எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 11 மார்ச், 2020

பரிபாஷை அறிந்ததால் தப்பித்த சாரதி. தினமலர் சிறுவர்மலர் - 55.

பரிபாஷை அறிந்ததால் தப்பித்த சாரதி
பறவைகள் ப்ராணிகளின் மொழி அறிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். காக்கை காகாவெனக் கரைவதையும் கிளி கிக்கீ எனப் பேசுவதையும் குயில் குக்கூவெனக் கூவுவதையும் மட்டுமல்ல குரங்கின் கீச் கீச்சையும் நாயின் குரைப்பையும் கூட நாம் விலங்குகளின் பாஷை அறிந்தால் அவை என்ன சொல்ல வருகின்றன என்பதை அறியலாம். இப்படி குதிரைகளின் கனைப்பொலியையும் அவற்றின் உள்ளுணர்வையும் அறியும் திறனோடு ஒருவர் இருந்தார். அதனால் அவர் தனக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்தும் தப்பிக்க முடிந்தது. அப்படிப்பட்டவர் யார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

திருதராஷ்டிரனின் குழந்தைகள் கௌரவர்கள். பாண்டுவின் குழந்தைகள் பாண்டவர்கள். இவர்களில் பாண்டுவின் முதல் மனைவி குந்திக்கு தர்மர், பீமன் அர்ஜுனர் ஆகியோரும் பாண்டுவின் இரண்டாம் மனைவி மாத்ரிக்கு நகுலன் சகாதேவன் ஆகியோரும் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

அஸ்வினி தேவர்களின் அருளால் பிறந்தமையால் நகுலன் சகாதேவன் ஆகியோர் மிகுந்த அழகுடன் திகழ்ந்தார்கள். கடைக்குட்டிகள் என்ற செல்லம் வேறு. எல்லாரிலும் அழகு வாய்ந்த நகுலன் ஆயுர்வேத மருத்துவம், வாள் பயிற்சி, குதிரை வளர்ப்பு ஆகியவற்றில் தேர்ந்தவன்.


குதிரைகளுடன் பழகிப் பழகி அவற்றின் உள்ளுணர்வுகள் உரையாடல்கள் ஆகியவற்றை உணரும் சக்தி நகுலனுக்கு ஏற்பட்டது. தருமர் திரௌபதி முதல் தம் தேசம் வரை துரியோதனனுடன் சூதாடித் தோற்றதால் பாண்டவர்கள் பன்னிரெண்டு ஆண்டுகள் வனவாசம் செல்ல நேரிட்டது. அதன் பின் ஒரு வருடம் அஞ்ஞாதவாசம் புரிந்து வந்தால் நாட்டின் ஒரு பகுதியை அவர்களுக்குத் தருவதாக துரியோதனன் வாக்களிக்க அனைவரும் பன்னிரெண்டாம் ஆண்டின் முடிவில் தத்தமது ஆயுதங்களை விராடதேசத்தின் எல்லையில் இருந்த புளியமரப்பொந்து ஒன்றில் ஒளித்து வைத்துவிட்டு மாறுவேடத்தில் சென்றார்கள்.

விராடதேச மன்னனிடம் தர்மர் சூதாட்டத் தோழனாகவும், பீமன் நளபாக சமையற்காரனாகவும், அர்ஜுனன் ஒரு சாபம் தாக்கியதால் அதிலிருந்து விடுபட ப்ருகன்னள்ளை என்ற திருநங்கையாகவும், திரௌபதி வேலைக்காரியாகவும், சகாதேவன் பசுக்களைப் பராமரிப்பவனாகவும் சேர்வதாக முடிவு செய்தார்கள்.

அப்போது நகுலன் சொல்கிறான்.” அப்பாடா இத்தனை வருடம் கானகத்தில் இருந்தோம். ஒரு குதிரையின் மீது கூட சவாரி செய்யமுடியவில்லை. நான் விராட மன்னனிடம் குதிரைக்காரனாக சேவகம் செய்வேன். அங்கே இருக்கும் குதிரை லாயத்தில் ஆயிரக்கணக்கான குதிரைகள் இருக்கும். அற்புதமான அவற்றில் சவாரி செய்வேன். “

ஒருவாறு அனைவரும் விராடதேசம் சென்று தங்கள் இயல்பு நிலையை  மறைத்துத் தாம் சொன்ன வேலைகளில் சேர்கிறார்கள். நகுலன் குதிரை லாயத்தில் இருக்கிறான். அங்கே இருக்கும் குதிரைகள் எல்லாம் நகுலன் கைபட்டதும் சிலிர்க்கின்றன. அவற்றின் ஒவ்வொரு கனைப்புக்கும் நகுலனுக்கு அர்த்தம் பிடிபடுகிறது.

