பெருமதிப்பிற்குரிய நிவேதிதா மேடம் வள்ளிதாசன் சார் அவர்களுக்கு வணக்கம்.
ஹெர் ஸ்டோரீஸ் சார்பாக நடத்தப்பட்ட நாவல் போட்டியில் நடுவராக இருக்கும்படி அழைத்தமைக்கு நன்றிகள்.
இதில் 5 நாவல்கள் பங்கேற்றன. ஐந்துமே சிறப்பானவை தான். அனைத்துமே ஹெஸ்டோரிசில் நாவலாக பதிப்பாக்கம் செய்யக்கூடிய சிறப்பு பெற்றவை.
இதில் நான் எந்த வரிசையில் தேர்ந்தெடுத்து இருக்கிறேன் என்றால் பெண்ணியத்தோடு பொதுநலமும் கலந்த வகையில் தேர்ந்தெடுத்து உள்ளேன்.
அந்த வகையில் நனைந்த பாய் என்ற கதை ஒரு சுயசரிதையாக அமைந்துள்ளதால் ஐந்தாம் இடத்தைப் பெறுகிறது. அதுவும் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று உள்ளது. அதன் மொழி நடையில் சிறிது மாற்றம் செய்து இருந்தால் அது சிறப்பு பெற்றிருக்கும். திரும்பத் திரும்ப வரும் செய்திகள் அதிகம். பெண்களுக்கான வாழ்வியல் துயரங்களைப் பட்டியலிட்டாலும் அது சந்திராவின் வாழ்வில் அவளை சுற்றி உள்ளவர்கள் மட்டுமல்ல அவளே வேண்டி விரும்பித் தன்னைத்தானே சிலுவையில் அடித்துக் கொள்ளும் ஒரு பரிசுத்த ஆத்மாவாக இருக்கிறாள். அந்த வகையில் அவள் என் இரக்கத்தை அதிகம் தூண்டினாள்.புள்ளி விவரங்கள் அதிகம் என்பதால் கட்டுரையாகும் அபாயம் அதிகம். எந்த வயதிலும் சாதிக்கத் துடிக்கும் பெண்களின் மாதிரியாக சந்திரா திகழ்வதால் அவளுக்கு என் வாழ்த்தும் லூர்துமேரி அவர்களுக்கு என் அன்பும்.
அடுத்ததாக வடக்கு வாசல் செல்வி இது ஒரு சரித்திர நாவல். ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் காலத்துப் போர்க் கதைகள், போரில் பிடிபட்ட பெண்களின் அவலக் கதைகள் ஆவணமாக உள்ளன. இன்றும் இருக்கும் வடக்கு வாசல் செல்வி என்ற தெய்வம் கதையில் முடிவில் சுட்டப்படுகிறது. கதையில் முக்கால் பங்கு வரையில் அந்த தெய்வத்தைப் பற்றிய குறிப்பு எங்குமே இல்லை. முடிவில் முத்துக்குமாரி வடக்கு வாசல் செல்வியாக அவதாரம் எடுக்கிறாள். நடுவில் முத்துக்குமரனும் மின்னல் வீரனாக மாறுவது கொஞ்சம் சினிமாக்களில் பார்ப்பது போல இருந்தது கிளைமாக்ஸ். நிறையப் பெண்ணியம் பேசும் ரோஷமான நாயகி. திடீரென ஊரை விட்டு ஒதுக்கப்படுகிறாள். ஆகையால் இதற்கு நான்காம் இடம்.
அடுத்தது மூன்றாவதாக கெங்கம்மா கெங்கு என்று அழைக்கப்படும் ஒரு பெண்ணின் மற்றும் அவளது சகோதரனின் வாழ்வியல் போராட்டம். பன்றி வளர்ப்பைக் கைக்கொண்ட அவர்கள் இனத்தின் வசிப்பிட மற்றும் தன்மானப் போராட்டம் என்ற வகையில் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கதையில் உரையாடல்கள் பாதிக்கு மேல் டொம்பர் மொழியிலேயே இடம் பெறுகின்றன. கெங்கு படும் துயரங்கள், அவர்கள் போராட்டங்கள் எல்லாம் கெங்குவின் சகோதரரின் பார்வையில் சொல்லப்படுகிறது மிகச் சிறப்பான கதை. தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் சேர்ந்து போராடுவது சிறப்பு. கெங்கு திடீரென மறைவதும் அதிர்ச்சி. சிறப்பான கதை. தேர்ந்தெடுக்க நான் ரொம்பவும் சிரமப்பட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். இது மூன்றாம் இடம்.
