எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 18 செப்டம்பர், 2023

9.பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்/பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ் ( கருப்பை நார்த்திசுக்கட்டிகள்)

 9.பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்/பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ் ( கருப்பை நார்த்திசுக்கட்டிகள்)


பி சி ஓ எஸ் மற்றும் பி சி ஓ டி. இதுதான் இந்தக் கால இளம் பெண்களைப் போட்டுத் தாக்கும் நோய். மன அழுத்தம், உடல் பருமன், ஜீன்ஸ் போன்ற தொடைகளை இறுக்கும் ஆடைகள் அணிதல், ஆன்லைனில் இரவு ஷிஃப்டி எந்நேரமும் உட்கார்ந்தபடி மடிக்கணிணியுடன் வேலை செய்தல், வேலைப் பளு, அதனால் உண்டாகும் அழுத்தங்கள் இவையே இந்நோய்க்குக் காரணிகள்.

நவீன வாழ்வியல் மாற்றம், உணவு முறைகள், உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால் பூப்படைதலில் தாமதம், கருத்தரிப்பு, மாதவிடாய்க் காலங்களில் அதிக வயிற்று வலி, அதிக ரத்தப் போக்கு உள்ள பெண்களைப் பரிசோதித்தால் அவர்களில் 40 சதவிதத்தினருக்குக் கருப்பை சார்ந்த கட்டிகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றில் ஃபைப்ராய்டு எனப்படும் தசைத் திசுக்கட்டிகள்  சுமார் 30 இல் இருந்து 50 வயது வரை உள்ள பெண்களுக்கு ( மெனோபாஸுக்கு முன்னான, இனப்பெருக்க வாய்ப்புள்ள பெண்களுக்கு ) ஏற்படுகிறது.

அதிகமாகக் காஃபி அருந்துவதன் மூலமும், ரெட் மீட் எனப்படும் ஆட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலமும் இக்கட்டிகள் ஏற்படுகின்றதாம்!. முக்கியமாகப் பெண்குழந்தைக்குப் பால்பாட்டில்களின் மூலம் பால் கொடுப்பதால் அதில் உள்ள பிஸ்பீனால் வகை வேதிப்பொருட்கள் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன் செய்கையை ஒத்திருப்பதால் இவையும் கருப்பைக் கட்டி உருவாக ஒரு காரணம் என்கிறார்கள்.

கருப்பைத் தசைக்கட்டிகள்,அதன் அளவு, வடிவம், எண்ணிக்கை இவற்றைப் பொறுத்துக் குறிகுணங்கள் வேறுபட்டுக் காணப்படும்.  ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுழற்சிகளால் உண்டாகும் மாற்றங்களும் கட்டிகளின் வளர்ச்சியைப் பெருக்குகின்றன. இதனால் சில பெண்களுக்குக் கரகரப்பான குரல், மீசை வளர்ச்சி, உடலிலும் ரோம வளர்ச்சி ஆகியன அதிக அளவில் காணப்படும்.

கருப்பைக்குள் வளரும் மென்மையான தசை அணுக்களோடு மிகையாய் வளரும் புற்று அல்லாத கட்டிகள் கருப்பைக் கட்டிகள் எனப்படுகின்றன. இவை கருப்பைத்திசுக்கட்டி அல்லது தசைக்கட்டி, நார்க்கட்டி, சீழ்க்கட்டி எனப் பலவகைப்படும். உடல் எடையும், அதிக பருமனும் இந்தத் திசுக்கட்டிகள் உருவாகக் காரணமாகின்றன.

கருப்பையின் உட்புறம் திசுக்களுக்குள் வளர்வது அகச்சுவர் கருப்பைத் திசுக்கட்டி எனவும், கருப்பையின் வெளிப்புறம் இடுப்புப் பகுதிக்குள் வளர்வது நிணநீர்ச்சவ்வடி கருப்பைத் திசுக்கட்டி என்றும் கருப்பையின் உட்புறம் நடுவில் நீண்டு வளர்வது சளிச்சவ்வடி கருப்பைத் திசுக்கட்டி என்றும் கருப்பையின் வெளிச்சுவரில் இருந்து வளர்ந்து தனியாக நீண்டிருப்பது தனிக்காம்பு கருப்பைத் திசுக்கட்டி எனவும் குறிக்கப்படுகின்றன. 

