எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 நவம்பர், 2019

மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள் – ஒரு பார்வை.


மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள் – ஒரு பார்வை.


சரித்திரம் பூகோளம் இதிகாசம் புராணம் விஞ்ஞானம் கணிதம் வானவியல் பொதுத் தகவல்கள் தொன்மம் அனைத்தும் நிரம்பித்ததும்பும் கவிதைகள்தான் மிராஸ்லாவ் ஹோலுப் கவிதைகள். ஒருவர் இக்கவிதைகளைப் படிக்கத் தொடங்கிவிட்டால் நிச்சயம் ஒரு ட்ரான்ஸ்ஃபார்மேஷன் நடைபெறும். புதிய பரிமாணத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும், காட்சிக்குட்படும் கவிதைகள் இவை.

இன்னதுதான் பாடுபொருள் என்றில்லை. எல்லாமே, உலகில் சாடத்தகுந்த எல்லாமே பாடுபொருளாகி முடிவில் வேறொரு கடுமையுடன் முடியும் கவிதைகள் . ஸெக் நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானியும் , கவிஞருமான மிரோஸ்லாவ் ஹோலுப்பின் கவிதைகளில் மருத்துவமும் கூடக் கவிதையாகிறது.

விஞ்ஞானத்தை மட்டுமல்ல நோய்க்குறிகளையும் நோய்களையும் கூட வைத்துச் சுவாரசியமான கவிதை யாக்க முடிந்திருக்கிறது இவரால். ஸ்தூலமானதும் தீர்மானமாதுமான விதத்தில் வினையாற்றுகின்றன இவரது கவிதைகளும். அறிவியல் பொருள் முதல்வாதம் இவரது படைப்புகளில் பிரதான அம்சம்.

தன்னை பாதித்த கவிஞர்கள் பற்றியும் அவர் குறிப்பிடத் தயங்காதது மிகவும் ஈர்த்தது. பிரதியெடுப்பதில்லை என்றான போதும் அவர்களைப் போலான கவிதை யாப்பில் தான் ஈடுபட்டது குறித்து அவர் கூறியது கவிதை எழுதும் அனைவருமே ஒப்புக் கொள்ளக்கூடியதுதான்.

நெஸ்வால் போன்ற ஸர்ரியலிஸக் கவிஞர்கள் பாணியிலும் எழுதி இருக்கிறாராம் இவர். வார்த்தைகளின் இறுக்கம், உணர்வெழுச்சி மிதமாய் ஒளிருந்திருக்கும் வார்த்தைகள், அறிவியலின் மெய் பொதிந்திருக்கும் கவிதைகள், அர்த்தங்கள் உள்மறைந்து இரட்டைத் தொனி கொண்டவை என ஒவ்வொரு கவிதையும் தனித்தன்மையுடன் தனிப்பட்ட பாடுபொருளுடன் அமைந்துள்ளன. ஒன்றைப் போல இன்னொன்று என்பது இல்லவே இல்லை.

தொற்றுயிரி, நோய்கள் பற்றிய உரை , ஆந்த்ரபோடுகள், இதயம் செயலிழத்தல், அவசர சிகிச்சை, இதயமாற்று அறுவை சிகிச்சை, எலும்புக் கூடுகள், நசுங்குதல் பற்றிய நோய்க்கூட்டுத் தொகுப்பு, மாயமாகும் நுரையீரலின் நோய்க்கூட்டுத் தொகுப்பு, நோய்க் குறியியல் இவை அனைத்தும் மருத்துவக் குறிப்புகளோடு யுத்தகால நெருக்கடிகளையும் சித்தரிக்கின்றன. இதில் இயலாமை மற்றும் நுரையீரல் போன்றவை சுவாசம் தடைபடும் ஒரு அழுகிய அரசு யந்திரம் பற்றிய குறியீடு போலத் தோன்றுகிறது.

