எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 23 டிசம்பர், 2019

வளையாபதிக்கு எதிராக சாட்சி சொன்ன நாளி. தினமலர் சிறுவர்மலர் - 46.

வளையாபதிக்கு எதிராக சாட்சி சொன்ன நாளி.
எந்தக் காலத்திலும் நீதியைத் தம்பக்கம் வளைத்துவிடலாம் என்பது பணம் படைத்தவர்களின் எண்ணமாய் இருக்கிறது. ஆனால் எவ்வளவு பணம் படைத்தாலும் தெய்வத்தை வளைக்க முடியாது அது உண்மையையே தாங்கிப் பிடிக்கும். ஒரு வைர வாணிகன் தன் செல்வாக்கால் உண்மையைத் திசை திருப்பப் பார்த்தான். அவனுக்கு எதிராக சாட்சி சொல்லி உண்மையை நிலைநாட்டியது நாளி என்ற காளி தெய்வம். அது பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
கடலும் அலையும் கைகோர்த்துத் திரியும் இடம் புகார் நகரம். கடற்துறைமுகத்தில் மரக்கலங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றில் ஒன்று நவகோடி நாராயணன் என்ற வைர வியாபாரி உடையது. இவர்தான் வைர வாணிகன் வளையாபதி என்றும் அழைக்கப்பட்டார். அவர் வீட்டில் செல்வம் மலைபோல் குவிந்திருந்தது. வீடு நிறைய உறவினர்களும் அவர்களுக்குப் பணிபுரிய வேலையாட்களும் நிரம்பி இருப்பார்கள்.
நவகோடி நாராயணன் மிகுந்த சிவபக்தி கொண்டவர். நாள்தோறும் சிவனைப் பூசித்துத்தான் தன் வேலையைத் தொடங்குவார். நவரத்தினங்களும் வைரமும் விற்றுத் திரைகடல் ஓடித் திரவியம் சேர்த்து வந்தார்.

