எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 ஜூன், 2024

வறுமையின் நிறம் சிவப்பு ஸ்ரீதேவி

 வறுமையின் நிறம் சிவப்பு ஸ்ரீதேவி


காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுது. , நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா, தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் என எவர்க்ரீன் மெலோடீஸுக்குச் சொந்தக்காரர். இவருடைய பாடல்கள் கேட்பதற்கு மட்டுமல்ல பார்ப்பதற்கும் டிலைட். வடிவுக்கரசி. 70ஸ்கிட்ஸின் கனவு நாயகி.

பெரிய கண்கள், கொழுமிய மூக்கு, ரைனோ ப்ளாஸ்டிக்குப் பின் நறுக்குத் தெறித்தாற்போல் மாறியது புதுமை. பதிமூன்று வயதிலேயே கதநாயகியானவர். பதிமூன்று ஆண்டுகள்தான் தமிழில் நடித்தார். பின்னர் இருபது ஆண்டுகள் கழித்துப் புலி, இங்கிலீஷ் விங்கிலீஷில் நடித்தார். கடைசியாக நடித்த படம் மாம்.

பொண்ணு ஸ்ரீதேவி மாதிரி இருப்பா என்று அந்தக் காலத்தில் திருமணமாகவேண்டிய அழகிய பெண்களைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். அதிலும் மூக்கு ஆப்பரேஷன் பண்ணுவதற்கு முன்னாடி உள்ள ஸ்ரீதேவி மாதிரி என்பது ஸ்பெஷல். ஏனெனில் அதில்தான் ஸ்ரீதேவியின் குழந்தைத்தனமும் இன்னொஸன்ஸும் அற்புதமாக வெளிப்பட்டது. ஆபரேஷனுக்குப் பிறகு அவர் இந்தி(ய) ஸ்ரீதேவி ஆகிவிட்டார். அதேபோல் அழகான தம்பதிகளைக் குறிப்பிடும்போது, ‘கமலும் ஸ்ரீதேவியும் போல ஜோடிப் பொருத்தம்” என்பார்கள்.

ஸ்ரீ அமா யாங்கர் என்னும் ஸ்ரீ தேவி 1963 ஆகஸ்ட் 13 இல் விருதுநகர் மீனம்பட்டியில் பிறந்தார். பெற்றோர் அய்யப்பன், இராஜேஸ்வரி. தங்கை ஸ்ரீ லதா. குழந்தை நட்சத்திரமாக 1967 இல் கந்தன் கருணையில் அறிமுகம். துணைவன், வசந்த மாளிகை, நம் நாடு, என் அண்ணன், பாபு, பாரத விலாஸ், அகத்தியர், கனிமுத்துப் பாப்பா, திருமாங்கல்யம், தசாவதாரம் எனக் குழந்தை நட்சத்திரமாகவே நிறையப் படங்களில் நடித்தவர்.  

1986 க்குப் பிறகு பத்தாண்டுகள் ஹிந்திப் படங்களில்தான் நடித்து வந்தார். சத்மா, நாகினி, மிஸ்டர் இந்தியா, சாந்தினி, ஜான்பாஸ் ( ட்ரக் அடிக்‌ஷன் ), சால்பாஸ்,ச சி என. ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி, அமிதாப், ரிஷிகபூர், அனில் கபூர், சல்மான் கான், சஞ்சய்தத் என மிக நீண்ட லிஸ்ட் இவருடையது.

1996 இல் போனி கபூரை மணந்தார். ஜான்வி, குஷி என்று இரு மகள்கள், பதினாறு வயதினிலே, மீண்டும் கோகிலா, க்ஷணா, சால் பாஸ், லம்ஹே ஆகிய ஐந்து படங்களுக்கு ஃபிலிம்ஃபேர் விருது வாங்கியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் பல்வேறு மாநில மற்றும் தேசிய விருதுகளையும் வாங்கியுள்ளார். 300 படங்களில் நடித்துள்ளார். 2013 இல் பத்மஸ்ரீ விருது பெற்றவர். 