ரத்தநுண்குழாய்களின் வழியாக
வடிகட்டப்பட்ட
வரலாறு ஊமையாக இருக்கிறது.

சம உரிமை ஊமை, சகோதரத்தத்துவம் ஊமை. “

கவிதைகளில் இடம்பெறும் முதுகெலும்பு கட்டிடத்தின் அல்லது புயலின் இடுப்பெலும்பு பற்றிய சித்திரங்கள் அரசு இயந்திரத்தைக் கேள்வி கேட்க முடியாத நிலையைச் சுட்டுகின்றன.

ஹெர்பேரியம், கேல்வனோமீட்டர் , ஸெனான் சூரியன்கள், சார்பியல் தத்துவம் போன்ற தாவரவியல் பௌதீகவியல், வேதியல் வார்த்தைகளும் கவிதைகளூடே இடம்பெறுவது வித்யாசம்.

மினோட்டர் பற்றிய தகவல்களும் கவிதைகளும்தான் கவிதைத் தொகுப்பின் மையக்கரு. அதைப்போலவே இக்கவிதைகளும் வட்டச்சுழல் புதிர்போல எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடிகின்றன. முடிவற்ற, தீர்வற்ற ஒன்றைப் படைப்பதிலும் அவற்றை வாசகனுக்கு இலைமறையாயும் சில இடங்களில் அப்பட்டமாய் முகத்திலறைந்தாற்போலும் காட்சிப்படுத்துவதிலும் முக்கியத்துவம் பெறுகின்றன இவரது கவிதைகள். சிந்தனைகள், குறிப்புகள், சிகிச்சைகள் என ஒரு பரந்தவெளிக்கு இட்டுச் செல்கின்றன இவை.

நாங்கள் புல்லுக்கு ஓர் உதவி செய்தோம் -
அது மாறிற்று தான்யமாய்
நெருப்புக்கு நாங்கள் ஓர் உதவி செய்தோம் -
அது மாறிற்று ராக்கெட்டாக.

புரட்சி வீரர்கள், கிரேக்கத் தொன்மங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், ஐரோப்பியக் கவிஞர்கள், மத்திய நிலவெளிகள், வித்யாச நுண்ணுயிரிகள், கல்லறைகள், சிலுவை , மரங்கள், மலர்கள், மிருகங்கள், குதிரைகள், மீன்கள், பறவைகள், கட்டிடங்கள், இயற்கைச் சக்திகள் , வெடிகள், மலைகள், எருதுகள், யானைகள் இக்காரஸ், என அனைத்துமே கவிதைக்கருவாகின்றன. அரசு இயந்திரத்தை எதிர்த்து உயிர்நீத்த ஜேன்பாலாக்ஸ் பற்றிய கவிதை அதிரவைத்த ஒன்று. அதேபோல் விமானக் குண்டுவீச்சு முடிந்து ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு என்ற கவிதையும்.

வெறுமையப் பற்றியதான கவிதை எல்லையில்லாத பெருவெளியில் நாம் எல்லை குறிக்கும் அபத்தத்தைச் சாடுகிறது. உலகளாவிய ஒப்புயர் நோக்கில் அமைந்திருப்பதே இவரது கவிதைகளின் சிறப்பு. வேலி என்பதும் அப்படிப்பட்ட கவிதைகளில் ஒன்று.

ஒரு பூரண வேலி என்பது
எதையும் எதிலிருந்தும் பிரிக்காதது
ஒன்றுமில்லாத இடத்திலிருந்து
ஏதோ ஒன்றின் இடமற்ற இடத்தை. “

மனிதனின் எல்லைகள் விரிந்து சுருங்குகின்றன. .. மனிதன் இருந்திருக்காத இடத்தில் என்பதைவிட மனிதன் புழங்கிய இடத்தில் வெறுமை என்பது மிக அதிக அளவில் உள்ளது

மெலிதான நையாண்டி இவரது கவிதைகளில் எனக்குப் பிடித்த அம்சம்.

