மரபின் நீட்சியாக..
பெண்களும் மரபுகளும்
இன்றைக்கும் பெண் வீரமிக்க வளாக, விவேகம் நிறைந்தவளாக, நிர்வாகத்தினைச் செம்மையுற நடத்தும் ஆற்றல் பெற்றவளாக, பாசமும் அக்கறையும் நிறைந்தவளாக, விருந்தோம்பலில் இணையற்றவளாகத் திகழ்கிறாள். இவையெல்லாம் பண்டைய மரபின் நீட்சியாகும்.
இதிகாச புராணங்களிலும் சரி, வரலாற்றிலும் சரி, இலக்கியத்திலும் சரி பெண் என்பவள் எப்படி வரையறுக்கப்பட்டிருக்கிறாள் எனப் பார்தோமானால் வீரமான, வெற்றிகொள்ளமுடியாத மங்கையாகவே அவள் உருவாக்கப்பட்டிருக்கிறாள். வேட்டைச் சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக உருக்கொண்டபோது காளியிலிருந்து காத்தாயிவரை ஆயுதம் சுமந்து அக்கிரமங்களை ஒழித்தவளாகவே மக்கள் சமூகத்துக்காக அவள் படைக்கப்பட்டிருக்கிறாள். பெரும்பகுதி ஆண் தெய்வங்கள் கோலோச்சினாலும் உலக அளவிலும் பெண் தெய்வ வழிபாடுகள் உண்டு.
நாட்டுப்புறங்களில் வீரமான ஆண் தெய்வங்கள் புழங்கிய வெளியில் ஆயுதங்களோடு பெண் தெய்வங்களும் சரிநிகர் சமானமானக் கோலோச்சி இருக்கிறார்கள். தமிழகத்திலும் பண்டைய நாட்களில் தாய் தெய்வ வழிபாடே காணப்பட்டது. "பழையோன் குழவி" என்ற முருகனைக் குறிக்கும் (திருமுருகாற்றுப்படை) தொடரில் "பழையோன்" என்ற சொல் தொன்மையான இறைவியாகக் கொற்றவையைக் குறிக்கும். தாய் தெய்வம் நன்மைகளை வளர்க்கவும் தீமைகளை அழிக்கவும் ஆற்றல் பெற்றிருந்தது.
தமிழகத்தில் இன்றுவரை நிலவி வரும் அம்மன் வழிபாடு இந்நம்பிக்கையின் தொடர்ச்சியையே காட்டுகிறது. சீதை, திரௌபதி எனப் பெண்களுக்காகவே, பெண்களின் கௌரவம் காக்கவே போர்கள் நிகழ்ந்ததுபோல், தங்கள் சுயகௌரவம் காக்கப் போராடித் தெய்வமான கூத்தாடி முத்துப் பெரிய நாயகி அம்மன் போன்ற தெய்வங்களும் உண்டு.
எகிப்து, மெசப்பொடேமியா போன்ற நாடுகளில் காணப்படும் தாய்க்கடவுளின், சிற்பங்கள் தமிழ்நாட்டுக் கொற்றவை போன்று ஆயுதம் தாங்கிச் சிங்க வாகனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ளன. இவையனைத்தும் வேளாண் சமுதாயத்தில், பெண் பெற்றிருந்த சிறப்பிடத்தைக் காட்டக் கூடியன. பெண்களுக்கு மந்திர ஆற்றல் இருந்ததாகச் சைபீரியர்கள் நம்பி வந்தனர். மங்கோலியப் புராணங்கள், பெண்களே நோய் தீர்க்கும் மந்திரங்களை ஓதி வந்ததாகக் காட்டுகின்றன. ஆன்மிகம் வீரம் நிறைந்தவர்களாகப் பண்டைக்காலத்தில் பெண்களும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இதே மரபின் நீட்சியாக நாட்டைக் காக்கவும் தேசம் காக்கவும் போராடிய பெண்களின் எண்ணிக்கை பல நூறாக நீளும். ஜோன் ஆஃப் ஆர்க் முதற்கொண்டு, ஜான்சிராணி லெக்ஷ்மி பாய், அப்பக்கா தேவி, கிட்டூர் ராணி சென்னம்மா, வேலு நாச்சியார், ராணி ஜல்காரிபாய், ராணி அவந்திபாய் போன்றோரின் வீரத்தோடு மனித வெடிகுண்டாய் மாறி எதிரிகளை அழித்த குயிலி, விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் தில்லையாடி வள்ளியம்மை முனுசாமி, அஞ்சலை அம்மாள், லெக்ஷ்மி சேகல், ஒரிஸாவின் பரபதகிரி, திருப்பூர் குமரனுக்கு ஈடாக மூவர்ணக் கொடி ஏந்தி அதனால் காவலர்களால் சுடப்பட்ட வங்கத்தின் மாதங்கினி ஹஸ்ரா, ஆங்கில அரசை எதிர்த்து உப்பு விற்ற கமலாபாய் சட்டோபாத்யாய், காலனித்துவ ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிய தாரா ராணி ஸ்ரீவத்ஸவா, 60 வயதான தியாகி போகேஸ்வரி புகநாநி, காவல் நிலையத்தில் தேசியக் கொடியை ஏற்றி அதனால் இறந்த அஸ்ஸாமின் கனக்லதா பருவா, சத்யாக்ரகப் போராட்டத்தில் ஈடுபட்ட துர்காபாய் தேஷ்முக், ஜாலியன் வாலாபாக் படுகொலை கண்டு சுதந்திரப் போராட்டத்தில் இணைந்த இளவரசி ராஜ் குமாரி குப்தா ஆகியோரின் போராட்டகுணமும் வீரமும் எழுச்சியும் எள்ளளவும் குறைவில்லாதது.
