கவலை இல்லாத மனிதன் சந்திரபாபு
”பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே.. தங்கச்சிலை போல் வந்து மனதைத் தவிக்க விட்டாளே.. குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே தங்கமே உன்னைக் கண்டதும் நெஞ்சம் பொங்குது தன்னாலே.. கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே.. தனியா தவிக்கிற வயசு.. இந்தத் தவிப்பும் எனக்குப் புதுசு..தடுக்காதே என்னைத் தடுக்காதே.”. என்றெல்லாம் கூடக் காதலில் உருகிப் பாடியவர் சந்திரபாபு என்று பார்க்கும்போது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆனால் பொருத்தமாகவும் இருந்தது.
ஏனெனில் சந்திரபாபுவின் சோகப் பாடல்கள், தத்துவப் பாடல்கள்தான் அநேகம் ஹிட் ஆகி இருக்கின்றன. குமார ராஜாவில் “ பிறக்கும் போதும் அழுகின்றாய், இறக்கும் போதும் அழுகின்றாய்.. ” என மந்தை மனிதர்களை எள்ளியவர். ஏவி எம்மின் சகோதரி என்ற படம் ஹிட்டாகக் காரணமே ”நான் ஒரு முட்டாளுங்க.. ரொம்ப நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க” என்ற பாடல்தானாம்!
சந்திரபாபுவின் தந்தை ஜெ.பி.ரோட்ரிக்ஸ் விடுதலைப் போராட்ட வீரர். சத்யாக்கிரக இயக்கத்தில் கலந்து கொண்டதற்காக இவரைக் குடும்பத்தோடு 1929 இல் இலங்கைக்கு நாடு கடத்தியது ஆங்கிலேய அரசு. அதனால் 1927 இல் இந்தியாவில் பிறந்தாலும் இலங்கையில் வளர்ந்த சந்திரபாபு தனது பதினைந்தாவது வயதில்தான் சென்னை திரும்பமுடிந்தது. இளமைப் பருவத்தை இலங்கையில் கழித்ததாலோ என்னவோ இவரது பாடல்களில் இலங்கையின் பொப்பிசை பாணி இருக்கும். ஆங்கிலேயர்களின் நவநாகரிகப் போக்கினால் கவரப்பட்டதால் இவரது நடனங்களில் ராக் அண்ட் ரோல், பாலே நடனப் பாணியும் அதிகம் இடம் பெற்றிருக்கும்.
இவர் ஒரு சிறந்த பாடகர் மற்றம் நடனக் கலைஞர். 1927 இல் பிறந்து 1974 இல் மறைந்தார். நாற்பத்தி ஏழு ஆண்டுகளே வாழ்ந்திருந்தாலும் நடிப்பில் தன் முத்திரையைப் பதித்துச் சென்ற நடிகர்களில் முக்கியமானவர். பதினாறு வயதிலிருந்தே திரை உலகில் போராடி இருபதாவது வயதில் தன அமராவதி மூலம் தனக்கென ஒரு இடம் பிடித்தார். ஒரு படத்தில் எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி என யார் ஹீரோவாக இருந்தாலும் அதன் நகைச்சுவை நாயகர் சந்திரபாபுதான். இவருடைய நடிப்புக்கெனவும் சேஷ்டையான நடனபாணிக்கெனவும் ஆங்கிலம் தமிழ் கலந்த பாடல்களுக்கெனவும் ப்ரத்யேக ரசிகர் கூட்டமே உண்டு. 1950 களிலேயே ஒரு லட்சம் சம்பளம் வாங்கியவர் என்ற புகழையும் பெற்றிருந்தார்.
இவரின் கால்ஷீட் பெற்றபின்புதான் கதாநாயகன் போன்ற முக்கிய நட்சத்திரங்களையே புக் செய்வார்களாம். ராஜா ராணி கதையிலும் விதூஷகன் அல்லது சூத்திரதாரி போன்ற வேஷங்கள். காதில் குண்டலங்களோடு உடலை நெளித்து அவர் ஆடும் வித்யாசமான நடனங்கள் பேசப்பட்டவை.
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது.. சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பார்த்துச் சிரிப்பு வருது.. இதில் பஸ், கார், ட்ரெயின், ட்ராக்டர் என அனைத்திலும் ஏறி ஆடிப் பாடுவார். வாயாலேயே ஹம்மிங் போன்ற மியூசிக் அநேக பாடல்களில் இடம்பெறும். இவர் ஹம்மிங் கொடுத்தாலே அந்தப் பாடல் ஹிட்டாகி விடுமாம். அவ்வளவு ஸ்பெஷல் இவரது சிறிது கனத்த கரகரக் குரல்.
உரையாடல் பாணியில் அமைந்த “கொஞ்சம் சிந்திக்கணும் தனியா நின்னுக்கணும் சொல்லாம தெரிஞ்சிக்கணும் தொடாம பேசிக்கணும்” என்ற பாடல் அதன் ஆங்கிலேய பாணி நடன அசைவுகளுக்காகவே பார்க்கப்பட வேண்டிய ஒன்று. ஹாஃப் கோட் சந்திரபாபுவுக்கென்றே படைக்கப்பட்ட ஒரு உடை போல் இப்பாடலில் தோன்றும்.
