குட்டி இளவரசன்
ஃப்ரெஞ்சிலிருந்து மலையாளத்திலும் ( ராமகிருஷ்ணன் குமரநல்லூர் ) மலையாளத்திலிருந்து தமிழுக்கும் வந்திருக்கும் நூல் இது. குழந்தைகளின் உலகம் எவ்வளவு எளிமையானது என்பதைப் பதிய வைத்தது.
ஒவ்வொரு விஷயத்தையும் பெரியவர்களாகிய நாம் எவ்வளவு சிக்கலாகப் புரிந்து கொள்கிறோம். அதே நம் குழந்தைப் பருவத்தில் அவற்றை எப்படி வியப்போடு நோக்கினோம் என்பது புரிந்தது. விஷயங்களை அறிய அறிய இன்னும் தீர்க்க இயலா முடிச்சுக்கள் நம்மைச் சுற்றிப் பிணைந்து கிடக்கின்றன.
ஒரு ஓவியத்தையே சிறுவனாக இருந்தபோது பெரியவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்று கருதுகிறார் ஒரு விமானி. அவர் ஒரு குட்டி இளவரசனை ஒரு பாலைவனத்தில் தனது விமானம் பழுதடைந்து வீழ்ந்தபோது சந்திக்கிறார். சிறுவயதில் ஒரு தொப்பி என மற்றவர்கள் இனங்காணும் அவர் வரைந்த ஒரு ஓவியத்தை இரை ( யானையை ) எடுத்த பாம்பு என அவரே விளக்கம் கூறவேண்டியதாக இருக்கிறது.
அதை நினைவு கூறும் அவருக்கு குட்டி இளவரசன் கேட்கும் கேள்விகள் எல்லாம் தனது பிள்ளைப் பிராயத்தை நினைவூட்டுவதால் அவன் வேண்டுகோளுக்கிணங்க ஆட்டையும் அதற்கான கூண்டையும், வாய்மூடியையும் அதைக் கட்டும் கயிறையும் வரைந்து கொடுக்கிறார். அவர்கள் மனக்கண்ணில் ஒரு பூ, ஒரு ஆடு. ஒருகிரகம் எல்லாம் உறைந்து இருக்கின்றன.
இருவரும் காணும் கிரகமும் ஒன்றல்ல என்றபோதும் இருவராலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடிகிறது. B-612 என்னும் கிரகத்திலிருந்து வந்திருக்கிறான் அந்தக் குட்டி இளவரசன். ஓராண்டு கழித்துத் தன் பொன்னுடல் நீங்கித் தன் கிரகத்துக்குப் புறப்படுகிறான்.
தங்கநிறப் பாம்பு ஒன்று பாலைவனத்தில் அவனுடைய காலில் சுற்றிக் கொண்டு தேவைப்படும்போது அவனது கிரகத்தில் சேர்ப்பதாகக் கூறுகிறது.
ஒரு கிணற்றருகில் அந்தப் பாம்பு அவனைக் கடித்தவுடன் அவன் வளர்த்த பூவிதழ் போல மென்மையாய் உதிர்ந்து தன் கிரகம் திரும்புகிறான்.
இதில் அவனது கிரகத்தில் எரிமலைகள் அடுப்பு என்பதும் ஒரே ஒரு பூ மட்டுமே மலர்ந்திருக்கிறது என்பதும் பெட்டிக்குள் ஆட்டைப் பார்ப்பது என்பதும் குழந்தைகளின் கற்பனை உலகிற்கான ஒரு திறவுகோல்.
