எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 15 ஏப்ரல், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். அல்வாவும் ரசகுல்லாவும் பின்னே நானும் - ருக்கு ஜெய்.

என் முகநூல் தோழி/தங்கை ருக்கு ஜெய். ஆசிரியையாகப் பணிபுரிகிறார். அவருடைய பதிவுகளை அவ்வப்போது படித்து ரசிப்பேன். மிக அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரர். மாணவர்களுடனான நிகழ்வுகளை யதார்த்தமாக விவரித்திருப்பார். மனதைத் தொடும் எழுத்துக்கள். அவருடைய தேன்மொழி எனக்கு நெருக்கமானவள். :) அவரிடம் எனது வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக எழுதித்தரக் கேட்டிருந்தேன்.

என் வலைப்பதிவுக்காக உங்களுக்குப் பிடித்த சப்ஜெக்டில் ஏதும் எழுதித்தாருங்கள் ருக்கு.

////தங்கள் அன்பழைப்பிற்கு நன்றி மேம்.


நேரம் கிடைக்கும் போது படித்துப்பார்க்கிறேன்.இதுவரை blog எதுவும் படித்ததில்லை..முதலில் உங்கள் வலைப் பக்கத்தைப் படித்துத் தொடங்குகிறேன்.


என்னைப் பற்றி... என் பெயர் ருக்மணி .முகநூலில் Rukujey. உங்கள் பக்கத்துவீட்டுப் பெண் போல் மிக மிக சாதாரணப் பெண். அன்பான கணவர் ,இரு ஆண் குழந்தைகள் கொண்ட ஆனந்தம் விளையாடும் வீடு என்னுடையது. அரசுத் துவக்கப்பள்ளியில் ஆசிரியை பணி.26 ஆண்டுகள் முடிந்து 27 ஆம் ஆண்டாக கல்விப்பணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது மனநிறைவோடு.

வாழ்க்கை பற்றிய எனது கண்ணோட்டம் அல்லது எனது வாழ்க்கை முறை... செய்யும் தொழிலே தெய்வம் எனக்கு. நான்வணங்கும்கடவுள்,எண்ணம், சிந்தனை அனைத்துமே என் பள்ளியும்,மாணவர்களுமே. கற்பித்தல் என்பது நன்கு பிழையின்றி வாசிக்கச் செய்தல்,அழகாக தெளிவாக எழுதச்செய்தல் என்பது மட்டுமல்ல.. வாழ்க்கையைப் புரிதல்,எத்தகைய சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்காமலிருத்தல்,மனிதத்தன்மை, பரிவு, பாசம், நேசம், அன்பு, கருணை, இயற்கையின்பால் ஈடுபாடு, நாட்டுப்பற்று , வாழ்வையும் சக மனிதர்களையும்கொண்டாடுதல் ,விட்டுக் கொடுத்தல்,நேர்மை,சமூக அக்கறை ஆகியவற்றையும் கற்றுத்தர வேண்டும்.அதையே என் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறேன். 

பணத்திற்கு முக்கியத்துவம் தரமாட்டேன்.பணக்காரரோ ஏழையோ, பெரியவரோ சிறியவரோ குணத்திற்கே மரியாதை கொடுப்பேன்.அதே போல் நல்லவர்களை விட நேர்மையானவர்களையே எனக்கு மிகவும் பிடிக்கும். பணத்தால் தற்காலிக சந்தோசத்தை வாங்கலாம்.நிரந்தர நிம்மதியை பணம் ஒரு போதும் தந்துவிடாது. 
 
குடும்பத்தலைவியாக,மனைவியாக,தாயாக,சேயாக,சகோதரியாக,மருமகளாக என் பங்களிப்பை முழுமையாகச் செய்கிறேன். காலம் என்னை எந்நிலையில் வைத்தாலும் அப்போதும் என் மனமும், குணமும் இப்படியே இருக்க இறைவனருள் வேண்டும். குறையொன்றும் இல்லை. அன்புத் தோழி தேனுவிற்கு அன்பும்..ப்ரியங்களும்.
Ruku


படித்துப்பாருங்கள்.ஏதாவது மாற்றம் தேவையெனில் சொல்லுங்கள்.

 ///அல்வாவும் ரசகுல்லாவும் பின்னே நானும்.. 

என்னோட அப்பா ஸ்வீட்ஸ்டால் வச்சிருந்ததால கூடமாட ஒத்தாசை செஞ்சி ஏதோ கொஞ்சம் சுமாரா ஸ்வீட் செய்வேன். டிவி ல பார்த்தே நிறைய வெரைட்டி கத்துக்கிட்டு இருக்கேன்.இப்ப யூ ட்யூப்ல... 

