எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 13 ஏப்ரல், 2020

கருங்கானகமும் குக்கூ கடிகாரமும்.

ஜெர்மனிக்குச் சென்றுவந்தால் குக்கூ க்ளாக் வாங்காமல் வருவாங்களா.அதுவும் யூரோப் டூரில் முதல்நாள் ப்ரஸ்ஸில்ஸ், இரண்டாம் நாள் ப்ளாக் ஃபாரஸ்ட். இதுதான் குக்கூ கடிகாரத்தின் தோன்றிடம். விதம் விதமான குக்கூ கடிகாரங்கள் 150 யூரோவிலிருந்து 3000 யூரோ & அதற்கு மேலும் உள்ள கடிகாரங்கள் காட்சிக்கு உள்ளன.  தென்மேற்கு ஜெர்மனியில் ப்ளாக் ஃபாரஸ்ட் என்னுமிடத்தில் கிடைக்கும் மரத்தின் மென்மையான துண்டுகளைக் கொண்டு 1600 ஆம் ஆண்டுகளில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது குக்கூ கடிகாரங்கள். வருடத்தின் எட்டு மாதங்கள் குளிரும் பனியும் உறையும் பகுதி இது. உறைபனியில் வெளியே அதிகம் சென்று பணியாற்ற இயலாது. எனவே வீட்டில் அமர்ந்து செய்யும் தொழிலான குக்கு கடிகாரங்கள் தயாரிக்கும் பணி இங்கே உள்ள மக்களுக்கு அமோக வருமானத்தைத் தருகிறது.

வாங்க ஒரு சுற்று பாடன் உ(ர்)ட்டம்பர்க் நகருக்கும் டிடிஸி ஏரிக்கும் அதைச் சுற்றியிருக்கும் கடைகளில் உள்ள குக்கூ கடிகாரங்களையும் , பீர், பிராண்டி, ரம், ஒயின்,ஸ்காட்ச் இன்னபிற குடி வகைகளையும், பதப்படுத்தப்பட்ட அசைவ உணவு வகைகளையும் பழங்களையும் கண்டு களிக்கலாம்.





நாங்க சென்ற கோச்சின் மேனேஜர் சந்தோஷ் ஒவ்வொரு இடத்திலும் அது பற்றிய விவரணைகளைக் கூறி இறக்கிவிட்டு அங்கே இருந்து கிளம்பும் நேரம் அடுத்த உணவுக்கான இடம், சந்திப்பு ஆகியவற்றைக் கூறிவிட்டுக் கழண்டு கொள்வார்.

நாங்கள் நோக்கம்போல் சுற்றிவிட்டு ( மாட்டைக் கயிறில் கட்டியதை நினைவில் கொள்க. - சுற்றுவட்டாரத்தில் 250 அடிக்குமேல் எங்கேயும் போக மாட்டோம். ) வந்து சாப்பிடும் இடத்துக்கு வந்து சேர்வோம். ஏனெனின் யூரோப் டூர் பற்றி எழுதிய என் மாமா டூர் மேனேஜர் சொன்ன நேரத்துக்கு வராவிட்டால் அவர்கள் கிளம்பி விடுவார்கள் என்றும் நாம் ( கைக்காசை யூரோவில் செலவழித்து வாகனம் பிடித்து - அடித்துப் பிடித்து ) அடுத்த லொகேஷனில்தான் சென்று சேர்ந்து கொள்ள வேண்டும் என்று எழுதி இருந்தார். எனவே போட்டிங், எக்ஸெட்ரா எதுக்கும் போகாமல் மேனேஜர் சொன்னபடி போய்ட்டு சொன்னபடி திரும்பினோம்.


குக்கூ கடிகாரக் கடைகள்தான் ஊரெங்கும். விதம் விதமான ப்ராண்டுகள். இது ட்ரூபா ப்ராண்டுக்கான கடை. 1956 இல் இருந்து இந்த ப்ராண்ட் கடிகாரங்கள் உற்பத்தி செய்கின்றார்கள்.


சோபேர்ட் கைக்கெடிகாரங்கள்  1860 இல் இருந்து உற்பவிக்கிறார்கள்.

இவர் பெரிய மகனார். :)  நிறைய வீடியோக்களும் ஃபோட்டோக்களும் இவர் எடுத்ததுதான்.


ரெஸ்டோரெண்டின் ரெஸ்ட் ரூம். அவசரத்துக்கு ஒதுங்கினோம். இங்கே ஹோட்டல் அல்லது மோட்டல் அல்லது ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் ஏதேனும் வாங்கச் சென்றால் நாம் கட்டணம் செலுத்தாமல் கழிவறையைப் பயன்படுத்தலாம்.

இங்கே உள்ள கடைகளில் 1283 இல் இருந்து தயாரிக்கப்படும் ஃபர்ஸ்டன்பர்க் ப்ராண்ட் பீர் கிடைக்குமாம். இந்தியன் பேலஸ் ரெஸ்டாரெண்டில் அருமையான் சாப்பாடும் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்கும் வெட்டினோம்.


அடுத்துப் பழக்கடைகள் அணிவகுக்கின்றன. கிலோ கணக்கில் பழவகைகள் கொட்டிக் கிடக்கின்றன. பீச், பெர்ரிஸ், க்ரேப்ஸ், ப்ளம்ஸ்

ஆரஞ்ச், ஆப்ரிகாட், அவகேடா, கிவி, தக்காளி கூட.