ஹாஃப் கோட் மட்டுமல்ல. நிறையப் பாடல்களில் கிழிந்த உடையுடன் தோன்றியவர். இவர் தயாரித்த தட்டுங்கள் திறக்கப்படும் படத்திலேயே, “கண்மணி பாப்பா..கோழி பிறந்தது முட்டையில்தான் என்று சொல்லடி பாப்பா” எனக் கண்ணதாசனின் வார்த்தைகளில் தத்துவங்களை வாரி வீசியவர். இவரது பல பாடல்களுக்கு இவரே இசையும் அமைத்துள்ளார்.
சில படங்களில் ஹிட்லர் மீசை. இப்படங்களில் எம் ஆர் ராதா போன்று தத்துவ விசாரணைகள், நையாண்டிகள், கேலிகள் இடம்பெறும். சில படங்களில் சார்லி சாப்ளின் போன்ற தோற்றம், ஆட்டம், சோகம் சுமந்த நகைச்சுவை பாணி. சபாஷ் மீனாவில் ரிக்ஷா ஓட்டுனராகச் சென்னை பாஷையைத் திரைக்குக் கொண்டுவந்ததில் இவர் பங்கு அதிகம்.
”பொறந்தாலும் ஆம்பிள்ளையாப் பொறக்கக் கூடாது” என்ற பாடலில் குத்தாட்ட ஸ்பெஷலிஸ்ட் போல் மனோரமாவுடன் ஆடி இருப்பார். புதையலில் “ஹலோ மை டியர் ராமி எங்கம்மா உனக்கு மாமி” என கிறிஸ்துவ மணப்பெண் வேடத்திலும் ஆடி அசத்தி இருப்பார்!
வீணை எஸ் பாலசந்தருக்காக இவர் பாடிய பாடல் “உல்லாசமாகவே உலகத்தில் வாழவே மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும் கல்யாணம்” என்று பாடிய இவரின் மணவாழ்வுதான் சோபிக்காமல் போய்விட்டது. தந்தானே தானே தந்தானே சரியான ஜோடி தந்தானே.., ஜாலி லைஃப் ஜாலி லைஃப் என்று இவர் மகிழ்வுடன் மணந்து கொண்ட ஷீலா தனக்குத் திருமணத்துக்கு முன் ஒரு காதல் இருந்தது என்று கூறவும் அவரது காதலரை அழைத்துத் தன் மனைவியை அவருடன் சேர்த்து வைத்த பேருள்ளம் சந்திரபாபுவுடையது.
அப்போதைய எளிய மக்களுக்கு மட்டுமல்ல. எல்லா மக்களுக்கும் பிடித்தமானவராய் இருந்தார் சந்திரபாபு. திடீரெனக் குதிப்பது, பல்டி அடிப்பது, வாய்க்குள் இருந்து கோழிக்குஞ்சை எடுப்பது, முகத்தருகே பெருச்சாளியைப் பார்த்து அலறுவது என அதகளப்படுத்தியவர். இவரது சுருட்டை முடியும் முக சேஷ்டைகளும் மேனரிசமும் சுருளிராஜன் நடிப்பிலும் பிரதிபலித்தது உண்டு. ஆனால் இவரது மூக்கு முகப் பரப்பில் பெரியதும் அகலமானதுமாக இருக்கும். அவளுக்கென்ன பாடலில் நாகேஷ் ஆடும் நடனங்களுக்கெல்லாம் இவரது ராக் அண்ட் ரோல் நடனம்தான் முன்னோடி.
கவலை இல்லாத மனிதன் என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தாலும் ஒண்ணுமே புரியல உலகத்துல என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.. என்று அவர் பாடியது போல் அவரது வாழ்வைச் சுற்றிக் கவலை மேகங்கள் எப்போதும் சூழ்ந்தே இருந்தன. யாருக்காகப் படம் ஓடுகின்றது என்ற சர்ச்சையில் சக நடிகர்களுடன் சில கசப்புக்களும் சச்சரவுகளும் இருந்தன. 1960 க்குப் பின் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவின.
கவலை இல்லாத மனிதன், குமார ராஜா போக இவர் கதாநாயகனாக நடித்த மூன்றாவது படம் தட்டுங்கள் திறக்கப்படும். இதை இவரே இயக்கித் தயாரிக்கவும் செய்தார். இதுவும் வெற்றி பெறவில்லை. அன்னை, பாத காணிக்கை, நாடோடி மன்னன், புதுமைப் பித்தன், மரகதம், மணமகன் தேவை, போலீஸ்காரன் மகள், அடிமைப் பெண், ராஜா, கண்ணன் என் காதலன் ஆகியன இவர் நடித்த சில படங்கள். 1974 இல் பிள்ளைச் செல்வம் இவர் நடித்த கடைசிப் படம்.
அசல் திறமையும் அசாத்தியத் தன்னம்பிக்கையும் இவரது மாபெரும் பலம். பலவீனம் குடிக்கும் போதைக்கும் அடிமையானது. அருமையான பாடல்களைப் பாடியும் ஆடியும் உள்ள அன்பான நடிகர் சந்திரபாபு அவர் வாழ்வின் மூலம் நமக்குத் தெரிவிப்பதெல்லாம் “புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை..” என்பதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)