தவளைகளை காலாட்படை வீரர்களாய்
வண்டுகளை மாவட்ட மணியக்காரத் தலைவர்களாய்
ஒரு எலியை மந்திரியாக

சாதாரணமாய் இருப்பதெப்படி என்பது பற்றிய
வழிகாட்டிகளை வெளியிடத் தொடங்கினர்

துயர்மிகு கவித்துவ சர்க்கரை வியாதியால்
கருவிழி எதிர்ப்படலம் பாதிக்கப்படாமலிருக்க

பிராய்டின் இத், ஈகோ, சூப்பர் ஈகோவை விளக்கும் கவிதை அற்புதம்.

நீதான் கவிஞனா?
ஆம் என்றேன் பலவாண்டுகளாய் ஒருவரிகூட எழுதவில்லை எனினும்

ஒரு நிஜவெள்ளம் என்பது நம் வாய்களிலிருந்து குமிழ்கள் வழியும்போது
அவற்றை நாம் வார்த்தைகள் என்று எண்ணுகிறோம். “

யதார்த்தத்தை அதன் அசிங்கத்தோடும் அழகியலோடும் பகிர்ந்திருப்பதும் வித்யாசம். பொதுவாக இவை அடர்த்தியான உரைநடைபாணியில் அழுத்தமாக அமைந்த கவிதைகள். நிலத்தடி ரயில்நிலையம் அப்படிப்பட்டதான கவிதைகளில் ஒன்று.

ஸெக்கோஸ்லோவேகியா, துருக்கி, ஸ்பானிஷ், ரஷ்யா, பிரான்ஸ், ஸ்விட்ஜர்லாந்து, அயர்லாந்து, அமெரிக்க, ஆஸ்த்ரிய, ஜெர்மானிய, யூத, ஆங்கில, டச்சு, கிரேக்க, க்ரீஸ் ஓவியர்கள் கவிஞர்கள், சிற்பிகள், அரசர்கள், தொன்மங்கள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், இசை ஆதியாகமங்கள் ஆகியன பற்றிய பரந்துபட்ட அறிவு கவிதைகளில் காணக் கிடைக்கிறது.  

எனக்கு மிகப் பிடித்த கவிதை உள்நோக்கிய பயணம்.

“”ஒருவேளை உள்வயம் என்பது
அதன் வெளிவயத்தினுள்ளும் இருக்கலாம்”.

வெளிதான் உள்காரணம் அது பற்றித்தான் 
ஒருவர் சிந்திப்பதெல்லாம், மேலும் அது இருப்பதெல்லாம் அதற்குத்தான்

நான் எதைச் சொன்னாலும் நான்தான் சொன்னேனே என்ற நிச்சயமில்லை. காரணம் எதுவுமே சொல்லப்பட்டுக் கொள்கிறது தானாக

இவரது வரிகளிலேயே மொத்தத்தில் சொல்லப்போனால்கவிதை என்பது வெறுமைக்கு எதிரான ஒரு இருப்பாகும். பிரதான மற்றும் துணை வெறுமைகளுக்கெதிராக இருப்பது.”

மிரோஸ்லோவ் ஹோலுப் என்ற கவிஞனை பிரம்மராஜன் அவர்களின் வார்தைகளின் வாயிலாக அறிய நேர்ந்தது தனித்துவம் வாய்ந்த அனுபவம்தான். அதை நீங்களும் துய்த்துணர்ந்து பாருங்கள்.

நூல் :- மிராஸ்லாவ் ஹோலுப் கவிதைகள்
ஆசிரியர்  - தமிழில் பிரம்மராஜன்
பதிப்பகம் :- யாவரும் பப்ளிஷர்ஸ்
விலை:- ரூ 125/- ( பக்கம் 136 )

2 கருத்துகள்:

  1. நன்றி வெங்கட் சகோ

    நன்றி ரமேஷ் சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...