எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 20 ஜூன், 2024

18.கருச்சிதைவு, கருத்தடை முறைகள், பிரச்சனைகள்

 18.கருச்சிதைவு, கருத்தடை முறைகள், பிரச்சனைகள்


கர்ப்பமாக இருக்கும் போது ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்படும். பிரசவத்தின் போதும் மிகப்பெரும் சிக்கல்கள் உருவாகும். இதனால் பிள்ளைகளின் எலும்பு வளர்ச்சியில் பாதிப்பு நேரலாம். இரத்தசோகை ஏற்பட்டு வழக்கத்தை விடக் குறைவான இரத்தச் சிவப்பணுக்கள் காணப்படும். இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இரத்தத்தில் நஞ்சு கலக்கவும் கூடும். இதைத் தவிர்க்க காய்கறிகள், பழங்கள், தண்ணீர், நார்ச்சத்து உணவு, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பத்தின் முதல் பதிமூன்று வாரங்களில் அநேக கருச்சிதைவுகள் நிகழ்கின்றன. குழந்தையின் குரோமோசோமில் ஏற்படும் சிக்கல்கள், தாயின் ஹார்மோன் பிரச்சனை, தொற்று, உடல்நலக் கோளாறு, புகைபிடித்தல், ஊட்டச்சத்துக் குறைபாடு, கதிர்வீச்சு வெளிப்பாடு, போதைப் பொருள் உபயோகம், அதிகப்படியான காஃபின் மற்றும் நச்சுப் பொருள், அதிர்ச்சி, தாயின் வயது, நீரிழிவு நோய், இரத்தம் உறைதல் கோளாறு, குறுகிய கருப்பை வாய் அல்லது அசாதாரண ஒட்டுதல்களுடன் கூடிய கருப்பை, உடல் பருமன், சுற்றுச்சூழல் மாசு ஆகிய முக்கியப் பங்கு வகிக்கின்றன.

கருப்பையில் ஏற்படும் சில அசாதாரணமான பிரச்சனைகளாலும் கருச்சிதைவு நிகழ்கிறது. இதனால் அதீத ரத்தப் போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்படலாம். சிலருக்கு இரண்டு மூன்று கருச்சிதைவுகள் கூட நிகழ்கின்றன. உடலில் ப்ரோமிலைன் சேர்வது கருப்பை வாயை மென்மை ஆக்குகிறது. இதனால் கருச்சிதைவு அல்லது முன் கூட்டிய பிரசவம் நிகழ்கிறது. சில சமயம் கருவுற்ற ஆறு மாதங்களுக்குப் பின் இந்தக் கருச்சிதைவு ஏற்பட்டால் அது கருப்பையில் நிகழும் கரு மரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் கருப்பைச் சுருக்கங்கள், தடிப்புகள், வாந்தி போன்றவை ஏற்படும்.பப்பாளி, அன்னாசி போன்றவற்றை கர்ப்பகால ஆரம்பத்தில் உண்பதின் மூலம் கரு கலைந்துவிடும் என நம்பப்படுகிறது. இரத்த சர்க்கரையை அதிகரிப்பதால் கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் உள்ள பெண்கள் அன்னாசியைத் தவிர்க்க வேண்டும். இது உடல் எடையையும் அதிகரிக்கும்.

கருச்சிதைவின் மூலம் கருவின் அனைத்துத் திசுக்களும் வெளியேறிவிடும் என்றாலும் சரியாக வெளியேறாத சில பெண்களுக்கு டி & சி எனப்படும் டைலேஷன் அண்ட் க்யூரேடேஜ் எனப்படும் முறையில் கருப்பை சுத்தம் செய்யப்படுகின்றது. வேண்டாத கர்ப்பத்தையும் இம்முறை மூலம் சிலர் கருக்கலைப்புச் செய்து கொள்கிறார்கள்.  சமூக அங்கீகாரம் இல்லாமல் உருவாகும் குழந்தை, பாலியல் கல்வி இல்லாமல் ஏற்படும் பதின்பருவ கர்ப்பம், திருமணமானவுடனேயே குழந்தை வேண்டாம் என்று எண்ணும் தம்பதியர், அடுத்தடுத்துக் குழந்தைப் பேறு ஏற்பட்டால் அதைத் தடுக்கக் கருக்கலைப்புச் செய்துகொள்வோர், வேறு மருத்துவ சிகிச்சையில் இருப்போர், கர்ப்ப காலத்தில் எஸ்ரே போன்றவை எடுப்பதால் கருவில் உள்ள குழந்தைக்குப் பாதிப்பு ஏற்பட்டு ஊனமாகப் பிறக்கலாம் என்று கருதுபவர்கள், கருவில் இருக்கும் குழந்தை கடுமையான நோயால் பாதிக்கப்பட்டது எனப் பரிசோதனைகளின் மூலம் தெரிய வந்தால் என கருக்கலைப்புச் செய்து கொள்வோரின் பட்டியல் நீள்கிறது.


