எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 22 ஜனவரி, 2020

சீதை சிறைப்படக் காரணமான சூர்ப்பணகை. தினமலர் சிறுவர் மலர் - 49.

சீதை சிறைப்படக் காரணமான சூர்ப்பணகை.
நல்லவர் ஒருவர் எந்தக் காரணமும் இல்லாமலே துயர்ப்பட நேரும். அது அவங்க தப்பு இல்லை. தன் துர்நோக்கம் நிறைவேற அவங்களை இப்பிடிப் பகடைக்காயா சிலர் பயன்படுத்திக்குவாங்க. அப்படிப்பட்ட துர்நோக்கம் கொண்ட சூர்ப்பனகை தன் எண்ணம் நிறைவேற ஒன்றுமறியா சீதையைப் பகடையாகப் பயன்படுத்திக்கிட்டா. உள்ளபடி அவள் காழ்ப்புணர்வு சீதை மேலே இல்லை. பின்னே யார் மேலேன்னு பார்க்கலாம் வாங்க குழந்தைகளே.
பிரம்மாவின் புத்திரர் புலத்திய மகரிஷி. அவரது மகனான விச்ரவசுவுக்கும் அவரது இரண்டாம் மனைவியான கேசிக்கும் பிறந்தவர்கள்தான் இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை, விபீஷணன்.
சூர்ப்பணகைக்கு உரிய பருவம் வந்ததும் காலகேயர் என்னும் தங்கநிற அரக்கர் வம்சத்தைச் சார்ந்த வித்யுத்சிகுவன் என்பாருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். சூர்ப்பணகையும் இயல்பிலேயே அழகானவள். இருவரும் இன்பமாக வாழ்ந்து வந்தார்கள்.
ஒருமுறை இராவணன் தன் புஜபராக்கிரமத்தைக் காட்ட வேண்டிக் காலகேயர்களுடன் போரிட்டான். அப்போது வித்யுத்சிகுவனை சூழ்ச்சி செய்து இராவணன் கொன்று விடுகிறான். இதைக்கேட்டுத் துடித்த சூர்ப்பணகை போர்க்களத்துக்கு ஓடிவருகிறாள். அண்ணனாயினும் தன் கணவன் சாவுக்குக் காரணமானவனை அதே போல் சூழ்ச்சியால் வெல்வேன் என சபதமேற்கிறாள்.