இதோ வந்துவிட்டது குடிப்பிரியர்களுக்கான கடை. ட்ரம்மில் பீர்- பீப்பாய் பீர் பாய் . பாட்டில் பாட்டிலாய் விதம் விதமான குடிபானங்கள். காமிக்ஸிலும் கார்ட்டூனிலும் ( டின் டின் ) பார்த்த குடிவகைகளை இங்கே நேரில் பார்த்தேன்.


ப்ரெட் & பேஸ்ட்ரீஸை ஜெர்மனியில் கண்டதுபோல் நான் வேறெங்கும் கண்டதில்லை. மூன்று வேளையும் இவர்கள் விதம் விதமான ப்ரெட்டை உண்கிறார்கள். டோநட்ஸ், ஹாட் டாக்ஸ், ப்ரெட், பன், கேக், சாண்ட்விச், பர்கர், பிஸா, பேகட்டீஸ், க்ரைஸான்,வீட் ப்ரெட், வேஃபில்ஸ், பேகிள்ஸ், ரஸ்க்ஸ், பிஸ்கட்ஸ்.

அசைவ உணவு வகைகள் பதப்படுத்தப்பட்டது. சாஸேஜ் அதிகம் தென்பட்டது. விதம் விதமான சீஸ் வகைகளும் உண்டு.



இங்கே பாருங்க விதம் விதமான சாஸேஜ்களும் உப்பில்லாத உப்புக் கண்டங்களும். ஜெர்மானியர்களுக்கு எதிலும் எலும்பே தட்டுப்படக் கூடாது. அசைவ வகைகளை சுத்தம் செய்து எலும்பு முள் நீக்கி அரைத்து உருட்டிக் காயவைத்துக் கொடுத்துவிடுவார்கள். ப்ரெட் போல அவற்றையும் மென்மையாக வேகவைத்து ( கடைகளில் வாங்கினாலும் ) அடுத்தவர் கவனத்தைக் கவராவண்ணம் கவரை விட்டு வெளியே தெரியாமல் பிடித்து சத்தமின்றி உண்பார்கள்.


விதம் விதமாய்க் கூவுகின்றன குக்கூக்கள்.


இந்தக் கருங்கானகங்களில் கிடைக்கும் லிண்டன், பைன் மற்றும் வால்நட் ஆகியவற்றின் மென்மையான மரத்துண்டுகளைக் கொண்டு ஃபாஹ்ரன்பேக் என்ற குடும்பத்தார் முதன் முதலில் குக்கூ கடிகாரங்களைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்தார்கள். முதலில் பவாரியா மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட இக்கடிகாரம் இப்போது வருடத்துக்கு 2 லட்சம் என்ற அளவில் உற்பத்தி இலக்கை எட்டியுள்ளது.  இப்போது இந்த ஏரியாவில் தயாராகும் ஆறு வகையான ப்ராண்டுகள் உலகம் முழுவதும் பிரசித்தியாகி விற்கப்படுகின்றன.

ப்ளாக் ஃபாரஸ்ட் குக்கு க்ளாக் அசோஸியேஷன் என்ற ஒன்றின் கீழ் இவை அனைத்தும் செயல்படுகின்றன. அடோல்ஃப் ஹெர் என்ற கம்பெனி தயாரிக்கும் குக்கூ கடிகாரம்தான் ஆறு தலைமுறை தாண்டியும் இன்னைக்கும் பிஸினஸில் கோலோச்சிக் கொண்டு இருக்கு.

இந்த ஊர் மரங்கள் , விலங்குகள் , கருங்கானகம் , வீடு , குயில், ஓக் இலைகள் அடங்கிய கருங்கானகத்தைப் பிரதிபலிப்பதாகவே இக்கடிகாரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 1850 இல் இருந்து இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுமார் ஒரு குக்கூ கெடிகாரம் 30 வருடங்களுக்குக் குறையாமல் உழைக்கும். மரத்தால் கடிகாரத்தின் வெளிப்புற அலங்காரங்கள் செய்யப்பட்டு அதன் பின் கடிகாரமும் அதனை இயக்கும் விசைகளும் பொருத்தப்படுகின்றன.

இந்த குக்கூ கடிகாரங்களின் ஸ்பெஷாலிட்டி பகல் நேரங்களிலும் ( வெளிச்சமுள்ள அனைத்துப் பொழுதுகளிலும் ) குயில் ஒன்று கடிகாரத்துக்கு மேல் இருக்கும் கதவைத் திறந்து வெளியே வந்து நேரத்துக்கு ஏற்ப ஒரு முறையிலிருந்து பன்னிரெண்டு முறை கூவி விட்டு உள்ளே செல்லும். இதில் நிரப்பப்பட்டிருக்கும் காற்றால் ஒருமுறை குயில் தானியத்தைக் கொத்துவது போல் குனியும்போது ”கு” என்றும் இன்னொருமுறை நிமிர்ந்து கொத்தும் போது ”க்கூ” என்றும் அழுத்தமாகக் கூவுகிறது. அதைக் கேட்கும்போது நம் செவியில் ”குக்கூ” என இசைக்கிறது.

எங்கள் வீட்டில் சின்ன மகனார் வாங்கி வந்த குக்கு கடிகாரம் கடந்த ஐந்தாண்டுகளாக குக்கூ என மணி தவறாமல் இசைத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் இது. :)



5 கருத்துகள்:

  1. படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்களுடன் சுவையான பதிவு

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

    பதிலளிநீக்கு
  3. நன்றி வெங்கட் சகோ

    நன்றி சிவபார்கவி :)

    நன்றி கீத்ஸ்

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ. உங்களுக்கும் மற்றும் நம் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...