எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 நவம்பர், 2024

தமிழ்த் திரையிசைப் பாடகர்கள் – ஒரு ஜூகல்பந்தி

தமிழ்த் திரையிசைப் பாடகர்கள் – ஒரு ஜூகல்பந்தி


மதியம் இரண்டு மணிக்கு ரேடியோவில் முகம்மட் ரஃபி கிஷோர் குமார் பாடிய ஹிந்தி பாடல்கள், மாலையில் சிலோன் ரேடியோவில் பி ஹெச் அப்துல் ஹமீதும், ஏ எஸ் ராஜாவும் விளம்பர இடைவேளைகளுக்கு நடுவில் தொகுத்தளிக்கும் தமிழ்த் திரையிசைப் பாடல்கள் எனக் கேட்டு வளர்ந்த சமூகத்தில் பிறந்தவள் நான். ஒருநாளில் ஒரு அரைமணிநேரம் ஆறேழு பாடல்கள் கேட்போம். தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் பார்ப்போம். இன்றோ நினைத்த இசையை நினைத்த போது கேட்டிடும் வசதி படைத்துள்ளோம்.

இசை என்னும் போதை மீது எல்லாப் பருவத்தினருக்கும் ஈர்ப்பு உண்டு.  நம் குழந்தை பருவத்தில் ஆடியோ ரிலீசாகி அந்தப் படம் திரைக்கு வரும் முன்பே நாம் அந்தப் பாடல்களுடன் பரிச்சயமாகி இருப்போம். சங்கீதம் பாடக் கேள்வி ஞானம் அது போதும் என ஸ்ம்யூல் ட்ராக் இசை அமைத்துத் தர அனைவருமே பாடகர்கள் பாடகிகளாகும் காலம் இது.

கிராமஃபோன் வந்த காலத்திலிருந்து ரேடியோ, டேப்ரெக்கார்டர், சிடி, பென் ட்ரைவ், ஸ்பாட்டிஃபை, அமேஸான், யூ ட்யூப் காலம் வரை நாம் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். மென்மையான இசையும் குரலும் நம்மை அமைதியிலும் ஆழ்த்தும். வெறியூட்டும் இசையும் குரலும் சொற்களும் நம்மை ஆவேசத்திலும் ஆழ்த்தும் மைக்கேல் ஜாக்சனின் ”ஆல் ஐ வாண்ட் டு சே தட் தே டோண்ட் ரியலி கேர் அபவுட் அஸ்”( அவர்களுக்கு நாம் ஒரு பொருட்டில்லை எனச் சொல்ல விரும்புகிறேன்). என்ற பாடல் பறை இசை போல் ஆதிக்க சக்திகளை எதிர்த்து முழக்கமிடும்போது நம் நரம்புகளையும் முறுக்கேற்றும்.

இதேபோல்தான் ஆபாவாணன் இயற்றி பி பி ஸ்ரீனிவாஸ் ஊமை விழிகளுக்காகப் பாடிய ”தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா, வாழ்வைச் சுமையென நினைத்துத் தாயின் கனவை மறக்கலாமா.” என்ற பாடல் தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து செயல்படுதலே தீர்வு என உணர்த்திய பாடல்.

”கிட்டப்பா வந்த காலத்திலே காயாத கானகத்தே, பியு சின்னப்பா வந்த காலத்திலே காதல் கனிரசமே, மன்மத லீலையை வென்றார் உண்டோ எம்கேடி காலத்துலே, நடையா இது நடையா நம்ம நடிகர் திலகம் பாணியிலே, ஹலோ ஹலோ சுகமா அட ஆமா நீங்க நலமா எங்கேயும் தான் கேட்டோம் அண்ணன் எம் ஜி ஆர் பாட்டுக்களை” என்று ஒரு பாடல் உண்டு பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்தில்.

