எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 28 நவம்பர், 2026

பரந்தாமனும் அனந்தனும்/ குழந்தையும் தெய்வமும்

பரந்தாமனும் அனந்தனும்/ குழந்தையும் தெய்வமும்


பரம்பொருளே குழந்தையாக மாறிச் செய்த லீலைகளை நாம் பல்வேறு புராணங்களில் அறிவோம். நாமறிந்த புராணங்களில் இடம்பெறாத, ஆனால் இரு புண்ணிய ஸ்தலங்களில் நடைபெற்ற, பகவான் கண்ணன் குழந்தை ரூபத்தில் செய்த லீலைகளைப் பார்ப்போம்.

கேரளத்தில் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்று குருவாயூர். இங்குள்ள அம்பலத்தில் இருக்கும் இறைவன் திருஉருவத்தைக் குரு பகவானும் வாயு பகவானும் இணைந்து பிரதிஷ்டை செய்தார்களாம்.

கையில் புல்லாங்குழலுடன் தலையில் மயில் பீலி அசையப் பரந்தாமன் குட்டி கிருஷ்ணனாகக் காட்சி தருகிறார். இங்கு எடைக்கு எடை பிரார்த்தனைக் காணிக்கையாகத் துலாபாரம் தருவது சிறப்பு.

இக்கோயிலில் ஒருமுறை குருவாயூரப்பனுக்குப் படையலாக மேல்சாந்தி இரண்டு வாழைப்பழங்களைப் படைத்திருந்தார். எளிய சிறுவன் ஒருவன் பசி பொறுக்க முடியாத நிலையில் அதிலிருந்து ஒரு பழத்தை எடுத்துத் தின்று விட்டான்.

இதனை மேல்சாந்தியும் கண்ணுற்று விட்டார். வந்ததே கோபம் அவருக்கு. இறைவனுக்கு உள்ள படையலைக் குழந்தை என்றாலும் எவனோ ஒரு சிறுவன் சாப்பிட்டு விடுவதா என்று கோபித்த அவர் அதற்குத் தண்டனையாக அந்தக் கோயிலை 108 முறை சுற்றி வரும் படிப் பணித்தார்.


சிறுவனும் சுற்ற ஆரம்பித்தான். அதிகாலையில் ஆரம்பித்த ஓட்டம். மதியம் நெருங்கிக் கொண்டிருந்தது. வெய்யில் கொளுத்தியது.  மேல்சாந்தி சிறுவன் சுற்றுவதைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தார். சிறுவன் தளர்ந்து மயங்கி ஓடுவது போலத் தோன்றியது.

அப்போது திடீரென்று மயில்  பீலி அசையப் புல்லாங்குழல் தாங்கிய குழந்தை ஒன்று மீதிச் சுற்றைச் சுற்றுவதைக் கண்டார். குழப்பமான மேல்சாந்தி கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு பார்த்தார்.

'இது என்ன கிருஷ்ணன் அல்லவா ஓடுகிறான்?'  பதறிப் போன மேல்சாந்தி ஓடிய சிறுவனின் கையைப் பிடித்து, "நான் காண்பது உண்மைதானா?  என்ன  திருவிளையாடல் கிருஷ்ணா இது? அச்சிறுவன் வாழைப்பழத்தைத் திருடித் தின்றான். அதற்காக ஓடுகிறான். நீ எதற்காக இக்கொளுத்தும் வெய்யிலில் ஓடுகின்றாய்" எனக் கேட்டு வருந்தினார்.

மூச்சிரைத்த கிருஷ்ணன் சொன்னான், "இரண்டு பழங்களில் ஒன்றை அச்சிறுவன் சாப்பிட்டான். எஞ்சிய ஒரு பழத்தை நான்தானே சாப்பிட்டேன். எனவே நானும் தண்டனைக்கு உரியவன்தான். எனவே அவனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையில் பாதியை நான் அனுபவிப்பதுதானே முறை. ஆகையால்தான் நான் மீதிச் சுற்றைச் சுற்றுகிறேன்" என்று கூறிச் சிரித்தான்.


கிருஷ்ணன் கூறியதைக் கேட்டுக் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று உணர்ந்தார் மேல்சாந்தி. கிருஷ்ணனை வணங்கிய அவர் அச்சிறுவனை மன்னித்து அனுப்பினார்.

இதனாலேயே இக்கோயிலில் கைக்குழந்தைகளுக்கு முதன் முதலில் சோறு ஊட்டும் நிகழ்ச்சி 'சோறூட்டு' என்னும் சடங்காகக் கிருஷ்ணன் முன்னிலையில் நிகழ்த்தப்படுகின்றது.

