எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 4 நவம்பர், 2019

உன்னத உள்ளம் கொண்ட உறங்காவில்லி. தினமலர் சிறுவர்மலர் - 38.

உன்னத உள்ளம் கொண்ட உறங்காவில்லி
இனம் மதம் சாதி பார்த்து ஒருவரை உயர்ந்தவர் என்றும் இன்னொருவரைத் தாழ்ந்தவர் என்றும் கற்பித்துக் கொள்கின்றோம். ஆனால் அதுதவறு என நிரூபிக்கிறது உறங்காவில்லி என்பவரின் கதை. இயல்பிலேயே நல்ல உள்ளம் கொண்ட அவரையும் அவரைப் போலவே நல்லுள்ளம் படைத்த அவரது மனைவி பொன்னாச்சி பற்றியும் அறிந்து கொள்வோம் வாருங்கள் குழந்தைகளே.
சாலையில் வெய்யில் தகிக்கிறது. மக்கள் எல்லாம் வீடுகளில் ஒண்டிக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் திண்ணையில் அமர்ந்து விசிறியால் வீசி ஆசுவாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு காட்சியைப் பார்த்து அனைவரும் பரிகாசப் புன்னகை செய்கிறார்கள். சிலர் நமட்டுத்தனமாய்க் கிண்டலடிக்கிறார்கள்.
அச்சாலையில் அப்போது ஒரு மனிதன் தன் மனைவிமேல் வெய்யில் படாமல் குடைபிடித்தபடி செல்கிறான். அவன்தான் உறங்காவில்லி. அவனது மனைவி பெயர் பொன்னாச்சி. பொதுமக்கள் பார்க்கிறார்களே. தன்னை ஏளனம் செய்வார்களே என்ற எண்ணம் கிஞ்சித்தும் இன்றி அவன் தன் மனைவிக்குக் குடைபிடித்தபடி செல்கிறான்.