நேபாளம், மும்பை, வங்காளம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் எனத் தாய்மொழியைக் கொண்ட பல்வேறு பாடகர்களும் தமிழில் தம் மழலைக் குரல்களால் மயக்கி இருக்கிறார்கள். தமிழை ஆங்கிலத்திலோ தம் தாய்மொழியிலோ எழுதி வைத்து நீட்டி முழக்கி மென்மையாக்கிப் பாடுவார்கள். ஆனால் நவீன பாடலாசிரியர்கள் உய்யா உய்யா, லாலாக்கு டோல் டப்பிமா, மகசசீயா ஓசியாமா என்று மிழற்றுவதையும் தமிழாகவே எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

ஏழிசை மன்னர் எம் கே டி. தியாகராஜ பாகவதர் ””கிருஷ்ணா முகுந்தா முராரே, மன்மத லீலையை வென்றார் உண்டோ” என்று பாடினால் ஊரே மயங்கும். அன்றைய உரத்த குரல்களில் இருந்து வேறுபட்டு கர்நாடக பாணியில் இருந்து புதிய இசை பாணியில் பாடல்களை அளித்தவர் ஏ எம் ராஜா. ஜெமினி கணேசனுக்குப் பொருந்தும் குரல் வளம். இனிமையான மென்குரல் கொண்டவர். பாடல்களில் உணர்ச்சிகரமான நெகிழ்வு வெளிப்படும். 1929 இல் பிறந்த இவர் 1957 க்குப் பின் சிறிது காலம் பாடவில்லை.

அதன் பின் 1973 இல் சங்கர் கணேஷ் இசையில் பாட ஆரம்பித்தார். முத்தாரமே உன் ஊடல் என்னவோ, பாட்டுப் பாடவா, தென்றல் உறங்கிய போதும், காலையும் நீயே மாலையும் நீயே, மாசிலா உண்மைக் காதலே ஆகியன இவர் பாடிய பாடல்களில் சில. இவர் 1983 இல் மறைந்தார். நல்ல சாரீரமுள்ள கண்டசாலா பாடிய பாடல்கள் வெயிலுக்கேற்ற நிழலுண்டு, வான் மீதிலே இன்பத் தேன் மாறிப் பெய்யுதே, அமைதியில்லாத என் மனமே. இசைக்காகப் பாடினாரா. இவர் குரலுக்கு ஏற்ப இசைத்தார்களா என்று தோன்றும் பாடல்கள்.

சந்தனக் குரலுக்குச் சொந்தக்காரர் பி பி ஸ்ரீனிவாஸ். சந்திப்போமா இன்று சந்திப்போமா, மயக்கமா கலக்கமா, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், காலங்களில் அவள் வசந்தம், பூஜைக்கு வந்த மலரே வா என இன்னும் குரலால் கோலோச்சுபவர், இறந்தும் இறவாப் புகழ் பெற்றவர்.

எஸ் என் சுரேந்தர் பாமா விஜயத்தில் பாடிய வரவு எட்டணா, செலவு பத்தணா இன்றைய டெபிட் கார்ட் சூழலுக்கும் பொருந்தும் அறிவுரைப் பாடல். ஆலயம் என்பது வீடாகும், தேவதை போல் ஒரு பெண்ணிங்கு என குடும்பத்தையும் பெண்ணின் உயர்வையும் சொல்லிய பாடல்கள்.

திருச்சி லோகநாதனின் கல்யாண சமையல் சாதம் மாயா பஜார் ஸ்பெஷல் விருந்து. ஆசையே அலை போலே, புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே ஆகியன முத்திரைப் பாடல்கள். பலவகையான குரல் மாடுலேஷன்களுடன் பரீட்சார்த்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன். இதில் குடித்தவன் போலவே பாடும் அடிக்கிற கைதான் அணைக்கும் என்ற பாடலைச் சொல்லலாம்.

சிதம்பரம் சி எஸ் ஜெயராமனின் ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே, காவியமா, அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம், உள்ளம் ரெண்டும் ஒன்று ஆகியவற்றைக் கேட்க இன்பம் பெருகும். எம் ஆர் ராதா நடித்த குற்றம் புரிந்தவன், இவரது மாஸ்டர் பீஸ் பாடல்.

டி எம் எஸ்  சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா, வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு, இன்குலாப் ஜிந்தாபாத், சிந்தனை செய் மனமே, ஒளிமயமான எதிர்காலம், யார் அந்த நிலவு, நான் தன்னந்தனிக்காட்டு ராஜா என்று பாடியவர். ஒருதலை ராகம் படத்துக்காக நான் ஒரு ராசியில்லா ராஜா என்று பாடிய பின்னே அதிகம் பாடும் வாய்ப்புப் பெறவில்லை என அவரே ஒருபேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். எம்ஜி ஆர் சிவாஜி ஆகியோர் பாடுவது போலவே இருவருக்கும் ஏற்றபடித் தத்ரூபமாகப் பாடுவார் டி எம் எஸ். அருணகிரி நாதராக முத்தைத் தரு பத்தித் திருநகை இவர் பாடிய அமரத்துவம் வாய்ந்த பாடல்.