இராவணன் தன் ஆட்சிக்கு உட்பட்ட தண்டகாரண்யத்தில் பஞ்சவடி என்ற இடத்தில் வாழுமாறு சூர்ப்பணகையைத் தன் தம்பிகளான கரண் தூஷணன் ஆகியோர் காவலோடு அனுப்புகிறான். உள்ளத்தில் வஞ்சத்தை மறைத்து அவள் குமைந்த மனத்தோடு அங்கே சென்று பழிவாங்கும் சமயத்துக்காகக் காத்திருக்கிறாள்.
சில நாட்களில் பஞ்சவடிக்கு இராமன், லெக்ஷ்மணன் , சீதை ஆகியோர் வருகிறார்கள். இராவணனுக்கு மானிடர்களால்தான் இறப்பு ஏற்படும் என்ற வரம் பெற்றிருப்பது சூர்ப்பணகைக்குத் தெரியும். எனவே ஒரு திட்டத்தோடு இராமர் தனித்திருக்கும்போது சூர்ப்பணகை அங்கே சென்று தன்னை மணந்து கொள்ளுமாறு கேட்கிறாள். ஏகபத்தினி விரதனான தான் அவ்வாறு செய்ய இயலாது என ராமர் உரைக்கிறார். மேலும் மேலும் அவள் வலியுறுத்தவும் அங்கே வரும் லெக்ஷ்மணன் அதைக் கேட்டுக் கோபமாக அவள் மூக்கை அரிகிறான்.
இரத்தம் பெருகத் துன்பத்தில் துடிக்கும் அவள் ஓடிச்சென்று தன் தம்பிகளான கரண், தூஷணர்களிடம் தனக்கேற்பட்ட அவமானத்தைத் தெரிவிக்கிறாள். “தம்பிகளே ஒரு மானுடன் என்னை வாளால் சிதைத்துவிட்டான் “ அதைக் கேட்டதும் பொங்கி எழும் அவர்கள் படையுடன் புறப்பட்டு இராமனுடனும் லெக்ஷ்மணனுடனும் போரிடுகிறார்கள். முடிவில் இராமனின் வில்லுக்கு இரையாகிறார்கள்.
அதனால் சூர்ப்பணகை தன் தமையன் இராவணனின் அரண்மனைக்கு ஓடுகிறாள். அங்கே அவையில் வீற்றிருக்கும் அவனிடம் இராமனின் தம்பி லெக்ஷ்மணன் வாளால் தன் மூக்கை அரிந்ததைச் சொல்கிறாள். அவன் உடனே கோபம் கொள்ளாமல் எல்லாம் சூர்ப்பணகையின் தவறு என்பதுபோல் இருப்பதைப் பார்த்து “ அண்ணா, அங்கே சீதை என்றொரு அழகான பெண் இருக்கிறாள். அவளை உனக்குத் தருமாறு கேட்கப் போய்த்தான் என் மூக்கறுபட்டது “ என மாற்றிச் சொல்கிறாள்
சீதையின் அழகை அவள் புகழ்ந்ததைக் கேட்டதும் இலங்கையிலிருந்து தன் புஷ்பக விமானத்தில் இராவணன் உடனே புறப்படுகிறான். விருப்பமில்லாத பெண்ணைத் தொட்டால் அவன் சிரசு சிதறும் என்று முன்பொருமுறை ரம்பை அவனுக்குக் கொடுத்த சாபம் பற்றி சூர்ப்பணகைக்குத் தெரியும். எனவே சீதையைத் தொட்டதும் அவன் சிரசு சிதறும் என்று சூர்ப்பணகை காத்திருக்க அவனோ வயதானவன் போல் பிச்சை கேட்டு சீதை கோட்டைத் தாண்டியதும் சீதையைத் தொடாமலே பூமியோடு பேர்த்து எடுத்துவந்து அசோகவனத்தில் சிறைவைக்கிறான்.
ஒரு வயதான மனிதன் பிச்சை கேட்கிறானே என்று மனம் இரங்கி லெக்ஷ்மணன் போட்ட கோட்டையும் தாண்டி பிச்சை போட வந்ததுதான் சீதை செய்த தவறு. அவளது இரக்கமே அவள் துயரத்துக்குக் காரணமானது.
சீதை அசோகவனத்தில் சோகமே உருவாய் அமர்ந்திருக்க தினமும் போய் அவளைப் பார்த்துத் தன்னை மணந்துகொள்ளும்படி இராவணன் வற்புறுத்துகிறான். தன் திட்டம் வெற்றிபெறவில்லையே என்ற எண்ணத்தில் இராமன் சீதையை மீட்க எப்போது படையெடுத்து வருவான் எனக் காத்திருக்கிறாள் சூர்ப்பணகை.  
ஒரு வழியாக இராமன் அனுமன் துணையுடன் சீதையைக் கண்டுபிடிக்கிறார். இராமனும் லெக்ஷ்மணனும் சுக்ரீவனின் வானர வீரர்கள் உதவியுடன் இலங்கையை அடைகிறார்கள். பல நாட்கள் யுத்தம் நடக்கிறது. கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோர் அழிகிறார்கள். முடிவில் மாவீரனான இராவணனும் மானுடனான இராமனின் பாணத்தால் வீழ்கிறான்.
உண்மையில் சூர்ப்பணகை காழ்ப்புக் கொண்டது இராவணன் மேல்தான். சீதையின் மேல் எல்லாம் இல்லை. ஆனாலும் அவள் செய்த காரியத்தால் சீதை சிறைப்பட நேர்ந்தது. இராவணன் வீழ்ந்ததும் அவள் தன் கணவனைக் கொன்றவனை சூழ்ச்சியால் பழிவாங்கிய திருப்தியோடு அகல்கிறாள். அவளது துர்நோக்கம் நிறைவேற ஒன்றுமறியா சீதை சிறைப்பட்டாள்.
எனவே துர்நோக்கம் கொண்டவர்கள் அவர்கள் விருப்பம் நிறைவேற நம்மைப் பகடைக்காயாய்ப் பயன்படுத்துவார்கள். அதற்கு இடம் கொடாமல் நாம் துர்நோக்கம் கொண்டவர்களைக் கண்டதுமே விலகிச் செல்லக் கற்போம் குழந்தைகளே.

டிஸ்கி :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 3 .1. 2020  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

டிஸ்கி 2. திருமூலர் கதையை அரும்புகள் கடிதத்தில் பாராட்டிய வேதாரண்யம் வாசகர் திரு. ஆர். ஜானகிராமன் அவர்களுக்கு நன்றி. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...