சிறை இராஜேஷ்
”ஆவாரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் பூத்திருக்கு. ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்தை. சேர்த்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே.. பட்டுவண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம். பாசம் என்னும் நீர் எறைச்சு ஆசையிலே நான் வளர்த்தேன். நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன். என் ஜென்மம் இருக்கும் வரை என் ஜீவன் காக்கும் உனை..”என்ற உயிர்த்துடிப்பான பாடல்கள் இவரது படங்களில் இடம்பெற்றிருக்கும்.
நடிப்புத் துறையில் 50 ஆண்டுகள் 150 படங்கள். அவள் ஒரு தொடர்கதை, கன்னிப் பருவத்திலே, அறை எண் 305 இல் கடவுள், ஆட்டோகிராஃப், ஒரு கல் ஒரு கண்ணாடி, தனிக்காட்டு ராஜா, தீனா, நிலவே மலரே, மெட்டி, ரமணா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜி, ஜெய்ஹிந்த் இவற்றோடு கமலுடன் விருமாண்டி, சத்யா, மகாநதி என்று மூன்று படங்களில் நடித்துள்ளார். இதில் இரு படங்களில் நேர்மையான காவலராக வருவார்.
இராஜமன்னார்குடியில் பிறந்தார். பெற்றோர் வில்லியம்ஸ் நாட்டார், லில்லி கிரேஸ். காரைக்குடி அழகப்பாவில் பியூசி படித்தவர். பச்சையப்பாவில் மேல் படிப்புப் படிக்க இயலவில்லை என்றாலும் இரு பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றி உள்ளார்.
இவர் 20 டிசம்பர் 1949 இல் பிறந்து 29 மே 2025 ல் தனது 76 ஆம் வயதில் மறைந்தார். குடி புகை என்று எந்தக் கெட்டபழக்கங்களும் இல்லாதவர். படித்தது பியூசி. வகித்தது ஆசிரியர் பணி. ஆனால் 9 புத்தகங்கள் எழுதி உள்ளார் என்பது சிறப்புத் தகவல். அதிலும் ஆங்கிலத் திரைப்பட நடிகர்களின் வரலாறுகளையும் தமிழில் எழுதி உள்ளார்.
ஜோதிட ஆர்வம் உள்ளவர்.1987 முதல் 1991 வரை அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். தமிழ்நாடு அரசு எம்ஜியார் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியின் தலைவராகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பொறுப்பு வகித்து வந்தார்.
தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்துள்ளார். கதாநாயகனாகச் சில படங்களே என்றாலும் ஆத்மார்த்தமான நடிப்பு. அமைதியும் அழுத்தமும் நிறைந்த குணசித்திரக் கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்துள்ளார். முரளிக்காக 3 படங்களிலும் நெடுமுடி வேணுவுக்காக ஒரு படத்திலும் குரல் கொடுத்திருக்கிறார்.
1974 இல் அவள் ஒரு தொடர்கதையில் அறிமுகம். மிகச் சிறிய கதாபாத்திரம். 79 இல் ராஜ்கண்ணு தயாரித்த கன்னிப் பருவத்திலே படத்தில்தான் கதாநாயகனாக அறிமுகமானார். அது குறிப்பிடத்தக்க ஒரு படம். மாடு முட்டியதால் ஆண்மையை இழந்திருப்பார் இவர். பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இவரைத் திருமணம் செய்து வரும் வடிவுக்கரசியை இவர் எதிர்கொள்ளும் தருணங்கள் இழிவரல் கொள்ள வைக்கும்.
திருத்தமான உருவம். சுருட்டை முடி, அடர்ந்த மீசை, மூக்கால் பேசுவது போன்ற சிறிது கொணகொணப்பான குரல். ஆனால் அழுத்தம் திருத்தமாகப் பேசுவது இவரது பாணி. இவர் நடித்ததில் என்னைக் கவர்ந்த படங்கள் அந்த ஏழு நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை, சிறை, வானமே எல்லை.
அச்சமில்லைஅச்சமில்லையில் அருவி இறைச்சலாக விழும் இடங்களிலும் இவரது ஃபேக்டரியிலும் ”மூக்கைப் பார் மூக்கை முந்திரிப் பழமாட்டம்” என்று சரிதா இவரைக் கலாய்ப்பார். அருவி இறைச்சலிலும் ஃபேக்டரி சத்தத்திலும் இவருக்கு அது கேட்காது. எனவே இவர் ஒரு முறை ஃபேக்டரியில் இருக்கும்போது சரிதா வந்து இவரைக் கலாய்க்கத் தொடங்க இவர் கையசைக்க ஃபேக்டரியின் செயல்பாடு உடனே நிறுத்தப்பட்டு நிசப்தமாகும்.
சரிதா” மூக்கைப் பார் மூக்கை முந்திரிப் பழமாட்டம்” என்று கலாய்த்தது சப்தமாகக் கேட்டு அவரையே திடுக்கிடச் செய்யும். தனது குறும்புத்தனத்துக்காக நாக்கைக் கடித்துக் கொண்டு அவர் ஓடும் இடமும் அவரைக் காதலோடு இராஜேஷ் பார்க்குமிடமும் அழகிய ரசனை.
