சம்சாரம் அது மின்சாரம் மனோரமா
நடிப்புக்காகத் தன்னையே நேர்ந்து கொண்டவர் மனோரமா. அண்ணா, எம்ஜியார், என் டி ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமைக்குரியவர். பள்ளத்தூரில் வசித்த காரணத்தால் ஆச்சி எனப் பிரியமாக அனைவராலும் அழைக்கப்பட்டவர். நாயகி, துணை நாயகி, நகைச்சுவை நாயகி எனக் கிட்டத்தட்ட 1500 படங்களிலும் 5000 க்கு மேற்பட்ட நாடகங்களிலும் நடித்த சாதனை நாயகி.
1937 மே 26 இல் பிறந்த இவர் 2015 அக்டோபரில் தனது 78 ஆவது வயதில் மறைந்தார். இவருடைய பெயர் கோபிசாந்தா. இவரது கணவர் எம். எஸ். இராமநாதன். மகன் பூபதி. மருமகள் மற்றும் தனது மூன்று பேரக்குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். தனது பன்னிரெண்டாவது வயதிலிருந்து நாடகங்களில் மனோரமா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். முதலில் எஸ் எஸ் ஆருடன் நடித்திருக்கிறார். ஏன் எம் ஜி யாருடனே ஜோடியாகத் தன் முதல் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அது வெளிவரவில்லை.
1947 இல் சுகோராமி என்ற சிங்கள மொழித் திரைப்படத்திலும் நடித்துள்ளார். 1958 இல் பின்பு கண்ணதாசன் அவர்கள் இயக்கிய மாலையிட்ட மங்கையில் நகைச்சுவை நாயகியாக அறிமுகமானார். 1963 இல் கொஞ்சும் குமரியிலும் கதாநாயகி. நாயகியாக இருந்து நகைச்சுவை நாயகி வேடம் பெற்றது குறித்து அவர் சிறிது யோசித்தாலும் அதன் பின் பலநூறு படங்களில் நகைசுவை நாயகியாகக் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் வெளுத்து வாங்கியவர் அவர்.
கிராமத்துக்காரரைப் போன்ற திராவிட முகம். மகாலெக்ஷ்மியைப் போன்று பெரிய பொட்டு வைத்து பெரிய தோடுகளும், மூக்குத்தியும், பன்கொண்டையும் அதைச்சுற்றி மல்லிகைப் பூச்சரமும் அணிந்து அவர் தன் மல்லிகைப்பற்கள் தெரியச் சிரித்தாரென்றால் மங்களகரமாக இருப்பதோடு பார்க்கும் நம் மனமும் ஜில்லென்று ஆகிவிடும்.
இவர் சந்திரபாபு, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், சோ, நாகேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோருடன் நடித்த காட்சிகளும் வசனங்களும் சிறப்பாக இருக்கும். அவருடைய இயல்பான வெட்கம் அவரது எளிமைக்கு அழகூட்டும். பிறவி நடிகை அவர். எந்த உடையும் பொருந்தும் அவருக்கு. ஃபிட்டான மார்டன் உடைகளானாலும் சரி, புடவையானாலும் சரி. பாந்தமாகவே இருக்கும். கதாபாத்திரமாகவே வாழ்ந்து விடுவதில் அவர் பொம்பளை சிவாஜி.
எனக்கு மிகப் பிடித்த காட்சி அன்பே வா படத்தில் முதலாளி எம்ஜியாருக்கே ரூமை வாடகைக்கு விடும் நாகேஷ் வெளியே சென்றிருக்கும்போது இவர் உள்ளே வருவார். விபரம் அறிந்து முதலாளியைப் பார்த்து இவர் பயந்து நடுங்கியும் நளினத்தோடும் உரையாடும் காட்சிகள் ஏ க்ளாஸ்.
தில்லானா மோகனாம்பாளில் ஜில்லுவாக நாதஸ்வரம் வாசித்து சிவாஜியை அலற விடுவதிலாகட்டும், மோகனாங்கியே ஷண்முகசுந்தரத்துக்குப் பொருத்தமான ஜோடி என்று புளகாங்கிதம் அடைவதிலாகட்டும், பிரமதமான நடிகை.
குஷ்பூவின் அத்தையாக சத்தியராஜுடன் ஜோடியாக நடிக்கும் நடிகன் படத்தின் வெட்கக் காட்சிகள், கமலின் அண்ணியாக உன்னால் முடியும் தம்பி, மாமியாராக மைக்கேல் மதனகாமராஜன், ஏர் ஹோஸ்டஸாக வாழ்வே மாயம், கமலின் அம்மாவாக அபூர்வ சகோதரர்கள், இவை எல்லாம் பிடிக்கும். ஸ்நேகிதி படத்தில் ஜோதிகாவின் அதிரடித் தாயாக வந்து கல்லூரி ஹாஸ்டலில் தன் மகள் வாசுவுக்கு வக்காலத்து வாங்கி ஆசிரியர்களையும் அரசியல்வாதிகளையும் தன் வசனங்களால் ஒருசேரக் கிழித்தெடுத்து விடுவார்.