தாலாட்டு, தமிழ் இசை, புரட்சி முழக்கம், துள்ளல், நையாண்டி, வீரம், சோகம், தத்துவம், சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், சுற்றுலா, கல்வி, காதல், குறும்பு, போட்டி எனப் பல்வேறு பாடுபொருட்களைக் கருவாகக் கொண்டவை தமிழ்த் திரையிசைப் பாடல்கள். குழந்தைகளுக்கான பாடல்கள், குழந்தைகள் பாடும் பாடல்கள், விடுதலைப் பாடல்கள் எனப் பலவும் இடம்பெற்றுள்ளன.

கேரளப் பாடகர்களான உதித் நாராயணனின் காதல் பிசாசே, தேன் தேன் தேன் உனைத் தேடி அலைந்தேன், அன்பே சிவம், உன்னி கிருஷ்ணனின் என்னவளே அடி என்னவளே, நறுமுகையே, மனம் விரும்புதே உன்னை, உன் பேரைச் சொன்னாலே என் நாவில் தித்திக்குதே, உன் சமையல் அறையில் , காற்றே என் வாசல் வந்தாய், உன்னி மேனனின் எங்கே அந்த வெண்ணிலா, மின்னலைப் பிடித்து, காதல் கடிதம் தீட்டவே, பார்த்த முதல் நாளே, பூங்காற்றிலே உன் சுவாசத்தை ஆகியன மலையாள உச்சரிப்போடு இதமும் பதமும் இனிமையும் கலந்தவை.

ஜே கே யேசுதாஸ் முதலில் பாடிய பாடல் நீயும் பொம்மை நானும் பொம்மை அவ்வளவுதான் நம் கேரியர் என நினைத்தாராம். ஆனால் ஆயிரக் கணக்கில் அதன் பின் பாடி விட்டார். நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோயிலே ஓடிவா, தெய்வம் தந்த வீடு, வாழ்வே மாயம், அம்மா என்றழைக்காத உயிரில்லையே., பச்சைக் கிளிகள் தோளோடு, ராஜராஜ சோழன் நான், காட்டுக் குயிலு மனசுக்குள்ளே ஆகியன சில. இவர் பாடிய ஹரிவராசனம் என்ற பாடலைக் கேட்கும் போது சபரிமலை சென்று வந்த உணர்வு ஏற்படும்.

ஹரிஹரன் கஸல் வகைப் பாடல்களைப் பாடும் வல்லமை கொண்டவர். நீ பார்த்த பார்வைக்கு நன்றி, இருபது கோடி நிலவுகள் சேர்ந்து, கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. ஏதோ ஒரு பாட்டு, சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள் என இவர் பாடல்கள் அனைத்தும் பசுமை. கார்த்திக் பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா, விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் அன்பே அன்பே, கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை என இளையர்களின் சாய்ஸ் பாடல்கள்.

இவர்கள் அனைவரும் பல்வேறு மொழிகளிலும் பாடிப் பல்வேறு விருதுகளையும் பெற்றவர்கள் என்பது சிறப்பு. சிலர் நூற்றுக் கணக்கிலும் சிலர் ஆயிரக் கணக்கிலும் பாடி இருக்கிறார்கள். அனைவருமே தேசிய விருதுகள் மாநில விருதுகள் ஃபிலிம்ஃபேர் விருதுகள், கலைமாமணி விருதுகள் பெற்றவர்கள்.

இசையமைப்பாளர்களும் நடிகர்களும் வேறு இவர்களுடன் போட்டியாகக் களமிறங்கி இருக்கிறார்கள்.  எனக்கொரு காதலி இருக்கின்றாள் என்று எம் எஸ் வி மகிழ, இளையராஜா ஜனனி ஜனனி என்றும் உருக, சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போலாகுமா என்று கங்கை அமரன் மருக, எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்று ஏ ஆர் ரஹ்மானும் நெகிழ அற்புதமான பாடல்களைப் படைத்திருக்கிறார்கள் தங்கள் இனிமையான இசையோடு.  

