7.பிறப்புறுப்பு அழற்சியும் பூஞ்சைத் தொற்றும்
பொதுவாகப் பெண்களுக்குப் பூப்படையும் பருவத்திலும், மாதவிடாய்க்கு முன்னிரு பின்னிரு நாட்களிலும், கர்ப்பகாலங்களிலும் வெள்ளைப்படுதல் ஏற்படும். இது இயற்கை. வழுவழுப்பான இந்தத் திரவம் இனப்பெருக்கப்பாதையைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கப் பயன்படும்.
பூப்படைந்தபின் மாதாந்திரத் தீட்டு ஏற்படும். ஆனால் மாதாந்திரத் தீட்டுக்கு இடைப்பட்ட காலங்களில் பிறப்புறுப்பில் வஜினிடிஸ் எனப்படும் அழற்சியுடன் வெள்ளைப்படுதலோ அல்லது மற்ற நிறங்களில் கசிவு ஏற்பட்டாலோ, கர்ப்பக் காலத்தில் இரத்தப் போக்கைக் கண்டாலோ, மெனோபாஸுக்குப் பின்னும் பிறப்புறுப்பில் வெளியேற்றம் ஏற்பட்டால் அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.
முதல் காரணம் தொற்றுப் பிரச்சனை. பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படுவது நிறமற்ற, வாசனையற்ற, லேசான பிசுபிசுப்பான திரவம். அமிலத்தன்மை நிறைந்த இத்திரவம் பிறப்புறுப்பைத் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கிறது. பால்வினைத் தொற்று, பூஞ்சைக் காளான் தொற்று ஏற்பட்டால் பிறப்புறுப்பில் வீக்கம், புண், கொப்புளங்கள் போன்றவை ஏற்படும். நிறமற்ற அந்தத் திரவத்தின் அமிலத்தன்மை காரத்தன்மையாக மாறி வெள்ளை, மஞ்சள், சிவப்பு, பச்சை, சாம்பல் ஆகிய நிறங்களிலும் பால், தயிர் போன்று கெட்டியாகவும் நூல் போன்றும், மீன் வாசனையோடும், நுரையுடன் அல்லது பாலாடைக் கட்டி போன்றும் வெளியாகும். இப்படி நிறம் மாறித் தொடர்ச்சியாக வெளியாகித் துர்நாற்றமும் வீசினால் முறையான சிகிச்சை எடுப்பது அவசியம்.