எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 3 டிசம்பர், 2019

ஓவியத்திலிருந்து உயிர்பெற்ற குழந்தை. தினமலர். சிறுவர்மலர் - 43.

ஓவியத்திலிருந்து உயிர்பெற்ற குழந்தை.
குழந்தை என்றால் அன்னையர் பத்துத்திங்கள் சுமந்து பெற்று வளர்ப்பார்கள். கருவில் உருவாகும் அக்குழந்தைக்கு எந்நோவும் வரக்கூடாது என்று மருந்துண்பார்கள். நதிகள்தோறும் கடலிலும் கூடத் தீர்த்தமாடுவார்கள். புண்ணிய ஸ்தலங்களின் தீர்த்தங்களையும் அருந்துவார்கள். வளைகாப்பு, சீமந்தம் என்று தாய்வீட்டில் சீராடுவார்கள். இப்படி எந்த நிகழ்வும் இல்லாமல் ஓரிரு நொடிகளில் ஒரு குழந்தை உருவானது. அதுவும் ஒரு ஓவியத்திலிருந்து உயிர்பெற்றது. இந்த அதிசயத்தைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
உலகின் பாவபுண்ணியக் கணக்குப் பெருகிக் கொண்டே போயிற்று. எமதர்ம ராஜனால் ஒரு அளவுக்குமேல் மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்கைப் பார்ப்பதும் அதன் வழி மேலோகம் வருவோர்க்குத் தண்டனை கொடுப்பது என்பதும் மிகுந்த சிரமமான காரியம் ஆயிற்று.
அவர் பிரம்மனின் தாள்களைப் பணிந்து “ப்ரபோ. என்னால் வேலைச்சுமை தாளமுடியவில்லை. ஒரு நாள் கிழமை கூட விடுமுறையில்லாமல் வேலை இருக்கிறது. யமி வேறு இதென்ன வேலை எப்போது பார்த்தாலும் கயிறும் எருமையுமாய் அலைகிறீர்கள்” என்று கோபிக்கிறாள்.
“அதற்கென்ன செய்வது யமா. எல்லாரும் அவரவர்க்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்யவேண்டியதுதான் . இதில் உயர்வென்ன தாழ்வென்ன ?”

