எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 ஏப்ரல், 2020

சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒளி கொடுத்தவர். தினமலர் சிறுவர்மலர் - 58.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒளி கொடுத்தவர்
சூரியனும் சந்திரனும்தான் ஏற்கனவே ஒளியோடு உலாவருகிறார்களே இதென்ன புதுக்கதை என்கிறீர்களா குழந்தைகளே. ஆம் புதுக்கதைதான். ஏற்கனவே ஒளியோடு இருந்த சூரியன் ஒளியிழந்தது எப்படி என்பதையும் அவன் திரும்ப ஒளி பெற்றதையும் பார்ப்போம். அதே போல் சந்திரன் ஒளிவீசித் திகழ்வது எப்படி என்பதையும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பிரம்மதேவரின் மானஸபுத்திரர்களுள் ஒருவர் அத்திரி மகரிஷி. இவருடைய மனைவி அனுசூயாதேவி. யாரிடமும் அசூயை இல்லாமல் கோபப்படாமல் பழகுவதால் அனுசூயாதேவி அனைவராலும் விரும்பப்பட்டவளாகத் திகழ்ந்தாள்.
அதேபோல் அத்திரி முனிவரும் அனைவராலும் விரும்பப்பட்டார். ஆயுர்வேத மருத்துவம், ஜோதிட சாஸ்த்திரம் ஆகியவற்றில் கரை கண்டவர். இந்த உலகம் தோன்றியபோது இவரும் அவதரித்தார். பல்லாயிரம் குழந்தைகள் பெற்றார். அவர்களுள் பதஞ்சலி, தத்தாத்ரேயர் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
அத்திரி முனிவர் தெளிந்த மெய்ஞானம் கொண்டவர். ஈரேழு பதினாலு லோகத்திலும் அவர் புகழ் பரவிக் கிடந்தது. அவரை மனதில் தியானித்து அவரது மனைவி அனுசூயை மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கியதும் பின் முப்பெரும் தேவியரின் வேண்டுகோளின்படி அவர்களைத் திரும்ப மும்மூர்த்திகளாக்கியதும் நாம் அறிந்ததே.
தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்து கிடைத்த அமிர்தத்தை மோகினி தேவர்களுக்கு மட்டுமே பகிர்ந்து கொடுக்க எங்கே தங்களுக்கு வருமுன் அமிர்தம் தீர்ந்துவிடுமோ என்று கவலைப்பட்டான் ஸ்வர்பானு என்ற அசுரன் . உடனே தேவர்களுக்கு நடுவில் தானும் ஒரு தேவனாக உருமாறி அமர்ந்து அந்த அமிர்தத்தை உண்டுவிட்டான்.