நம்ம தமிழ் சினிமா டைரக்டர்ஸ் மொத படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுப்பாங்க. அப்புறம் ரெண்டாவது படம் அட்டர் ப்ளாப் ஆகுமில்லையா...அதே மாதிரி ரொம்ப காலத்துக்கு அப்புறம் மொத டைம் அல்வா செய்யும் போது ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது.அடுத்த முறை கொஞ்சம் சொதப்பல். சில நேரம் மைதா சரியில்லன்னாக் கூட பதம் சரியா வராது.இதுல அல்வா நல்லா செய்ய கத்துக்கிட்டதும் அல்வா செய்யறப்ப அக்கம்பக்கமெல்லாம் கொடுப்பேன். [பீத்திக்க வேணாமோ] 

இதுல ஒண்ணுரெண்டு பேர் வீட்டுக்குக் கூப்பிட்டு அல்வா செய்து தரச் சொன்னாங்க.என்ன சரியில்லையோ? இல்ல அவிங்க செஞ்ச பாவமோ..ஜவ்வு மிட்டாய் மாதிரி ஆகிப் போச்சி.அதுக்கப்புறம் அவங்க அல்வாங்கற பேரைக் கூட வாயால சொல்றதில்லன்னு கேள்வி...! 

தீபாவளிக்கு நான் அல்வா எதுவும் செய்துருவேன்னோ என்னவோ..எங்க வீட்டுக்காராரு ..நீ வேலைக்கும் போயிட்டு பலகாரமும் செய்றது கஷ்டம்மா.நான் கடையில வாங்கித் தரேன்னுட்டாரு..அஞ்சாறு வருஷமா கடைப் பலகாரம் தான். 

விதி யார விட்டுச்சி? என்னோட அண்ணி எனக்கு அல்வா ரொம்பப் பிடிக்கும்னு சொன்னதும் மறுபடியும் அல்வா செய்யற ஆசை துளிர் விட்டுச்சி.இவரு ஊருல இல்லாத நாளாப் பாத்து கொஞ்சூண்டு அல்வா செய்ய அது அசத்தலா வந்தது. இப்பதான் நல்லா செய்யறமேன்னு போன டிசம்பர்ல ஊருக்குப் போறப்போ ரொம்ப கவனமா அல்வா செஞ்சேன்.சூடா சாப்பிட சூப்பரோ சூப்பர்.

பேக் பண்ணி எடுத்துட்டுப் போனேன் பெருமையா..அங்க போய் பாக்ஸ் ஓப்பன் பண்ணா கால்வாசி அல்வா டப்பா மூடியில ... அல்வாவை சாப்பிட்டுப் பாத்த அண்ணி ருக்கூ..இதென்னம்மா கலர்பசையா இனிப்பா இருக்குன்னு கேட்டுட்டாங்க.. இவரு என்னப் பார்த்து ஒரு மொற மொறச்சாரு பாருங்க....பயந்தே போயிட்டேன்..இனிமே அல்வா செய்வ.. செய்வ..மொமண்ட். செய்யமாட்டேன்...ஆனா செய்வேன் ..! அல்வா தானே செய்யக்கூடாது.. 

வாங்க வாங்க..நான் ரசகுல்லா பண்ணக் கதையைப் பாக்கலாம். என்னோட மருமகன் கோபி ஒருநாள் சின்ன பாக்ஸ்ல நாலஞ்சு[ கஞ்சப்பய] வேகாத ரசகுல்லாவக் கொண்டு வந்து கொடுத்தான். ஆம்பிளப்புள்ள அவனே செய்றப்ப ஸ்வீட் கடை ஓனர் பொண்ணு😀 நான் செய்ய மாட்டேனா என்ன? 

நல்ல நாட்டுமாட்டுப் பால் வாங்கி யூ ட்யூப்ல பாத்து [அவரு இல்லாதப்ப தான்] செஞ்சேன்.நல்லாருக்கானு பாத்துட்டு அப்புறம் தான் மத்தவங்க கண்லயே காட்னேன்.சூப்பர் சூப்பர்...கடையில கூட இவ்வளவு டேஸ்ட் கிடையாதுன்னு சொன்னாங்க எல்லாரும். இவ்வளவு நல்லா ரசகுல்லா செய்யக் கத்துக்கிட்டு யாருக்கும் சொல்லாம [பீத்திக்காம] இருக்கிறது பாவமா இல்லையா..? 

சொந்தக்காரப் பொண்ணு சுகன்யா முழுகாம இருந்தா..அவளுக்கு பிடிச்சத வாங்கிட்டுப் போகலாம்னு கேட்டேன். விதி வலியது இல்லையா..?எனக்கு ரசகுல்லா தான் ரொம்பப் பிடிக்கும்னு சொன்னா. நாம தான் ரசகுல்லா செய்றதுல எக்ஸ்பர்ட் ஆகிட்டோமே..கடையில வாங்கலாமோ?னு நானே செய்யலாம்னு 2 லிட்டர் பால் வாங்கிட்டு வரசொன்னேன்.பாலக் காச்சி எலுமிச்சையப் பிழிஞ்சிவிட்டு செஞ்சா...பாக்க நல்லாத்தான் இருந்திச்சி..சாப்பிட்டா ரப்பர் மாதிரி வச்சக்கு வச்சக்குன்னு இருக்கு... தண்ணிப்பாலு ...எலுமிச்சை அதிகம்னு ஆராய்ச்சி செய்து கத்திக்கிட்டோம்னு நினைச்சுக்கிட்டு கஷ்டப்பட்டு ரசகுல்லாவக் காலி பண்ணோம். 

