எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

வியாழன், 11 மார்ச், 2021

அமரன் ஆன அங்காரகன்

அமரன் ஆன அங்காரகன்

ஒருவர் பிறந்தபோதே தாயும் தந்தையும் கைவிட்டாலும் பயிற்சியாலும் முயற்சியாலும் சாகாவரம் பெற்ற தேவர் ஆகமுடியுமா. முடியும் என நிரூபிக்கிறது அங்காரகனின் கதை. அங்காரகன் சிவந்தநிறமும் சிவப்பு வாயையும் கொண்டவன். அதனால் செவ்வாய் எனவும் அழைக்கப்படுகிறான்.   செவ்வாய் வெறும் வாய் என்பார்கள் ஆனால் அங்காரகன் அமரன் ஆனான், மங்களமானவன் என்னும் பெயரில் மங்களனும் ஆனான். அது எப்படி எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
நர்மதை நதிக்கரை. அங்கே முனிவர் பரத்வாஜர் தவம் செய்து வந்தார். உக்கிரமான தவம். அப்போது வான் வழி பறந்து கொண்டிருந்த ஒரு தேவலோக மங்கை நர்மதை நதியின் அழகைப் பார்த்து அதில் நீராட இறங்கினாள். அவளை அங்கே கண்ட முனிவர் மணம் புரிந்து கொண்டார்.
இருவரும் அவந்தி நகரம் சென்று இல்லறம் தொடங்கினார்கள். அவர்களுக்கு சில நாட்களில் அழகான மகன் பிறந்தான். செக்கச் செவேலன அழகான குழந்தை. ஆனால் என்ன துர்ப்பாக்கியம் அவனது தாய் தேவலோக அப்சரஸ் என்பதால் குழந்தை பிறந்தவுடன் பிரிந்து தேவலோகம் சென்றுவிட்டாள். தந்தை பரத்வாஜரோ முனிவர். அவரும் திரும்பத் தவம் செய்யச் சென்றுவிட்டார்.

நர்மதை நதிக்கரையோரமே அக்குழந்தை தவழ்ந்து புரண்டு வளர்ந்து வந்தது. தாயும் தந்தையுமற்றுத் தனியாகக் கிடந்த அக்குழந்தையின் மேல் பூமாதேவிக்குப் பரிவு வந்தது. செக்கச் செவேலன அக்கினிபோல் ஒளிவீசிக் கொண்டிருந்தது அக்குழந்தை. எனவே அவனுக்கு சிவந்த நிறமுடையவன் என்ற அர்த்தத்தில் அங்காரகன் எனப் பெயரிட்டுப் பாசமுடன் வளர்த்து வந்தாள் பூமாதேவி
அக்குழந்தைக்கு ஏழு வயதானபோது பூமாதேவியிடம்., “ அன்னையே என் தந்தை யார்? “ எனக் கேட்டான். அப்போது பூமாதேவி அவனை பரத்வாஜரிடம் அழைத்துச் சென்று “ இதோ இந்த பரத்வாஜ முனிவர்தான் உன் தந்தை ” எனக் கூறிவிட்டு முனிவரிடம் “ முனிபுங்கவரே , செந்நிறமுள்ள அழகிய இக்குழந்தை உங்கள் மகன்தான். இவனை அங்காரகன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தேன். இப்போது உங்கள் வசம் ஒப்படைக்கிறேன் “ எனக் கூறி அங்காரகனை அவரிடம் விட்டுச் சென்றாள்.
முனிவருக்கோ வியப்பும் திகைப்பும் மேலிட்டது. என்னது அழகிய இக்குழந்தையைப் போய்ப் பிரிந்தோமே என வருந்தி அணைத்துக் கொண்டார். தகுந்த வயது வந்ததும் அவனுக்கு உபநயனம் செய்வித்து வேதங்களைக் கற்பித்தார். சூட்டிகையான குழந்தையான அங்காரகன் ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களை அதிசீக்கிரம் கற்றுத் தெளிந்தான்.
பல்வேறு கலைகளையும் தந்தையான முனிவரிடம் கற்றுத் தேறினாலும் அவன் தான் இன்னும் உயர்நிலையை அடைய விரும்புவதாகக் கூறினான். முனிவர் அவனிடம் “ உயர்நிலையை அடைய தவமே சிறந்த வழி “ என்று கூறி விநாயகனைக் குறித்துத் தவமிருக்குமாறு அறிவுறுத்தினார்.
தந்தை சொல்லித்தந்த மந்திரங்களை உச்சரித்தபடி நாட்கள் அல்ல, மாதங்கள் அல்ல பல்லாண்டுகளாக அவன் அவந்தி எனப்படும் உஜ்ஜயினி நகருக்குத் தென்மேற்கில் உள்ள ஜவாஸியா என்னும் இடத்தில் தவம் செய்து வந்தான். தவம் என்றால் சாதாரணத் தவம் அல்ல. மனம், மெய் எல்லாம் ஒன்றறக் கலந்த தவம்.

இந்த மெய்த்தவத்தினால் மகிழந்த விநாயகர் ஒரு நாள் இரவு சந்திரன் உதிக்கும்போது அவனது தவத்தை மெச்சி அவனுக்குத் தரிசனம் தந்தார். ” அங்காரகனே . உன் அருந்தவத்தை மெச்சினோம். விடாமுயற்சிக்கு நீ ஒரு உதாரணம். என்னையே மனமிரங்க வைத்துவிட்டாயே. என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன் “ என்று கூறினார் விநாயகர்.
அவனால் நம்பவே முடியவில்லை. அவரைப் பார்த்துப் பரவசமாகக் கைகூப்பினான். “ ஆனைமுகனே. என்னை அருள்பாலிக்க வந்த அருள் நிதியே..நான் இப்போது இருப்பதை விட உயர்நிலையை அடையவேண்டும். அதாவது நான் சாகாவரம் பெற்ற அமரத்தன்மை அடையவேண்டும். ”
விநாயகர் உடனே அவனை தேவலோகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே இருந்த செல்வச் செழிப்பையும் சுகபோகங்களையும் வியப்புடன் பார்த்தான் அங்காரகன். அமரர் உலகம் சென்றவுடன் அங்காரகனுக்கு அமிர்தம் வழங்கும்படி தேவர்களுக்கு ஆணையிட்டார் ஆனைமுகத்தோன். அவர் கட்டளையை மீறுவார் யார். உடனே தேவர்கள் அங்காரகனுக்கு அமிர்தம் வழங்கினார்கள்.
சாகாவரம் பெற்று அமரத்தன்மை அடைந்ததோடு மட்டுமல்ல. அவன் விநாயகரைப் போற்றித் துதித்து நவக்ரஹங்களில் ஒருவனாகவும் ஆனான். அதனால் அவனைத் துதிப்பவர்கள் வீடு வாசல் பெற்றுக் கடன் இல்லாமல் , நோய் இல்லாமல் வாழ்ந்தார்கள். அதனால் அவனை மங்களன் என்றும் அழைத்தார்கள். விநாயரோடு சேர்ந்து சில பண்டிகைகளில் இவனையும் வணங்கும் பேறு பெற்றான்.
சாதாரண மனிதனாகப் பிறந்து பெற்ற தாய் தந்தை அற்று வளர்ந்து  நேர் கொண்ட தவத்தின் மூலம் நவக்ரஹப் பதவியும் சாகாவரமும் பெற்றுத் தான் வணங்கும் கடவுளுக்கீடாக உயர்ந்த அங்காரகனின் விடாமுயற்சி போற்றத்தக்கதுதானே குழந்தைகளே.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...