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே, குங்குமப் பூவே என்று சந்திரபாபுவும், இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை, செந்தமிழ்த் தேன்மொழியாள் என்று டி ஆர் மகாலிங்கமும், உனைக் காணாது நான் இன்று நானில்லையே, நீலவானம், மாறுகோ மாறுகோ, இஞ்சி இடுப்பழகி, இஞ்சாருங்கோ, உன்னை விட, யார் யார் சிவம் ராஜா கைய வச்சா என்று கமலும், அமரன், வெத்தில போட்ட ஷோக்குல, அரிச்சந்திரன் வரான் பொய் சொல்லப் போறான் என்று கார்த்திக்கும், எங்க ஏரியா, ஒய் திஸ் கொலவெறி, ரௌடி பேபி, போ நீ போ என்று தனுஷும்,  நாங்களும் சளைத்தவர்களா என நடிகர்களும் பாடித் தீர்த்திருக்கிறார்கள்.

மலேஷியா வாசுதேவனின் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு, தண்ணீ கருத்திருச்சு ஆகியன அன்றைக்கு மேற்கொள்ளப்பட்ட வித்யாசமான பாணிப் பாடல்கள். அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா, பொதுவாக என் மனசு தங்கம், பூங்காற்றுத் திரும்புமா, ஆசை நூறு வகை, என்னம்மா கண்ணு என்று டி எம் எஸ் போன்ற ஓங்குதாங்கான குரல்வளம் கொண்டவர். பூவே இளைய பூவே என்ற பாடலில் எனக்குத்தானே இனிக்கும் தேனே என்று இவர் உச்சஸ்தாயியில் பாடும்போது இனிமையாக இருக்கும். நடிகராகவும் பல படங்களில் பரிணமித்திருக்கிறார்.

மனோ  ஷெண்பகமே ஷெண்பகமே, முக்காலா, முக்காபுலா தில்லானா தில்லானா, அழகிய லைலா,தூளியிலே ஆட வந்த ஆகிய பல பாடல்களைப் பாடி உள்ளார். பின்னணி பேசியும் நடித்தும் இருக்கிறார். அனைத்து முன்னணிப் பாடகர்களுக்கும் கிட்டத்தட்ட 2000 பாடல்களை வரை ட்ராக் பாடல்கள் பாடியுள்ளார். முடிவில் அவர்கள் பாடி அதுதான் ஆல்பத்தில் வெளியாகும். இதில் குத்தாட்டப் பாடல்கள், காதல் பாடல்கள், எழுச்சிப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், சோகப் பாடல்கள், புரட்சிப் பாடல்கள் ஆகியனவும் அடங்கும்.

எஸ் பி பால சுப்ரமணியம் அடிமைப் பெண்ணில் எம் ஜி ஆருக்குக் கிடைத்த இளைய குரல். ஆயிரம் நிலவே வா, விடிய விடிய சொல்லித்தருவேன், சந்திரனைத் தொட்டது யார் ஆர்ம்ஸ்ராங்கா,  இயற்கை என்னும் இளையகன்னி, மானூத்து மந்தையிலே, தங்கத் தாமரை மகளே, மண்ணில் இந்தக் காதல் அன்றி என நாற்பதாயிரம் பாடல்கள் வரை பாடி உள்ளார்!

பாடகர்கள் சிலர் வயதாகி மாரடைப்பிலும், ராஜா ரயில் தடத்திலும் மறைந்தார்கள். மண்ணில் இந்தக் காதல் இன்றி யாரும் வாழக் கூடுமோ என்று மூச்சுவிடாமல் பாடியவர் பாடும் நிலா பாலு. ஆனால் பாட்டையே உயிர் மூச்சாகக் கொண்டு இயங்கிய அவரின் சுவாசத்திற்கே கோவிட் - 19 காலனாய் வந்து அவரைப் பறித்தது கொடுமை. சாகாவரம் பெற்ற பாடல்களை அளித்த முன்னோடிகளுக்கு வந்தனங்கள். இன்னும் இது போன்ற இனிய மெலோடீஸ் பாடல்களைக் கேட்க விரும்பும் நம்மைப் போன்ற ரசிகர்களுக்கு அடுத்த தலைமுறைப் பாடகர்கள் உருவாகித் தங்கள் இன்னிசைக் குரலால் நம்மை மகிழ்விப்பார்கள் என நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...