மகா நடிகை/நடிகையர் திலகம் சாவித்ரி
அன்று ஊமைப் பெண்ணல்லோ, ஆயிரம் இரவுகள் வருவதுண்டு, அத்தான் என்னத்தான் அவர், தண்ணிலவு தேனிறைக்க, தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு, கண்களின் வார்த்தைகள் புரியாதோ, கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே, வாராயோ வெண்ணிலாவே, அத்தை மகனே போய்வரவா.. இவை அல்லாமல் எல்லாத் திருமண வீடுகளிலும் தவறாமல் ஒலிக்கும் பாடல் வாராய் என் தோழி வாராயோ..
மகாநடி/ நடிகையர் திலகம் என்பது 2018 ஆம் ஆண்டு சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்பட்டதாகும். இதில் துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஜெமினியாகவும் சாவித்திரியாகவும் நடித்துள்ளனர். ஒரு காலத்தில் கோடம்பாக்கத்தின் பெரும்பகுதிகள் இவருக்குச் சொந்தமாக இருந்தவை என்று கூறினால் ஆச்சரியமாய் இருக்கும் ஆனால் இவர் மறைந்த பொழுது 19 மாதம் கோமாவில் இருந்த இவருக்கு ரத்த அழுத்தமும் நீரிழிவும்தான் மிச்சம்.
ஆந்திரா குண்டூரில் சிலாவூர் என்ற இடத்தில் குருவையா ரெட்டி என்பவருக்கும் சுபத்திரம்மா என்பவருக்கும் டிசம்பர் 6, 1934 இல் மகளாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் சசிகலாவாணி. இவருக்குப் பெரியப்பா உறவு முறையான சவுத்ரி என்பவர் மூலம் சினிமாவில் நுழைந்தார். முதல் படமான தேவதாஸிலேயே தனது நடிப்புத்திறமையால் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார். .
ஒரு கட்டத்தில் இவருடைய பெரியப்பாவின் அதிகாரமும் அடக்கு முறையும் அதிகமாகவே தன்னுடன் அப்போது படத்தில் நடித்துவந்த ஜெமினி கணேசனின் இல்லத்தில் தஞ்சம் புகுந்தார். ஜெமினிக்கு ஏற்கனவே இரு மனைவியர் இருந்தும் இவர் அவரைக் காதலித்து மணந்து கொண்டார். இவர்களுக்கு விஜயசாமுண்டீஸ்வரி என்ற மகளும் சதீஷ்குமார் என்ற மகனும் உண்டு
கிட்டத்தட்ட 250 திரைப்படங்களுக்கு மேல் தமிழிலும் தெலுங்கிலும் நடித்திருக்கிறார். இவர் நடிகை மட்டுமல்ல, தயாரிப்பாளரும் இயக்குநரும் கூட. நடிகர் திலகம், மக்கள் திலகம், ஜெமினி ஆகியோரோடு பல்வேறு படங்களில் நடித்துள்ளார் மிஸ்ஸியம்மாவில் இவரும் ஜெமினியும் வித்தியாசமான சண்டைக்கோழி ஜோடிகள். ஊடலும் கூடலும் கோபமும் நிறைந்த, காணத் திகட்டாத பெண்ணழகாய் மிளிர்வார் மிஸ்ஸியம்மா,
கல்யாணம் பண்ணிப்பார், மாதர் குலம் மாணிக்கம், அமரதீபம், பெண்ணின் பெருமை, எங்க வீட்டு மகாலட்சுமி, கடன் வாங்கி கல்யாணம், பானை பிடித்தவள் பாக்கியசாலி, களத்தூர் கண்ணம்மா, பாதகாணிக்கை பார்த்தால் பசி தீரும் காத்திருந்த கண்கள் படித்தால் மட்டும் போதுமா கற்பகம் கர்ணன் வேட்டைக்காரன் திருவிளையாடல் கந்தன் கருணை பிராப்தம் ஆகியன இவர் நடித்த படங்களில் சில.