குதிரைகளுக்கு மோப்ப சக்தி அதிகம் என்பதால் அந்த லாயத்துக்குள் நகுலன் வந்ததுமே அனைத்தும் சந்தோஷமாகக் கனைக்கத் துவங்கி விடும். அதுவே ஒரு இன்னிசை போலிருக்கும். அவனும் அவற்றின் பிடரியை ஆதூரத்துடன் தடவிக் கொடுப்பான்.

குதிரைகளில் சவாரி செய்யும்போதும் கடிவாளத்தினை நகுலன் எப்பக்கம் திருப்புகிறானோ அப்பக்கம் காற்றைப் போலக் கடுகி விரையும் அக்குதிரைகள். நகுலனும் குதிரைகளும் பேசாமலே ஒருவரை ஒருவர் உடல்மொழியாலேயே புரிந்து கொள்வார்கள்.

ஒருமுறை விராடதேச மன்னன் தூரதேசம் போக வேண்டி இருந்தது. அப்போது நகுலனும் மன்னரும் இரு குதிரைகள் பூட்டிய ரதத்தில் பயணித்தனர். குதிரைகளின் முதுகில் நகுலன் தட்டிக் கொடுக்கவே அவை வெகுதூரம் பயணம் செல்லவேண்டும் என்பதை உணர்ந்து விரைவாக ஓட ஆரம்பித்தன.

அடர்ந்த காடு வந்தது. அங்கே பிடரி சிலிர்க்க பாய்ச்சலாய் ஒரே சீராக ஓடிக் கொண்டிருந்தன குதிரைகள். என்னவோ தெரியவில்லை குறிப்பிட்ட இடம் வந்ததும் அவை தயங்கி நின்றுவிட்டன. பள்ளமான அந்த இடத்தில் ஒரு காட்டாறு ஓடிய தடம் தெரிகிறது. கடிவாளத்தை அசைத்தும் சாட்டையால் லேசாக அடித்தும் கூட அவை அந்த இடத்தைக் கடக்க முற்படவில்லை.

மன்னரோ ”சீக்கிரம் செல்லவேண்டும் சாரதி, குதிரைகளை முடுக்கு” என்று கூற நகுலன் இறங்கிச் சென்று குதிரைகளை ஆதூரமாகத் தடவுகிறார். சீக்கிரம் செல்லவேண்டும் என முதுகில் தட்டுகிறார். அவையோ நகுலனைப் பார்த்து மேலும் கீழும் தலையசைக்கின்றன.

அவை என்ன சொல்ல வருகின்றன என்பதை ஒரு நொடியில் யூகித்த நகுலன் மன்னனிடம் ” மன்னா, இது காட்டாறு ஓடும் இடம். இப்போது இங்கே வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. எனவே ரதத்தில் சென்றால் நாம் மூழ்கிவிடுவோம்” எனக் கூறுகிறான்.

எங்கேயும் மழை வெள்ளம் எதுவும் காணோம். காற்று கூட வறட்சியாக இருக்கிறது. நீ குதிரைகளை விரட்டு “ என்கிறார்.
“ இல்லை மன்னா. என் சொல்லை நம்புங்கள். அதோ அந்த மரத்தில் நீங்கள் ஏறுங்கள். “ என்று சொல்லிவிட்டு ரதத்தில் இருந்து இரு குதிரைகளையும் அவிழ்த்து விட்டுத் தானும் ஒரு மரத்தில் ஏறிக் கொள்கிறான்.
அவன் ஏறியதுதான் தாமதம் படபடவென சத்தத்துடன் ஒரு காட்டாறு பாய்ந்துவந்து அந்த இடமே வெள்ளக் காடாகிறது. வந்த வெள்ளம் ரதத்தைச் சுக்குநூறாக உடைக்கிறது. குதிரைகளோ வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன.
இவற்றைக் கண்டதும் விராடமன்னன் அதிசயிக்கிறான். நகுலன் பரிகளின் பாஷை அறிந்ததால் தன்னைக் காப்பாற்றியதை உணர்ந்து அவனைப் பாராட்டுகிறான். சிறிது நேரம் கழித்து வெள்ளம் வடிந்து நீர்வரத்து குறைந்ததும் குதிரைகள் இரண்டும் எதிர்நீச்சல் போட்டு நகுலனிடம் வந்து சேர்கின்றன.
அவற்றின் மகிழ்ச்சிக் கனைப்பைக் கேட்டுக் கீழிறங்கும் நகுலன் அவற்றைத் தட்டிக் கொடுக்கிறான். விலங்குகளின் உள்ளுணர்வை நாம் மதித்தால் நாமும் பாதுகாக்கப்படுவோம் என்பதை இக்கதை உணர்த்துகிறதுதானே குழந்தைகளே.

டிஸ்கி :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 14 .2. 2020  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...