**சாதகப் பட்சி
சாகரப் பட்சி இந்த
விதண்டாவாதத்தை நிறுத்திக் கொள்வோம்.
நம் வருகையே
இங்கு
மழையானது
நாம் பட்சியானோம்.
**முட்களைத் தாண்டியும்
பூத்துக்கொண்டுதான் இருக்கிறது பூ.
வண்ணத்துப் பூச்சிக்குத்தான்
வழி தெரியவில்லை. :)
**முற்றுப்புள்ளி வைக்க எண்ணுகிறேன்.
அடுத்த வாக்கியத்தைத்
தொடரச் செய்கிறது அது. !
**நீரற்றபோதில்
மணலாவது அள்ளிப்போகிறேன்
என்றைக்காவது சுரக்கட்டும் நீர்
**கொட்டும் உன் வார்த்தை அருவியில்
குருவியாகிறேன்
குளியலாடுகிறது மனது.
**புயல் வருது
மழை வருதென்கிறார்கள்
வானம் வெளுத்துக் கிடக்க
நீதான் வந்திருக்கிறாய்.
**உன் இறகுகளுக்கு மேல்
ஒரு உலகம் இருக்கிறது வெளிச்சமாய்.
கண்கூச பாதுகாப்பாய்
ஒளிகிறேன் உன் இறகிருளுக்குள்.
**நீ பேசும்போது கேட்காத உன் குரல்
நீ கோபமாய் இறகடித்துப் புறப்படும்போது
இடியாய் இறங்குகிறது.
**தேரெழுத்து என்கிறாய்.
கருவறையிலிருந்து உலா புறப்பட
எத்தனை முஸ்தீபுகள்.
ஒரு நாளாவது
உலகம் பார்க்கட்டும் என்னை.
உடலை விழுத்தாட்டிப் பொங்கிப் பெருகி
இமைகளை மூழ்கடித்து
விடியற் பொழுதில் வடிகிறது.
பூக்களை போல மலர்கின்றன விழிகள் .
ஒரு நகரும் தாவரமாய்
உயிர்த்தெழுகிறது உடல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)