கண்ணங்கரிய பெரிய கண்கள். கிளி போன்ற கொவ்விதழ்கள். நீள முகம். கொஞ்சலில் சரோஜாதேவிக்கும், மதர்த்த தன்னம்பிக்கையில் பானுமதிக்கும் போட்டியாகத் திகழ்ந்தவர். பாந்தமாய்ப் பதுமையாய் இருந்த அவர் பின்நாட்களில் கன்னாபின்னாவென்று பெருத்துத்தான் போனார். கண்மூடும் வேளையிலே பாடலில் அவர் ஆடும் நடனத்தில் இது நன்கு தெரியும். இவருடைய படங்களில் எனக்குப் பிடித்தவை மகாதேவி, மாயா பஜார், மிஸ்ஸியம்மா, பாசமலர், பாவமன்னிப்பு, திருவிளையாடல், கடன் வாங்கிக் கல்யாணம், கப்பலோட்டிய தமிழன், கந்தன் கருணை, நவராத்திரி, கர்ணன், கைகொடுத்த தெய்வம்.
”மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” ”அத்தான் இந்த வார்த்தையைக் கேட்டால் கருணாகரன் செத்தான்” இந்த வசனங்கள் அப்போது பிரபலம். திருவிளையாடலில் ”நீலச்சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணு” என்று இவர் பேரழகியாய் நடந்து வருவதும் இவரைத் தேடிச் சிவனாராக சிவாஜி ஆணழகராய் நடந்து வருவதும் கொள்ளை கொள்ளும் காட்சிகள்.
”சிங்காரவேலனே தேவா” என்று கொஞ்சம் சலங்கையில் இடம் பெற்ற பாடல் இயல்பாகவே சாவித்திரியே பாடியது போன்றிருக்கும். சந்தனம் உரைத்தபடி அவர் சந்தனக் குரலில் பாட ஜெமினி நாதஸ்வரம் வாசிப்பார். ”உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த வந்த என்னை ஏமாற்றி விடாதே. பாடு சந்தா பாடு” என ஜெமினி கெஞ்ச அவர் பாடலைத் தொடருவார்.
பார்த்தால் பசி தீரும் படத்தில் கண்ணிழந்த பெண்ணாக அவர் நடிப்பு அபாரம். பசுமை நிறைந்த நினைவுகளே நாங்கள் எங்கள் கல்லூரி வாழ்க்கை முடியும்போது பாடிக் கசிந்து பிரிந்த பசுமைப் பாடல். எம் ஜியாரின் கரிஸ்மாவின் முன்னே சிலர்தான் எடுபடுவார்கள். அதிலும் இவர் “மெதுவா மெதுவாத் தொடலாமா” என்ற பாடலில் எம்ஜியாரையே மிஞ்சும் ராணியைப் போன்ற கம்பீரம்.
கதாநாயகர்களே இரட்டை வேடம் ஏற்று நடித்து வந்த நிலையில் முதன்முறையாக மூன்று வேடம் ஏற்று வணங்காமுடி என்ற படத்தில் நடித்தார். சரஸ்வதி சபதத்தில் சாவித்ரியான இவர் சரஸ்வதியாக நடித்தது சாலப் பொருத்தம். ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன் என்று சொல்லிவிட்டால் போதும், கதாபாத்திரமாகவே மாறிவிடும் சிவாஜியையே தூக்கிச் சாப்பிட்டுவிடும் பொம்பளை சிவாஜி எனப் புகழப்பட்டவர். அதனாலேயே நடிகையர் திலகம் ஆனவர்.
இவருடைய பல்வேறு பட்ட நடிப்புகள் நம் மனதைக் கொள்ளை கொள்ளும். காலங்களில் அவள் வசந்தம், பாடலில் மலர்களிலே அவள் மல்லிகை எனும்போது விதம் விதமான மலர்களின் பின்னணியில் சாவித்திரி தோன்றுவதும், கண்போல் வளர்ப்பதில் அன்னை அவள் கவிஞனாக்கினாள் என்னை என்று ஜெமினி உள்ளப்பூர்வமாக உணர்ந்து பாடுவதும் அழகு.
