எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 22 நவம்பர், 2019

இருகூறாய்ப் பிறந்த ஜராசந்தன். தினமலர். சிறுவர்மலர் - 42.

இருகூறாய்ப் பிறந்த ஜராசந்தன்
ஒருவரே இரு பாதி உருவங்களாகப் பிறக்கமுடியுமா. அப்படிப் பிறந்து ஒன்றான ஒருவன்தான் ஜராசந்தன். இவன் ஏன் இருகூறு உருவமாய்ப் பிறந்தான் எப்படி ஒன்றானான் என்பதை எல்லாம் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
மகத நாட்டை பிரகத்ரதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் காசி மன்னரின் இரு புதல்வியரையும் மணந்துகொண்டான். ஆனால் இருவருக்குமே பல்லாண்டுகளாகப் புத்திரப் பாக்கியம் வாய்க்கவில்லை. மன்னனோ மனம் ஒடிந்து காட்டுக்குச் சென்று அங்கே சந்திர கௌசிகர் என்ற முனிவரைக் கண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தான்.
அவனுக்குப் பிள்ளையில்லாப் பெருங்குறையை அறிந்திருந்த அம்முனிவர் ஒரு மாம்பழத்தைக் கொடுத்து அதை மகாராணியிடம் உண்ணக் கொடுக்குமாறு கூறினார். அவனுக்கோ இரு பட்டமகிஷிகள். அதனால் அக்கனியை இருபாதியாக்கி இருவருக்கும் உண்ணக் கொடுத்தான்.
இருவரும் சூலுற்றனர். குழந்தை பிறக்கும் நேரமும் வந்தது. மன்னனோ ஆவலுடன் காத்திருந்தான். ஆனால் ஐயகோ ஈதென்ன இரு மகாராணியருக்கும் பாதிப் பாதியாகப் பிள்ளைகள் இறந்தே பிறந்திருக்கின்றனவே. மன்னன் அடைந்த துயருக்கு அளவே இல்லை.