அடுத்ததாகத் திரு அனந்தன் காடு பற்றி பார்ப்போம். வில்வமங்கல சுவாமிகள் மிகச்சிறந்த கண்ணன் பக்தர். அவருடைய பக்திப்பெருக்கைக் கண்டு மகிழ்ந்து குழந்தைக் கண்ணன் அவருடைய இல்லத்திலேயே நிரந்தரமாகத் தங்கி இருந்தான்.

வில்வமங்கல சாமிக்குப் பூஜையின் போது எல்லா உதவிகளையும் செய்து வந்தான் குட்டிக் கண்ணன். சுவாமிகள் கண்ணை மூடிக்கொண்டு பூஜை செய்யும் பொழுது, யாரும் காணாத பொழுதில் நெய்வேத்தியப் பொருட்களை உண்பதை வழக்கமாக வைத்திருந்தான். இதனை அறியாத சுவாமிகள் தம்முடைய பூசையில் ஏதோ குறை இருப்பதாக நினைத்து வருந்தினார்.

இவ்வாறு நாட்கள் பல கடந்தன. ஒரு நாள் சுவாமிகள் வழக்கப்படிப் பூஜை செய்து கொண்டிருந்தார். கண்ணனும் அவர் கண்மூடி இருக்கும்போது வழக்கம்போல நெய்வேத்தியப் பொருட்களை உண்ணத் தொடங்கினான். ஆனால் அன்றைய தினம் கண்ணன் அந்த நெய்வேத்தியப் பொருட்களை எடுக்கும்போது சுவாமிகள் எதிர்பாராத விதமாகத் தன்னுடைய புறங்கையால் கண்ணனின் கையைத் தள்ளினார்.  உடனே கண்ணன் மறைந்தான்.


கண்களைத் திறந்து பார்த்த சுவாமிகள் கண்ணனைக் காணாமல் மனம் உருகிக் கரைந்து அழுது புலம்பினார். கத்திக் கண்ணீர் சிந்திக் கொண்டே இருந்தார். அவருடைய பரிதவிப்பைக் கண்ட கண்ணன் அங்கு அவர்முன் தோன்றி "பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் நீ என்னை அனந்தன் காட்டில் காண்பாய்" என்று கூறி மறைந்தான்.

'அனந்தன் காடா?  அது எங்கே இருக்கிறது? ' என்று வில்வமங்கலம் சாமிகள் 12 ஆண்டுகள் ஒவ்வொரு இடமாக அலைந்து தேடித் திரிந்தார். அது இருக்கும் இடம் அறியாது வருந்தினார்.

அப்படித் தேடியபடியே ஒரு தரம் ஒரு சாலையில் நடந்து செல்லும் பொழுது ஒரு பெண் தன் குழந்தையிடம் "நீ இப்படி அடம்பிடித்தால் அனந்தன் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவேன்" என்று மிரட்டிக் கொண்டிருந்தாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த சுவாமிகள் அந்தப் பெண்ணிடம் சென்று," அம்மா!  அனந்தன் காடா? அது எங்கே இருக்கிறது" என்று கேட்டு அந்தப் பெண்ணின் மூலமாக அறிந்து அக்காடு இருக்கும் இடத்திற்கு வந்தார். பசுங்கொடிகள் சூழ்ந்த அழகான விருட்சங்கள் நிரம்பிய ஆரண்யம் அது. புள்ளினங்கள் பாடித்திரிந்து கொண்டிருந்தன.


"கண்ணா நீ கூறிய அனந்தன் காட்டிற்கு வந்து விட்டேன். எங்கே இருக்கிறாயப்பா நீ? என் மேல் கருணை இல்லையா? கருணாமூர்த்தியான நீ மனமிரங்கி எனக்குக் காட்சியளியப்பா" என்று கண்ணனின் திருநாமங்களைச் சொல்லி உருகி வணங்கினார்.

அவருடைய 12 ஆண்டுகால அலைச்சலையும் அவருடைய பக்தியையும் பார்த்த கண்ணன் அங்கே தோன்றி சுவாமிகளை நெகிழ்வித்து மகிழ்வித்தார். சுவாமிகள் கண்ணனைக் கண்டு புண்ணியம் பெற்று மனம் நிறைந்தார்.

நெய்வேத்தியப் பொருளை எடுக்கும் பொழுது குழந்தையாகிய கண்ணனைத் தடுக்காமல் இருந்திருந்தால் அவன் தன்னுடனே இருந்திருப்பானே என்று நினைத்துக் கொண்டார். அவரும் உணர்ந்து கொண்டார், குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானென்று.

எனவே குழந்தையின் தெய்வமும் ஒன்று என்று கூறுவது உண்மைதான் என்று இந்த இரு நிகழ்ச்சிகள் மூலம் கண்ணன் பக்தர்களாகிய நமக்கும் தெரிவிக்கிறார்தானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)