எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 4 நவம்பர், 2026

சங்கரரும் சாமுண்டேஸ்வரியும் பகவதியும்

சங்கரரும் சாமுண்டேஸ்வரியும் பகவதியும்


பக்தியில் தான் எத்தனை வகை? அம்பிகையைத் தன்னுடைய இடத்தில் கோவில் கொள்ள அழைத்துச் சென்றார் ஒரு  மகான்.  அதேபோல அம்பிகையின் மூலம் தன்னைப் பின் தொடர்ந்த பிசாசிடமிருந்து தப்பித்தான் இளைஞன் ஒருவன்.  சக்தியின் திருவிளையாடலான இவ்விரண்டு நிகழ்வுகளையும் பார்ப்போம். 

ஒரு முறை சங்கரர் தாய் சாமுண்டேஸ்வரி கோவில் கொண்டிருந்த கர்நாடகாவுக்குச் சென்றிருந்தார். அன்னையவளின் பராக்கிரமம் மிக்க தேஜசில் மயங்கிச் சாமுண்டேஸ்வரி தன்னுடன் கேரளத்துக்கு வந்து அருள் வழங்குமாறு வேண்டினார். சாமுண்டீஸ்வரியும் சங்கரின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து கேரளாவுக்கு வருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார்.


"சங்கரா  நான் நீ கேட்டுக்கொண்டபடி கேரளாவுக்கு வருகிறேன். நீ முன்னே செல். நான் உன்னைப் பின்தொடர்ந்து வருகிறேன். ஆனால் நீ திரும்பிப் பார்க்காமல் செல்ல வேண்டும். நான் உன் பின்னே வருகிறேனோ இல்லையோ என்ற ஐயம் உனக்கு ஏற்படக்கூடாது. அப்படி உனக்கு ஐயம் ஏற்பட்டு நீ என்னைத் திரும்பிப் பார்த்தாய் என்றால் நான் அங்கேயே சிலையாக நிலைபெற்று நின்றுவிடுவேன் " என்று எச்சரித்தார். 

சங்கரரும் மகிழ்வோடு ஒப்புக் கொண்டு முன்னே சென்றார். சங்கரர் முன்னே செல்லச் செல்ல அன்னை பின்னே நடந்து வரும்  சதங்கை ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது. இவ்வாறு காடு, மலை, மேடு எல்லாம் கடந்து ஆந்திர மாநிலம் கொல்லூர் அருகில் வரும் பொழுது அன்னை தன்னுடைய சதங்கையை கழட்டிக் கையில் வைத்துக் கொண்டார். ஆகையால் சங்கரருக்குச்  சதங்கையின் ஒலி கேட்கவில்லை.  எனவே சங்கரருக்கு ஐயம் ஏற்பட்டது, அன்னை நம்முடன் வருகிறாரா இல்லையா?  திரும்பிப் பார்க்கலாமா,  வேறு எங்கேயோ நின்று விட்டாரோ என்று ஐயம் ஏற்படத் திரும்பிப் பார்த்தார்.


அக்கணத்திலேயே பின்னேயே வந்து கொண்டிருந்த அன்னை அங்கேயே சிலையாகச் சமைந்து விட்டார். சங்கரருக்கோ அளவிட முடியாத வருத்தம். தான் அன்னையிடம் ஒப்புக்கொண்ட வாக்கை மீறியதற்காக மன்னிப்புக் கேட்டார். மனம் நொந்து மிகவும் வருந்தினார்.

அவருடைய வருத்தத்தைக் கண்ட அன்னை சங்கரரிடம்,"வருந்தாதே சங்கரா. நான் தினமும் சோட்டானிக்கரை பகவதிக்கு அதிகாலை வழிபாடு நடைபெறும் சமயத்தில் மூன்று மணி முதல் ஐந்து மணி வரை நானும் பகவதியோடு இணைந்து தரிசனம் தருவேன்" என்று கூறி மறைந்து விட்டார்.

அவ்வாறே அவர் தினமும் அதிகாலை தரிசனம் தருகிறார். இதன் காரணமாகக் கொல்லூர் முகாம்பிகை கோயிலில் காலை 5 மணிக்கு மேல் தான் நடை திறக்கப்படுகிறது. இப்படி அம்பிகையையே தன்னுடைய அன்பினால் அழைத்து வந்த ஆதிசங்கரரின் பக்தி வியப்புறச் செய்கிறது தானே.

இச்சோட்டானிக்கரை பகவதி ஆலயத்தில் இளைஞன் ஒருவனும் ஒரு பிசாசிடமிருந்து அம்பிகையால் இரட்சிக்கப்பட்டான். வேதம் படித்த இளைஞன் ஒருவன் அந்த வேதச் சுவடிகளை எல்லாம் தன் குருநாதரிடம் கொடுப்பதற்காகக் கொண்டு சென்றான். இதைக் கொடுத்தவுடன் கதக்களி ஆட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று அதைக் காணப் பெருவிருப்பம் கொண்டிருந்தான். 

இவன் செல்லும் வழியில் இவனைக் கண்டு ஒரு பிசாசு அவனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு பெண்ணாக உருமாறி அவனுக்கு அறிமுகம் ஆனது. ஆனால் இந்த உண்மையை அவன் அறிய மாட்டான். ஏட்டுச் சுவடிகள் அதிலும் வேதம் நிறைந்த ஏட்டுச் சுவடிகள் அவன் கரத்தில் இருந்ததால் அந்தப் பிசாசால் அவனைக் கொல்ல முடியவில்லை. அவன் அதை அழகான இளம்பெண் என்றுதான் நினைத்துக் கொண்டான். அந்தப் பெண்ணும் அவனுடன் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டே சென்றது.


