எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 22 ஏப்ரல், 2017

சாட்டர்டே போஸ்ட். பாத்திர மோசடி பற்றி எச்சரிக்கும் பகுத்தறிவு அண்ணாதுரை.

என் முகநூல் நட்பில் சமீபத்தில் இணைந்தவர் பகுத்தறிவு அண்ணாதுரை. தனது நச் என்ற கருத்துக்களால் என்னைக் கவர்ந்தவர். அவர் போடும் ஒவ்வொரு போஸ்டும் சுவாரசியமாக இருக்கும்.  ஓரிரு போஸ்ட்கள் பார்த்ததுமே அவர் பக்கம் சென்று படிக்கத் துவங்கினேன். சும்மா பவுண்டரி சிக்சர் என்று எல்லாப்பக்கமும் அடித்து ஆடுவார். எனது வலைத்தளத்துக்கு இவருடைய ஒரு பதிவாவது வாங்கிப் போடவேண்டும் என ஆசைப்பட்டுக்கேட்டேன். :) உடனே ஒப்புக் கொண்டு அனுப்பிவிட்டார்.

இவர் பற்றிக்  கேட்டபோது :)

////தற்குறி(ப்பு)
பகுத்தறிவு என்பெயர் அண்ணாதுரை கணவர்..
முற்றிலும் கிராமத்துப்பெண்.. பட்டயப் படிப்பு முடித்து சென்னையில் கொஞ்சநாள் வேலை பின்னர் தந்தை மரணம், திருமணம், இல்லறம், மகன்.. பிரபல்யன், மகள்.. பிரதான்யா.. சமீப காலமாகத்தான் முகநூல் பரிச்சயம்.. எழுத்துன்னு சொல்லிக்க பெரிதாய் ஏதுமில்லை.. நினைத்தவுடன் கவிபாடும் ஆசுகவியல்ல, கிடைத்த நேரத்தில் கிறுக்கும் ஆசுவாச கவி😊

தற்குறிப்பேற்றத்தில் உயர்வு நவின்றால் வஞ்சப்புகழ்ச்சிக்கு வழிவகுக்கும்.. அதனால் முடிச்சுக்கறேன்..////


உங்களுக்குப் பிடித்த விஷயம் பற்றி அல்லது ஏதேனும் குறிப்பான விஷயம் பற்றி மக்களுக்குச் சொல்லனும்னா என் ப்லாகுக்கு எழுதிக் கொடுங்க பகுத்தறிவு .

வாழ்வில் பல பாத்திரங்களை ஏற்று பக்குவமாய் நடப்பதாலோ என்னவோ பெண்களுக்குப் பாத்திரங்களின் மீது தனிப்ரியம்.. அழகழகான வடிவங்களில் அளவுகளில் பாத்திரங்களை வாங்கி அடுக்கி வைத்து ரசிப்பது பெரும்பாலான பெண்களுக்குப் பிடித்தமான விஷயம்..

ஒருவரை ஏமாற்ற வேண்டுமெனில் அவர்களின் ஆசையைத்தூண்டவேண்டும் என்னும் அடிப்படை விதிப்படி பெண்களின் பாத்திர ஆசையைப் பயன்படுத்திபணம் பறிக்கும் கும்பல் ஒன்றைப் பற்றித்தான் இப்போது சொல்ல வந்தேன்..

நகரில் ஒரு கடையைப் பிடித்துக்கொண்டு அலங்காரமாகப் பாத்திரங்களை அடுக்கினார்கள் முதலில்.. பின்னர் விற்பனை ஏஜண்டுகள் என்று சில பெண்களை அமர்த்தினார்கள்.. ஒருவர் 500 ரூ பணம் செலுத்தி ஒரு டோக்கன் வாங்க வேண்டும்.. அவருக்கு மூன்று டோக்கன்கள் வழங்கப்படும் . மூன்று டோக்கன்களையும் மூவரிடம் விற்கவேண்டும்.. அம்மூவருக்கும் ஆளுக்கு மூன்று டோக்கன்கள்.. அவர்கள் ஒவ்வொருவரும் மூவருக்கு விற்கவேண்டும்..

இப்போது முதலில் செலுத்தியவர் 500 அடுத்த சுற்றில் இருப்பவர்கள் 1500 அதற்கடுத்த சுற்றில் இருப்பவர்கள் 4500 என நிறுவனத்துக்குப் பணம் வந்த பிறகு முதல் டோக்கன் வாங்கியவருக்கு 5000 ரூபாய்க்கான வீட்டு உபயோகப் பாத்திரங்கள் ஒரு பேக்கேஜ் ஆகக் கிடைக்கும்.

