எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 25 மார்ச், 2020

எதிரிக்குக் காலம் கணித்த சகாதேவன். தினமலர் சிறுவர்மலர் - 57.

எதிரிக்குக் காலம் கணித்த சகாதேவன்
தனக்குத் தெரிந்த கலையைப் பிறருக்கு சொல்லிக்கொடுக்கக் கூடப் பலர் தயங்குவார்கள். ஆனால் தன் எதிரிக்கும் கூட தனக்குத் தெரிந்த ஜோசியக் கலை மூலம் பலன் சொல்லி நன்மை செய்தான் ஒருவன். அதனால் தனக்குத் தோல்வியே கிட்டுமென்றாலும் தான் கற்ற கலைக்கு நேர்மையாக இருக்கவேண்டுமானால் எதிரியாயிருந்தாலும் அவர்களிடம் உண்மையை உரைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட அந்தப் பண்பாளன் யார் என்று அறிந்துகொள்ளும் ஆவல் மேலிடுகிறதுதானே குழந்தைகளே.
அஸ்தினாபுர அரண்மனையில் திருதராஷ்டிரனும் அவனது மக்கள் கௌரவர்களும் இருக்கிறார்கள். திருதராஷ்டிரனின் தம்பி பாண்டுவின் மக்களான பாண்டவர்க்கு கௌரவர்கள் அரசுரிமையில் பங்குதர மறுக்கிறார்கள். நயவஞ்சகமாக சகுனியின் போதனையின் பேரில் தர்மரை சூதாட்டத்துக்கு அழைத்துத் தோற்கடித்து அவர்களின் அனைத்து உடைமைகளையும் தங்களுடையதாக்கிக் கொள்கிறான் துரியோதனன்.
குருக்ஷேத்திரப் போர் வெடிக்கிறது. அந்தச் சூழலில் கௌரவர் பக்கம் துரியோதனன் கேட்டபடி கிருஷ்ணர் தன் சேனைகள் அனைத்தையும் உதவிக்கு அனுப்பிவிட்டார். பாண்டவர் பக்கம் அர்ஜுனன் கேட்டுக்கொண்டபடி தானே உதவிக்கு நிற்கிறார்.
அச்சூழலில் போர் நெருக்கடியும் கெடுபிடியும் அதிகமாக யார் ஜெயிப்பார் என்றே தெரியாத சூழல். துரியோதனன் பக்கம் கிருபாசாரியார், துரோணாசாரியார், பீஷ்மர், கர்ணன் , கிருஷ்ணரின் சேனை ஆகியன இருந்தாலும் அநியாயமாக பாண்டவர்க்கு உரிய உரிமையை மறுப்பதால் அநீதி கோலோச்சுகிறது. பாண்டவர் பக்கம் கிருஷ்ணர் மட்டுமே இருக்கிறார் தெய்வமே பாண்டவரின் நேர்மை பார்த்துத் துணை நிற்கும்போது துரியோதனுக்குத் தாம் போரில் வெல்வோமா என்ற சந்தேகம் எழுகிறது.

