எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

திங்கள், 16 டிசம்பர், 2019

நிலையாமையை உணர்ந்த குண்டலகேசி. தினமலர் சிறுவர்மலர் - 45.

நிலையாமையை உணர்ந்த குண்டலகேசி
ஒரு பொருளின் மேல் ஆசைப்படுவதும் அது கிடைத்ததும் சலித்துப் போவதும் மனித இயல்பு. ஆனால் ஆசைப்பட்ட ஒரு பொருள் கிடைத்ததும் அடுத்த பொருளின்மேல் ஆசைப்படுவதும் அதை அடையப் போராடுவதும் அது கிடைத்ததும் அதை விட்டுவிட்டுக் கள்ளமாக இன்னொன்றை நாடுவதுமாகத் திரிந்தான் ஒருவன். அவன் செயல் தவறு என்று நீதி புகட்டினாள் ஒருத்தி. அந்தக் கள்வன் பற்றியும் அவனைத் திருத்தி நீதி புகட்டியவள் பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.
அது ஏழாம் நூற்றாண்டுக் காலம். செல்வச் செழிப்பு மிக்க வணிகக் குடும்பங்கள் பல அந்த நகரில் வசித்து வந்தார்கள். அவர்களுள் ஒரு வணிகனின் மகள்தான் பத்தா தீசா. அழகும் அறிவும் ஒருங்கே அமையப் பெற்றவள். பருவமடைந்த வயதில் அவளின் பேரழகைக் கண்டு அவ்வூரே வியந்தது.
அவள் தந்தை வணிகர் என்பதால் அரசாங்கத்தில் ஏக செல்வாக்கு. வீட்டில் பொன்னையும் மணியையும் படியில் அளக்கும் அளவு செழிப்பம். தந்தைக்கோ மிகவும் செல்லம். மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் தந்தை. மாளிகை, மாடு மனை, பணியாள் என்று எந்த வசதிக்கும் குறைவில்லை. இப்படி செல்வத் திருமகளாக வசித்திருந்த அவள் கூந்தல் சுருண்டு வளர்ந்ததால் குண்டலகேசி எனவும் அழைக்கப்பட்டாள்.

