ப்ரிய தோழி தேனம்மைக்கு
வணக்கம்.
உங்கள் பொறுமையை ரொம்பவும் சோதித்துவிட்டதற்கு முதலில் ஒரு சாரி.
உங்கள் சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்துவிட்டேன்.
கேட்காதவள், கறிக்குழம்பு, சூலாட்டுக் குட்டி, நான் சிவகாமி எல்லாம் மிக அற்புதமான கதைகள். ஒரு தொகுப்பில் எல்லா கதைகளும் பிரமாதமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான்கைந்து மனதை ஈர்த்தாலே போதும், அது நல்ல தொகுப்புதான் என்பார் தமுஎகச தலைவர் தோழர். ச.தமிழ்ச்செல்வன். அந்த வகையில் இந்தத் தொகுப்பு அருமைதான்.
உங்களிடம் ஏராளமான கதைகள் உள்ளன. ஏராளமான தகவல்கள் உள்ளன. குறிப்பாக நகரத்தார் சமூகம் பற்றிய நுட்பமான தகவல்கள் உள்ளன.
அதே சமயம் உங்களிடம் ஒரு நல்ல மொழி உ்ள்ளது. சக மனிதர்கள் மேல் ஒரு அன்பு உள்ளது. அதுவும் குறிப்பாக வயதில் மூத்தோர் மீது ஒரு தனியான கரிசனம் உள்ளது. அவர்களது தனிமை, ஏக்கம் பற்றிய அக்கறை உள்ளது. தகவல்களும், உங்கள் கருணையும் சேரும்போது மேலே சொன்னது போன்ற கதைகள் வந்துள்ளன. இவையெல்லாம் பாசிட்டிவ் அம்சங்கள்.
இன்னும் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்களும் சில உண்டு.
நிறைய கதைகளில் ஒரு நாவலுக்கான விஷயங்களை சிறுகதை ஆக்கிவிடுகிறீாகள். ஒப்பிலாள், சூரியப்பிரபை, சந்திரப்பிரபை ஆகியவை இந்த மாதிரி ஆகிவிட்டன.
பொதுவாக சிறுகதைகள் ஒரு நீண்ட காலத்தைக் காட்டுவதாக அமையக் கூடாது. அதிகபட்சமாக ஒருநாள் சம்பவம்தான் இடம்பெறவேண்டும். சிறுகதை உங்கள் ஜன்னல்வழியே தெருவைப் பார்ப்பதைப் போல. அந்த நான்குக்கு நான்கு சதுரத்தில் தெரியும் களம் மட்டும்தான் இடம்பெறவேண்டும். நாவல் என்பது வீட்டு வாசலில் நின்று தெருவைப் பார்ப்பது போல. அதில் ஏராளமான வீடுகள், மனிதர்கள், தெருவின் மொத்த நீள அகலம் எல்லாம் தெரியும். ஒரு பெண்ணின் மொத்த வாழ்க்கையையும் சிறுகதையில் அடக்குவது சரியல்ல என்பதைவிட இந்த வடிவத்திற்கு அது தேவையில்லை என்பது என் யோசனை.
அதே போல நான் எதை எழுதினாலும் வைத்திருக்கும் ஒரு ஃபார்முலாவையும் சொல்கிறேன்.
second draft = 90% of the first draft.
இப்படிச் செய்தால் சில தேவையில்லாத வர்ணனைகள், சம்பவங்கள் குறைந்து கதை இன்னும் கச்சிதமாக இருக்கும். சட்டென்று இதற்கு உதாரணமாக கேட்காதவள் கதையில் நாயகி சிறுவயதில் தன் தோழிக்கு காலண்டர் தரும் காட்சி நினைவிற்கு வருகிறது. அதை நீக்கி விட்டாலும், கதையின் ஓட்டம் மாறாது என்று தோன்றுகிறது.
மற்றொன்று, கதை மாந்தர்களை இன்னும் குறிப்பாக வர்ணனை செய்யுங்கள். பாத்திரங்கள் முகமற்று இருந்தால் வாசகன் பாத்திரங்களோடு நெருங்கமாட்டான். இது எனக்கு காவல்கோட்டம், வேள்பாரி சு.வெங்கடேசன் சொன்னது.
மொத்தத்தில் தொகுப்பு நன்றாக உள்ளது.
எனினும் வழக்கமாக வரும் தொகுப்புகளிலிருந்து மாறுபட்டு அதிகம் பேசப்படும் படைப்பாக உங்கள் படைப்பு நிற்கவேண்டும் என்றால் மேலே உள்ளவற்றையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.
ரொம்ப நீளமாக அட்வைஸ் செய்துள்ளதாக நினைக்க வேண்டாம்.
நேர்மையாக என் மனதில் தோன்றியவற்றை அப்படியே எழுதுவதுதான் சரியாக இருக்கும், உங்களுக்கும் ஒரு பரிசீலனைக்கு உதவும் என்பதால்தான். இவற்றை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்பதல்ல. மனதின் ஒரு ஓரத்தில் நினைவில் கொண்டால் போதும்.
வாழ்த்துகள்...
அன்புடன்
ராவ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)