அவன் சந்திக்கும் உலகங்களும் கற்பனையா யதார்த்தமா என்று புரிபடாமல் இருக்கின்றன. ஒரு ராஜா, ஒரு தற்பெருமைக்காரன், ஒரு குடிகாரன், ஒரு வியாபாரி, ஒரு விளக்கேற்றுபவன், ஒரு ஆராய்ச்சியாளர், பின் 200 கோடி மக்கள் இருந்தும் எல்லோரும் தனித்திருக்கும் கிரகமான பூமிக்கு வருகிறான். ஒரு நரியையும், ரயிலுக்குள் இருக்கும் சில குழந்தைகளையும், தாகத்தைத் தீர்க்கும் மாத்திரை தயாரிக்கும் வியாபாரியையும் கூடச் சந்திக்கிறான். இதற்குப் பதிலாக நீரைக் கண்டுபிடிப்பது பற்றிய அவனது எண்ணம் கருத்தாழம் மிக்கது.
தன் குட்டி கிரகத்தில் ஒரு நாளில் 44 முறை சூரியாஸ்தமனத்தைப் பார்க்கும் குட்டி இளவரசன் 1440 முறை சூரியாஸ்தமனம் நிகழும் விளக்கேற்றுபவனின் கிரகத்தைக் கண்டு ஆச்சர்யப்படுகிறான். ஒவ்வொரு கிரகத்திலும் அவன் சந்திக்கும் மனிதர்கள் நாம் அன்றாடம் சந்திப்பவர்களே. படிக்கும் நாமும் குட்டி இளவரசனைப் போலக் குழந்தையாவதும் விந்தை. குழந்தையைப் போலவும் ஞானியைப் போலவும் கேள்விகள் எழுப்புகிறான். பதில்களும் அளிக்கிறான். ஆனாலும் முடிவில் அவன் மறைவு ஆற்றாத துயரைத் தோற்றுவித்தது.
கதை ஆரம்பத்தில் விமானியின் ஓவியத்தில் ஒரு மலைப்பாம்பு யானையை முழுங்கியது போலக் கதையின் முடிவில் ஒரு குட்டிப் பாம்பு இளவரசனைத் தீண்டிவிடுகிறது.
இக்கதை குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களாகி விட்ட குழந்தைகளையும் அவர்களின் குழந்தைமையையும் புதுப்பிக்கிறது. நானும் சில கணங்கள் பால்யத்துக்குச் சென்று மீண்டேன் என்றால் மிகையில்லை.
மொழிபெயர்ப்பில் நான் ரசித்த சில வரிகள் :-
“பரவாயில்லை. அழகான வண்ணத்துப் பூச்சிகளைப் பார்க்க வேண்டுமென்றால் சில புழுக்களை நான் சகித்துக்கொண்டுதான் ஆகவேண்டும். ”
“ ஒரு நட்சத்திரம் தோன்றுவதைப் போல, ஒரு பூ மலர்வதைப் போல முக்கியமானது ஒரு விளக்கு ஒளிர்வதும் “
”கிணறு விழித்துவிட்டது. அது பாட்டுப் பாடுவது உங்களுக்குக் கேட்கிறதா ? “
“இதையெல்லாம் கண்ணால் பார்க்க முடியாது. இதயத்தால் அறிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றையும்.. எல்லாவற்றையும்..
உண்மைதான் இனி நட்சத்திரங்களைப் பார்க்கும்தோறும் தங்கநிற சுருள் முடிகள்கொண்ட, பாலைவனத்தினர் அணியும் அங்கி போன்ற உடை அணிந்த, மிக அழகாகப் புன்னகைக்கிற ஒரு குட்டி இளவரசன் மனக்கண்ணில் தோன்றுவான் என்பதும் நிஜம்.
நூல் :- குட்டி இளவரசன் – LE PETIT PRINCE)
ஆசிரியர் _ ஃப்ரெஞ்சு – அண்டனி இ செயிண்ட் எக்ஸுபெரி ( அந்த்வர்ன் து செந்த் எக்சுபெரி)
தமிழில் :- யூமா வாசுகி
பதிப்பகம் :- பாரதி புத்தகாலயம்
விலை:- ரூ. 50/-

நல்லதொரு அறிமுகம். நன்றி.
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!