“உயர்வு தாழ்வு என எண்ணவில்லை சுவாமி. என்னால் வேலைப்பளு தாங்கமுடியவில்லை. மனிதர் கோடிக்கணக்கில் பெருகிக் கொண்டிருக்கிறார்கள் “
“அப்படியானால் உன் குறையை மகேசனிடம் சென்று சொல். அவர் தீர்த்து வைப்பார் “ யமன் உடனே சிவனைக் காண ஓடிவந்தான். வந்ததும் வராததுமாகத் தன் வேலைகள் அதிகமாகிக் கொண்டே போவது பற்றிப் புலம்பினான்.
”ஈசனே, அல்லும் பகலும் மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்கை நிர்வகிக்க வேண்டியதாயிருக்கிறது. இதை எல்லாம் என்னால் ஒற்றை ஆளாய்ச் சமாளிக்க முடியவில்லை. எனக்கு உதவியாளனாய் யாரையேனும் போட்டு என் வேலையைப் பகிர்ந்தளித்தால் தன்யனாவேன் சுவாமி “ என்று கெஞ்சுகிறான்.
ஏற்கனவே யமனின் அழகைக் கண்டு மற்றவர்கள் புகழ்வதால் அவர் தன் கடமையில் தவறுகிறாரெனப் புகார் வந்ததில் சிவன் அவரின் அழகைக் குறைத்துக் கருப்பாக்கிவிட்டார். மேலும் கோரைப்பற்களும் முரட்டு மீசையுமாய் இருந்தாலும் யமன் பச்சைப் பிள்ளைபோல் பரிதாபமாய் சிவனைப் பார்த்தார்.
இதனால் மனம் கனிந்த சிவன் யமனைப் பார்த்து ஆதரவாய் “ கலங்காதே யமா. உனக்கு உடனடியாக ஒரு உதவியாளனை ஏற்பாடு செய்து தருகிறேன். உன் வேலைச்சுமை குறையும். ” என்று உறுதி சொல்லி விட்டுக் கைலாயம் சென்றார்.
அன்று சித்திரை மாதம் சித்திராபௌர்ணமி தினம்.  சித்திரை நட்சத்திரமும் கூடி இருந்தது. கைலாயத்தில் உமையம்மை அழகான குழந்தை ஒன்றை ஓவியமாய் வரைந்துகொண்டு இருந்தார். அக்குழந்தை தவழவில்லை, அமர்ந்த கோலத்தில் இருந்தது. வித்யாசமாய் அதன் ஒரு கையில்  மைக்கிண்ணமும் இன்னொரு கையில் எழுதுகோலும் கொண்டிருந்தது.
“உமா என்ன செய்கிறாய் “ என அன்பொழுகக் கேட்டார் சிவன்.
“ஐயனே, நான் ஒரு குழந்தையை வரைந்து கொண்டு இருக்கிறேன்.”
“அட மிக அழகாக தத்ரூபமாக இருக்கிறதே இக்குழந்தை “ என்று வியந்து பாராட்டி அந்த ஓவியத்தைத் தன் கையில் வாங்கிப் பார்த்தார் சிவன்.
கணவன் பாராட்டியதால் மனம் மகிழ்ந்த உமையும் அவ்வோவியத்தை அவர் கையில் கொடுத்தார். ஓவியத்தில் இருக்கும் குழந்தையின் முகத்தோடு முகம் வைத்துத் தன் மூச்சினை அக்குழந்தைக்கு ஏற்றினார் சிவன். என்னே அதிசயம். ஒரே விநாடியில் அவ்வோவியம் நிஜக்குழந்தையாக உருமாறி அவர்கள் முன் சிரித்தது.
இதைக் கண்டு கைலாயத்தில் சிவகணங்களும் திகைத்துப் போயின. ”இதென்ன லீலை. ஓவியக் குழந்தை உண்மையான குழந்தை ஆனதே  “ என்று அதிசயத்தில் கண்கள் விரிய சிவனைப் பார்த்தாள் உமை.
“ஆம் உமையே இந்த லீலையை ஒரு காரணத்துக்காகச் செய்தேன். அழகான குழந்தையைத் தக்க தருணத்தில் வரைந்த உனக்கு நன்றி “ என்றார் சிவன்.
”சுவாமி. இவனுக்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமே. என்ன பெயரிடலாம் “ எனக் கேட்டாள் உமை.
“சித்திரத்தில் மறைந்து இருந்து உயிர்த்ததால் சித்திர குப்தன் என்று வைக்கலாம். சித்திரமே நமது புத்திரன் ஆனதால் சித்திர புத்திரன் என்றும் அழைக்கலாம் என்றார். ”
“சித்திர குப்தன் வாழ்க , வாழ்க” என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. பெற்றோர் இருவரும் அக்குழந்தையை உச்சிமோர்ந்து ஆசீர்வதித்தனர். சித்திர குப்தன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தார்.
அங்கோ யமனுக்கு வேலைப்பளுவின் சுமை தாங்க முடியவில்லை. தான் பிரம்மனிடமும் சிவனிடமும் முறையிட்டதை மறந்தே போய்விட்டார். சிலகாலம் கழித்துத்தான் தான் தனக்கு உதவியாள் கேட்டது அவருக்கு ஞாபகமே வந்தது. பிரம்மனிடம் ஓடினார்.
பிரம்மா சொன்னார், “ யமா உன் கோரிக்கையை அன்றே சிவன் பூர்த்தி செய்துவிட்டார். கைலாயம் சென்று உன் உதவியாளனை அழைத்துச் செல் “ என்றார்.
கைலாயம் வந்தார் யமன். அங்கே அழகே வடிவான சிறுவன் நின்றிருந்தான். சிவன் அவனை யமனிடம் ஒப்படைத்து “இவன் பெயர் சித்திர குப்தன். இவன்தான் இனி உமக்காய் உயிர்களின் பாவ புண்ணியக் கணக்கை நிர்வகிப்பான். ” என்று கூறினார்.
அன்றிலிருந்து சித்திரபுத்திரன் நம் அனைவரின் பாவபுண்ணியத்தையும் குறித்துக் கொண்டே வருகிறான். அவன் கண்ணில் இருந்து எதுவும் தப்ப முடியாது. நாம் தீமை செய்தால் நம் பாவக் கணக்குப் பெருகும். நாம் நன்மை செய்தால் நம் கணக்கில் நன்மையும் புண்ணியமும் பெருகும். எனவே நன்மையே செய்து வருவோம் குழந்தைகளே. 

டிஸ்கி :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 22 .11. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

டிஸ்கி 2. :- தாடகையின் கதை சொல்லிய நீதியை அரும்புகள் கடிதத்தில் பாராட்டிய வேதாரண்யம் வாசகர் திரு. ஆர். ஜானகிராமன் அவர்களுக்கு நன்றிகள். 

2 கருத்துகள்:

  1. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...