1976 இல் மூன்று முடிச்சு தனது முதல் படத்திலேயே கமலுடனும் ரஜினியுடனும் இணைந்து நடித்தவர். கமலுடன் 21 படங்கள், மூன்று முடிச்சு, மூன்றாம் பிறை, வறுமையின் நிறம் சிவப்பு, பதினாறு வயதினிலே, குரு என. இதே ரஜினியுடன் 22 படங்கள் நடித்திருக்கிறார். நான் மகான் அல்ல, ஜானி. காளி, தர்மயுத்தம், போக்கிரி ராஜா என. அந்தக் கால கட்டத்தில் மாபெரும் இயக்குநர்களின் முதல் தேர்வாக இருந்தார் ஸ்ரீதேவி

காயத்ரி, கவிக்குயில், வணக்கத்திற்குரிய காதலியே, , பைலட் பிரேம்நாத், தாயில்லாமல் நானில்லை, பட்டாக்கத்தி பைரவன்,, பாலநாகம்மா, ராணுவ வீரன் என அனைத்துப் படங்களிலும் இவர் கதாநாயகியாகவே நடித்தார். மேலும் வில்லி ரோல் எதுவுமே செய்யவில்லை என்பதும் ஆச்சர்யம். பாபு படத்தில் இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என குழந்தை ஸ்ரீதேவியுடன் சிவாஜி பாடுவார். அதே ஸ்ரீதேவியுடன் விஸ்வரூபம் படத்தில் இளைய சிவாஜி ராஜா ஜோடியாகப் பாடும் ஓ மிஸ் பாடலில் அவ்வளவு கெமிஸ்ட்ரி இருக்கும்.


கிராமிய வாழ்வின் யதார்த்தத்தைப் படம் பிடித்த படம் 16 வயதினிலே. இப்படத்துக்காக ஸ்ரீதேவியைத் தேர்ந்தெடுத்தபோது அவர் கண்களில் கனவுப் பிரகாசம் இருந்தது என்று குறிப்பிடுகிறார் இயக்குநர் பாரதிராஜா. இது ஒரு ட்ரெண்ட் செட்டிங் ஃபிலிம். இண்டோர்களில் எடுக்கப்பட்ட சினிமாக்களில் இருந்து மாறுதலாக முழுக்க முழுக்கக் கிராமியப் பின்னணியில் எடுக்கப்பட்ட படம்.

பதினாறு வயது கிராமத்து மயில் செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா, கனவு காணும் செந்தூரப் பூ. அவரின் ஆசிரியை ஆகும் கனவும், காதல் கனவும் தகர்ந்தபின், தாயின் மறைவுக்குப் பின் யதார்த்தத்தை ஏற்று சப்பாணியை மணம் முடிக்க ஒப்புதல் கொடுப்பார். தன்னை விரும்பும் சப்பாணியிடம், “உன்ன யாராவது சப்பாணின்னு கூப்பிட்டா சப்புன்னு அறைஞ்சிடு என்று கூற அவரோ தன்னைச் சப்பாணி என்று அழைக்கும் மருத்துவரை ( முன்பு மயிலை அவள் பருவத்துக்காகக் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றிய சத்யஜித் சப்பாணி என்று அழைக்க உடனே) அறைந்து விடுவார். அதைப் பற்றி மயிலிடம் விளக்கும் போது திரும்பத் திரும்ப ”எப்பிடி அறைஞ்சே”” எனக் கண்கள் விரிய மயில் கேட்க சப்பாணி சப் என்று மயிலை அறையும் காட்சி திக் என்றிருக்கும்.

மூன்றுமுடிச்சில் காதலனின் நண்பனே இவரைக் காதலிப்பதால் நீரில் மூழ்கும் காதலனை இவர் எவ்வளவு கெஞ்சியும் காப்பாற்றாமல் விட்டுவிடுவார். அவரே இவருக்கு மகன் முறையில் உறவாகிவிட அவரைத் திருத்துவார் செல்வி எனும் ஸ்ரீதேவி. இதில் வசந்தகால நதிகளிலே, ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம் இப்பாடல்கள் பொக்கிஷம்.