இரண்டாம் இடத்தில் இன்னொரு இசக்கி இந்தக் கதைக்கு என் இரண்டாம் இடம் என்றால் அது முழுக்க முழுக்கப் பெண்ணியம் சார்ந்து ஒரு பூப்படைய முடியாத பெண்ணின் நிலையிலிருந்து இன்னொரு பூப்படையாத பெண்ணைக் காப்பாற்றுவது போல அமைந்துள்ளது. அவளைப் பூப்படைய வைக்க அவர்கள் படுத்தும் கொடுமைகள்.. அப்பப்பா.
ஆனால் எல்லா கதைகளிலும் முடிவில் நைந்தபாய் தவிர அனைத்துக் கதைகளிலும் நாயகி தன்னைத்தானேவோ, போராட்டத்திலோ, விபத்தாகவோ மாய்த்துக் கொள்கிறாள்.
துணிந்து எதிர்த்து நின்றாலும் முடிவு என்னவோ இதுதான். இந்தக் கதையிலும் குடும்பத்திலிருந்து வெளியேறி ஊர் உலகமெல்லாம் அலைந்து சில பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து முடிவில் தன்னைத்தானே எரித்துக் கொள்கிறாள். நடுவில் வரும் சில விபரங்களும் பண்ணையார் நவநீதன் ஆகியோர் பற்றி வருமிடங்களில் உரையாடல்கள் எல்லாம் சினிமாத்தனமாக இருந்தன.கோயிலுக்குள் தீட்டுப் பட்டதால் அம்மன் உக்கிரமாக இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அது பற்றிய விவரம் எதுவும் இல்லை. ஆகையால் இது இரண்டாவது இடம்.
முதலிடம் வம்பா மணல் இதன் மொழி நடை ரொம்பக் கவித்துவமானது. எடுத்தவுடன் அதன் நாயகி செங்கு என்ற செங்காந்தள் கடல், மணல், சூரியன் அனைத்துடனும் பேசுகிறாள். ஓஷாவின் கருத்துக்கள் போல யுனிவர்சோடு ஒரு தீராத பந்தம் அவளுக்கு இருக்கிறது. இயற்கையின்பால் காதல், தீராத நேயம் இருக்கிறது. பெண்ணியத்தோடு சமூக நோக்கும் கலந்து படைக்கப்பட்ட நாவல் இது. இந்த நாவலை பற்றி நான் அதிகம் சொல்லக்கூடாது வாசகர்கள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நாவல் முழுவதும் மிக கட்டுக்கோப்பாக இருந்தது.
5 தோழிகளுடன் அவள் ஆடும் கடல் ஆட்டமும் அந்த வம்பாமணலைப் பாதுகாக்க அவளெடுக்கும் போராட்டமும் அவள் முடிவும் மிகச் சிறப்பாக வடிக்கப்பட்டு இருந்தது.
என்னதான் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் அவளுடைய போராட்டங்கள் ஒரு அளவுக்குள்ளே அடங்கி விட, யதார்த்தம் என்னும் இயலாமையில் சிக்கி அவள் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறாள்.
இதில் க்ளைமாக்ஸ் ஆண்டி கிளைமாக்ஸ் உண்டு. இதிலும் சினிமாட்டிக்காகக் கனவில் அந்தப் போராட்டம் நல்ல முறையில் தீர்வது போலக் கண்டாலும் முடிவு கிடைக்காமல் போகிறது என்று கூறுவதும் சிறிது அதிர்ச்சி அடைய வைத்தது. முழுக்க முழுக்கக் கடற்கரை கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வியலோடு ஒரு பெண்ணின் உள் உணர்வுகளும் உள்ளக் கிடக்கையும் இயற்கையின் மீதான, இந்த பிரபஞ்சத்தின் மீதான, சமூகத்தின் மீதான, சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் மீதான அவளது ஆதங்கம் என்னை மிகவும் கவர்ந்தது. ஆகையால் இந்த நாவலுக்கு முதலிடம்.
பொதுவாக அனைத்து நாயகிகளுக்கும் திருமணமோ, திருமண வாழ்வோ, திருமணத்தை நோக்கியே நகர்த்தும் குடும்பச் சூழலோ உகப்பானதாக இல்லை. எந்தத் தளைகளும் அற்றுக் கருத்து, பேச்சு, எழுத்து, தனித்து இயங்குதல் எல்லாவற்றிலும் அவர்கள் தன் விருப்பப்படிச் செயல்படவே விரும்புகிறார்கள் என்பதை இந்த நாவல்கள் இன்றையப் பெண்களின் மனசாட்சியாக உரத்து ஓங்கி ஒலிக்கின்றன.
நன்றி
அன்புடன்
தேனம்மைலெக்ஷ்மணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)