அவ்விளைஞன் தன் குருநாதரின் இருப்பிடத்தை அடைந்து உள்ளே சென்றான். ஆனால் அந்தப் பெண் வெளியிலேயே நின்று விட்டாள். குருநாதரிடம் ஏட்டுச் சுவடிகளை ஒப்படைத்துவிட்டுக் கதக்களியைக் காணச் செல்வதற்காக வேகமாகக் கிளம்பினான். அவனுடைய அவசரத்தைக் கண்டு வியந்த அவர் அவனிடம்,"எப்போதும் என்னுடன் உரையாடி விட்டுத்தானே செல்வாய். இன்று ஏன் இவ்வளவு பரபரப்போடிருக்கிறாய்" என்று கேட்டார்.


இளைஞனும் தான் கதக்களியைக் காணச் செல்ல வேண்டும் என்றும், தனக்காக வெளியே ஒரு இளம்பெண் காத்துக் கொண்டிருக்கிறாள் என்றும் உண்மையைக் கூறினான்.  

அந்தப் பெண்ணை அங்கிருந்தே ஐயத்தோடு பார்த்த குருநாதர்," அவள் பெண்ணல்ல. உன்னைக் கொல்ல வந்த ஒரு மோகினிப் பிசாசு. பெண் உருவத்தில் வந்திருக்கிறாள். இதுவரை வேதச்சுவடிகள் உன் வசம் இருந்ததால் உன்னை அவளால் கொல்ல முடியவில்லை. இனி நீ வேதச்சுவடிகள் இல்லாமல் போனால் அவளிடமிருந்து தப்பிப்பது கடினம். உன்னைச் சோட்டானிக்கரை பகவதியை தவிர வேறு யாராலும் காப்பாற்ற இயலாது"என்று கூறினார். 

மிகவும் பயந்துபோன அவ்விளைஞன் குருநாதரிடம் தன்னைக் காப்பாற்றுமாறு இறைஞ்சினான். குருநாதர் அவனை ஆற்றுப்படுத்தித் தன்னிடம் இருந்த துண்டு ஒன்றைக் கொடுத்து," இதை உன் தோளில் போட்டுக் கொண்டு செல். இந்த துண்டு இருக்கும் வரை அப்பிசாசு உன்னைத் தொட முடியாது. ஆனால் உன்னைப் பின்தொடர்ந்து நடந்து வரும். சோட்டானிக்கரை பகவதி அம்மனின் அம்பலத்துக்குள் சென்ற பின்னே இந்தத் துண்டைத் தூக்கி எறிந்து விடு" என்றார்.


அவர் கூறியபடியே அவன் தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு செல்ல அவனைப் பின்தொடர்ந்து அந்தப் பெண்ணும் வந்தது. இளைஞன் அம்பலத்தின் உள்ளே நுழைந்ததும் நுழையாதுமாக ஒரு காலை உள்ளேயும் ஒரு காலை வெளியேயும் வைத்திருக்கும் நிலையில் அவசரப்பட்டு அந்தத் துண்டைத் தூக்கி வெளியே வீசி எறிந்தான். ஒரு கால் வெளியேயிருந்த காரணத்தால் அந்த பிசாசு அவனைப் பிடித்துக் கொண்டது. 

பயத்தில் அந்த இளைஞன் சோட்டானிக்கரை பகவதி அம்மனை நினைத்து," தாயே! பகவதி அம்மா! காப்பாத்து"  என்று வீறிட்டான். சேயின் அவலக்குரல் கேட்டவுடன் தாய் ஒருகணமும் பொறுப்பாளா?  அக்கணமே அங்கே எழுந்தருளி அந்த மோகினிப் பிசாசை அழித்தார். அவ்விளைஞன் அம்பிகையின் அருளால் இரட்சிக்கப்பட்டான். அந்த இளைஞனை இரட்சித்து அப்பிசாசை அழித்த இடம்தான் இப்போது அனைத்து மக்களையும் பேய் பிசாசுத் தொல்லைகளில் இருந்து காக்கும் இரட்சி மண்டபம் ஆகிவிட்டது.

இவ்வாறு கர்நாடகாவிலிருந்து பின் தொடர்ந்து வந்த அம்பிகை கொடுங்கலூரில் மூகாம்பிகையாகக் குடிகொள்ள, ஆதிசங்கரர் அவரைச் சோட்டானிக்கரை பகவதியோடு விடியல் பூஜையில் நாம் அனைவரும் தரிசிக்கக்கூடிய பாக்கியத்தைத் தந்தார்.

அதே சோட்டானிக்கரை பகவதி ஒரு இளைஞனைப் பின் தொடர்ந்த பெண் வடிவில் வந்த பிசாசை அழித்து அவனை இரட்சித்துக் காத்தாள். இரு வேறு நிகழ்வுகளிலும் அம்பிகையின் அருளாற்றலும், ஆதிசங்கரரின் பக்தியும் மற்றும் இளைஞனின் நம்பிக்கையும் புலப்படுகிறதுதானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)