எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பிரமராயன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரமராயன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 பிப்ரவரி, 2020

பிரமராயனைக் காக்க வந்த பரிமேலழகன். தினமலர் சிறுவர்மலர் - 51.

பிரமராயனைக் காக்க வந்த பரிமேலழகன்.
இக்கட்டில் மாட்டிக்கொண்ட ஒருவரைக் காப்பாற்ற சரியான நேரத்தில் வருவது முக்கியம். அத்தோடு அவரை அந்த இக்கட்டிலிருந்து விடுவிக்கத் தேவையான பொன் பொருள் கொண்டு செல்ல வேண்டும். அப்படி வாக்குக் கொடுத்த ஒருவர் மாட்டிக்கொண்டவருக்காக பொன் பொருள் அல்ல குதிரைகளைக் கொண்டு வந்து கொடுத்தார். அதுவும் எப்படி ? நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டு வந்தார். அது ஏன் எனப் பார்ப்போம் குழந்தைகளே.
திருவாதவூர் என்னும் ஊரில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தவர் திருவாதவூரார். சிறுவயதில் இவர் சகல கலைகளையும் கற்றுக் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அப்போது மதுரையை ஆண்டு வந்த அரிமர்த்தன பாண்டியன் என்பான் இவரது புலமையைக் கண்டு தென்னவன் பிரமராயன் என்ற பட்டம் அளித்துத் தன் அமைச்சராக்கிக் கொண்டான்.
என்னதான் பெரும்புலமை பெற்று மன்னனிடம் சேவகம் புரிந்துவந்தாலும் திருவாதவூரார் தன் மனதில் ஏதோ வெறுமையை உணர்ந்தார். அதனால் நிலையற்ற செல்வங்களை விட்டு அவர் மனதை ஒருமுகப்படுத்தி நிலையான செல்வமான சிவனிடம் பக்தி செலுத்தி வந்தார்.
ஒருமுறை சோழநாட்டில் நல்ல ஜாதிக்குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்படுகிறான் மன்னன் அரிமர்த்தன பாண்டியன். தன் படையை விரிவுபடுத்த எண்ணி தன் மந்திரி வாதவூராரிடம் பொற்காசுகள் கொடுத்து அந்தக் குதிரைகளை வாங்கி வருமாறு பணிக்கிறான்.