அதை சூரியனும் சந்திரனும் மோகினியிடம் கண்ணால் ஜாடை காட்டி சுட்டிக்காட்ட மோகினியோ அமிர்தம் பரிமாறிய கரண்டியால் ஸ்வர்பானுவின் தலையில் தட்ட அவன் உடலும் சிரசும் இரு துண்டுகளாகிறது. அமிர்தம் உண்டதால் இறப்பில்லாப் பெருவாழ்வு பெற்ற அவன் தலையுடன் பாம்பின் உடல் இணைந்து ராகுவாகவும், உடலுடன் பாம்பின் தலை இணைந்து கேதுவாகவும் உருமாற்றம் பெற்றான்.
அதில் ராகுவானவன் தன்னைக் காட்டிக் கொடுத்த சூரியனையும் சந்திரனையும் கிரகணமாகப் பீடித்துப் பழிவாங்குவேன் எனச் சபதம் இட்டிருந்தான். காத்துக் கொண்டே இருந்தவன் தக்க தருணம் வாய்த்தபோது சூரியனை ராகு விழுங்கத் துவங்கினான். சூரிய கிரகணம் துவங்கியது. கையறு நிலையில் சூரியன் ராகுவின் வாய்க்குள் போய்க்கொண்டிருந்தான். அசையும் அசையாப் பொருட்கள் எல்லாம் விஷமாகத் தொடங்கின.
உலகம் கொஞ்சம் கொஞ்சமாக இருளத் தொடங்கியது. ஆனால் சூரியனின் நல்ல நேரமோ ராகுவின் கெட்ட நேரமோ தெரியவில்லை. ராகுவால் முழுதாக விழுங்க முடியவில்லை. அதனால் பிடித்த கிரகணத்தை விட்டான். அப்பாடா தப்பித்தோம் பிழைத்தோம் என சூரியன் வெளியே ஓடி வந்தான். எல்லாப் பொருட்களில் இருந்தும் விஷம் நீங்கியது.
உலகம் வெளிச்சம் பெற்றது. ஆனாலும் முழுமையான வெளிச்சம் இல்லை. ஐயகோ இதென்ன மங்கலாக ஆகிவிட்டானே சூரியன். பழைய தேஜஸ் முழுவதையும் ராகு உறிஞ்சி விட்டான். என்ன இது கோலம் என சூரியனுக்கே வெட்கமாகி விட்டது.
அத்திரி முனிவர் இக்காட்சியைக் கண்டார். இரக்கம் மேலிட சூரியனைத் தொட்டுத் தன் தவவலிமையால் பிரகாசமாக்கினார். மீண்டும் தன் பழைய வலிமையோடும் ஜோதியோடும் ஒளிவிடத் தொடங்கினான் சூரியன். அத்திரி முனிவருக்கு நன்றி கூறி வானில் உற்சாகமாய் உலாவரத் தொடங்கினான். நாம் காணும் சூரியனை ராகு விழுங்கும் போதெல்லாம் மீண்டும் ஒளி கொடுத்துக் காப்பாற்றுபவர் அத்திரி முனிவரே.
சூரியன் காலையில் உதித்து மாலையில் மறைகிறான். அதனால் இரவில் எந்த வெளிச்சமும் இல்லாமல் கரு கும் என்று இருந்தது. மக்கள் எல்லாம் இருட்டில் சிரமப்பட்டார்கள். பொழுதெப்ப விடியும் சூரியன் எப்ப வருவான் எனக் காத்திருக்கத் தொடங்கினார்கள். இதைக் கண்ட அத்திரி மகரிஷி மக்களுக்கு இரவிலும் ஒளிகிட்ட ஏதேனும் செய்ய வேண்டுமென எண்ணினார்.
சூரியனைப் போல ஒரு ஒளிப்பந்து இரவிலும் இருந்தால் நன்றாக இருக்குமே. சூரியனைப் போல மிகுந்த ஒளியும் சூடும் இருந்தால் மக்கள் உறங்க முடியாது. அதனால் மிதமான ஒளியும் தண்ணென்ற குளிர்ச்சியும் உள்ள ஒரு ஒளிக்கோளம் வேண்டுமென சமுத்திரத்தின் ஆழத்திற்குச் சென்று அமர்ந்து தவமிருந்தார்.
வருடங்கள் போயின. அவை சாதாரண மனுஷர்கள் கடக்கும் வருடங்கள் அல்ல. தேவலோகத்து மக்கள் கடக்கும் தேவ வருடங்கள். பலகோடி காயகல்ப வருடங்கள் தவம் செய்ததால் சமுத்திரமே கொந்தளிக்கத் தொடங்கியது.
அத்திரி முனிவரின் தவக்கனலால் சமுத்திரம் சூடானது. பல்லாயிரம் ஆண்டுகள் அவர் தன் கண்ணுள் நிலைநிறுத்தி வைத்திருந்த தவநெருப்பு உருண்டைக் கோளம் ஆனது. ஜோதியாய் ஒளிவீசி உருண்டு வெளி வந்தது. வந்த வேகத்தில் கடலைக் கிழித்துப் பூமியைக் கடந்து ஆகாயத்தில் படுவேகத்தில் உருண்டு ஓடத் தொடங்கியது.
இந்த ஒளிவெள்ளத்தைப் பிரம்மா பார்த்தார். அது அத்திரிமுனிவரின் தவக்கனல் பரிசளித்த ஒளிப்பந்து என்பதை உணர்ந்தார். அந்த ஒளிப்பந்தைக் கட்டுப்படுத்தி ஒரே இடத்தில் நிலையாக நிறுத்தும்படி எண்திசை அதிபர்களுக்குக் கட்டளை இட்டார். திசைகள் விரைந்து சென்று அந்த ஒளிவெள்ளத்தை வலுவோடு பிடித்துத் தடுத்து நிறுத்தின.
பிரம்மாவே நேரில் வந்து அந்த ஒளிப்பந்தைத் தன் தேரில் வைத்து உலா வந்தார். அந்த ஒளிப்பந்து இரவில் சூரியன் இல்லாதபோது பூமியைச் சுற்றி உலா வருகிறது. அதுதான் நாம் காணும் நிலா. இதன் மூலம் மக்களுக்கு இரவிலும் வெளிச்சம் கிடைத்தது. இப்படி இரவில் ஒளிவிடும் சந்திரனை நமக்குத் தன் தவவலிமையால் உண்டாக்கித் தந்தவர் அத்திரி மகரிஷியே.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒளி கொடுத்து மனித குலத்துக்கு நன்மை செய்த அத்திரி மகரிஷியின் புகழ் என்றும் நம் மனங்களில் ஒளி வீசட்டும் குழந்தைகளே. 

டிஸ்கி :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 6 .3. 2020  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

டிஸ்கி 2:- அரும்புகள் கடிதத்தில் இதிகாசபுராணக் கதைகள் பள்ளிகளில் பயின்றுவரும் எங்களைப் போன்ற சிறுவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கின்றன எனப் புகழ்ந்துரைத்த மணச்சநல்லூர் வாசகி செல்வி பால அபிராமிக்கு நன்றியும் வாழ்த்துக்களும். :) 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...