தில்லானா மோகனாம்பாள் பத்மினி
”உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதனாலே, முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே, பச்சைக் கிளி பாடுது, மன்னவன் வந்தானடி தோழி, மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்” இப்பாடல்களைக் கேட்கும்போது எதுகை, மோனை, சந்தலயம் போல் சிவாஜியும் பத்மினியும் நம்முள் கலந்து நிற்பார்கள்.
திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்தவர். தந்தை தங்கப்பன், தாய் சரஸ்வதி. ஜூன் 12, 1932 இல் பிறந்தார். செப்டம்பர் 24, 2006 இல் மறைந்தார். இவரது சகோதரிகள் லலிதா, ராகினி, மூவருமே புகழ் பெற்ற நடனமணிகள் மற்றும் நடிகைகள். இவர்கள் திருவிதாங்கூர் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டார்கள். நடிகை ஷோபனா இவரது அண்ணன் மகள். இவரது கணவர் பெயர் ராமச்சந்திரன். ஒரே மகன் பெயர் ப்ரேம் ஆனந்த். பத்மினி அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பத்மினி ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் நடனப் பள்ளியை நடத்தி வந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ரஷ்யன் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். ஒரு படத்தில் கூட டப்பிங் கிடையாது. மேலும் 150 பல்மொழிப் படங்களில் நாட்டியம் மட்டுமே ஆடி இருக்கிறாராம். 10,000 நாட்டிய நிகழ்ச்சிகள். திருவிடை மருதூர் பாணியில் மகாலிங்கம் அவர்களிடம் நடனம் பயின்றவர். நடிப்பை விட நடனம்தான் தனது முதல் தேர்வு என்று கூறி இருக்கிறார்.
வை மு கோதை நாயகி அம்மாள் கதை எழுதிய சித்தி படத்தில் எம் ஆர் ராதாவின் இரண்டாவது மனைவி வேடம், நான்கு குழந்தைகளுக்குத் தாய். இதில் தன் மூத்தாள் மகளையும் மாமியாரையும் பத்மினி தாலாட்டும் “காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே, காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே” என்பது கண்ணதாசனின் அறப் பாடல். தன் 22 வயதிலேயே ( 1954 இல் ) மங்கையர் திலகத்தில் சிவாஜிக்கு அண்ணியாகவும், ஏன் அவருக்கே சித்தியாகவும் கூட நடித்திருக்கிறார்.
நடிகையர் திலகம் என்பது போல் நாட்டியப் பேரொளி பத்மினி. பேரழகி. கொவ்வைச் செவ்வாய், உயர்ந்த புஜங்கள். கட்டுமஸ்தான பெண் உருவம், கொண்டையில் மின்னும் க்ரீடம், சில பாடல்களில் கச்சையே உடுத்தினாலும் கண்ணியத் தோற்றம், நடனமாடும் அற்புதச் சிலை, கண்ணைச் சுழட்டிப் பார்க்கும் கம்பீரப் பார்வை, மெஜஸ்டிக் தோற்றம். ஒளிசிந்தும் கண்கள், பிரியம் சுடர்விடும் மொழி கொண்டவர்.
சிவாஜி பத்மினி இருவரும் தொழில் நேர்த்தியைக் காதலித்தவர்கள். அதனால்தான் இவ்வளவு உயிர்த்துடிப்பான காதலையும் நேசத்தையும், உறவுகளையும் படங்களில் படைக்க முடிந்தது. டான்ஸிங் டால் ஹெலன் போல் தமிழகத்தின் டான்ஸிங் டால் பத்மினி. இதற்குக் கால்கள் தரையில் பாவாமல் துள்ளிக் குதித்து மாதவிப் பொன்மயிலாளாக அவர் ஆடும் பாடலே சாட்சி. இதில் பாவங்களும் அபிநயங்களும் சுரமொடு ஜதி நாத கீத பாவங்களும் இயைந்து நிற்கும்.
நான்கு வயதிலேயே நாட்டியம் கற்றவர். கதகளி, பரதம், மணிப்புரி, குச்சிப்புடி மட்டுமல்ல மோகினியாட்டத்திலும் வல்லவர். சிதார் இசைக்கலைஞர் ரவிசங்கரின் சகோதரர் உதயசங்கர் எடுத்த கல்பனா என்ற படத்திற்காக பரதம் தவிரப் பல்வேறு வகை நாட்டியங்களை பத்மினி சகோதரிகளுக்குக் கற்பித்தார்களாம். அதுவே தன் நாட்டியத்தினைச் செம்மையாக்கியது என்று கூறுவார் பத்மினி. நடிப்பையும் வாழ்க்கையையும் விட நடனத்தை அதிகமாகக் காதலித்தவர் பத்மினி. சுற்றிச் சுழலும் நடனத்தாலும் தேர்ந்த நடிப்பாற்றலாலும், வசீகரத் தோற்றத்தாலும் ரசிகர்களின் உள்ளங்களில் இடம் பெற்றவர்.
