எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

புதன், 16 ஜூன், 2021

கைகேயி ஏன் அப்படிச் செய்தாள்.

கைகேயி ஏன் அப்படிச் செய்தாள்.


ஒருவர் ஒரு விஷயத்தைச் செய்யும்போது ஏன் செய்தார்கள் என்று அறிந்துகொண்டோமானால் நமக்கு அவர்கள் மேல் ஏற்பட்ட வெறுப்பு சிறிதாவது குறையும்.இப்படித்தான் கேகய நாட்டு மன்னனும் தயரதனின் மனைவியுமான கைகேயி அனைவராலும் வெறுக்கப்பட்டாள். ஆனால் அவள் மகன் ராமனோ அவளுக்காகத் தந்தையிடம் பரிந்து பேசினான். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
அயோத்தியே ஒளிமயமாய் மின்னிக் கொண்டிருந்தது. மக்கள் தங்கள் இல்லங்களைக் கோலங்களாலும் மாவிலை தோரணங்களாலும் அழகுபடுத்திக் கொண்டிருந்தார்கள். விடியற்காலையிலேயே பம்பையும் எக்காளமும் ஒலிக்க அனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கிக் கொண்டிருந்தது. ஏனெனில் அவர்கள் சக்கரவர்த்தி தயரதன் தன் இளவல் ராமனுக்கு முடிசூட்டப் போகிறார். அந்த இனிய காட்சியைக் காண அரண்மனை நோக்கி சாரி சாரியாக மக்கள் வந்து கொண்டிருந்தார்கள்.


முன்னிரவில்தான் தயரதன் தன் மந்திரிகளுடன் ஆலோசனை செய்து ராமனை மன்னனாக்க முடிவெடுத்திருந்தார். சுமந்திரன் ராமனை அவைக்கு அழைத்து வந்தார். தயரதன் அவனுக்கு முடிசூட்டும் தன் விருப்பத்தை ராமனிடம் தெரிவித்தார். தயங்கிய ராமன் தந்தையின் வற்புறுத்தலால் ஒப்புக் கொண்டான்.
தயரதன் வசிஷ்டரிடம் ராமன் அரசபாரம் சுமக்க வேண்டுமானால் தெரிந்து கொள்ள வேண்டிய அரசுப் பொருண்மைகளை அவனுக்கு உபதேசிக்க வேண்டினார். அவர் நாகணை வள்ளல் கோவிலுக்கு அழைத்துச் சென்று சடங்குகள் செய்து பொருண்மைகளை உபதேசித்தார். தன் மகன் அரசனாகப் போகும் விபரமறிந்து கோசலையோ மனம் மகிழ்ந்து தானங்கள் செய்யத் தொடங்கிவிட்டாள்.
ஆனால் அங்கோ கூனி என்னும் குள்ள மனதுக்காரி கைகேயின் அந்தப்புரத்துள் நுழைந்தாள். அங்கே மலர்ந்த முகத்தோடு தன் மகன் ராமன் அரச பாரம் ஏற்கப்போவதைச் சொல்லிக் கூனிக்குப் பரிசில்கள் வழங்கினாள். ஆனால் கூனியோ ”ராமன் அரசாண்டால் பரதனும் நீயும் ராமனுக்கும் சீதைக்கும் கோசலைக்கும் அடிமையாகி விடுவீர்கள். நானும் அவர்கள் அடிமை ஆகிவிடுவேன். உன் கூட வாழ்ந்ததற்கு எனக்கு அடிமைப்பதவிதான் மிச்சம் “ என நொடித்தாள்.
அவள் சொன்னதையெல்லாம் கேட்டு மனம் கலங்கினாள் கைகேயி. “சம்பாசுரப் போரில் உனக்கு தயரதனை நீ காப்பாற்றியதற்காக உனக்கு இரு வரங்கள் அருளி இருக்கிறார். அதை இப்போது கேள். உன் மகன் அரசாள வேண்டும். ராமன் காடேக வேண்டும். “ கைகேயின் மகன் அப்போது தாய் பிறந்த கேகய தேசத்துக்குப் பாட்டனைக் காணச் சென்றிருந்தான்.
மறுநாள் ராமன் அரசபாரம் ஏற்கப்போகும் செய்தியைச் சொல்ல தயரதன் வெகு மகிழ்ச்சியோடு கைகேயின் அந்தப்புரம் வந்தார். “அரசே சம்பாசுர யுத்தத்தில் எனக்கு இரு வரம் அளித்தீர்களே ஞாபகம் இருக்கிறதா ?  ” “ மறக்குமா. நீ தேரோட்டி என்னைக் காத்த காரணத்தாலேதானே நான் சம்பரன் ஏறிவந்த பத்துத் தேரையும் அழித்தேன். அந்த வெற்றியால்தானே என்னைத் தசரதன் என்கிறார்கள். ”