அப்போது எதிர்த்திசையில் ராமானுஜர் தன் சீடர்களுடன் வந்து கொண்டிருக்கிறார். அவரும் இந்த வித்யாசமான காட்சியைப் பார்த்து யோசனையில் ஆழ்கிறார். அவரது சீடர்களும் உறங்காவில்லியையும் பொன்னாச்சியையும் பார்த்துச் சிரித்தபடி கடக்கிறார்கள்.
ஆனால் ராமானுஜரோ உறங்காவில்லியைப் பார்த்துக் கேட்கிறார் ,” உன் பெயர் என்ன, இந்தப் பெண்மணி யார் ? “
“என் பெயர் உறங்காவில்லி, இவள் என் மனைவி பொன்னாச்சி “ பெருமை பொங்கக் கூறுகிறான் உறங்காவில்லி.
“என்ன செயல் இது “என அவன் தன் மனைவிக்குக் குடை பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கேட்கிறார் ராமானுஜர்.
‘என் மனைவியின் கண்கள் மிக அழகானவை. அவை வெய்யிலில் வாடிவிடுமேயெனக் குடைபிடிக்கிறேன்”
“இதைவிட அழகான கண்களை நான் உனக்குக் காட்டுகிறேன் “ என்று கூறி திருவரங்கனின் ஆலயத்துள் இட்டுச் செல்கிறார். உள்ளே நுழைந்ததும் பரிமள கந்தத்தோடு துளசி மணக்க தண்ணென்ற விழிகளோடு அரங்கனைக் காண்கிறான் உறங்காவில்லி. உடனே அவன் மனதில் புகுந்து நீங்கா இடம் பெறுகிறார் அரங்கன்.
“அழியா அழகுடைய இறைவனை விட்டு விட்டு அழியும் இயல்புடைய மனித உடம்பில் ஆசை கொள்வதா “ என்ற வெட்கம் ஏற்பட்டு அவன் ராமானுஜரின் சிஷ்யராகிறார். அவர் மனைவி பொன்னாச்சியும் கணவனைப் போலவே இறைவனைப் பணிந்து ராமானுஜரின் சிஷ்யையாகிறாள்
கருத்தொருமித்த தம்பதிகள் இருவரும். ஆனால் இவர்கள் மேல் ராமானுஜரின் மற்ற சிஷ்யர்களுக்குக் கோபம். ராமானுஜர் இவர்கள் மேல் அளவுக்கு அதிகமாக நம்பிக்கையும் அபிமானமும் வைத்திருப்பதால் அவர்களுக்கு அழுக்காறு ஏற்படுகிறது.
இது ராமானுஜருக்கும் ஒரு கட்டத்தில் தெரிய வருகிறது. அவர்களின் ஐயத்தைத் தீர்க்க எண்ணுகிறார் ராமானுஜர். உறங்காவில்லி மற்றும் பொன்னாச்சியின் உன்னத குணத்தைத் தெரியப்படுத்தத் தன் சிஷ்யர்களிடம் பொன்னாச்சி உறங்கும்போது அவளது நகைகளைக் கழற்றி வரும்படிக் கூறுகிறார்.
இரு சிஷ்யர்கள் ஒரு நாள் இரவு உறங்காவில்லியின் இல்லம் அடைகிறார்கள். அங்கே உறங்காவில்லி இல்லை. பொன்னாச்சி மட்டும் தூங்கிக் கொண்டிருக்கிறார். இவர்களோ மெல்ல மெல்ல அருகே சென்று அவரின் கைவளை, காதணி ஆகிய நகைகளைக் கழட்டுகிறார்கள்.
என்னதான் சர்வஜாக்கிரதையாகச் செய்வதாக சிஷ்யர்கள் எண்ணிக் கொண்டாலும் பொன்னாச்சிக்குத் தம் நகைகளை எடுப்பவர்கள் யார் எனத் தெரிகிறது. மறுபுறம் இருக்கும் நகைகளைக் கழட்ட முடியவில்லையே என்று சிஷ்யர்கள் யோசிக்கும் கணம் பொன்னாச்சி இன்னொருபுறம் திரும்பிப் படுக்கிறார்.
உடனே பயந்து போன சிஷ்யர்கள் உறங்காவில்லியின் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறுகிறார்கள். மடத்தில் இரவு நேர வேலைகள் முடித்த பின்பு உறங்காவில்லி வீட்டுக்குக் கிளம்பி வருகிறார். ராமானுஜரோ தம் சிஷ்யர்களை அழைத்து உறங்காவில்லி வீடு அடைந்ததும் என்ன நடக்கிறதென்று பார்த்து வருமாறு சொல்லி அனுப்புகிறார்.
அங்கே வீட்டில் பொன்னாச்சி ஒருபக்க நகைகளோடு அமர்ந்திருக்கிறார். “என்னாச்சு பொன்னாச்சி. ஏன் இந்தக் கோலம் ?” என வினவுகிறார் உறங்காவில்லி. பொன்னாச்சி நடந்ததைச் சொல்கிறார். ”ஒரு பக்கம் மட்டும் நகைகளைக் கொடுத்தால் அடியவர்களுக்குப் போதாது என்று நான் திரும்பிப் படுத்தேன் “
இதைக் கேட்டதும் உறங்காவில்லி கோபப்படுகிறார், “ இதெல்லாம் இறைவன் கொடுத்ததுதானே. நீ நான் கொடுக்கிறேன் என்ற எண்ணத்தோடு திரும்பிப் படுத்ததால்தான் அவர்கள் அதை எடுக்காமல் போய்விட்டார்கள் ? “
இருவரின் உரையாடலையும் கேட்ட சிஷ்யர்கள் நாணித் தலை குனிகிறார்கள். உள்ளதை உள்ளபடியே மடத்துக்குச் சென்று ராமானுஜரிடம் ஒப்பிக்கிறார்கள்.
மறுநாள் அதிகாலையில் மடத்தின் வாசலில் உறங்காவில்லியும் பொன்னாச்சியும் வந்து நிற்கிறார்கள். சிஷ்யர்களுக்கு வியர்க்கிறது. “சுவாமி பொன்னாச்சி ஏதோ தரவேண்டும் என்று சொல்கிறாள். அதுதான் அழைத்து வந்தேன் “ என்கிறார் உறங்காவில்லி.
கைகள் நிறையத் தான் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழற்றி வைத்திருக்கிறாள் பொன்னாச்சி. “ இவையும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் மடத்தினுக்கு உதவ எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன் “ என்று கூறி நகைகளை ராமானுஜர் முன்பு வைக்கிறாள் பொன்னாச்சி. ராமானுஜர் நிமிர்ந்து தன் சிஷ்யர்களைப் பார்க்க அவர்களின் அழுக்காறு அகன்று அன்பு ஒளிவிடுகிறது.
உறங்காவில்லியோடு பொன்னாச்சியும் மடத்து சேவைகளில் ஈடுபடுகிறாள். உயர்ந்த உள்ளம் கொண்ட உறங்காவில்லி பொன்னாச்சி மாதிரி நாமும் உன்னத எண்ணங்களைக் கைக்கொள்வோம் குழந்தைகளே.

டிஸ்கி :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 18 .10. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

4 கருத்துகள்:

  1. மிகவும் சிறப்பு பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. மிகவும் சிறப்பு பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி அசோகன் சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...