எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

புதன், 24 மார்ச், 2021

சக்கர வியூகத்தை உடைத்த அபிமன்யு.

சக்கரவியூகத்தை உடைத்த அபிமன்யு

பதினாறு வயதே நிரம்பிய ஒரு இளைஞன் குருஷேத்திரப் போரில் பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், சல்லியன், துரியோதனன் ஆகியோரைத் தன் வில்லாற்றலால் கதி கலங்க அடித்தான். யார் அந்த வீரன், அவன் பலம் என்ன பலவீனம் என்ன எனப் பார்போம் வாருங்கள் குழந்தைகளே.
கிருஷ்ணரின் சகோதரி சுபத்திரை. அவளை பஞ்சபாண்டவர்களுள் ஒருவரான அர்ஜுனன் மணந்து கொண்டார். சுபத்ரையின் வயிற்றில் அபிமன்யு கருவாக இருந்த போது சக்கரவியூகம் பற்றி சுபத்ரையிடம் பேசிக்கொண்டிருந்தார் கிருஷ்ணர். பாதிகேட்டுக் கொண்டிருக்கும்போதே சுபத்திரைக்கு உறக்கம் வந்துவிட சக்கரவியூகம் என்றால் என்ன அதில் எப்படி நுழைவது எனச் சொல்லிக் கொண்டிருந்த கிருஷ்ணர் பாதியிலே நிறுத்தி விட்டார். சுபத்திரை இக்கதையைக் கேட்டாளோ இல்லையோ அவள் கர்ப்ப்பத்தில் இருந்த அபிமன்யூ நன்றாகக் கேட்டுக் கொண்டான்.
அன்பும் அழகும் அறிவும் பொருந்திய அப்பாலகனின் துவாரகையில் வளர்ந்து வந்தான். கிருஷ்ணரிடமும் பலராமரிடமும் வில் வாள் வித்தைகள் எல்லாம் கற்றுத் தேறினான். கிருஷ்ணரின் மகன் ப்ரத்யும்னனும் அவனுக்கு வித்தைகள் எல்லாம் கற்பிக்கின்றான்.


சிறு வயதிலேயே அவனது தந்தையான அர்ஜுனனும் அவனது பெரியப்பா சித்தப்பாக்களான தருமர், பீமன், நகுலன் சகாதேவனும் திரௌபதியுடன் கௌரவர்களிடம் சூதாட்டத்தில் தோற்றதற்காக வனவாசம் சென்றனர். பதிமூன்றாமாண்டில் அவர்கள் விராட தேசத்தில் அஞ்ஞாத வாசம் இருப்பதற்காக மாறுவேடத்தில் சென்றனர்.
தன் தந்தை, பெரியப்பா சித்தப்பாக்களின் மேல் கொண்ட பாசத்தால் அவர்களைத் தேடிக் கொண்டே இருந்தான் அபிமன்யு. ஒரு கால கட்டத்தில் விராட தேசத்தில் மாறுவேடத்தில் இருப்பவர்கள்தான் தம் குடும்பத்தவர் எனக் கண்டுபிடிக்கிறான். அவனது மகிழ்ச்சி பெருகுகிறது.
அங்கே விராட மன்னனின் புதல்வியான உத்தரையைச் சந்திக்கிறான். பாண்டவர்களின் அஞ்ஞாத வாசம் முடிந்ததும் உத்தரையை விராட மன்னன் அர்ஜுனனின் மகனான அபிமன்யுவுக்குத் திருமணம் செய்து கொடுக்கிறான்.
பாண்டவர்கள் திரும்பி வந்து கௌரவர்களிடம் ஆட்சிப் பொறுப்பில் பங்கு கேட்க குருஷேத்திரப் போர் வெடிக்கிறது. பாண்டவர்கள் பக்கம் கிருஷ்ணனும் அபிமன்யு இன்னும் பலரும் போரிடுகிறார்கள். கௌரவர்கள் பக்கம் பீஷ்மர், கிருபர், துரோணர் போன்ற ஆச்சார்யர்களும் இன்னும் பல்வேறு மன்னர்களும் கௌரவர்களும் போர் புரிகிறார்கள்.
குருஷேத்திரப் போரின் முதல் நாள். இளம் வீரன் அபிமன்யு வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு இளம் புயல்போல் போர்க்களத்தில் நுழைகிறான். பீஷ்மரை எதிர்க்கிறான். சந்திரன் போல் ஒளிவீசும் அவன் பால் முகத்தைப் பார்த்துப் பீஷ்மர் ” பாலகர்கள் எல்லாம் போர்க்களத்திலா.. போய்விடு “ என்று கூறுகிறார்.
அவனோ தன் வில்லில் அம்பை வைத்து எய்தபடி சரிக்குச் சரியாக அவரோடு போரிட அவனது அம்பு ஒன்று பீஷ்மரைத் துளைக்கிறது. அப்போது அபிமன்யு சொல்கிறான் “ நான் அர்ஜுனன் மகன், கிருஷ்ணரின் சீடன் . போர்க்களத்தை விட்டு வெளியேற மாட்டேன். வாருங்கள் பொருது பார்ப்போம் “ என அழைத்து அவரது வில்லை உடைக்கிறான்.

