எனது பதிநான்கு நூல்கள்

சனி, 20 மார்ச், 2021

எனது பதிநான்காவது நூல் “பெண்ணின் மரபு “

 எனது பதிநான்காவது நூல் “ பெண்ணின் மரபு” நமது மண்வாசத்தின் தானம் களஞ்சியம் அறக்கட்டளையால் 2021 மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று  மதுரையில் வெளியிடப்பட்டது. 
“சமூக மீள்திறனில் பெண்களின் தலைமை “ என்பதுதான் இந்த ஆண்டு பெண்கள் தினத்துக்கான கரு. 


வளரிளம் பெண்களின் பரதநாட்டியத்துடன் நிகழ்வு ஆரம்பித்தது. மதுரை கிராமப்புற மண்டத்தின் திட்டத்தலைவர் திருமதி கே. இராஜலெக்ஷ்மி வரவேற்புரை நல்கினார். 


சுய உதவிக் குழுக்களின் தலைவிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ( இராமலெக்ஷ்மி, ஜெயலெக்ஷ்மி, தேனம்மைலெக்ஷ்மணன்) குத்துவிளக்கேற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார்கள்.


கடந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தின விழா பற்றி மதுரை நகர்ப்புற மண்டலத்தின் அணித் தலைவர் , திரு. வீ. நாகுவீர் பிரகாஷ் உரையாற்றினார்.


டைரி செல்வா என்று அழைக்கப்படும் ஹலோ பண்பலை 106.4 இன் மூத்த அறிவிப்பாளர். திருமதி செல்வகீதா மகளிர் தின உரையாற்றினார். 


தென்றல் வித்யாலயா சிறப்புப் பள்ளியின் நிறுவனர், திருமதி ஜெயலெக்ஷ்மி சிறப்புரை ஆற்றினார். இவர் ஸ்பெஷல் குழந்தைகளுக்காக இப்பள்ளியை நடத்தி வருகிறார். இதுவரை ஒவ்வொரு வருடமும் நான்கைந்து குழந்தைகளை அவர்களின் சிறு வயதிலேயே இக்குறையை இனம்கண்டு அவர்களைப் பயிற்றுவித்து சாதாரணப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் அளவு தகுதிப் படுத்தியதாகக் கூறினார். 

நெருங்கிய உறவில் திருமணம், ஊட்டச்சத்துக் குறைபாடு மேலும் கர்ப்பம் தரிக்கும் காலகட்டத்தில் தாய்க்கு ஏற்படும் மன உடல் உளைச்சல்கள் இவற்றால் இவ்வாறான குழந்தைகள் பிறப்பதாகவும் அதனால் சுய உதவிக் குழுப் பெண்கள் தங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இதற்கான எச்சரிக்கை கொடுத்து ஆரோக்யமான அடுத்த தலைமுறை தழைத்தோங்க வழி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 

களஞ்சிய இயக்கத்தின் ஆலோசகர் பத்மஸ்ரீ பெ. சின்னப்பிள்ளை அம்மா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். 


தானம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் திரு. மா. ப. வாசிமலை அவர்களும் வாழ்த்துரை நல்கினார்கள். கோவிட் தொற்று காலத்தில் போது “ SOKAMA - சொகமா " என சோஷியல் டிஸ்டன்ஸிங்,  கை கழுவ வலியுறுத்தல், மாஸ்க் போடவேண்டியதன் அவசியம் குறித்து தொடர்ந்து தம் களஞ்சியம் பெண்கள் குழுக்களுக்கு தாமும்  களஞ்சியம் அமைப்பினரும் அறிவுறுத்தி வந்தது பற்றிக் குறிப்பிட்டார்.  எனது பெண்ணின் மரபு நூல் பற்றியும் அதை அனைத்துப் பெண்களும் படிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துக்  கூறினார்கள். நன்றி சார்.  அதன் பின் எனது பதிநான்காவது நூல் ( தானம் அறக்கட்டளையால் வெளியிடப்படும் எனது நான்காவது நூல் ) “ பெண்ணின் மரபு “ வெளியிடப்பட்டது. முன்னாள் படைவீரர் நலத்துறையில் உதவி இயக்குநராகப் பணி செய்து ஓய்வு பெற்ற திருமதி. சி. இராமலட்சுமி அவர்கள் நூலை வெளியிட பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அம்மா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நடுநடுவே கோவிட் 19 காலகட்டத்தில் பணியாற்றிய பெண்களின்  அனுபவப் பகிர்வு இடம்பெற்றது. 