”அந்த வரங்களை எனக்கு இப்போது தாருங்கள் அரசே. ”
“நிச்சயமாய்த் தருகிறேன் கைகேயி ”
மனதைத் துணிவாக்கிக் கொண்டு கைகேயி கேட்டாள் “ என் மகன் பரதன் நாடாள வேண்டும். ராமன் காடேக வேண்டும். “
“ ராமன் மேல் அளவற்ற பிரியம் கொண்ட நீயா இப்படிக் கேட்டாய் கைகேயி. என்னால் நம்ப முடியவில்லை. பரதனுக்கு வேண்டுமானால் முடி சூட்டுகிறேன் ஆனால் என் உயிருக்கு உயிரான ராமன் காட்டுக்குச் செல்லவேண்டும் என்ற உன் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது”
“மன்னா வரம் தருவதாக வாக்களித்திருக்கிறீர்கள். அதை நிறைவேற்றாவிட்டால் நான் உயிர் தரியேன்”

”தீயினும் தீயாளே.. நீ நினைத்தது நடக்கும். ஆனால் அப்போது நான் இருக்க மாட்டேன். இன்றுடன் நீ என் மனைவியும் அல்ல. பரதன் எனக்கு மகனும் அல்ல” சொல்லியபடியே வீழ்ந்தான் தயரதன்.
தயரதனின் கொடிய சொற்களைக் கேட்டும் கைகேயி வாளாயிருந்தாள். கோசலையும் சுமித்திரையும் கண்ணீர் உகுத்தனர். ”அன்று கானகத்தில் கண்ணிழந்த தாய் தந்தையரின் ஒரே மகனான அரிச்சந்திரன் நீர் முகக்க வந்தபோது ஒலியை வைத்து நான் ஏதோ விலங்கு நீரருந்துவதாக நினைத்து அம்பெய்து கொன்றுவிட்டேன். அப்போது அவர்கள் தந்த சாபம்தான் இது. எங்களைப் போல நீயும் உன் மகனைப் பிரிவாய்.. “ என்று சொல்லியபடி தயரதன் மறைந்தான்.
கேகய தேசத்திலிருந்து ஓடிவந்த பரதன் தாயை கண்டதும் வெறுப்பை உமிழ்ந்தான். பரதன் பிள்ளை இல்லை என வெறுத்ததால் தந்தைக்கு ஈமச்சடங்கு கூட செய்ய முடியவில்லை. சத்ருகனந்தான் செய்தான்..
ஊரும் உலகமும் அவளைத் தூற்ற அவளோ மனதுள் வெதும்பி வருந்திக் கொண்டிருந்தாள் “ தயரத மகாராஜா.. நம் நான்கு புத்திரரில் நானும் ராமன் மேல் அதிகப் பிரியம் கொண்டவள்தான். உங்களுக்கு ஏற்பட்டுள்ள சாபப்படி நீங்களும் புத்திர சோகத்தில் வீழ வேண்டிவரும். எனவேதான் பரதனைக் கேகய தேசம் அனுப்பினேன். பதினான்கு ஆண்டுகள் ராமனைக் கானகம் அனுப்பினால் நீங்கள் அவனைப் பிரிந்து புத்திர சோகத்தில் ஆழ்வீர்கள். ஆனால் அவன் உயிருக்குப் பாதகம் ஏற்படாது என எண்ணினேன். ஆனால் நடந்தது எல்லாம் எனக்கே வினையாய் முடிந்தது “ எனக் கண்ணீர்க் கடலில் ஆழ்ந்தாள்.
யார் அவளைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் தூற்றினாலும் ராமன் அவளைப் புரிந்து கொண்டான். வானுலகில் இருந்து தந்தை தயரதன் ராமனுக்கு இரு வரம் அளிப்பதாகக் கூறும்போது “தந்தையே கைகேயி என் தாய், பரதன் என் சகோதரன்” என்ற வரத்தை அருளுங்கள்.” என்றே கேட்டான். இது ஒன்று போதுமே.
எனவே நம்மைச் சுற்றி எது நிகழ்ந்தாலும் மெய்ப்பொருள் என்ன என்பதைக் கண்டு கொள்ளவேண்டும் குழந்தைகளே. 

2 கருத்துகள்:

 1. நல்ல கதை. நடப்பதெல்லாம் நன்மைக்கே

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 2. நன்றி துளசி சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...