இவ்வாறு வேண்டாத கர்ப்பத்தைத் தவிர்க்க ஆண்களும் பெண்களுமே கர்ப்பத்தடை மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள். நிரந்தர மற்றும் தற்காலிக கருத்தடை முறைகளையும் பின்பற்றுகின்றார்கள். ஒரு பெண்ணின் கருப்பையில் இருக்கும் கருமுட்டை கருத்தரிப்பதற்கு ஏற்படுத்தப்படும் தடையே கருத்தடை. கான்சர், கட்டிகள் போன்ற வேறு உடலியல்கூறு காரணங்களால் கருப்பை நீக்கப்படுவதன் மூலமும் கருத்தரிப்பு நிகழாமல் தடுக்கப்படுகின்றது. கருத்தடையின் மூலம் தேவையற்ற கர்ப்பம், மக்கள் தொகை கட்டுப்பாடு, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் நீக்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.

இயற்கையான கருத்தடை, செயற்கையான கருத்தடை என இரு முறைகள் பயன்பாட்டில் உள்ளன. லாக்டேஷனல் அமெனோரியா முறையில் கைக்குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அடுத்து கர்ப்பம் தரிப்பதைத் தள்ளிப் போடுதல், உறவு கொள்ளூம் சமயம் விந்து வெளியேற்றத்தின் முன்னர் ஆண் அதை யோனியுள் செலுத்தாமல் விலகுதல் (விலகல் முறை எனப்படுகின்றது), நாள்கணக்கு வைத்து மாதவிடாய்க்கு முன்னான ஒரு வாரமும் பின்னான ஒருவாரமும் மட்டும் உறவு கொள்வது,  பெண்ணின் உடல் வெப்ப மாறுபாடு, வெள்ளைப்படுதல் உள்ள சமயங்களில் உடலுறவு கொள்ளாதிருத்தல் ஆகிய இயற்கையான கருத்தடை முறைகள். 

ஆணுறுப்புக்கு வெளியே பயன்படுத்தப்படும் ஆணுறைகள், பெண்ணுறுப்புக்குள் பயன்படுத்தப்படும் பெண்ணுறைகள், காப்பர் டி பொருத்துதல், கருத்தடை ஊசிகள் போடுதல், ஹார்மோன் தெரஃபி, பெண் உறுப்பில் பொருத்திக் கொள்ளும் கருத்தடை வளையம் (19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது) நுவாரிங் எனப்படும் மென் சவ்வு போன்ற ஒரு ரப்பர் மூடி, வாய்வழி உண்ணும் கருத்தடை மாத்திரைகள், பெண் உறுப்பில் செருகி பயன்படுத்தப்படும் கருத்தடை மாத்திரைகள், பெண்ணுறுப்பில் தடவிக்கொள்ளும் விந்து எதிரி எனப்படும் மருந்து ஆகியன பயன்பாட்டில் உள்ளன. இவை தற்காலிக மற்றும் செயற்கையான கருத்தடை முறையில் அடங்கும்.

ஆணுறைப் பயன்பாட்டின் மூலம் விந்தணு கரு முட்டையுடன் சேர்வது தவிர்க்கப்படுகின்றது. கருத்தடை மாத்திரைகள் பெண்ணின் கருமுட்டை கருவுறுவதைக் தடுக்கும் ஹார்மோன்களைக் கொண்டிருக்கின்றன. காப்பர் டி அணிவது கர்ப்பம் தரிப்பதைத் தடுக்கும் தற்காலிக முறை. தேவை ஏற்படும் போது காப்பர் டியை எடுத்துவிட்டால் கர்ப்பம் தரிக்க இயலும். இதைப்போன்றே எஸ்யூர் கருவியைப் பொருத்தும் முறை முன்பு அமெரிக்கா போன்ற நாடுகளில் நடைமுறையில் இருந்திருக்கிறது. ஹார்மோன் மாத்திரைகள் மூலம் ( ப்ரோஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜென், )  பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. உடலுறவுக்குப் பின் எடுத்துக்கொள்ளப்படும் கருத்தடை மாத்திரைகளும் எல்லா நேரத்திலும் பயனளிப்பதில்லை.

