக்ரி என்னும் ரிசர்ச் இன்ஸ்ட்டிடியூட் காரைக்குடிக்கு வரக்காரணமாக இருந்தவர் அழகப்பர்.. சைமன் கமிஷனை எதிர்த்தவர்,  பார் அட் லா படித்தவர்,  விமானப் பயிற்சியும் பெற்றவர். கொச்சியில் அழகப்பர் நூற்பாலை, கிருஷ்ணன் கோயில் ஆகியவற்றையும் அழகப்பா நகரையும் உருவாக்கியவர். முதன் முதலில் மதிய உணவுத்திட்டம் கொடுத்தவர். பத்மபூஷண் விருது பெற்றவர். அவர் பற்றிய இந்நூலை எழுதியவர் அவரது உறவினர் - வள்ளலின் தாய் மாமனின் மகன் வழிப் பேரனான கவிஞர் சித. சிதம்பரம் அவர்கள்.

இதில் நான் ரசித்த வரிகள் பலப் பல. புதுக்கவிதையையே சந்த நயத்தோடு எதுகை மோனையோடு அழகாய்த் தந்திருக்கும் இந்நூலில் ஓரிடத்தில் என் கண்கள் என்னை அறியாமல் கசியவும் செய்தன.

“புற்று நோய்க்கும்
புற்று வந்தது
எலும்புப் புற்றுநோய்
அழகப்பக் கலாசாலையில்
கற்க வந்தது”

“கப்பலாய் இருந்தவர்
தோணியாய் இளைத்தார்
பூமி முழுவதும் அவருக்காய்ச்
சாமி கும்பிட்டது “ 

“விசித்திர சித்தனே ! சமுத்திரம் அனையாய் !
பசித்திடப் பார்க்கா(த)  பால் மார்புடையாய் “

“கடலும் எரிய மலையும் எரிய
இறைவன் செய்தான் கொடிய கொடிய “

இவ்வரிகள் படித்ததும் தாயுமான தந்தையைத் தரிசித்த புளகமும் தன்னையறியாத கண்ணீரும் பெருகியது. அருமையாகச் சொன்னீர்கள் கவிஞர் சித சித அவர்களே. ! நெகிழ வைத்தீர்கள் உங்கள் அடுக்கு மொழிக் கவிதையால்.

வள்ளல் அழகப்பர் காவியம், நாடு , இனம், ஊர், குடும்பம், பிறப்பு , கல்வி, கனவின் பயணம், பங்கு வணிகம், பம்பாய்ச் சாதனை, மாநகர்க்கு ஈந்த மனம், காரைக்குடி -கல்விக்குடி, அழகப்பா கல்லூரி, சிக்ரி, மின்வேதியல் ஆய்வுக் கழகம், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பவநகர் அரங்கு, பொறியியற் கல்லூரி, அழகப்பர் மழலையர் பள்ளி, அழகப்பர் மகளிர் கல்லூரி, சென்னை கிருஷ்ணவிலாசம் இல்லம், கொடைக் கொடுமுடி ஆகிய தலைப்புகளில் கவிதை அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.

இன்னும் நான் ரசித்த பல வரிகள்.

கொடுக்கப் பிறந்த மகன்
பிறக்கும்போதே
கொண்டு பிறந்தான்
கோடிச் சந்திரக் குளிர்ஒளி அழகை
கொய்யாப் பூக்களின் ஒய்யாரத்தை.

திருவாசகமும் திருவண்ணாமலையும்
கருவாசத்திலிருந்தே அவரிடம் கலந்திருந்தன.

வேண்டத்தக்கது அறிவோனாய்
வேண்ட முழுதும் தருவோனாய்..

அவர்
வாங்கினால் வளரும்
விற்றால் தளரும்
பங்கு அவருக்குப் பாங்கி ஆனது

கட்டுமானத்தொழில், காஸ்டிக் உற்பத்தி, இந்தியன் வங்கி, மருந்துத் தயாரிப்பு என்று பல்தொழில் வித்தகர் ! சென்னையில் இருக்கும் சேம்பர் ஆஃப் காமர்ஸ்  கட்டிடம் அவர் அளித்த நன்கொடையால் உருவானதுதான்.

எண்ணிக் கொடுக்காமல்
எதிர்பார்ப்பவர்
எண்ணியதைக் கொடுக்காமல் - அவர்
எண்ணியதிலும்
பல்கிக் கொடுத்த
பயன் கொடையர் அழகப்பர் !

காரைக்குடியின் காமதேனு!

கயாவில் நாளந்தா
காரைக்குடியில் அழகப்பா

கள்ளிப்பால் சொட்டிய இடத்தில்
கல்விப்பால் பெருகியது.

அரசுகள் சாதிக்காததை
அழகப்பர் சாதித்தார்.

வித்தை விருட்சமாக்க
நூற்பாலை ஒன்றும்
நீர்ப்பாசனம் ஆனது

கொடி நிற்கத் தேரளித்தான் வள்ளல் பாரி
பெண்
கொடி கற்க வீடளித்தார் அழகப்ப மாரி.

ஆலைகள்  விற்றுக் கல்விச்
சாலைகள் கட்டிய கார்மேகம்

 ஆயிரம் வீடுகளில்
அகப்பைச் சோறாய்
பாயிரம் பாடிய
கற்பனைச் சாறாய்

கோடியில் ஒருவர் கோயிலாகிறார்
அழகப்பர் கல்வி ஆலயம் ஆகினார் !

அறிஞர்களை எல்லாம் தேடியவர்
அறிஞர்கள் எல்லாம் தேடியவர்.

என ஓசை நயத்தோடு வள்ளலின் காவியம் அற்புதமாகப் படைக்கப்பட்டுள்ளது.

வெறும் முப்பது ரூபாயில் ஒரு வள்ளலின் காவியத்தைச் செப்பும் அரிய நூல் இது. அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. மாணாக்கர் கைக்கொள்ள வேண்டிய கையேடு. பலரும் அறியும் வண்ணம் அரிய தகவல்கள் அடங்கிய இந்நூலை ஆக்கம் செய்த நலந்தா செம்புலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

நூல் :- கொடையின் கதை
ஆசிரியர் :- கவிஞர் சித சிதம்பரம்.
பதிப்பகம் :- நலந்தா பதிப்பகம்.
விலை :- ரூ 30/-


4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வரிகள் அனைத்தும் அருமை...

அறிமுகத்திற்கு நன்றி...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு நூல் அறிமுகம். நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நூல் அறிமுகம் அருமை அதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள வரிகள் அழகு!!!

Thenammai Lakshmanan சொன்னது…

Thanks DD Sago

Thanks Venkat Sago

Thanks Tulsi sago

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...