பளபளவென அழகான வடிவங்களில் பிளாஸ்டிக் கைப்பிடியெல்லாம் கொண்ட இந்தப் பாத்திரங்களைக் கண்ட மற்ற பெண்கள் உத்வேகம் வந்து தீவிரமாய் ஆள்பிடிப்பார்கள்.. அவங்களே வாங்கிட்டாங்கப்பா நமக்கென்ன யாரையுமா தெரியாது 500 ரூபாய்க்கு 5000 ரூபாய் பொருள் கிடைக்குதுன்னா கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும் என்பதான உற்சாகமூட்டும் பேச்சுக்களுடன் இவர்கள் களமிறங்க.. அதிகபட்சம் ஐந்து நபர்கள்கூட வாங்கியிருக்க மாட்டார்கள் அதற்குள் விற்பனை நொண்டியடிக்கும்..

நான் உன்கிட்ட வாங்கினதும் நீ பாத்திரம் வாங்கிடுவ என்னால மூனு பேர்ட்ட விற்க முடில 500 க்கு 5000 பொருள் வாங்கினீல்ல எனக்காக இன்னொரு டோக்கன் நீயே வாங்கினா என்ன என்பதாக உறவுகள் முட்டிக்கொள்ளும்.. இதில் மாட்டிக்கொண்டவர் என்நாத்தனார்.. பாத்திர ஆசையில் மூன்று டோக்கன்களை தன் அக்கா ஓர்ப்படி நாத்தானாரிடம் விற்றுவிட்டு அதற்கான ஒன்பது டோக்கன் பணத்தைக் கையிலிருந்து போட்டு(அப்புறம் யார்ட்டயும் வித்துக்கலாமாம்) ஒரு செட் பாத்திரத்தை வாங்கிவிட்டார்...

அதன்பிறகு ஆரம்பித்தது வினை இவரிடம் டோக்கன் வாங்கியவர்கள் எங்களுக்கும் யாரிடமாச்சும் விற்றுக்கொடு என்று படுத்த .. தேவையற்ற மன உளைச்சல் 4500 ரூ டோக்கனை கையில் வைத்துக்கொண்டு விற்க இயலாத நிலை.. என்னிடம் வந்தார் ஒன்று வாங்கும்படி..

எனக்கு அவர் விளக்கும்போதே புரிந்துவிட்டது மோசடித் திட்டம் என்று.. மறுத்தபோது உங்க அம்மாவிடம் கேட்டு வாங்கினால்தான் என்ன என்றார்.. நானாவது தேவைக்கான பொருட்களை வாங்கும் மனநிலை உடையவள்.. அம்மாவோ இருப்பதற்கேற்பத் தேவைகளை சுருக்கிக் கொள்ளும் வாழ்வியல் கொண்டவர்.. "குதிரைக் கொம்பால ஆயிரம் கொடுத்தாலும் வேண்டாம்," என்றார்.. உனக்கு வேணும்னா சொல்லு வேண்டிய பொருட்களைக் கடையிலேயே வாங்கித்தரேன் . இதில் இலவசமாக் கிடைச்சாலும் வேண்டாம் என்றுவிட்டார்..எனக்குப் புரிந்தது. புன்னகைத்தேன்.

கொஞ்ச நாட்களில் நிறையப் பணம் சுருட்டிக்கொண்டு ஒருநாள் இரவில் மூடிவிட்டுக் கிளம்பிவிட்டார்கள் நிறுவனத்தை.. நாத்தனார் பாவம் நஷ்டப்பட்டதுடன் உறவுகளிடம் கெட்ட பெயரும் வந்து சேர்ந்தது.

இன்னொரு நூதன மோசடி.. தெருவில் வீடுவீடாக வருவார்கள். கம்பெனி விளம்பரத்துக்காக வரோம் குலுக்கல் முறையில் பொருட்கள் தருவோம். பணம் எதுவும் தரவேண்டாம் பெயர் மட்டும் சொல்லுங்கள் என்பார்கள். பெண்களிடம் இவர்கள் பேசும் விதமே வேறு.

பெண்குழந்தைகள் வளர்ந்த பெண்களைக் கண்டால் பாப்பா பேரையே சொல்லுங்களேன். பெண்கள்தான் வீட்டின் அதிர்ஷ்டம் என்பார்கள். பெரியவர்களைக் கண்டால் இருக்கவே இருக்கிறது லக்ஷ்மி காடாட்சமான முகம் ..சொன்னால் போதாதா.. ஒருவழியாகப் பெயர்களை எழுதிய டோக்கனைக் கையில் கொடுத்துவிட்டு மாலை குலுக்கல் என்றுவிட்டுப் போவார்கள்.

