எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 25 நவம்பர், 2019

ஃப்ளாரன்ஸில் தாவீதும் மைக்கலாஞ்சலோவும்.

யூரோப் டூரில் ஒரு நாள் இத்தாலிக்குச் சென்றபோது வாடிகனுக்கும் சென்றோம். வாடிகன் சர்ச்சிலும் மாபெரும் ஓவியங்களும் சிற்பங்களும் காட்சி அளித்தன.

ரோமில் பெயர் பெற்ற ஓவியர் மற்றும் சிற்பியான ( கட்டிடக் கலைஞர் & கவிஞர் ) மைக்கலாஞ்சலோவின் கலைப் படைப்புக்களைக் கண்டு களிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவரது படைப்புகள் சிருஷ்டியின் உன்னதத்தை விளக்கும் வகையில் ஆன்மநிர்வாணத்தோடு காட்சி அளிப்பவை.இவர் பதினான்காம் நூற்றாண்டில் பிறந்தவர். 1475 இல் டஸ்கனியில் பிறந்து 89 ஆண்டுகள் வாழ்ந்து 1564 இல் மறைந்தார். இவரது படைப்புகளில் பியட்டா ( ஏசுவைத் தாங்கி நிற்கும் மரியன்னை ) , தாவீது ஆகிய சிலைகள் சிறப்பானவை என்று போற்றப்படுகின்றன. சிஸ்டைன் தேவாலயத்தில் உள்ள கடைசித் தீர்ப்பு என்னும் ஓவியம் இவருக்குப் பேர் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது இன்னமும்.

நிர்வாணச் சிற்பங்கள் இவரது ஸ்பெஷல். கோலியாத்தும் தாவீதும் பற்றி அறிந்திருப்போம். அதில் கோலியாத்தைத் தோற்கடித்த தாவீதை  மிக அழகான சிற்பமாக்கி இருக்கிறார் இவர். வலிமையான கைகள், கூர்மையான பார்வை, கால்களை முன்னெடுத்து நிற்கும் நிலையில் தாவீதின் சிற்பம் ஃப்ளோரன்ஸில் உள்ள கேலேரியா டெல் அகாடமியா என்ற அரங்கில் 1873 இல் வடித்து வைக்கப்பட்டுள்ளது.



இவரது படைப்புகள் 13 ஆம் நூற்றாண்டுக்கும் 17 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்தவை.



இந்த கேலரியில் மேலே சென்றால் மைக்கலாஞ்சலோ & ஃப்ளாரண்டைன் கலைஞர்களின் ஓவியங்களைப் பார்க்கலாம். தனது ஓவியத்துக்கான வண்ணங்களை மைக்கலேஞ்சலோ தானே தயாரித்துக் கொள்வாராம்.


கூட்டம் கலைந்ததும் மறுபடியும் உங்கள் பார்வைக்கு ஒரு க்ளோஸப்.


மைக்கலாஞ்சலோவின் பல்வேறு மேதமைப் படைப்புகளில் புகழ்பெற்றது தாவீதின் நிர்வாணச் சிலை . அவருடைய மாஸ்டர்பீஸ். இது மார்பிளில் செதுக்கப்பட்டுள்ள சிலை.

ஃப்ளாரன்ஸ் கதீட்ரலுக்காகச் செதுக்கப்பட்ட இச்சிலை இப்போது  பல்லாஸோ வெக்கியோ ( டவுன் ஹால் ) என்னுமிடத்தில் உள்ளது .

1504 செப்டம்பர் 8 இல் இச்சிலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஐந்து நூற்றாண்டுகள் கடந்தும் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு பழமை மாறாமல் இருக்கிறது. மெடிசி குடும்பத்தினரால் இச்சிலையின் கூர்மையான கண்களின் பார்வை ரோமைக் காப்பதாகவும் அதன் எதிரிகளை அச்சுறுத்துவதாகவும் சரி செய்யப்பட்டன.


மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த பல்லாஸோ வெக்கியோவிலும் இவரது சிலையைக் கண்டு மகிழ்கிறார்கள்.


இச்சிலையை மைக்கலாஞ்சலோ கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள். ( 1501 - 1504 ) வரையில் உருவாக்கினார்.


மனித உடலின் கூறுகளைக் கிட்டத்தட்டப் பன்னிரெண்டு ஆண்டுகள் பயின்று அவர் இச்சிலைகளை வடிவமைத்ததாகக் கூறுகிறார்கள்.


இது ஃப்ளாரன்ஸில் உள்ள நெப்டியூன் ஃபவுண்டன். 2005 ஆகஸ்ட் 4, அன்று இரவு வாண்டல்ஸ் என்னும் குழுவினரால் இச்சிலையில் வலது கையும் இந்த ஃபவுண்டனும் உடைத்துத் தாக்கிச் சிதைக்கப்பட்டதாம். :(

இங்கே பார்த்தலோமியோ பாண்டினெல்லி வடிவமைத்த ஹெர்குலிஸ் & காக்கஸும் இடம் பெற்றிருக்கிறார்.

1410 இல் இத்தாலியக் கலைஞர் டோனெட்டல்லோ வடிவமைத்த ஜோஷுவா சிற்பம்தான் இவற்றுக்கெல்லாம் முன்னோடி என்கிறார்கள். இந்த பல்லாஸோ வெக்கியோவில் டோனெட்டல்லோ வடிவமைத்த ஜூடித் & ஹோலோஃபெர்னஸ் சிலையும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சிலையை நீக்கி விட்டு அது இருந்த இடத்தில் தற்போது தாவீது நிறுவப்பட்டுள்ளார்.

லியானார்டோ டாவின்ஸி போன்ற கலைஞர்களை எல்லாம் லிஸ்டில் வைத்திருந்த ஓபராய் குழுமம் முடிவில் 26 வயதே ஆன மைக்கலாஞ்சலோவிடம் தாவீதின் சிலை வடிப்பை ஒப்படைத்தது.

ஃப்ளோரன்ஸ் கதீட்ரலுக்காக மாபெரும் கல்லில் வடிக்கப்பட்ட அச்சிலை ஆறு டன் எடை உள்ளது. ஒன்பது லோகேஷன்களைத் தேர்ந்தெடுத்துக் கடைசியாக இங்கே இச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

கோலியாத்தைத் தாக்கத் தோளில் மாட்டிய கவணுடன் மகா தீவிரமான பார்வையுடன் கழுத்தெலும்பு புடைக்க வலது கை நரம்பு தெறிக்க தமிழ் சினிமா ஹீரோஸ் போல போஸ் கொடுக்கிறார் தாவீத். எல்லாம் நம்ம மைக்கலேஞ்சலோவின் கைவண்ணம்தான்.


கோட்டை அமைப்பில் பாஸ்டியன்கள். ( மதில் - எதிரிகளை ஈட்டி கொண்டு எறிய )  டவர் ஆகியன உள்ளன இந்த பலாஸோ வெக்கியோவில்.


இதுதான் அந்த கண்காணிப்பு டவர். கெடிகார டவராகவும் உள்ளது.

இது லோஜா டி இலான்ஸி சிற்பங்கள் இருக்கும் பியாஸா டெல்லா சின்யோரா என்ற கட்டிடத்தில் இருந்து க்ளிக்கியது.


இந்த பியாஸா டெல்லா சின்யோரா கட்டிடத்தில் வாயிலில் இரண்டு முரட்டுச் சிங்கச் சிற்பங்கள் - மெடிசி லயன்ஸ் - உலக உருண்டையைக் காலால் உருட்டி உறுமியபடிக் கட்டியம் கூறுகின்றன.