அப்படிக் காதலோடு இருக்கும் இவர் அரசியல்வாதியாக ஆனதும் அதன் விபரீத கோரப் பிடிகளில் சிக்கி அடிதடி, லஞ்ச லாவண்யப் பித்தலாட்ட அரசியல்வாதி ஆவார். இவரது அரக்கத்தனத்தால் ஒரு முரடன் மூலம் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட சரிதாவுக்குக் கணவன் அருகில் வரும்போதெல்லாம் அக்காட்சி மனக்கண்ணில் விரிந்து கதறித் தீர்ப்பார். இவரைத் திருத்தமுடியாமல் முடிவில் இவரையே முடித்துவிடுவார் சரிதா.
வானமே எல்லையில் பசுபதியின் தகப்பனார் கதாபாத்திரம். தன் எதிர்காலத்தை நினைத்தபடி வடிவமைக்க இயலாமல் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட தன் மகனைப் போல் தற்கொலைக்கு முயலும் ஐவரைக் காப்பாற்ற முயல்வார். முடிவில் வெற்றியும் பெறுவார். இறந்ததாகக் கருதப்பட்ட இவரது மகனும் திரும்பி விடுவார். சோகம் இனி இல்லை சாதனைக்கு வானமே எல்லை என்பதுதான் மெசெஜ்.
அந்த ஏழு நாட்களில் கண்ணியமிக்க கணவர். இதில் இவர் ஒரு மருத்துவர். இவரது மனைவி ஒரு பெண்குழந்தையை விட்டு விட்டு இறந்துவிட, குழந்தையை வளர்க்கவேண்டி அம்பிகாவை மணந்து கொள்வார். ஆனால் அம்பிகாவுக்கு ஏற்கனவே ஒரு காதல்கதை உண்டு என்று முதலிரவில் தெரியவரும். இன்னும் ஒரு வாரத்தில் இறந்துவிடப் போகும் தன் தாய்க்காகத் தன்னுடன் இருக்கும்படியும் அவர் காதலித்த பாலக்காட்டு மாதவன் நாயரைத் தேடி அவருடன் சேர்த்து வைப்பதாகவும் மனைவியிடமே உறுதி அளிப்பார்.
ஒரு சினிமா தயாரிப்பாளராக மாதவன் நாயரான பாக்கியராஜிடம் அறிமுகமாகி அவரைத் தன் படத்துக்கு தன் வாழ்க்கைக் கதையையே சிச்சுவேஷனாகச் சொல்லிப் பாடச் சொல்வார். முடிவில் பெருமனதுடன் இவர் தன் மனைவியைப் போகச் சொன்னாலும் அவர் தன் தாலிக்கு மதிப்புக் கொடுத்து அதைக் கழட்டிவிட்டுப் போக மறுத்துவிடுவார். இவருடைய படங்களில் இதுதான் சக்கைப் போடு போட்ட படம். அன்றைய தமிழ்மக்களின் மனதையும் மதிப்பையும் மதிப்பீடுகளையும் பேசியபடம்.
சிறை இவரது படங்களில் ஒரு மைல்கல். தடித்த உருவமும் கடாமீசையும் போதை விழிகளுமாக மிரட்டும் இவர் பாகீரதி என்ற பெண்ணின் ஆவேசத்தின் முன் நோய் பீடித்த ஆட்டுக்குட்டியைப் போல் முடங்கிப் போய்விடுவார். சந்தர்ப்ப வசத்தால் தன்னை மீறிய போதையில் தவறிழைத்துத் திருந்திய நல்லவனாய் இவர் மாற பாகீரதியின் கணவனோ இவரது மறைவுக்குப் பின் சந்தர்ப்பவாதியாய் மட்டுமல்ல சுயநலவாதியாகவும் தன் கொடுமுகத்தைக் காட்டுவான்.
கல்லூரிப் பருவத்தில் பார்த்த காத்திரமான படம். இதன் கதை ஆசிரியர் அனுராதா ரமணன். அனைவரையும் யார் இவர் என்று திரும்பிப் பார்க்க வைத்த ஆர். சி சக்தியின் படமும் கூட. மேலும் குற்றவாளி, பாதிக்கப்பட்டவர் இருவருமே தத்தம் சிறையில் தவமிருப்பார்கள் என்பதாலுமே மிகப் பிடித்த படம்.
இவருக்குத் திவ்யா என்ற மகளும் தீபக் என்ற மகனும் உள்ளார்கள். திரைப்படப் படப்பிடிப்பிற்கென்றே சென்னை கே.கே.நகரில்1985 இல் ஒரு பங்களா கட்டிய முதல் நடிகர் இவர். இதில் பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. உணவகம், கட்டுமான வணிகம், ரியல் எஸ்டேட் தொழில் என்று பல்வேறு வணிகங்களிலும் ஈடுபட்டுள்ளார். கார்ல் மார்க்ஸின் ஆதரவாளர்.
திருமணமாகி அமெரிக்கா சென்றுவிட்ட தன் மகளை நினைத்தும், மறைந்துவிட்ட தன் மனைவி குறித்தும் அவ்வளவு பெரிய வீட்டில் தற்போது பிள்ளைகள், மனவி இல்லாமல் தான் தனித்து இருப்பது குறித்தும் அவர் ஒரு டிவி பேட்டியில் குரல் நெகிழப் பகிர்ந்தது பார்த்து வருந்தியது மனம். தனியே பிறந்தோம், சேர்ந்து வாழ்கிறோம், தனியேதான் செல்வோம் என்ற உண்மையை உணர்த்தியவர் என்பதால் மகத்தான நடிகர் இராஜேஷின் மறைவுக்கு மாபெரும் அஞ்சலிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)