மாலை வந்து காலைநேரக் கணிப்புப்படி சபல புத்தி கொண்ட வாங்கும் மனநிலை உள்ளவர்களாகப் பார்த்து பரிசு விழுந்திருப்பதாக அறிவிப்பார்கள் ஒரு தெருவில் இரண்டு அல்லது மூன்று பேர்தான் இரண்டு தெரு தள்ளித்தான் வேறு யாருக்கோ விழுந்தததாகச் சொல்வார்கள்.

8500 மதிப்புள்ள மிக்ஸி, குக்கர், சிறிதுமுதல் பெரிது வரையிலான டப்பாக்கள் எல்லாம் சேர்த்து இரண்டாயிரம் ரூபாய்தான் கம்பெனி விளம்பரத்துக்கான குலுக்கல் ஆஃபர் என்பார்கள்..வாங்கத் தயங்குவதுபோல் தெரிந்தால் வேணாம்னா சொல்லிடுங்க டோக்கனை மட்டும் கொடுங்க அடுத்தத்தெருவில் வாங்கத்தயாரா இருந்தாங்க அங்க வச்சுதான் குலுக்கினோம்.அவங்க கிட்ட கொடுத்துக்கறோம் ஆனா உங்க பேர் பதிஞ்சிட்டோம் கம்பெனில கணக்கு காட்டணும் என அள்ளி விட.. நமக்கு வந்த்வாய்ப்பு யாருக்கோ போவதா என்ற எண்ணத்தில் வாங்கிவிடுவார்கள் பெண்கள்..

அந்தப் பொருட்கள் அத்தனையும் போலி என்பது பயன்படுத்தும் போதுதான் தெரியவரும்.. பணமதிப்புக்குத் தகுந்த தேவையான பொருட்களைமட்டும் வாங்குவது என்ற மனநிலை மட்டுமே இதுபோன்ற ஏமாற்றங்களைத் தவிர்க்கும் வழி. தங்களுக்கு இலாபம் தராத எந்த வியாபாரத்தையும் யாரும் செய்யத் தயாராக இருக்க மாட்டார்கள்.

குறைந்த விலையில் தரமான பொருளை வாங்கிவிடும் புத்திசாலிகளாகப் பெண்கள் தங்களை நினைக்கும்போதுதான் முட்டாளாக்கப் படுகிறார்கள்.

டிஸ்கி :- ரொம்ப சரியா எச்சரிக்கை கொடுத்தீங்க பகுத்தறிவு. எவ்வளவுதான் நாம் எச்சரிக்கை செய்தாலும் தினசரிப் பத்ரிக்கைகளிலும் டிவியிலும் இவ்வாறு ஏமாந்த பெண்களின் புகைப்படமும் பேட்டியும் வருது. எவ்வளவு விதமான மோசடிகள். அதுல பாத்திர மோசடி பத்தி இப்பத்தான் கேள்விப்படுறேன். இது எம் எல் எம் மாதிரியோ அல்லது ஒருத்தர் மூணு பேரைப் பிடிச்சு விடுறதுன்னு நிறைய கேள்விப்பட்டிருக்கேன். என்னைக் கூட பிடிச்சு ஒரு கூட்டத்துல இல்ல பல கூட்டத்துல பல வேறு நட்புகளும் உறவுகளும் உக்காரவைக்கப் பார்த்தாங்க. நீங்க சொன்னது போல தேவைக்கு அதிகமா பொருட்கள் தேவையில்லைன்னும் மலிவாக் கிடைக்குதேன்னும் வாங்குற பழக்கம் எனக்கிலாததால தப்பிச்சேன். :) 

மக்கள் திருந்தணும். தேவைப்பட்டா மட்டுமே அதுவும் தரமான பொருட்களா சரியான கடைகளில் வாங்கணும். சரியான விழிப்புணர்வுப் பதிவு கொடுத்தமைக்கு நன்றி பகுத்தறிவு. அன்பும் நன்றியும் வாழ்த்துகளும்டா :) 

3 கருத்துகள்:

 1. தேவைக்குத் தகுந்த தரமான பொருட்களை மட்டும் சரியான கடைகளில் வாங்கணும்.

  மற்றபடி சீட்டு நாட்டு குலுக்கல் அதிர்ஷ்டம் என்பது எல்லாமே ஏமாற்று வேலைகள் மட்டுமே.

  நல்லதொரு விழிப்புணர்வுப் பகிர்வு. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. சபாஷ் போட வைக்கும் பாத்திரம் பகுத்தறிவுடையது.

  பதிலளிநீக்கு
 3. Thanks VGK sir

  Thanks Shaji

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...