சுகாதார மேம்பாட்டில் பெண்களின் பங்கு, வாழ்வாதார மேம்பாட்டில் பெண்களின் பங்கு, அரசுத்திட்டங்களைப் பெற்றுத் தருவதில் பெண்களின் பங்கு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பில் பெண்களில் பங்கு என்பது பற்றி எல்லாம் பேசிய பெண்களின் அனுபவம் வியக்க வைத்தது. 


கலை நிகழ்ச்சிகளில் 8 வளரிளம் பெண்கள் கோலாட்டம் ஆடினார்கள். வளரிளம் குழுவைச் சேர்ந்த இரு பெண்கள் வீரவிளையாட்டான சிலம்பாட்டம் ஆடிக் காட்டினார்கள். 

கோவிட் 19 தொற்றின்போது தன்னலமற்று சேவை புரிந்தவர்கள் மேடையில் கௌரவிக்கப்பட்டார்கள். களஞ்சியம் அறக்கட்டளையின் திட்டத்தலைவர் திரு. அ. ரமேஷ் அவர்கள் தொகுத்து வழங்க, மக்கள் பரஸ்பரத்தின் முதன்மை நிர்வாகி திருமதி சு. அகிலாதேவி ஏற்புரை கூறினார்.


களஞ்சியம் அறக்கட்டளையின் திட்டத்தலைவர் திரு. ச. சிவானந்தன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது. 

நிகழ்வுகள் 9.30 மணிக்கு ஆரம்பித்து 1.30 மணிக்கு முடிந்தன.சமூக இடைவெளியோடு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. சென்ற ஆண்டின் பெண்கள் தின நிகழ்வுகளையும், களஞ்சியத்தின் இந்த ஆண்டுக்கான பெண்கள் நலனுக்கான செயல்பாடுகள் மற்றும் கோவிட் தொற்றுக்காக ஆற்றப்பட்ட சமூக நலப்பணிகளையும் க்ளிப்பிங்ஸாகக் காட்டினார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் பெண்கள் தின நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. விழாவின் நடுவில் அனைவருக்கும் சுய உதவிப் பெண்கள் குழுக்களால் பக்குவமாகத் தயாரிக்கப்பட்ட கம்மங்கூழ், வறுத்த அரிசி, கொத்தவரை, மிளகாய் வற்றல்கள் ஆகியவை வழங்கப்பட்டது வித்யாசம். 


தனது பல்வேறு பணிகளுக்கிடையிலும் 19 கட்டுரைகள் அடங்கிய எனது நூலை செறிவாகத் தொகுத்தவர் நமது மண்வாசத்தின் ஆசிரியர் திரு. ப. திருமலை அவர்கள். அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.  அவரும் நமது மண்வாசத்தின் பணிகள், களஞ்சியத்தின் செயல்பாடுகள் பற்றி விரிவாகக் கூறினார். என்னையும் ராமலெக்ஷ்மி மேடத்தையும் சிறப்பாக அறிமுகப்படுத்தினார். பெண்சக்திக்காக எனது பங்களிப்பைத்தொடர்ந்து நான்காவது ஆண்டாக நல்க உதவியதற்கு நன்றிகள் திருமலை சார். 

25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெண்களின் மேம்பாட்டுக்காகச் சிரத்தையுடன் செயலாற்றி வரும் களஞ்சியம்,   வயலகம், நெய்தல் குழுக்கள் மற்றும் வளரிளம் பெண்கள் குழுக்களை உள்ளடக்கிய தானம் அறக்கட்டளைக்கும், நமது மண்வாசம் இதழுக்கும் எனது ” பெண்ணின் மரபு “ நூலை அர்ப்பணித்துள்ளேன். 


என்றைக்கும் என் உயர்வில் கரம் கொடுக்கும் என் கணவர், குழந்தைகள், பெற்றோருக்கும் அன்பு நன்றிகள். 

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...