வைஜெயந்தியும் பத்மினியும் தேர்ந்த கலைஞர்கள். ”கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே” பாடலில் அவர்கள் கண் அசைவும் முகபாவங்களும் நடன முத்திரைகளும் அடவுகளும் இசையும் ஜலதரங்கம் போல் நம் மனதை மகிழ்விக்கும். வைஜெயந்தி மாலா கண்களில் தீப்பொறி பறக்கும் ட்ராகன் போல நெளிந்து ஆடிக் கொண்டிருப்பார், “சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்குப் பதில் சொல்லடி ” என்று. ”ஆடும் மயில் எந்தன் முன்னே எந்த ஆணவத்தில் வந்தாயோடி பாடும் குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடாதேடி” என்று பத்மினி பதிலடி கொடுக்க பாடல் களை கட்டும். அவர் பாம்பாக இவர் மயிலாக ஒருவரை ஒருவர் ஜெயிக்க முயல, வைஜெயந்தி நாகமாகச் சீறிச் சினந்து பத்மினியின் கைப்பிடித்துச் சுழல முடிவில் ஜெமினி ஷாண்ட்லியரை வெட்டி வீழ்த்திப் போட்டியை ட்ராவில் நிறுத்துவார்.
இவர் பதினேழு வயதில் கன்னிகா என்ற படத்தில் நடனமணியாகத்தான் திரையுலகில் முதலில் அறிமுகமானார். 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதில் சிவாஜியுடன் மட்டும் 59 படங்கள்! இதுதான் காதல் கெமிஸ்ட்ரி என்பது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் பணம். ஜெமினி மற்றும் எம் ஜி யாருடன் தலா 20 படம் நடித்துள்ளார்.
வேதாள உலகம், மணமகள், சம்பூர்ண இராமாயணம், ராஜா தேசிங்கு, அரசிளங்குமரி, இரு மலர்கள், ஏழை படும் பாடு, குலமா குணமா, திருமால் பெருமை, திருவருட்செல்வர், தெய்வப்பிறவி, மதுரைவீரன், பக்தமார்க்கண்டேயா, மாங்கல்ய பாக்கியம், மீண்ட சொர்க்கம், ராணி சம்யுக்தா, ரிக்ஷாக்காரன், அன்னை வேளாங்கண்ணி, .தேனும் பாலும், வஞ்சிக்கோட்டை வாலிபன், தங்கப்பதுமை, உத்தம புத்திரன், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியன இவர் நடித்த படங்களில் சில.
தூக்குத்தூக்கியில் “குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்” என்ற நகல்நடனப் பாடல் இருவரின் நடிப்புத் திறமைக்கும் சான்று. எம் ஜி யாருடன் கண்கள் இரண்டும் இன்று உம்மைக் கண்டு பேசுமோ, வெண்முகிலே கொஞ்சநேரம் நில்லு, சித்திரத்தில் பெண் எழுதி சீர்படுத்தும் மாநிலமே ஜீவனுள்ள பெண் இனத்தை வாழவிட மாட்டாயோ. என்ற கண்ணீர்ப் பாடல்களும் உண்டு.
பப்பிம்மா என்று சிவாஜியும் கணேஷ் என்று பத்மினியும் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வார்களாம். உண்மைத் தம்பதி போலவே சிவாஜியும் பத்மினியும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடி. ஒளிந்திருந்து தன் நடனத்தை ரசிக்கும் சிக்கல் ஷண்முகசுந்தரத்தை ”மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன” என்று கிண்டலாக வினவுவார் மோகனாங்கி. நவரசத்தையும் முகத்தில் வாரி வழங்குவார். அதிலும் தில்லானா போட்டியில் ஷண்முகத்தின் நாகஸ்வரம் முழங்க சலங்கைகள் சிதறி ரத்தம் வழியும் மோகனாங்கியின் ஆட்டம் நம்மை அதிரடிக்கும். தளிச்சேரிப் பெண்டிர் ஆடிய சதிர் ஆட்டம் இப்படத்தின் மூலம் மதிப்புறு இடத்திற்கு மேலேறியது என்று சொல்லலாம்.
