செவ்வாய், 18 ஏப்ரல், 2017

மகாபாரதம் வினா - விடைகள். ஒன்பதாம் வகுப்பு மாணவியின் தொகுப்பு நூல் .

செல்வி அரு அழகம்மை புதுவயல் வித்யாகிரி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி. அவர் தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான பக்தி இலக்கிய விநாடி வினா போட்டிக்குத் தயார் செய்திருந்த கேள்விபதில்களை வினாடி வினா டைப்பில் தொகுத்து புத்தகமாக்கம் செய்திருக்கிறார்கள். மிக நல்ல முயற்சி.

இந்நூலின் பின்னணியில் அவரது பள்ளியும் தமிழாசிரியரும், வள்ளுவர் பேரவையும் இணைந்து செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவப் பருவத்தில் இம்மாதிரி முயற்சிகள் பாராட்டத்தக்கது. மாணவியின் உழைப்பைப் புத்தகமாக்கம் செய்த முன்னெடுப்பு வித்யாசம்.  காரைக்குடி வள்ளுவர் பேரவை ( கௌரவத் தலைவர் : அ. தேனப்பன் ) , புதுவயல் வித்யாகிரி பள்ளி மற்றும் அதன் தாளாளர் முனைவர் ரா. சுவாமிநாதன், ஸ்ரீ மீ.சு.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முதுகலைத் தமிழாசிரியர் சேவு முத்துக்குமார், வள்ளுவர் பேரவையின் நிறுவனத் தலைவர் மெ. செயங்கொண்டான்., அரு. அழகம்மை ஆகிய அனைவருக்கும் பாராட்டுகள்.


அழகம்மை படிப்பாற்றலோடு படைப்பாற்றலும் மிக்கவர், தமிழைப் பிழையில்லாமல் அழகான கையெழுத்தில் எழுதும் ஆற்றல் பெற்றவர். பல்வேறு பேச்சு , கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு பள்ளிக்குப் பெருமை சேர்த்தவர் எனப் புகழ்கிறார் அவர் பள்ளியின் தலைமை ஆசிரியர்.

எல்லாப் புகழுக்கும் உரியவராய்த்  தன் முன்னுரையில் அகரம் கற்பித்த ஆசிரியை தேவகிக்கும், அம்மா அப்பாவுக்கும் தன் வணக்கங்களைத் தெரிவித்துள்ளார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல அவரது இம்முயற்சி போற்றுதலுக்குரியது.

பாரதி பிறந்தநாளில் வெளியிடப்பட்ட இப்புத்தகம் மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதைக் கற்பிப்பதாகக் கூறுகிறார் அழகம்மை. மகாபாரதத்திலிருந்து ஒவ்வொரு தனித்தனி குணாதிசயங்களையும் பிரித்துப் பகுத்துக் கேள்வி பதில்களில் அளித்திருக்கிறார்.

இதில் வியாசரிலிருந்து குருக்ஷேத்திரப் போர் வரை உண்டு.  மஹாபாரதத்தில் 18 என்னும் எண் வகிக்கும் முக்கியத்துவம்,  பர்வங்கள், குலங்கள், புராணப் பாத்திரங்களின் மற்றைய பெயர்கள்,  பெயர்க்காரணம், தேசங்கள், அரசர்கள், கொடிகள், மாறுவேடப் பெயர்கள்,மகரிஷிகள், இளவரசர்கள், ராணிகள் ஆகிய அனைவரும் இடம் பெற்றுள்ளார்கள்.

ஓரிரு கேள்விகள் இருமுறை வருவதைத் தவிர்த்திருக்கலாம். உதா. கீசகன் பற்றிய உறவு முறை, உத்தரை யார்- அபிமன்யுவின் மனைவி யார், சித்திரசேனன் யார் என்பது ஆகியன.

1500 வருடங்களுக்கு முன்பு கம்போடியாவில் உள்ள கோயிலில் மகாபாரதம் ஓதப்பெற்றதும், 1000 வருடங்களுக்கு முன்பு ஜாவா நாடு இந்நூலை மொழிபெயர்த்ததும், 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டிலிருந்து வந்த இராசதூதர் மகாபாரதத்தின் சீரிய கோட்பாடுகளை எடுத்து உரைத்ததும் , இன்றைக்கும் அமெரிக்கா, ரஷ்யா மகாபாரதத்தின் கருத்தைச் செலுத்தி வருகின்றன என்பதும் புதுத்தகவல்கள்.

மண்ணாசை பற்றிக் கூறுவது மகாபாரதம், பெண்ணாசை  பற்றிக் கூறுவது இராமாயணம் என்றும் அறம் பொருள் இன்பம் வீடு பற்றிக் கூறுவதும்,அறத்தாறு மறத்தாறு பற்றி கூறி அறத்தாறு மறத்தாற்றை வெல்லும் என தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், மறுபடியும் தர்மம் வெல்லும் எனக் கூறுவது   மகாபாரதம் என்கிறார்.

64 பக்கங்களில் 581 வினாக்கள் இருக்கின்றன. பல்வேறு கதைகளும் உபகதைகளும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் யுத்த தந்திரங்களும் அடங்கிய இந்நூலைப் படித்துப் புரிந்து கேள்வி பதில்களாகத் தொகுத்து அளித்திருப்பதற்கு வாழ்த்துகள் அழகம்மை. இன்னும் உன் தமிழ்ப்பணி பல்வேறு அம்சங்களிலும் தொடரட்டும்.

நூல்:- மகாபாரதம் வினா - விடைகள்.
தொகுப்பு :- அரு . மெய்யம்மை.
வெளியீடு :- வள்ளுவர் பேரவை
விலை:- ரூ 60.

4 கருத்துகள் :

Palani Chamy சொன்னது…

நல் வாழ்த்துகள்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு அறிமுகம். நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாவ்!! ஒன்பதாம் வகுப்பு மாணவி தொகுத்திருப்பது அருமை. நல்ல முயற்சி. கேள்விகள் கேட்பது என்பது நல்ல பயிற்சி...கேள்வி கேட்கும் போது அதற்கான பதில் தேடுவதிலும் ஆர்வம் ஏற்படும் இல்லையா...புத்தக அறிமுகம் சிறப்பு!!

Thenammai Lakshmanan சொன்னது…

Thanks Palani Chamy sir

Thanks Venkat sago

Thanks Tulsi sago

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...