இரு கூறான பிள்ளைகளைப் பார்க்கப் பார்க்க அவன் பதட்டமுற்று அவற்றை நகருக்கு வெளியே எறிந்துவிடும்படிக் கூறினான். சேவகர்களும் அவ்வாறே எடுத்துச் சென்று எறிந்து திரும்பினர்.
உணவைத் தேடி அங்கே வந்தாள் ஜரா என்ற ராட்சசி. அவள் இரு கூறான குழந்தை உருவைப் பார்த்ததும் வியந்து இரண்டையும் ஒருசேர ஒரே கையால் எடுத்தாள். எடுத்ததுதான் தாமதம் அந்த இரு கூறும் இணைந்து ஓருருவாகி அழகான மகவாயிற்று. பார்க்கப் பார்க்கவே அந்தப் பிண்டங்கள் அழகான குழந்தையாகிய அற்புதம் கண்டு திகைத்துப் போனாள் ஜரா.
என்னதான் ராட்சசியாக இருந்தாலும் அவளுக்கு அக்குழந்தையைத் தின்னப் பிடிக்கவில்லை. எனவே மகதநாட்டு மன்னனிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள். இருகூறும் ஒன்றன விபரத்தையும் கூறினாள்.  மன்னன் தான் தூக்கி வீசிய குழந்தைதான்  அது என உணர்ந்தான். உடனே அதை ஜரா கொண்டு வந்து சேர்த்ததால் ஜராசந்தன் என்று பெயரிட்டு வளர்த்தான்.
ஜராசந்தன் சிறந்த சிவபக்தன். மாபெரும் வீரன். தன் தந்தையை விட நாட்டை அதிகமாக விரிவுபடுத்தி பேரரசனாக ஆனான். பல்வேறு மன்னர்களுடன் பொருது அவர்களை எல்லாம் காராகிரகத்தில் அடைத்தான்.
தன் மகள் ஒருத்தியைக் கம்சனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். ஆனால் கண்ணன் தன் மாமனான கம்சனை அழித்ததில் இருந்து கோபம் கொண்டு காழ்ப்புணர்வோடு மதுராவின் மேல் படையெடுத்துக் கொண்டே இருந்தான். ஒரு முறை இருமுறை அல்ல பதினெட்டு முறைகள் தன் எதிரியான கண்ணனை அழித்தே தீரவேண்டும் என்ற வெறியோடு படையெடுத்தான். இதனால் ஓய்ந்து போனது ஜராசந்தன் அல்ல கண்ணன்தான்.
மேலும் ஜராசந்தன் இருந்தால் குருக்ஷேத்திரப் போரில் துரியோதனனின் பக்கம் போரிடுவான். பாண்டவர்கள் வெல்ல இயலாது. எனவே அவனை அழித்தே தீரவேண்டும் என்ன செய்வது என்று தீர ஆலோசித்தான் கண்ணன்.
அதனால் கண்ணன் பீமன் அர்ச்சுனன் ஆகியோரிடம் இதைச் சொல்லிக் கூட்டிக் கொண்டு ஜராசந்தனை எதிர்க்கத் தயாரானான். ஆனால் போரில் ஈடுபட்டால் வலிமையான அவனை வெல்தல் கடினம் என்று உணர்ந்தான் கண்ணன். எனவே மூவரும் மாறுவேடத்தில் மகதநாட்டுக்குச் சென்றார்கள்.
அவனது அரசவைக்குச் சென்று ,” நீ யாராலும் வெல்லமுடியாத மாபெரும் வீரன் என்கிறார்கள். எங்கள் ஒருவனுடன் மற்போரிட்டு வென்றால் அதை ஒப்புக் கொள்கிறோம் “ அவர்களைப் பார்த்து சிரிப்பை அடக்கமுடியவில்லை ஜராசந்தனால். ‘மாபெரும் அரசனாகிய நான் என் வலிமையை உங்களிடம் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. இருந்தும் என் சபையில் வந்து அறைகூவல் விடுத்துவிட்டீர்கள். அதை ஒப்புக்கொள்வதே வீரம். என் வலிமைக்கு நிகராக இதோ இவன் இருப்பதால் இவனுடன் மற்போர் புரிகிறேன் “ என்று பீமனைச் சுட்டிக் காட்டினான்.
மற்போர் தொடங்கியது. பீமனும் ஜராசந்தனும் சமமான வலிமையுடைவர்கள். சோர்ந்தே போகாமல் தொடர்ந்து கொண்டிருந்தது மற்போர். கிட்டத்தட்ட 27 நாட்கள் தொடர்ந்தது அப்போர். பீமனே மயங்கும் நிலைக்கு வந்துவிட்டான். அயராது மோதிக்கொண்டிருந்தான் ஜராசந்தன்
இச்சமயம் கண்ணன் ஒரு உபாயம் செய்தான். ஒரு இலையை எடுத்து இரண்டாகக் கிள்ளிப் போட்டுச் சைகை காட்டினான். உடனே புரிந்து கொண்ட பீமன் ஜராசந்தனின் கால்கள் இரண்டையும் பிடித்துப் பிய்த்து இரண்டு கூறாக்கி வீசினான். ஆனால் என்ன மாயாஜாலமோ அவை இரண்டும் திரும்ப ஒட்டிக் கொண்டு ஜராசந்தன் உயிர்த்தெழுந்து இன்னும் பலமாக பீமனை மோதினான்.
பீமனுக்கு வலு குறைந்துகொண்டே வந்தது. என்ன செய்வதென்றும் தெரியவில்லை. இதேபோல் பலமுறை பீமன் ஜராசந்தனைப் பாடுபட்டு இருகூறாக்குவதும் அவன் ஒட்டி எழுந்து வந்து பீமனை நையப்புடைப்பதும் நடந்தது. அப்போது கண்ணன் இன்னொரு இலையை எடுத்துப் இரண்டாகக் கிழித்து வேறு வேறு புறம் விழும்படிப் போட்டான்.
அதைக் கண்ணுற்ற பீமன் தன் வலிமை அனைத்தையும் திரட்டி ஜராசந்தனை இரு கூறாக்கி அவன் உடல் ஒட்டாதவாறு இருபுறத்தையும் திருப்பிப் போட்டான். பலமுறை உடலை ஒட்டமுயன்றான் ஜராசந்தனின். முடிவில் ஒட்ட இயலாமல் இறந்தான்.
ஒரு மனிதன் இருகூறாகப் பிறந்து ஒன்றாகி மாவீரனாக வாழ்ந்தாலும் அளவுக்கதிமான காழ்ப்புணர்வினால் திரும்ப இருகூறாகி இறந்தது வருத்தத்திற்குரியது. எனவே காழ்ப்புணர்வையும் எதிர்ப்புணர்வையும் தவிர்ப்போம் குழந்தைகளே. அனைவரையும் மன்னிக்கக் கற்போம்.

டிஸ்கி :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 15 .11. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

2 கருத்துகள்:

 1. வழக்கமாக நான் சொல்வதைப் போல இக்கதைகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. அனைவருக்குமே. வாழ்த்துகள்.
  தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.

  பதிலளிநீக்கு
 2. நன்றியும் மகிழ்வும் ஜம்பு சார். நானும் அடிக்கடிப் பயணங்கள் , மற்ற வேலைகள் இருப்பதால் எல்லா வலைத்தளமும் வர இயல்வதில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

  விக்கிபீடியா கட்டுரைகளுக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள். நாங்களும் அவ்வப்போது படித்து வருகிறோம் :)

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...