கத்திக் குத்து வாங்கிப் புஜத்தில் ரத்தம் வழியும் கட்டோடு நாதஸ்வரம் வாசிக்கும் சண்முக சுந்தரத்தைப் பார்த்து நொந்த மயில் போல் ”நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா” என்று பிரிவாற்றாமையால் பத்மினி தன் தலைக் கொண்டை அசைய அகவுவது நம் மனதிலும் ரத்தம் சொட்ட வைக்கும். இதைவிட வியட்நாம் வீட்டில் மனைவிக்கான உயிர்த்தவிப்புடன் ”ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் இருந்துமென்ன. வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன். உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் சொட்டுதடி” என்று கலங்கும் சிவாஜியோடு சேர்ந்து நம் இதயமும் கண்ணீர் உகுக்கும்.
சிவாஜியுடன் நடிக்கும்போது அவர் கண்களில் சுடரும் காதல் ஒளி அலாதியானது. ஒரு படத்தில் சிவாஜி படத்துக்காகக் கட்டிய தாலியைக் கூடச் சில மாதங்கள் வரை கழட்டாமல் இருந்திருக்கிறார். இவர் தங்கை தாயிடம் போட்டுக் கொடுக்க, நிஜ வாழ்க்கை வேறு, சினிமா வேறு என்று கூறி அவரது தாய் புரியவைத்திருக்கிறார். பின்னர் மருத்துவர் ராமச்சந்திரனுடன் திருமணமானது அவருக்கு. ஆனால் சென்னை வரும்போதெல்லாம் சிவாஜியின் அன்னை இல்லத்துக்கு அவர் வராமல் சென்றதில்லை. அப்போதெல்லாம் இருவருக்கும் பிடித்த அசைவ உணவுகள் சிவாஜியின் சாப்பாட்டு மேசையில் அணிவகுக்குமாம்.
நான்கு முறை சிறந்த நடிகை விருது, இருமுறை கலைமாமணி விருது, சிறந்த பரதநாட்டியக் கலைஞர் விருது, ஃபிலிம்ஃபேர் விருது, அருங்கலை மாமயில் விருது, நாட்டியராணி விருது பெற்றவர். பொது சேவைக்காக நாட்டியத்தின் மூலம் நிதி திரட்டிக் கொடுத்தவர், நேருவுக்கு முன் அவர் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் நடனமாடியவர் என்ற பெருமைக்கெல்லாம் உரியவர். அமெரிக்கா முழுவதும் 55 நிதி உதவி நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளார். டாக்டர் அழகப்பன் கேட்டுக் கொண்டதற்காக ஒரு இந்துக் கோயிலை முதன் முதலாகக் கட்டவேண்டியே இவரது முதல் நிதி உதவி நிகழ்ச்சி நடைபெற்றதாம்.
இந்திய சோவியத் கூட்டுறவில் தயாரிக்கப்பட்ட பர்தேசி படத்தில் நடித்துள்ளார். ரஷ்ய மொழி தெரியும். ரஷ்யப் படம் ஒன்றிலும் நடித்துள்ளாராம். சிலோன் படமாகிய கபாடி அரட்சகாயா என்ற படத்திலும் நடித்துள்ளார். மொழிகளை மட்டுமல்ல. தேசங்களையும் கடந்தவர்கள் நடிகர்கள் என்பதற்கு இவரே சான்று. இவருக்குச் சோவியத் யூனியன் அஞ்சல் தலை வெளியிட்டுக் கௌரவித்துள்ளது.
தங்கப்பதுமை, தெய்வப்பிறவி, மரகதம் ஆகியன ஹீரோயின் ஓரியண்டட் படங்கள். பூவே பூச்சூடவா இவர் நதியாவின் பாட்டியாக நடித்த படம். லெக்ஷ்மி வந்தாச்சு ரேவதியுடன் நடித்த படம். ”எனக்குத் தெரிந்து எனக்குச் சமமாக நடிக்கக் கூடிய ஒரே நடிகை பத்மினிதான்” என்று சிவாஜியே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். சிவாஜியின் நேரந்தவறாமை, டிசிப்ளின், கலகலப்பாகப் பழகும் முறை தன்னைக் கவர்ந்ததாக பத்மினி குறிப்பிட்டு இருக்கிறார். சிவாஜியைப் போலவே மறைந்து இருபதாண்டுகளுக்கு மேல் ஆனாலும் நம் மனதில் இன்றும் நடிகர் திலகம் சிவாஜியோடு சேர்ந்து ஒளிர்பவர் நாட்டியப் பேரோளி பத்மினி என்பது உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)