அடுத்து இருவரும் வாள் வீசிப் போரிடுகிறார்கள். ஒரு நாள் முழுதும் அயராது இருவரும் போரிட மாலை ஆகிவிடுகிறது. அவனை வாள் வீச்சில் வெல்ல இயலாத பீஷ்மர் அவனைப் பாராட்டி விட்டுப் போகிறார். இதே போல் மறுநாளும் தன் வீர தீரப் பராக்கிரமத்தைக் காட்டுகிறான்.
அன்று குரு துரோணரின் புத்திரன் அஸ்வத்தாமனுடன் வாள் வீச்சில் ஈடுபட அவர் அஸ்வத்தாமனைக் காக்கத் தன் வாளோடு ஓடி வருகிறார். அவரை கௌரவர்களிடமிருந்து விலக்கிக் கொண்டுவந்தால்தான் அர்ஜுனன் பீமனோடு போய் துரியோதனனைத் தாக்கி அழிக்க முடியும் என இப்படிச் செய்ய அன்றும் மாலையாகிவிடுகிறது. மாலை ஆனால் போரை நிறுத்திவிடுவார்கள். அது மறப்போர் என்றாலும் அறப்போர்.
ஆனால் அந்த அறப்போரிலும் கொடுங்காட்சிகள் நிறைவேறின. குருக்ஷேத்திரத்தில் பதிமூன்றாம் நாள் போர். அன்றைக்கு சூரியன் உக்கிரமாக எரிய அபிமன்யு போர்க்களம் வருகிறான். அபிமன்யூவின் வீரத்தைக் கண்டு கௌரவப்படை பின்வாங்குகிறது. துரியோதனனின் மகன் , கர்ணனின் சகோதரர்கள், கிருதவர்மாவின் மகன், சல்யனின் சகோதரன், அஸ்வகேது, சந்திரகேது, ஷ்ருதஞ்ஜெயன், சகுனியின் சகோதரன் காலகேயன், பிருஹத்பாலன் மேலும் ஆயிரக்கணக்கான கௌரவப் படையினரைக் கொல்கிறான்.
இப்படியே போனால் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்கள் என நினைத்த அப்படை ஒரு குரூர திட்டம் தீட்டுகிறது. அதுதான் சக்கரவியூகம் அமைத்து அபிமன்யூவுடன் போரிடுவது. இதில் ஒருவர் மட்டும் அபிமன்யுவுடன் போரிடாமல் அவனைச் சக்கரம் போல் சூழ்ந்து எல்லாத்திசையிலிருந்தும் தாக்கும் யுத்த சூழ்ச்சி இது.
அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணர் ஆகிய இருவருக்கு மட்டுமே சக்கரவியூகத்தை உடைத்து உள் நுழையவும் வெளியேறவும் தெரியும். இந்தத் தந்திரம் தெரிந்த இருவரையும் துரோணர் வஞ்சகமாக நகர்த்திச் செல்ல அபிமன்யுவைச் சுற்றிச் சக்கரவியூகம் உருவாக்கப்படுகிறது.
அதை உடைத்து அபிமன்யு முன்னேற அவனை துரோணர், கிருபர், கர்ணன், அஸ்வத்தாமன், ப்ரஹத்பாலன், கிருதவர்மன் ஆகியோர் சூழ்ந்து கொள்கிறார்கள். துச்சாதனனின் மகன் துர்முகனோடு கதாயுத்தம்புரிந்து கொல்கிறான் அபிமன்யு. சக்கரவியூகம் அமைத்தவர்கள் அவனைச் சூழ்ந்து தாக்க அதை உடைத்துத் திரும்ப வெளியேற முடியாமலும் மற்ற பாண்டவர்கள் அவன் உதவிக்கு வராமலும் ஜெயத்ரதன் தடுக்க அபிமன்யூவும் மரிக்கிறான்.
சக்கரவியூகத்தை உடைத்து வெளியேறத் தெரியாவிட்டாலும் தன் தந்தை, பெரியப்பா, சிற்றப்பாக்கள் மேல் கொண்ட பாசத்தால் அவர்களுக்காகப் போரிட்டு மடிந்த மாவீரன் அபிமன்யூவின் வீரம் போற்றத்தக்கதுதானே குழந்தைகளே.

4 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு
 2. மறுபடியும் படித்துச் சிலிர்த்தேன்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஸ்ரீராம்

  நன்றி வெங்கட் சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...