ஒருநாள் அவள் தன் மாளிகையின் உப்பரிகையில் நின்று தலை உலர்த்திக் கொண்டிருந்தபோது வித்யாசமான அக்காட்சியைக் கண்டாள். தெருவில் அரசாங்க வீரர்கள் ஒரு மனிதனைச் சங்கிலியால் பிணைத்துக் கொலைக்களத்துக்கு இழுத்துச் சென்றனர். முரட்டுத் தோற்றமும் மீசையும் கொண்ட அவன் சிறிதும் கலங்காமல் சென்று கொண்டிருந்தான். வாழ்க்கை விதி வழியே செய்த வினை வழியே என்றபடி அவனைப் பார்த்ததும் பத்த தீசாவுக்கு ஏனோ இரக்கம் தோன்றியது.
வீரர்களிடம் ”அவன் பெயர் என்ன? அவன் செய்த தவறு யாது?” எனத் தோழிகள் மூலம் வினவினாள். தோழியர் விவரம் கேட்டு வந்து “ பத்த தீசா, அவன் பெயர் சத்துவான். வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வழி செல்வோரின் உயிரைக் கவர்ந்ததால் அரசன் கொலைத்தண்டனை விதித்துள்ளார் “ என்று கூறினர்.
“ஐயோ பாவம். அவன் திருந்த வாய்ப்புக் கொடுக்கலாம்தானே “ என்று பலவாறு அவள் புலம்பவும் மகளுக்கு அந்தச் சாத்துவன் மேல் ஏற்பட்ட இரக்கத்தைப் புரிந்து கொண்ட அவள் தந்தை தனது செல்வாக்கால் அரசனிடம் சொல்லி அவனை விடுவிக்கிறார்.  
“அரசே இவன் கொள்ளையடித்த பொருட்களுக்கீடாக நான் எனது செல்வத்திலிருந்து கொடுத்துவிடுகிறேன். இவனை விடுவிக்க வேண்டுகிறேன் “ என்று அரசனிடம் பத்தா தீசாவின் தந்தை வேண்ட அரசனும் சம்மதித்து விடுகிக்கிறான்.
மேலும் பத்தா தீசாவுக்கு சத்துவான்மேல் விருப்பம் ஏற்பட்டதைக் கண்டுபிடிக்கிறார். மனம் துணுக்குற்றாலும் நடப்பது நடந்தே தீரும் அதைத் தவிர்க்க இயலாது என்று மகள் விரும்பியவனுக்கே அவளைத் திருமணமும் செய்து வைக்கிறார் . பத்தா தீசாவும் சத்துவானும் திருமணம் ஆகி அவள் தந்தை கொடுத்த ஒரு இல்லத்தில் வசித்து வந்தார்கள்.
திருமணம் செய்து வைத்ததோடு அல்லாமல் மகளின் குடும்பத்தையும் நிர்வகித்து வந்தார் அவளது தந்தை. எந்தக் கவலையும் இல்லாமல் பத்தா தீசாவும் அவள் கணவன் சத்துவான் என்ற காளனும் இனிமையாகக் குடும்பம் நடத்தி வந்தார்கள்.
எனினும் திருடிப் பழக்கப்பட்ட சத்துவானால் அங்கே சில காலத்துக்கு மேல் நீடித்து இருக்க முடியவில்லை. மேலும் சொந்த மனைவிதான் எனினும் அவன் மனைவி பத்தா தீசா தலைமுதல் கால்வரை அணிந்திருந்த தங்க வைர நகைகள் வேறு அவனுக்கு திருடும் ஆசையைத் தூண்டியது.
ஒரு நாள் அவன் தன் மனைவி பத்தா தீசாவை இன்பச் சுற்றுலா சென்றுவரலாம் என்று அழைக்கிறான். அவளும் கணவனுடன் மகிழ்வாகக் கிளம்புகிறாள். பக்கத்திலிருக்கும் சேரர் மலைக்கு இருவரும் கைகோர்த்துச் செல்கிறார்கள்.
சிறிது தூரம் ஏறியதும் அவளுக்குக் கணவனின் நடத்தையில் சந்தேகம் தோன்றுகிறது. ஆங்காங்கே பள்ளமாக இருக்கும் இடத்தை எட்டிப் பார்ப்பதும் அதன் பின் வந்து அவள் கைபிடித்து மேலேறுவதுமாக இருக்கிறான்.
உச்சியில் ஏறியதும் “ என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தீர்கள்” எனக் கணவனிடம் வினவுகிறாள் பத்தா தீசா.
“ உன்னிடம் இருக்கும் நகைகளைக் கொள்ளையடித்து உன்னைக் கொல்லவே அழைத்து வந்தேன்.” என்று சிறிதும் இரக்கமின்றிக் கூறுகிறான் சத்துவான்.
திக்கென்று தூக்கிவாரிப் போடுகிறது அவளுக்கு. ’ இவனைப் போய்க் காப்பாற்றினோமே. கடைந்தெடுத்த கயவனை நம்பித் தன் வாழ்வை வேறு ஒப்படைத்தோமே. என்ன செய்வது, எப்படித் தப்பிப்பது ?’ என்று யோசிக்கிறாள்.
“ஐயனே நான் என் நகைகளைக் கழற்றி வைத்துவிட்டு சாவதற்கு முன் உங்களை ஒருமுறை வலம் வந்து வணங்க விரும்புகிறேன். “
இரண்டு கால்களையும் அகல வைத்துத் திமிரோடு நின்றவன் “ம்ம்ம் சீக்கிரம் ஆகட்டும் “ என்று கூற, அவனை வலம் வருகிறாள் பத்தா தீசா. அவன் பின்புறம் வரும்போது தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி அம்மலை உச்சியில் இருந்து அவனைக் கீழே தள்ளி விடுகிறாள்.  
தன் புத்திசாலித்தனத்தால் அவனிடமிருந்து தப்பித்தாலும் செல்வம், உடல் இளமை, பொருள் ஆகியவற்றின் நிலையாமையை உணர்கிறாள். அதன் பின் தலைமுடி மழித்துக் காவியுடை அணிந்து உஞ்சை மாநகரிலிருந்த அருக்கச்சந்திரன் என்பாரிடம் ஞான உபதேசம் பெற்றுப் பவுத்தத் துறவியாகிறாள். அத்தோடு பவுத்தம் பற்றிப் பலருடன் வாதம் புரிந்து வெல்கிறாள்.
பவுத்தமதத்தைத் தழுவ விரும்புபவர்களுக்கு - சீவரம் கொடுக்கும் – உதவும் மாந்தர் நீடு வாழ்ந்து முக்தியை அடைய அவள் ஆசி வழங்கி உள்ளாள். எதிலும் நிலையாமையை உணர்ந்த அவள் அதை மக்களுக்கு அறிவுறுத்திய பின் முடிவில் முக்தி அடைந்தாள்.

டிஸ்கி :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 6 .12. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.டிஸ்கி 2.:- ஒரே இதழில் இரு வாசகர்களின் பாராட்டுக் கடிதங்கள் !!!

சித்திரகுப்தன் கதையைப் பாராட்டிய தக்கோலம் வாசகர் திரு. மு. பயாசுதீன் அவர்களுக்கு நன்றி. 

இதிகாச புராணக் கதைகள் நல்வழிப்படுத்துவதாகக் கூறிய கைலாஷ்நகர் வாசகர் திரு. எஸ். பி. ஜெயசூர்யா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...