எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 16 நவம்பர், 2019

சிலம்பை உடைத்து நீதி கேட்ட கண்ணகி. தினமலர் சிறுவர்மலர் - 40.

சிலம்பை உடைத்து நீதி கேட்ட கண்ணகி
பெண்கள் சாத்வீகமானவர்கள். அதிலும் கண்ணகி என்ற பெண் மிகவும் சாதுவானவள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். நீதி தவறிய பாண்டிய மன்னனின் மேல் கோபம் கொண்டு சிலம்பை உடைத்தது மட்டுமல்ல அவள் சாபமிட்டதும் மதுரை மாநகரமே தீப்பற்றி எரிந்தது. அத்தகைய சக்தி வாய்ந்த கண்ணகி பற்றியும் அவளுக்குப் பாண்டிய மன்னன் இழைத்த அநீதி பற்றியும் அறிந்து கொள்ளுவோம் வாருங்கள் குழந்தைகளே.
காவிரிப் பூம்பட்டினத்தில் இரு பெரும் வணிகர்கள் வசித்து வந்தார்கள். அவர்களுள் மாசாத்துவான் என்ற வணிகனுக்குக் கோவலன் என்ற மகனும், மாநாயகன் என்ற வணிகனுக்குக் கண்ணகி என்ற மகளும் இருந்தார்கள். இருவருக்கும் அவர்கள் பெற்றோர் திருமணம் செய்துவைத்தார்கள். இருவரும் இனிதே இல்லறம் நடத்தி வந்தனர்.
ஒருமுறை சோழன் அவையில் மாதவி என்ற நடனமங்கை அற்புதமாக நடனமாடினாள். தலைக்கோல் அரிவை என்று பட்டம்பெற்று நாளொன்றுக்கு ஆயிரத்தெட்டுக்கழஞ்சுப் பொன் பெறும் சிறப்புப் பெற்றவள். கோவலன் அவள்பால் கவரப்பட்டுக் கண்ணகியை மறந்து மாதவியுடன் இல்லறம் நடத்தலானான். அவர்கட்கு மணிமேகலை என்ற புனிதமகள் பிறந்தாள்.