அதனால் பாண்டுவுக்கும் மாத்ரிக்கும் பிறந்த புத்திரனான சகாதேவனிடம் யோசனை கேட்க எண்ணுகிறான். பஞ்சபாண்டவரிலேயே நகுலனும் சகாதேவனும் கடைக்குட்டிகள் என்பதால் அவர்கள் மிக அழகானவர்களாகவும் வலிமையானவர்களாகவும் அஸ்திர சஸ்திர பயிற்சி பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.
இவர்களில் சகாதேவன் சாஸ்திரப் பயிற்சியும் ஜோதிட நுண்ணறிவும் கொண்டவன். தன் தந்தை பாண்டுவின் சொற்படி நடந்ததால் அவனுக்கு முக்காலமும் அறியும் அறிவு கிட்டுகிறது. இதை எப்படியோ கிருஷ்ணனும் கண்டுபிடித்து விடுகிறார். அதை இருவரும் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாய் வைத்திருக்கிறார்கள்.
சகாதேவன் உண்மையே பேசுவான் என்பதால் துரியோதனன் பாண்டவர் பாசறைக்கு வந்து ”நான் போரில் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும். அதற்கேற்ற நாளைக் குறித்துக் கொடு ” எனக் கேட்கிறான். ஒரு கணம் திகைத்தாலும் பொய் சொல்லி அறியா சகாதேவன் கால நிலை, தசாபுக்தி, கிரகங்களை எல்லாம் கணித்து ”அமாவாசை அன்று பூஜை செய்து ஆரம்பித்தால் வெற்றி கிட்டும் “ என்று கூறுகிறான்.
துரியோதனன் வந்ததும் போனதும் அறிந்த கிருஷ்ணன் கோபமாக சகாதேவனிடம் வந்து “ நல்லா நாள் குறித்தாய் போ. நாம் தோல்வியடையவும் அவன் வெற்றி பெறவும் நாள் குறித்திருக்கிறாயே. எதிரிக்கு நாள் குறித்துக் கொடுக்கலாமா. தப்பான நாளை சொல்லி இருக்கலாமே. ”
”தப்பான நாளை சொல்வது ஜோதிடருக்கு அழகல்லவே. அதுதான் சரியான நாளைக் குறித்துக் கொடுத்தேன். “
”எதிரிக்கு உதவலாமா. ஜோதிடம் பார்க்க மாட்டேன் என சொல்லலாமே” என்று மடக்குகிறான்.
“அது நான் கற்றுக் கொண்ட ஜோதிடக் கலைக்குச் செய்யும் இழுக்கு. அதை ஒருபோதும் செய்யமாட்டேன் “ என்க கோபம் எகிறுகிறது கிருஷ்ணனுக்கு.
“அப்போ அமாவாசை அன்று பூஜை செய்து போர் துவங்கினால் அவர்க்கு யுத்தத்தில் வெற்றி கிட்டும் அப்படித்தானே “ எனக் கிருஷ்ணன் கேட்க, “ கட்டாயம் வெற்றி கிட்டும் “ என சகாதேவன் பதில் அளிக்கிறான்.
‘இரு இரு உன் கலையை உன்னை வைத்தே வெல்கிறேன்.” என்று கறுவிய கிருஷ்ணன் நேரே ஆற்றங்கரையில் போய் அமாவாசை தர்ப்பணம் கொடுக்க ஆரம்பிக்கிறார். இதைப் பார்த்து வானத்தில் உலாப்போய்க்கொண்டிருக்கும் சூரியனுக்குக் குழப்பம் ஏற்படுகிறது. அவர் சந்திரனைச் சென்று சந்திக்கிறார்.
இருவரும் சேர்ந்து ஆலோசிக்கிறார்கள். விடை கிட்டவில்லை. நேரே கிளம்பி கிருஷ்ணனைப் பார்க்க வருகிறார்கள். அவரோ தர்ப்பணம் கொடுப்பதில் மும்முரமாய் இருக்கிறார். “ கிருஷ்ணா என்ன இது இன்று அமாவாசை இல்லை. இன்று தர்ப்பணம் கொடுக்கின்றீர்களே..” என்று சூரியன் வினவ, “ அமாவாசை என்றால் என்ன “ என்று கேட்கிறார் கிருஷ்ணர்.
”சூரியனான நானும் சந்திரனான இவனும் சந்திக்கும் நாள்தான் அமாவாசை . அது நாளைக்குத்தான். நாளைதானே இருவரும் சந்திப்போம்  “ என்று விளக்கம் கொடுக்கிறார் சூரியன். அதைக் கேட்டுக் கலகலவெனச் சிரிக்கும் கிருஷ்ணன், “சூரியனான நீயும் சந்திரனான இவனும் இன்று ஒன்று சேர்ந்து சந்தித்து அதன் பின் ஒன்றாகவேதானே இங்கே நிற்கின்றீர்கள். அதனால் நீங்கள் இருவரும் சந்திக்கும் நாள்தானே அமாவாசை. அதனால் இன்றுதான் அமாவாசை.” என்று சொல்ல இருவரும் அட ஆமாம் என்று திகைத்துப் போனார்கள்.
இப்படி பாண்டவர்கள் பக்கம் நீதி இருப்பதால் அவர்கள் ஜெயிக்க கிருஷ்ணர் கைக்கொண்ட தந்திரங்கள் பலப்பல. ஆனாலும் எதிரியே ஆனாலும் அவர்கள் கேட்டால் அதனால் தனக்குத் தோல்வியே கிடைக்குமென்றாலும் தனக்குத் தெரிந்த ஜோதிட உண்மையை உரைத்த சகாதேவன் சிறந்த பண்பாளன்தானே குழந்தைகளே.

டிஸ்கி :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 28 .2. 2020  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

டிஸ்கி:- ( பரிபாஷை அறிந்ததால் தப்பித்த சாரதி ) நகுலன் கதையைப் பாராட்டிய வேதாரண்யம் வாசகர் ஆர். ஜானகிராமன் அவர்களுக்கு நன்றி. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...