டெலிவரிக்குள்ள அந்தப்பிள்ளைக்கு ரசகுல்லா செய்து கொடுத்துரணும்னு நான் வேலை செய்ற ஊருல இருந்து தண்ணி சேக்காத கெட்டிப் பால் வாங்கிட்டு வந்து போன வாரம் ரசகுல்லா செய்ய...அப்படியே வெள்ளை வெளேர்னு வேகுறப்பவே நாக்குல ஜலம் வர்றது.அது 20 நிமிசம் ஜீரால வேகணும்.வேகட்டும்னு வெளிய சோபால வந்து உக்காந்தேனா...மறந்தே போய்ட்டேன். 

30 நிமிசம் கழிச்சி ஏதோ வாசனை...ஓடிப்போய் பாத்தா ரசகுல்லா அடிப்பிடிச்சி ப்ரௌன் கலர்ல... இவரு கோவமா முறைச்சிட்டு...அடுப்புல வச்சா பக்கத்துல இருந்து பாக்கமாட்டயானு ஒரே திட்டு. அடுத்த நாள் பசங்க வேற கிண்டல் பண்ணுதுக..அம்மா.. ரசகுல்லாவ புஷ்பா அக்காவுக்கு எதுவும் கொடுத்துராதீங்கம்மா..அப்புறம் வேலைக்கு வரமாட்டாங்க.வேற ஆளு தேடமுடியாதுனு. 

இனிமே ரசகுல்லா செய்யறேன்னு சொல்லு..அப்புறம் இருக்கு உனக்கு.. இது அவரு.. நான் மூஞ்சத் தூக்கி வச்சிக்க...விடும்மா நீ செய்ற ரசகுல்லா சாப்பிட குடுத்து வச்சிருக்கணும்.அவளுக்குக் கொடுத்து வைக்கல..னு சொன்னார். என்னோட ரசகுல்லா சாப்பிடாமயே சுகன்யாவுக்கு டெலிவரியும் ஆகிருச்சு.

டிஸ்கி:- ஹாஹாஹா சிரிச்சி சிரிச்சி வயிறு கூட சுளுக்கிருச்சு. அல்வா பரவாயில்லை மொமண்ட். ஆமா அதுக்கு ஸ்ரீகாண்ட், பால்கோவா, ப்ரவுன் பால் அல்வா அப்பிடின்னு ஏதும் பேர் சூட்டி சுரண்டி உருட்டிக் கொடுத்திருக்கலாம்ல. அவ்வளவா கெட்டுப் போச்சு. போ புள்ள இம்புட்டு வருஷமா சமைக்கிறியே . பதார்த்தத்தோட பேர் மாத்தக் கத்துகலையே. ஹாஹா. 

அடுத்த தபா கட்டாயம் பேர் மாத்தி கொஞ்சம் மேக்கப் போட்டுக் கொடுத்துடு. அதுக்குன்னு பாத்திரத்தை ரொம்ப சுரண்டிராம லேசா நெகுப்பா எடுத்து நெய் தொட்டு முந்திரி ஒட்டி உருட்டி ப்ரவுன் பேடான்னு சொல்லிடு. ஹாஹா .. ஆமா நேத்திக்கு திரும்ப ரசகுல்லா செய்யப் போறேன்னு சொன்னியே. என்னாச்சு பிஞ்சு வந்தா ரஸ்மலாயாயோ இல்லாட்டி பாசந்தியாவோ மாத்திடு, முடிஞ்சுது ஈஸியா ஸ்வீட் வேலை. :)

அட ..!! நேத்திக்கு நீ செய்து அனுப்பிய இந்த ரஸகுல்லா ஃபோட்டோ சூப்பரா இருக்கு புள்ள. ஆத்தா நீ பாஸாயிட்டே :) :) :) 
 

நன்றிடா ருக்கு இந்த சாட்டர்டே ஜாலி கார்னரை ஸ்வீட் கார்னரா மாத்தினதுக்கு. உங்க சுயவிபரம் அருமை. தன்மையான டீச்சர். எங்கும் ஜெயிப்பீங்க. என் வாழ்த்துக்களும் அன்பும் நன்றியும் :)

 

6 கருத்துகள்:

 1. ஸ்வீட் கார்னர்....

  ரசித்தேன். தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 2. வாசகர்களுக்கு அல்வா கொடுக்கும் எண்ணம் இல்லையே

  பதிலளிநீக்கு
 3. நன்றி வெங்கட் சகோ

  நன்றி மொஹமத் அத்லீஃப்

  நன்றி பாலா சார்.. ஹாஹா :)

  நன்ரி டிடி சகோ :)

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...