தமக்கு எதிராக நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்க இன்றைக்கும் குடிக்கு எதிராக, பெண்குழந்தைகள் பாலியல் துஷ்ப்ரயோகத்துக்கு எதிராக, பணியிடப் பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக, உழைக்கும் இடத்தில் சம உரிமையும் , சம வருமானமும் கோரிப் போராடும் பெண்களின் மரபணுக்களில் இன்னும் போராட்டத்துக்கும் நீதிக்குமான தேட்டங்கள் மிகுந்துதான் இருக்கின்றன. பெண்களின் சுயமரியாதைக்காகப் போராடிய மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், எளியோரும் நிலம் வசப்படப் போராடிய கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன், எல்லோருக்கும் கல்வி கிட்டப் போராடிய சாவித்ரிபாய் புலே, கெஜார்லி கிராமத்தில் மரங்களைக் காக்கப் போராடிய அம்ரிதா தேவி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடும் ரூத் மனோரமா ஆகியோரின் தொண்டு சமூகத்தை, மக்களின் பொதுப்புத்தியைப் புனரமைத்தது.
தியாகம், வீரம், கடமை இவற்றால் யாக்கப்பட்ட பெண்ணினம் குடும்பக் கடமைகளோடு சமூகக்கடமைகளையும், தேசத்தொண்டு, இலக்கியத் தொண்டு ஆகியவற்றையும் எந்தக்குறையுமில்லாமல் நிறைவேற்றியே வந்திருக்கிறது. இதிகாச புராண காலங்களில் குறிப்பிடப்படும் பெண் தத்துவ அறிஞர் கார்க்கி வாசக்னவி, அத்வைதத் தத்துவஞானி ,பிரம்மவதனி எனக் குறிக்கப்படும் மைத்ரேயி மற்றும் வெண்பா, விருத்தங்களில் தங்கள் மனத்தைப் படைத்த ஔவை போன்ற சங்ககாலப் பெண்பாற்புலவர்களோடு இன்றையப் பெண் கவிதாயினிகளின் கவிதைகளும் பெண் உடலரசியல், பெண் நிலை, கருத்து சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், பெண்ணியம் பற்றித் தெளிவுறுத்தியே வந்திருக்கின்றன.
ஒரு காலத்தில் கருவறைகளிலும் நிலவறைகளிலும் அடைக்கப்பட்ட பெண் இனம் கருணை, தாய்மை, பெண்மையோடு, நேர்மையும் வீரமும்தான் தங்கள் இயல்பு என்பதையும் மரபு என்பதையும் நிலைநாட்டியே வந்திருக்கிறது.
ஆதி காலத்தில் பெண்களே குடும்பத்தின் தலைவிகளாக இருந்துள்ளார்கள். கைம்பெண்களாகச் சிதைத்தல், உடன்கட்டை ஏறுதல், மறுமணம் மறுத்தல், பலதார மணங்கள், பால்ய விவாகங்கள் ,கல்வி மறுப்பு ஆகியவை அந்நியப் படையெடுப்பின் காரணமாக நிலவுடமைச் சமுதாயத்தின் பிற்பகுதியில் தோன்றியவையே.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் வரவு செலவு திட்டத்தினை ஒரு பெண் அமைச்சர் தாக்கல் செய்கிறார் என்றால் அது பெருமைக்குரியது அல்லவா? நம்நாட்டில் மட்டுமல்ல. உலகெங்கும் இது போல, பல நம்பிக்கைதரும் எடுத்துக்காட்டுகள் உள்ளன. எத்தியோப்பியா பிரதமர் அபீ அகமது தமது அமைச்சரவையில் சரி பாதி இடங்களைப் பெண்களுக்கு வழங்கினார். அதற்கான காரணமாக, "ஆண்களைவிடப் பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதாலும், அவர்கள் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்த உதவுவார்கள்" என்றும் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.கட்டுமானத் துறை அமைச்சராக இருந்த ஆயிஷா முகமது அந்நாட்டின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஸ்லோவெனியா நாட்டு நீதிமன்றங்களில் ஆண் நீதிபதிகளின் எண்ணிக்கையைவிடப் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகம். நாம்பியாவில் செய்தி ஊடகங்களில் பெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் உயர் பொறுப்புகளில் உள்ளனர். மலேசியாவில் கணிப்பொறி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் சரிபாதிக்கும் அதிகமானவர்கள் பெண்கள். நியூசிலாந்தில் மருத்துவ ஆராய்ச்சியாளர்களில் பத்தில் ஆறு பேர் பெண்கள். ஓமன் பொறியாளர்களில் பத்தில் ஐந்து பேர் பெண்கள்.
இன்றைக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஆள்பவர்களாகப் பெண்கள் பரிணாமிப்பதும் புராதன மரபின் நீட்சியே. ஆளுமைத்தன்மை என்பது பெண்ணின் மரபிலேயே இருந்து வந்துள்ளது. அந்த மரபின் தொடர்ச்சியே எல்லாத் துறைகளிலும் சிறந்துவிளங்கும் பெண்ணரசிகளைக் கொண்ட இந்தியா மற்ற நாடுகளுக்கு இன்றைக்கும் முன்னோடியாகத் திகழ்வதற்குச் சான்று.
நன்றி நமது மண்வாசம்.


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!