1800 களில் தாவீதின் சிலையின் இடது காலில் சிறு வெடிப்பு ஏற்பட்டதாகவும் அதைப் பின்னர் சரி செய்ததாகவும் சொல்கிறார்கள். இது போதாதென்று 1991 இல் பியரோ கேனட்டா என்ற கலைஞர் ஒரு சுத்தியல் கொண்டு ( தன் ஜாக்கெட்டுக்குள் ஒளித்து எடுத்துச் சென்று ) தாவீதின் இடது பாதத்தை உடைத்துள்ளார். இதனால் இச்சிலையின் இடது கால் விரல்கள் மூன்று சில்லாகத் தெறித்து பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

அரசியல் காரணங்களுக்காகவே தாவீதின் சிலை இருமுறை தாக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது இவரின் சிலையைச் சுற்றி செங்கல் சுவர் எழுப்பி (விமானத் தாக்குதல்களில் மற்றும் விமான குண்டு வீச்சுகளில் இருந்து பாதுகாக்க ) மறைத்துக் காத்துள்ளார்கள். வெற்றி வீரன் தாவீதுக்கு வந்த சோதனை !

இங்கே முன்பு இருந்த சிலைதான் இப்போது அக்காடமியா கேலரியில் வைக்கப்பட்டதாகவும் இங்கே இருப்பது அதன் ரிப்ளிக்கா எனவும் சொல்கிறார்கள். இது 1910 இல் வைக்கப்பட்டதாம்.




ஜியர்ஜியோ வஸாரி என்ற ஓவியர் இது மைக்கலேஞ்சலோவின் மகத்தான கலைப்படைப்பு என்றும் இறந்தவர்க்கு  சிலையின் மூலம் உயிரூட்டிய அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார் எனவும் கூறி இருக்கிறார்.

பியாஸாலே மிக்கலேஞ்சலோ - இங்கே தாவீது ஃப்ளாரன்ஸ் சிட்டியை நோக்கிய பார்வையில் அதனைக் காப்பவர் போல் அதன் வலிமையான அடையாளமாக எதிரிகளுக்கு ஓர் எச்சரிக்கை விடுப்பவராக  ஃப்ளாரன்ஸ் நகரின் சுதந்திரச் சின்னமாகக்  ( சுதந்திரமாகக் ) கம்பீரமாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். இது சிறு குன்றில் அமைந்துள்ளது.

இம்மாதிரி நிர்வாணச் சிலைகளை வெளிநாட்டினராலும் அனைவரும் ஏற்றுக்கொண்டு விடுவார்களா என்ன ? ராணி விக்டோரியா பைபிள் நம்பிக்கை உள்ளவர் என்பதால் இந்நிர்வாணச் சிலையை முதன் முதலில் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தாராம்.எனவே அவர் வருகையின் போதெல்லாம் கல்லால் செதுக்கப்பட்ட அத்தி இலையினால் ஆன மறைப்பு இரண்டு கொக்கிகள் மூலம் மாட்டப்பட்டு தாவீதீன் அந்தரங்க உறுப்பை மறைக்கப் பயன்படுத்துகிறார்களாம்.

இதேபோல் மைக்கலேஞ்சலோ சிஸ்டின் தேவாலயத்தில்  பலிபீடத்துக்குப் பின்னால் வரைந்த கன்னிமேரி, ஏசுவின் நிர்வாண ஓவியங்களும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றன. மைக்கலேஞ்சலோவின் மறைவுக்குப் பின் தேவையான இடங்களில் அவற்றை மறைத்து வரைய ஏற்பாடு செய்யப்பட்டது.

கம்பீரமாக நின்றாலும், கலையானாலும் நிர்வாணம் என்பது அச்சுறுத்துகிறது என்றுதான் தோன்றுகிறது.

3 கருத்துகள்:

 1. சிறப்பு. அற்புதமாக பதிவாக்கியுள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
 2. நன்றி கௌசி

  நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...