மன இறுக்கம், இடுப்பு வலி, குமட்டல் அல்லது வாந்தி, அதிக வலியோடு கூடிய மாதவிடாய், மாதவிடாய்களுக்கு இடையே இரத்தப் போக்கு, மாதவிடாய் ஏற்படாமலிருந்தல், மலட்டுத்தன்மை, அடிக்கடி கருச்சிதைவு, குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே பிள்ளை பிறத்தல், கீழ்வயிறு நிரம்பி இருப்பது போல் உணர்வு, சிறுநீர்க் கடுப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மலச்சிக்கல், உடலுறவின் போது வலி, கீழ்முதுகு வலி ஆகியன இந்நோய் இருப்பதற்கான அறிகுறிகள். இந்நோய் ஏற்பட மரபும் ஒரு காரணம்.

பெண் இயக்கு நீரால் ஏற்கனவே இருக்கும் கருப்பைத் திசுக்கட்டி இன்னும் பெரிதாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. மாதவிடாய்க்குப் பின் இயக்குநீர் குறைவதால் இக்கட்டி சுருங்குகிறது. பெரிய கருப்பைத் திசுக்கட்டியால் கர்ப்பக்காலத்தில் பெண்ணின் இயக்குநீர் ஐந்து மடங்கு அதிகமாக இருப்பதால் கட்டியின் அளவும் இன்னும் பெரிதாகி பிரசவத்தில் சிக்கலை ஏற்படுத்தக் கூடும். கருப்பைத் திசுக்கட்டி பெரிதாக இருந்தால் மலட்டுத் தன்மையும் சூலுற்ற முட்டை கருப்பைச் சுவரில் பதியம் ஆவதையும் தடுக்கலாம்.


இக்கட்டிகள் சிறுநீரகத்தை அழுத்தி அடிக்கடி சிறுநீர்க் கசிவை உண்டாக்கும். இக்கட்டிகளால் கருத்தரிப்பதும் கடினமாகும்.  சில சமயம் இவை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய லெயோமையோசார்கோமா எனப்படும் நார்த்திசுக்கட்டிகளாக அரிதாக உருவாகும். இன்றைய கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சைகள் இவற்றுக்காகவே செய்யப்படுகின்றன.

இந்த அறிகுறிகள் கண்டால் மருத்துவ உள்ளாய்வு செய்ய வேண்டும். கருப்பை ஊடுறுவல் கேளா ஒலிப் பரிசோதனை இதைக்கண்டுபிடிக்கப் பயன்படுகின்றது. கருப்பைக்குள் ஒரு கருவியை நுழைத்து ஒலி அலைகள் மூலம் கருப்பையின் பிம்பம் தொலைக்காட்சித் திரையில் உருவாக்கப்பட்டுக் கண்டுபிடிக்கப்படுகின்றது. இன்னொரு முறையில் புகைப்படக் கருவி இணைக்கப்பட்டுள்ள குழாய் பொருத்தப்படுகின்றது. இதில் பெறப்படும் வயிறு அல்லது இடுப்பின் பிம்பம் மூலம் கருப்பைத் திசுக்கட்டி கண்டறியப்படுகின்றது. இதற்காக விறைப்பான அகநோக்குக் கருவி என்று ஒன்று பயன்படுத்தப்படுகின்றது.

வலியைப் போக்க இபுபுரூபன் மற்றும் மெஃபெனாமிக் அமிலம் போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன. இவை கருப்பையின் புரோஸ்ட்டோகிளாண்டின் அளவைக் கட்டுப்படுத்தும். புரோஸ்ட்டோகிளாண்டின் அதிகமானால் அதிக வலியுள்ள மாதவிடாயை ஏற்படுத்தும்.

கொனடொடிராஃபின் என்ற இயக்குநீர் மருந்து பெண்ணின் இயக்குநீரைக் கட்டுப்படுத்தப் பயன்படுகின்றது. இதன்மூலம் கருப்பைத் திசுக்கட்டிகள் சுருக்கப்படுகின்றன. இதன் மூலம் பெண்ணீரின் அளவு குறையும்போது கருப்பைத் திசுக்கட்டிகள் சுருங்கும் ஆனால் இதன் பக்க விளைவுகளாக மாதவிடாய் நிற்கும் அறிகுறிகளும்,எலும்புரை நோய் அபாயமும் உண்டாகும். அதனால் இம்மருந்து அதிகபட்சம் ஆறு மாதத்திற்கே அளிக்கப்படுகின்றது. 

