ஆத்ம சமர்ப்பணம் செய்து ஈசனைக் அடைந்த நந்தனார்
இறை பக்தி என்றால் அது எந்த அளவு இருக்க முடியும்? இறைவனைத் தரிசிக்க நாம் மலை மீதும் பனி மலை மீதும் ஏறிச் செல்வோம், பள்ளத்தாக்கைச் சுற்றுவோம், நதி மீது பயணிப்போம், கடல் தாண்டியும் செல்வோம். இதுவே நம் அதிகபட்ச பக்தி. ஆனால் மற்றையோரைப் போலத் தான் நேரில் காணமுடியா இறைவனின் திருவுருவைக் காணக் கொழுந்து விட்டெரியும் நெருப்பினில் புகுந்து இறைவனுடன் ஐக்கியமானார் நந்தனார் என்னும் பெயர் கொண்ட ஒரு நாயன்மார். உச்சபட்ச பக்தியின் எடுத்துக்காட்டாய் விளங்கிய இவருக்குத் திருநாளைப் போவார் என்னும் பெயருமுண்டு.
சிதம்பரத்துக்கு அருகே காவிரி பாயும் கொள்ளிடம் என்னும் கிளைநதியின் கரையில் அமைந்திருந்தது ஆதனூர். அந்த ஊரில் எந்நேரமும் சிவசிந்தனையுடன் வாழ்ந்து வந்த நந்தனார் என்றொரு நல்மனிதர் இருந்தார். இவர் கோயில்களின் பயன்படுத்தப்படும் வாத்தியங்கள், பேரிகைகள், முரசங்களுக்காக தோல்களைப் பதப்படுத்தித் தரும் பணியில் ஈடுபட்டு வாழ்ந்தார். கோயில்களின் தேவைக்கு ஏற்ப விசிவார், கோரோசனை போன்ற பொருட்களையும் கொடுத்து வந்தார்.
சிறுவயதிலிருந்தே இவர் சிவனின் மேல் காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கிப் பாடுவார், ஆடுவார். வயது ஏற ஏற பக்தியும் அதிகரித்தே வந்தது. அக்கால முறைப்படி இவர் பிறந்த குலத்தின் காரணமாகக் கோயிலுக்கு உள்ளே சென்று இறைவனை வழிபட முடியாதபடியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இவருக்கோ சிந்தையெல்லாம் சிவன், அவனே இவர் சீவன். எனவே பக்கத்தில் உள்ள திருப்புன்கூர் தலத்துக்குச் சென்று இறைவனை வணங்கினார்.
கோயிலின் உள்ளே செல்ல இயலாது. ஆகையால் மருகியும் உருகியும் நின்றபடி அவர் இறைவனைத் தொழுது கொண்டிருந்தார்.. தன்னைக் காண ஏங்கும் தன் ஆத்மார்த்த பக்தனைச் சிவன் பார்த்தார். அவனுக்கு நேரடியாகவே காட்சி தர விரும்பித் தன் எதிரே மண்டியிட்டு அமர்ந்திருந்த நந்தியைச் சிறிது விலகும்படி ஆணையிட்டார். நந்தியம்பெருமானும் சிவன் கூறியபடி விலகித் தலை சாய்க்க அங்கே நந்தனாருக்கு ஈசனின் தரிசனமும் பரவசமும் ஒருங்கே கிட்டியது.
பணிந்து பலமுறை வணங்கிய நந்தனார் அக்கோயிலை வலம் வந்தார். வழியில் அவ்வூரின் ஒரு இடத்தில் நிலம் தாழ்ந்திருக்க அந்த இடத்தைத் தோண்டி அழகான ஒரு திருக்குளம் அமைத்தார். திருப்புன்கூரில் கிடைத்த சிவ தரிசனத்தால் மகிழ்ந்து போன அவருக்குப் பல ஊர்களிலும் கோயில் கொண்டு உறைந்துள்ள ஈசனைத் தரிசிக்கும் ஆவல் மேலோங்கியது.
ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் சென்று திருத்தொண்டு புரிந்து சிவனை வெளியில் நின்றபடியே வணங்க ஆரம்பித்தார். எல்லா சிவனையும் கண்டவர்க்கு வெகு நாளாகத் தில்லைச் சிவனையும் காண வேட்கை மிக்கூர தினமும் விடிந்ததும் செல்ல எண்ணுவார். ஆனால் தன் குலத்தை எண்ணித் தயங்குவார். அதனால் தினமும் நாளைப் போவேன் என்று தனக்குள்ளேயே கூறிக் கொள்வார்.
எத்தனை நாட்கள்தான் இவ்வாசையை அடக்கி வைக்க இயலும். அவரால் தினமும் தூங்கக் கூட இயலவில்லை. இரவெல்லாம் விழித்திருப்பார். பற்றற்றான் மேல் வைத்த அளவற்ற பற்றால் ஒரு நாள் அவர் விடிந்ததுமே தில்லையை நோக்கிச் செல்லத் தொடங்கினார். தில்லையின் எல்லையை அடைந்ததுதான் தாமதம். அங்கே ஊரிலிருந்து எழுந்து வரும் வேள்விப் புகை அவரைத் தடுத்தது.
வேதம் ஓதும் ஒலி எங்கும் நிறைந்திருந்தது. தாம் செல்லலாமோ கூடாதோ என்று தயங்கிக் கை கூப்பியபடியே நகர் எல்லையை வலம் வந்தார். இவ்வாறு பகல் இரவு எனப் பல தினங்கள் கழிந்தன. ஒருநாள் அவர் துயில் கொண்டபோது அவரது கனவில் தில்லைக் கூத்தர் தோன்றினார். வெகு பிரகாசமாக இருந்த அவரைச் சுற்றிலும் வேள்விப் புகையும் வேத ஒலியும் நிறைந்திருந்தன. இறைவனது திருக்காட்சியைக் கண்ட நந்தனார் தன்னை அவர் அதனூடே அழைப்பதாக உணர்ந்தார்.
அதே திருக்காட்சியைக் கூத்தனின் கட்டளையாகத் தில்லைவாழ் அந்தணர்களும் தம் கனவில் கண்டார்கள். இறைவனை அடைய விரும்பிய நந்தனார் விடிந்ததும் எழுந்து காலைக் கடன்களை முடித்துத் தம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு கோயிலின் தெற்கு வாயிலை அடைந்தார்.
அங்கோ வேள்வித் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. சிறிதும் தயங்கவில்லை நந்தனார். உடுக்கையோடு திருநடனமாடிய தில்லைக்கூத்தனின் திருவுருவாக அந்நெருப்பினைத் தரிசித்தார். ”இன்று நாளை என்று நாளை எண்ணிக் கொண்டிருந்தேன். இதோ ஈசனே இன்றுதான் அந்நந்நாள் எனப் புரிந்தேன். இப்பொழுதே உம்மை அடைய வருகிறேன்” என்று தன் இரு கரங்களையும் நீட்டி இறைவனை ஆலிங்கனம் செய்வது போல் விரைந்து ஓடி வேள்வித் தீயில் புகுந்தார். மறைந்தார்.
சுற்றிலும் ஆஹா ஹாரமும் நமச்சிவாய என்னும் கோஷமும் இரைச்சலாக ஒலித்தன. எல்லாரின் ஒலியையும் மீறி அவ்வொளி இன்னும் அதிகமாகக் கொழுந்து விட்டு எரிந்தது. தம் ஆத்மார்த்த அர்ப்பணிப்பால் அடிமுடி அறியவொணா இறைவனின் அருட் சோதியில் இரண்டறக் கலந்த நந்தனார் என்னும் திருநாளைப் போவார். இவர் என்றும் ஆத்ம சமர்ப்பண பக்திக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார் என்பது உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)