இங்கே கண்ணகியோ நாளும் மெலிந்து துரும்பாகி வந்தாள். தன் தோழி தேவந்தியிடம் தன் கணவன் விட்டுச் சென்றதைச் சொல்லி வருந்தினாள். அவளுக்கு ஏற்பட்ட தீயகனவு ஒன்றையும் தேவந்தியிடம் சொன்னாள்.
இந்திரவிழாவில் மாதவி பாடிய கானல்வரிப் பாடலைத் தப்பிதமாகப் புரிந்துகொண்ட கோவலன் அவளைப் பிரிந்து தன் மனைவி கண்ணகியை அடைந்தான். ஆனால் பொருட்களை எல்லாம் இழந்ததால் இனி எதைக் கொண்டு குடும்பம் நடத்துவது என்ற வருத்தத்தோடு மனைவிமுன் தலைகுனிந்து நின்றான்.
கண்ணகியோ “ ஐயனே, கவலற்க. என் சிலம்புகள் உள்ளன. அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் “ என நம்பிக்கையூட்டினாள். தன் வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலாதவள் கண்ணகி. அவளோ கணவனுடன் பெற்றோருக்கும் தெரியாமல் விடியலில் புறப்பட்டு புகார் நகரை விட்டு வெளியேறி காடு கரை தாண்டி தென்திசையில் இருக்கும் மதுரை நோக்கிச் சென்றாள்.
வழியில் கவுந்தி அடிகள் என்ற துறவி அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று மாதரி என்ற மூதாட்டியிடம் விட்டுச் சென்றார். கையிருப்பான சிலம்பை விற்றுப் பொருளீட்ட கோவலன் மதுரை மாநகர் நோக்கிச் சென்றான். அவ்வளவுதான் தெரியும் கண்ணகிக்கு. மறுநாள் அவள் தன் கணவன் கோவலன் கொலையுண்ட செய்தியைக் கேட்கிறாள்.  
சிலம்பை எடுத்துச் சென்ற கோவலன் மதுரை மாநகருள் பொன் வீதி, இரத்தினக் கடை வீதி, அங்காடி வீதி ஆகியவற்றில் சென்று எங்கே தன் கையில் உள்ள சிலம்பை விற்கலாம் எனப் பார்க்கிறான். அப்போது அரண்மனைப் பொற்கொல்லன் வர அவனிடம் கொடுக்கிறான். அவனோ அரசனிடம் காட்டுவதாகக் கூறிச் செல்கிறான்.
பாண்டிய அரசனிடம்,” அரசே, முன்பு காணாமல் போன அரசியின் சிலம்பு இதுதான் , திருடியவனைப் பிடித்து வைத்துள்ளேன்” என்று உரைக்கிறான். அரண்மனைப் பொற்கொல்லன் சொன்ன பொய்யை உண்மை என்று நம்பி அரசன் கோவலனைப் பார்க்காமலேயே அவனுக்கு மரணதண்டனை விதிக்கிறான்.
ஐயகோ , அங்கே கொலைக்களத்தில் கிடக்கிறான் கோவலன். மனம் கொந்தளித்துக் கண்ணகியோ தன் கால் சிலம்பை எடுத்துக் கொண்டு புறப்படுகிறாள். அவள் புலம்பல் பார்த்து சூரியனும் கூட “ நின் கணவன் கள்வனல்லன் “ என்று உரைக்கிறது.
இரத்தம் பெருக தன் கணவன் கோவலன் கிடக்கும் நிலை கண்டு பதறுகிறது கண்ணகியின் உள்ளம். தன் கணவன் கள்வனல்லன் என அரசனுக்கு உணர்த்தவேண்டும் என்ற அவா உந்த அவள் அரண்மனைக்குத் தலைவிரிகோலமாகச் செல்கிறாள். அங்கே வாயிற்காவலன் தடுக்க அவள் நீதி கேட்டு வந்ததாகச் சொல்கிறாள்.
உடனே வாயிற்காவலன் அவளை பாண்டியமன்னனின் அவைக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே பாண்டியன் நெடுஞ்செழியன் அரசி கோப்பெருந்தேவியுடன் அமர்ந்திருக்கிறான். கோபமாய் நின்ற கண்ணகியைப் பார்த்து “ யாரம்மா நீ ? ஏன் விரித்த தலையும் அழுத கண்களுமாக வருகிறாய் ?” எனக் கேட்டான்.
“தேரா மன்னா, புகார் நகரில் மாநாய்கன் என்ற வணிகரின் மகள் நான், என் பெயர் கண்ணகி. அந்நகரில் மாசாத்துவன் என்ற வணிகரின் மகனான கோவலன்தான் என் கணவர். புறாவுக்கு நீதி வழங்கிய சிபி மன்னனும், பசுவுக்கு நீதி வழங்கிய மனுநீதிச் சோழனும் பிறந்த ஊர் என் ஊர். ஆனால் நீயோ ஆராயாமல் என் கணவனுக்குக் கொலைத்தண்டனை கொடுத்துள்ளாயே.. இது நியாயமா ?”
“ ஓ அவனா. அரசியின் கால்சிலம்பைத் திருடினான். அதனால் தண்டித்தேன். என் தீர்ப்பில் குற்றமா? “
“என் சிலம்பில் மாணிக்கப் பரல்கள் நிறைக்கப்பட்டுள்ளன. அரசியின் சிலம்பில் என்ன பரல்கள் நிறைக்கப்பட்டுள்ளன ? “ என்று கேட்டாள் கண்ணகி.
“முத்துப் பரல்கள் “ என்றான் மன்னன்.
“எங்கே கோவலனிடம் வாங்கிய சிலம்பைக் கொண்டு வாருங்கள், சோதித்து விடுவோம் ” என்று ஆங்காரமாகக் கேட்கிறாள் கண்ணகி.
ஒரு வீரன் கோவலனிடம் கைப்பற்றிய அச்சிலம்பைக் கொண்டு வந்து தந்ததும்  அச்சிலம்பை வாங்கி ஆவேசமாக ஓங்கி உடைத்தாள் கண்ணகி . அதிலிருந்து மாணிக்கப் பரல்கள் அவையெங்கும் சிதறித் தெறித்தன. பாண்டியன் வெண்கொற்றக் குடை சாய்கிறது. செங்கோல் நழுவுகிறது. சிம்மாசனம் அதிர்கிறது.
இதைக் கண்டதும் விதிர்விதிர்க்கிறது பாண்டியமன்னனுக்கு. “ யானோ அரசன். ஆராயாமல் தீர்ப்பு வழங்கி ஒரு உயிரைக் காவுகொண்ட நானே கள்வன் “ என்று கூறி சிம்மாசனத்தில் இருந்து வீழ்ந்து உயிர்துறக்கிறான். அவன் காலடி பற்றியபடியே மனம் நடுங்கிக் கோப்பெருந்தேவியும் வீழ்ந்து உயிர் விடுகிறாள். கண்ணகியின் கோபத்தால் மதுரை மாநகரமே பற்றி எரிகிறது. அதன் பின் பதினான்கு நாட்கள் கழித்து அவளும் கோவலனுடன் வானகம் ஏகுகிறாள்.
ஆராயாமல் ஒரு மன்னன் வழங்கிய தீர்ப்பு சாதுவைக் கூட எப்படி மிரளவைத்து நாட்டையே எரித்தது என்று பார்த்தோமில்லையா குழந்தைகளே.

டிஸ்கி :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 1 .11. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

டிஸ்கி 2.:- அரும்புகள் கடிதத்தில் உறங்காவில்லியின் கதையைப் பாராட்டிய சேலம் வாசகர் திரு. இ. இசக்கி அவர்களுக்கு நன்றி. 

3 கருத்துகள்:

  1. சிறப்புப் பதிவு
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி டிடி சகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...