அறுவை சிகிச்சையைத் தடுக்க கோஸ்ரேலின், லெப்ரோரெலின் போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவை கருப்பைத் திசுக்கட்டியை எளிதாக அகற்ற உதவுகின்றன. யூலிப்ரிஸ்டல் அசட்டேட் என்ற அவசரகால கருத்தடை மருந்தும் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இது கருப்பைத் திசுக்கட்டியின் வளர்ச்சியில் ஒரு பங்கை வகிப்பதாகக் கருதப்பட்டாலும் அக்கட்டிகளைச் சுருக்கவும் உதவும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கருப்பைத் திசுக்கட்டிகளை அகற்ற கருப்பை அகற்றல், கருப்பைத் திசுக்கட்டி அகற்றல், கருப்பை அகப்படல நீக்கம் ஆகிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கருப்பை அகற்றுதல் மரபான முறை. ஆனால் எதிர்காலத்தில் குழந்தைப் பேறு வேண்டும் என்பவர்களுக்கு கருப்பை விடப்பட்டுக் கருப்பைத் திசுக்கட்டி மட்டும் அகற்றப்படுகின்றது.  கருப்பை அகப்படல நீக்கத்தில் லேசர் ஆற்றல், சூடாக்கப்பட்ட கம்பி வளையம் அல்லது நுண்ணலை வெப்பமூட்டல் மூலம் கருப்பை உட்புறப் படலத்துக்கு அருகில் இருக்கும் கருப்பைத் திசுக்கட்டி அகற்றப்படுகின்றது.

சித்த மருத்துவத்தில் கருப்பையில் அதிகரித்த கபமும் வாதமும் ஒன்றுகூடி இக்கட்டிகளை உருவாக்குவதாகக் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்டிகளுக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் கருப்பை அறுவை சிகிச்சையையும் கருப்பை அகற்றுவதையும் தடுக்கலாம். சினைப்பையில் இவ்வாறு உருவாகும் கட்டிகள் சாதாரணக் கட்டியா அல்லது புற்றுநோய்க் கட்டியா என்று சிஏ-125, சி.இ.ஏ ஆகிய எளிய ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

சாதாரணக் கட்டி எனில் அமுக்கரா, கழற்சிக்காய், மஞ்சள், விழுதி, மந்தாரப்பட்டை, சோற்றுக் கற்றாழை, சேராங்கொட்டை, கொடிவேலி போன்றவை மருந்தாகப் பயன்படுகின்றன. கழற்சிக்காய் சூரணமும் நல்ல பயன் தரும். தினமும் நாம் சமையலில் பயன்படுத்தும் மஞ்சள் சாதாரணக் கட்டிகள் முதல் புற்றுநோய்க் கட்டிகள் வரை குணப்படுத்தும் வல்லமையுடையது. தொடர்ந்து மஞ்சளைப் பயன்படுத்துவதன் மூலம் இதில் உள்ள குர்குமினால் ஃபைப்ரோநெக்டின் எனப்படும் புரதத்தின் மூலம் ஏற்படும் தசைக் கட்டிகள் கரைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் க்ரீன் டீ, கடுக்காய், கருப்பு உளுந்து போன்ற பாரம்பரிய உணவுகள் கருப்பையைப் பலப்படுத்தும். இரும்புச்சத்து உள்ள உணவுகள் இந்நோயைக் கட்டுப்படுத்தும். பழங்கள், காய்கறிகள் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். விட்டமின் டி உள்ள உணவு இந்த நார்த்திசுக் கட்டிகளைக் கரைக்க உதவும்.

இரவில் சீக்கிரம் துயில்வது, அதிகாலையில் சூரிய வணக்கம், தினமும் உடற்பயிற்சி, பாரம்பரிய உணவுகள் மற்றும் வாழ்வியல் முறைகள், வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல், கபம் வாதம் தணிக்கும் உணவுகள், ஆறுமாதத்திற்கு ஒருமுறை உடலைச் சுத்திகரிக்கும் பேதி மருந்து எடுத்துக் கொள்வதன் மூலம் இந்நோயினைத் தடுக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...