அவருக்குத் தன் வணிகக் குலத்திலேயே திருமணம் ஆகி நிறையப் பிள்ளைகளும் இருந்தார்கள். மனை நலம், மனைவி நலம், நன்மக்கட்பேறு வாய்த்திருந்தாலும் அவர் வேறு குலத்திலும் ஒரு பெண்ணை விரும்பி மணந்து கொண்டார். இதைக் கண்டு வெகுண்ட வணிகர் குல மக்கள் ஊர்க்கட்டுப்பாடு விதித்து அவரை ஒதுக்கி வைக்கின்றனர்.
“நான் செய்த தவறென்ன ? “ என்று அவர் ஊர்ச்சபையில் கேட்க அவர்கள் ”ஒரு தாரம் இருக்கையில் மறுதாரம் திருமணம் செய்தது தவறு, மேலும் அப்பெண் வேறு குலத்தைச் சேர்ந்தவள். அவளை விலக்கி வந்தால் ஊராரோடு இயைந்து இருக்கலாம் “என்று தீர்ப்புரைக்கிறார்கள். ”ஆடவர்க்கும் கற்புநிலை வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
ஊரிலேயே பெரிய மனிதன். ஆனால் என்ன, எந்த மரியாதையும் கௌரவமும் இல்லாமல் ஊராரால் ஒதுக்கி வைக்கப்பட்டவன். வேறுவழியின்றி நவகோடி நாராயணன் ஊர்க்கட்டுப்பாட்டுக்காகத் தன் இரண்டாம் மனைவியை விலக்கி வைக்கிறார். அப்போது  நவகோடி நாராயணனின் சிசுவை வயிற்றில் தாங்கி இருந்தாள் அந்த இரண்டாம் மனைவி. அவள் பக்கம் நியாயம் பேசுவோர் யாரும் இலர். எனவே அவள் தன் விதியை நொந்தபடி தனியே சென்று ஒரு இல்லத்தில் வசித்து வருகிறாள்.  
அதன் பின் நவகோடி நாராயணன் வைர வியாபாரத்தை விரிவுபடுத்தத் தன் மரக்கலத்தில் கடற்பயணம் மேற்கொள்கிறார். இன்னும் பல அயல் தேசங்கள் சென்று வியாபாரத்தைப் பெருக்கி நவநிதியமும் வைரங்களும் கொண்டு வந்து சேர்க்கிறார். அவர்கள் குடும்பம் செல்வச் செழிப்பின் உச்சியில் இருக்கிறது. முதல் மனைவியுடனும் மக்களுடனும் இன்பமாகக் குடும்பம் நடத்துகிறார். இரண்டாம் மனையாளை மறந்தே போகிறார்.
குறிப்பிட்ட காலம் வந்ததும் அழகான ஆண்மகவைப் பெற்றெடுக்கிறாள் நவகோடி நாராயணனின் இரண்டாம் மனைவி. அக்குழந்தைக்கு நற்பண்புகள் பலவும் போதித்து வளர்க்கிறாள். உயிர்களைக் கொல்லாமை, புலால் உண்ணாமை, உலகின் நிலையாமை எல்லாம் கற்பிக்கிறாள். அழகிய அச்சிறுவனும் வளர்ந்து மற்ற சிறார்களோடு கலந்து கல்வி கற்று வருகிறான்.
ஒரு நாள் சிறுவர்கள் கூடி விளையாடும்போது அவனைத் தகப்பன் பெயர் தெரியாத பிள்ளை என்று எள்ளி நகையாடுகிறார்கள். உடனே அவன் தன் தாயிடம் ஓடித் தன் தகப்பன் பெயரைக் கேட்கிறான்.
“அம்மா, உடனே சொல் , என் தகப்பன் பெயர் என்ன”
“நான்தான் உனக்குத் தகப்பனும் தாயும் ஐயா” என்கிறாள் அவன் தாய்.
“பொய் சொல்லக்கூடாது என்று கற்றுக் கொடுத்த நீயே பொய் சொல்கிறாயே அம்மா , உண்மையைச் சொல் என் தந்தை யார். என்னைத் தகப்பன் பெயர் தெரியாதவன் என்று மற்றவர்கள் எள்ளுகிறார்கள்” மகன் கண்ணில் கண்ணீர் வடிகிறது.
அதைக் கண்டு பொறுக்க முடியவில்லை அத்தாய்க்கு. இருந்தும் மௌனம் சாதிக்கிறாள்.
“அம்மா நீ தினம் வணங்கும் அந்த நாளி என்னும் காளி மேல் ஆணை” உண்மையைச் சொல். என் தந்தை யார். இதை நான் உலகுக்குச் சொல்லியே ஆக வேண்டும் “ என்கிறான்
நாளியின் பெயரைக் கேட்டதும் துடிதுடித்துப் போகும் அத்தாய் உடனே நவகோடி நாராயணன் என்னும் வைர வியாபாரிதான் அவன் தந்தை என்று உரைக்கிறாள்.
உடனே அவன் வாணிகர் தெருவில் சென்று நவகோடி நாராயணனிடம் தான் அவன் புதல்வன் என்று நிறுவ முற்படுகிறான். ஏழ்மையில் புரண்ட அச்சிறுவனைப் பார்த்து நவகோடி நாராயணன் தன் மகன்தான் அவன் என்பதை நம்பாமல் புறந்தள்ளுகிறான். தந்தையின் புறக்கணிப்பால் கண்களில் நீர் வடியத் தன் தாயிடம் ஓடி வருகிறான் அச்சிறுவன்.
“அல்லும் பகலும் என் அன்னை வணங்கும் நாளியே . என் தந்தை நவகோடி நாராயணன் என்பதற்கு நீதான் சாட்சி , நான் அவர் மகன்தான் என்பது உண்மையானால் நீதான் சபைக்கு வந்து சாட்சி சொல்ல வரவேண்டும் “ என்று வேண்டுகிறான்.
அச்சிறுவனின் கையறு நிலைகண்டு இரங்கும் காளியும் வருவதாக வாக்குக் கொடுக்கிறாள். ஊர்ச்சபையைக் கூட்டுகிறான் அச்சிறுவன். பிராது விசாரிக்கப்படுகிறது. நவகோடி நாராயணன் அச்சிறுவன் தன் மகன்தான் என்பதை மறுக்க அங்கே அதிரடியாகத் தோன்றுகிறாள் நாளி என்னும் காளி.
“வைர வாணிகன் வளையாபதியே , வாழ்க்கையை உன் விருப்பத்திற்கு வளைத்து வாழ்கிறாய். உன் விருப்பத்திற்குப் பெறவும் விலக்கவும் குழந்தை ஒன்றும் கடைச்சரக்கல்ல. இவள் உன் இரண்டாம் மனைவி. இவளை நீ தள்ளி வைத்தபோது கர்ப்பமுற்று இருந்தாள். உனக்குப் பிறந்தவன்தான் இச்சிறுவன். அதற்கு நானே சாட்சி. இவனை ஏற்றுக் கொள்  “ எனத் தன் கரிய உருவத்தோடும் நீளத்தொங்கும் முடிகளோடும் ஆடும்கரங்களோடும் ஆவேசமானாள் நாளி.
உண்மையை உணர்ந்த வைர வாணிகன் வளையாபதி என்ற நவகோடி நாராயணன் அப்பெண்ணைத் தன் மனைவியாகவும் அச்சிறுவனைத் தன் மகனாகவும் ஸ்வீகரித்து அவனுக்கு வீர வாணிபன் எனப் பெயரிட்டுத் வாணிபம் தொடங்கவும் பொருள் கொடுக்கிறான்.
என்றைக்கிருந்தாலும் தெய்வம் நின்று பேசும். எனவே உண்மையே பேசி உண்மையின் வழி நடப்போம் குழந்தைகளே.

டிஸ்கி :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 13 .12. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.


டிஸ்கி 2. அரும்புகள் கடிதத்தில் நந்திதேவரின் கதையைப் பாராட்டிய திருவம்பநல்லூரி வாசகி திருமிகு செ. விஷ்ணுப்பிரியா அவர்களுக்கு நன்றி. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...