ராஜா கைய வச்சா பாடலில் மகன் கமலை செல்லமாக அதட்டுவது, மைக்கேல் மதனகாமராஜனில் ரூபிணியிடம் " கண்ணு இது வாழ்க்கைம்மா, இதுல நடிச்சிடாதே" என்று அறிவுரைப்பதிலாகட்டும், வாய்க்கு வெளியே துருத்தும் தெத்துப் பற்களுடன் சிரித்துப் பயமூட்டி சின்னக்கவுண்டரின் தாயாய் சுகன்யாவின் இடுப்பை ஒடித்துவிடுவேன் என மிரட்டுவதிலாகட்டும் எல்லாமே பர்ஃபெக்ட்!
இவருடைய இல்வாழ்க்கை சோபிக்காமல் போனதாலோ என்னவோ இவர் சம்சாரம் அது மின்சாரம் என்ற படத்தில் திருமண பந்தத்திலிருந்து பிரிந்து வாழும் திலீப்பையும் இளவரசியையும் சேர்த்து வைக்கும் கண்ணம்மா என்ற வேலைக்காரியாக நடித்திருப்பார். இவரது முத்திரைப் படங்களில் இதுவும் ஒன்று. ”கண்ணம்மா” என்று இவர் ஓவராக எகிறும் போதெல்லாம் கமலா காமேஷ் அழைக்க, ”கம்னு கெட” என்று கூவுவதோடு இளவரசியைத் தொடர் வசனங்களால் அசர வைத்து விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்தை வாங்கி விடுவார். சேர்த்து வைக்க வரும் மாமனாரான கிஷ்மூ வசனத்தை மறந்துவிட அவரிடம் இந்தப் பத்திரத்தைக் கொடுத்து “எங்க பொண்ணு இறங்கி வராது. உங்க பையன்தான் இறங்கி வரணும். கம்முன்னா கம்மு. கம்முன்னாட்டி கோ” எனத் தடாலடியாக அடித்து விடுவார். பொது மக்களிடம் செம அப்ளாஸ் வாங்கிய காட்சி அது. பின்பு இளவரசியும் திலீப்பும் இணைந்து விடுவார்கள். விசுவின் வசனங்களாலும் எனக்கு மிகப் பிடித்த படம் அது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 2013 இல் நடித்த படம் தாயே நீ கண்ணுறங்கு. தன் வாழ்நாள் பூராவும் தான் விரும்பிய நபர் தன் தாய்தானெனவும் அடுத்த பிறவியிலும் அவர் மகளாகவே பிறக்க வேண்டும் எனவும் அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
நடிப்பில் மட்டுமல்ல. பாடல்கள் பாடுவதிலும் இவர் புலி. கிட்டத்தட்ட 300 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறாராம். சோ வுடன் பாடிய வா வாத்யாரே வூட்டாண்டே ..ஜாம்பஜார் ஜக்கு என்ற பாடல் ஒவ்வொரு சென்னை நோஞ்சான் ரவுடியையும் அவரது அதிரடி மனைவியையும் நம் கண்முன் காமெடியாகக் கொண்டுவரும். மெட்ராசைச் சுத்திப் பார்க்கப் போறேன், டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே, தெரியாதோ நோக்கு தெரியாதோ ஆகியன நான் கேட்டு ரசித்த இவர் பாடல்களில் சில.
1000 படங்களுக்கு மேல் நடித்ததற்காகக் கின்னஸ் விருது, பத்மஸ்ரீ விருது, சிறந்த துணை நடிகைக்கான தேசியத் திரைப்பட விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, புதிய தலைமுறையின் வாழ்நாள் சாதனையாளர் விருது, சக்தி விருதுகள் பெற்று விருதுகளைப் பெருமைப்படுத்தியவர். ஜெயலலிதாவை இவர் அம்மு என்று அழைக்க அவர் இவரை மூத்த சகோதரி என்றும் சிவாஜி நடிகர் திலகம் என்றால் மனோரமா நடிகையர் திலகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உனக்கும் வாழ்வு வரும் படத்தில் மஞ்சக்கயிறு தாலி மஞ்சக் கயிறு பாடலில் ராமாயணம் படைச்ச மஞ்சக் கயிறு, அடகு வைக்க முடியாத சொந்தக் கயிறு, அரிச்சந்திரன் சந்திரமதியை அம்போன்னு விட்ட போது அடையாளம் காட்டியது எந்தக் கயிறு என்றெல்லாம் அவர் பாடும் போது அவர் சொந்த வாழ்வின் சோகம் நினைவில் வந்து நம் கண்ணில் நீர் கோர்க்கும். எல்லாவற்றையும் யதார்த்தமாகவே கடந்தவர் மட்டுமல்ல. தான் நடிகை என்று எந்த பந்தாவுமில்லாமல் எதார்த்தமாகவே வாழ்ந்து சென்ற ஆச்சி மனோரமாவுக்கு நம் ஆத்மார்த்த வணக்கங்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)