எனவே இம்முறைகளைப் பின்பற்றுவதால் நூறு சதவிகிதம் கர்ப்பம் தரிக்காது எனச் சொல்ல முடியாது. இவற்றின் குளறுபடிகளால் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பும் உண்டு.  சில பெண்களுக்கு இவற்றைப் பயன்படுத்துவதால் ஒவ்வாமை, வலி, இரத்த உறைவு, இரத்தப் போக்கு, இரத்த சோகை, கருப்பை உள் சுவர் தோலில் பிரச்சனை, காப்பர் டி பயன்படுத்துவதால் ஃபெலோப்பியன் குழாயில் கரு வளரும் அபாயம் மேலும் இவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் தோன்றலாம். 

ஆணுக்கு வாசெக்டமி எனப்படும் குடும்பக்கட்டுப்பாடு, பெண்ணுக்கும் ட்யூபெக்டமி எனப்படும் குடும்பக் கட்டுப்பாடு ஆகியன நிரந்தரக் கர்ப்பத்தடைக்காகச் செய்யப்படுகின்றன. ஆண் இனப்பெருக்க உறுப்பில் வாஸ்டிஃபெரன்ஸ் என்னும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதனால் உடலுறவின் போது விந்தணுக்களின் இயக்கம் ஏற்படாது. லேப்ரோஸ்கோபிக் முறையிலும் கருத்தடை செய்யப்படுகின்றது. சிஸேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை முறையில் இரு குழந்தைகள் பிறந்திருந்தால் பெற்றோரின் சம்மதத்தோடு ஃபெலோப்பியன் குழாய்களை வெட்டி முடிச்சிட்டு விடுவார்கள். இது நிரந்தரக் கருத்தடை முறை. ஸ்டெரிலைசேஷன் என்று கூறப்படும் இது ட்யூபல் லிகேஷன் என்றும் அழைக்கப்படுகிறது.

கருத்தடைப் பயன்பாட்டில் முதலாம் ஆண்டில் கருத்தரிக்கும் வாய்ப்பு கருத்தடை இல்லாத நிலையில் 85% ஆக உள்ளது. கருத்தடை மாத்திரைகள் மூலம் 0.9%, பெண்களுக்கான கருத்தடை உறைகள் பயன்படுத்தினால் 5 %, ஆண்களுக்கான கருத்தடை உறைகள் பயன்படுத்தினால் 18%, லேப்ரோஸ்கோப்பிக், காப்பர் டி போன்ற கருத்தடுப்பு முறைகளைப் பின்பற்றினால் 0.8%, இயக்குநீருடனான கருப்பையுள்ளான சாதனம் பயன்படுத்தினால் 0.2 %, ஒட்டு, யோனி வளையம், இயக்குநீர் வகை, பதியம் செய்தல், விந்தை எதிர்க்கும் மருந்தை யோனியில் தடவிக்கொள்ளுதல், மென் தகடு பயன்படுத்துதல் போன்றவற்றால் 9% ஆக உள்ளது. 

தற்காலிகக் கருத்தடை முறைகளைக் குறிப்பிட்ட காலம் வரைக்கும் செயல்படுத்தலாம் அதன் பின் கர்ப்பம் தரிக்க விருப்பமிருப்பின் அவற்றை நிறுத்தலாம். ஆனால் நிரந்தரக் கருத்தடை முறைகள் மூலம் கர்ப்பம் தரிக்க இயலாது. இதுவே நூறு சதம் நம்பகமான கருத்தடை முறையாகும். ஆணோ, பெண்ணோ அறுவை சிகிச்சை முடிந்தபின் ஒரு வாரத்திற்காவது அதிக எடை கொண்ட பொருட்களைத் தூக்கக் கூடாது. சில நாட்கள் ஓய்வு அவசியம். அறுவை சிகிச்சைக்குப் பின் வலி, ரத்தப் போக்கு இருந்தால் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சைபெற வேண்டும். பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வதை விட ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வது சிறந்ததும் எளிதான முறையுமாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...