அண்ணன் தங்கை பாசத்தின் எடுத்துக்காட்டு பாசமலர். இப்படத்தைப் பார்த்து அக்காலத்தில் அழாத மனிதர்களே இருக்க முடியாது மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள் மலர்ந்து மலராத பாதி மலர் போல என்று எத்தனை இனிமையான பாடல்கள். இப்படத்தில் நடித்த பின்பு சிவாஜியும் சாவித்திரியும் ஜோடியாக நடிப்பதை, திரைப்படமே என்றாலும் ஆளுமைகளின் மாற்றத்தை, மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையாம். இதுவே பிராப்தம் படம் தோல்வியடையவும் காரணமாக இருக்கக்கூடும்.
மாயா பஜார் நான் சிறுவயதில் விரும்பிப் பார்த்த படம். வத்ஸலாவாக இருக்கும் சாவித்ரி, கடோத்கஜனாக மாறியதும் (எஸ்வி ரங்காராவ்) நிஜமாகவே இவர் உடம்பில் ஒரு அரக்கன் புகுந்தது போல நடை உடை பார்வை பாவனைகளில் அதகளப்படுத்தி விடுவார். விழிகளை விரித்து மாப்பிள்ளையின் கைகளை முறிப்பது போல் பிடித்துக் கொடுமைப்படுத்துவதை விட கல்யாண சமையல் சாதம் என்று அந்தக் கடோத்கஜன் அண்டா, அண்டாவாகப் பட்சணங்களை விழுங்குவது அந்த வயதில் சந்தோஷ வியப்பு ஏற்படுத்தியது உண்மை.
கலைமாமணி விருது பெற்றவர். இவரது நினைவாக 2011 இல் தபால்தலை ஒன்றும் இந்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது சிறப்பு. தன்னம்பிக்கை என்றால் சாவித்ரி எனச் சொல்லலாம். தமிழ் கற்றுக் கொண்டு கதைகளைக் கதாநாயகர்கள்போல் தேர்ந்தெடுத்து நடித்தவர். அவருடைய படங்களில் மற்றும் நடிப்பில் எதைச் சொல்ல எதை விட..? உச்சக்கட்டத் தன்னம்பிக்கையே சந்திரபாபு போல் இவரது சரிவுக்கும் காரணமாக அமைந்தது. ஆனால் தானதர்மத்திலும் இவர் விஞ்சியே இருந்திருக்கிறார்.
மனம் போல் மாங்கல்யம் பெற்ற இவர் பதிபக்தி கொண்டிருந்தாலும் தன்னுடைய சொந்தப் படமான பிராப்தத்தில் சிவாஜியை நடிக்க வைத்ததால் கணவரான ஜெமினியின் அதிருப்திக்கு ஆளானார். தன்னுடைய சொத்துக்களை எல்லாம் பணயம் வைத்து இந்தப் படத்தை எடுத்தும் இவரால் அதில் ஏற்பட்ட கடனிலிருந்து மீள முடியவில்லை. இவர் நம்பிக் கொடுத்து வைத்த சிலரும் இவருடைய சொத்துக்களைத் தாங்களே கையகப்படுத்திக் கொண்டனர்.
டி நகர் ஹபிபுல்லா சாலையில் ஒரு பெரிய பங்களாவைக் கட்டி வசித்து வந்த அவர் படம் தயாரித்த காரணத்தால் அதை விட்டு வெளியேற வேண்டி வந்தது. எவ்வளவு இருந்தும் ஜெமினி கணேசன் முதன்முதலாகத் தனக்கு அணிவித்த தங்கமெட்டியை கழட்டாமலே இருந்தது அவர் தனது திருமண உறவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் என்பதை புரிய வைக்கிறது.
தமிழ் சினிமாவில் மிக அதிகச் சம்பளம் வாங்கிய நடிகை என்றும் 1950 களில் தெலுங்கு சினிமாவின் ராணி என்றும் புகழப்பட்டவ இவர் மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். நட்சத்திரங்களுக்கு நடுவில் நிலா என்ற விருதையும் பெற்றவர் பெண்ணோடு தோன்றிப் பெண்ணோடு வாழ்ந்தும் பெண்மனது என்னவென்று புரியவில்லையே.. என்ற கண்ணதாசனின் வரிகளும் சிவாஜியின் குரலும் சொல்வது ஒன்றுதான். நடிப்பு ஃபீனிக்ஸான சாவித்திரி சாமான்யர்களால் புரிந்து கொள்ளப்பட முடியாத ஆயிரத்தில் ஒருத்திதான் என்பது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)