மூன்றாம் பிறையில் விஜி எனப்படும் பாக்யா, வானெங்கும் தங்க விண்மீன்கள் பாடலில் த்ரீ ஃபோர்த் பேண்டும் டாப்ஸுமாக விரிந்த கூந்தலோடு கடற்கரையில் அவர் ஆடும் ஆட்டம் இளமைக் கொண்டாட்டம். பின்னர் தன்னைக் காத்தவர் என்று தெரியாமல் க்ளைமாஸில் ஸ்ரீனிவாசனை அவர் ரயிலில் கடக்கும் இடம் சோகம்.

ஜானியில் அற்புதமான பாடகி அர்ச்சனா, என் வானிலே ஒரே வெண்ணிலா, ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் என இன்னிசைப்பார். இரட்டை வேடத்தில் ரஜினி. ஒரு தண்டனையிலிருந்து தன் காதலனைக் காப்பாற்ற மேடையில் கடைசி இசை நிகழ்ச்சி வழங்கப் போவதாக அறிவித்து விடுவார் அர்ச்சனா. மாலையில் மழையும் காற்றும் சுழன்றடிக்க யாரும் வராத போதும் தான் விரும்பும் ஜானி என்னும் ஒற்றை மனிதனுக்காய்க் ”காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுது” என மேடையில் தனித்துப் பாடுவது மனதை வருடும் மயிலிறகு.

சிகப்பு ரோஜாக்கள் கிரைம் த்ரில்லர் படம். காதலன் முத்துவின் குற்றப் பக்கத்தைத் தெரிந்து கொள்ளும் முன் இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது, நினைவோ ஒரு பறவை என மயங்குவார் சாரதா. தர்ம யுத்தத்தில் பத்திரிக்கையாளர் சித்ராவாக அடப் போய்யா போய்யா உலகம் பெரிசு நீ ஒரு பொடி டப்பா இந்தப் பேனா பெரிசப்பா என வீறுகொண்டு எழுபவர், ஆகாய கங்கை பூந்தேன் மலர்த் தேடி எனக் காதலுக்கும் வயப்படுவார்.

கல்யாணராமனின் செண்பகம் சொல்லவே வேண்டாம். ஆஹா வந்திரிச்சு, காதல் தீபம் ஒன்று எனக் கல்யாணத்தை மட்டுமல்ல. அனைத்து இளைஞர்களையும் பாட வைத்தவர். குருவில் ரகுவான கமலால் “பறந்தாலும் விடமாட்டேன் பிறர் கையில் தரமாட்டேன்” எனத் துரத்தித் துரத்திக் காதலிக்கப்பட்டவர். பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா எனப் பதிலுக்குப் பாடிய சுஜாதா. ப்ரியா படத்தில் ப்ரியாவை டிடெக்டிவ் கணேஷான ரஜினி ஸ்ரீ ராமனின் ஸ்ரீதேவியே என்று பாடித் தேடுவார். முதன் முறையாக சிங்கப்பூரின் வாட்டர்தீம் பார்க்குகளில் எடுக்கப்பட்ட குளுகுளு பாடல் டார்லிங் டார்லிங் டார்லிங்.

வாழ்வே மாயத்தில் காதலிக்கும் போது “தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா, நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா” என்றெல்லாம் பாடும் ராஜா பின்னர் கான்சரால் பாதிக்கப்பட்டது தெரிந்ததும் தான் காதலிக்கும் ஸ்ரீதேவி தன்னை வெறுக்கவேண்டும் என்று ஸ்ரீபிரியா வீட்டுக்குச் சென்று வசிப்பதோடு வாழ்வே மாயம் எனப் பாடுவார்.

மீண்டும் கோகிலா, சினிமா நடிகையின் கவர்ச்சியில் மயங்கும் கணவனைத் இல்லறத்தின் பக்கம் திரும்பப் பெறப் போராடும் பெண்ணின் கதை. சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி எனப் பெண் பார்க்கும் பாடலின் நடுவில் ஸ்ரீதேவியை கமல் தொடர்வது வெகு அழகு. இந்தப் படத்திலிருந்துதான் ஸ்ரீதேவி மூக்குத்தி என்பது வெகு பிரபலம்.

தனிக்காட்டு ராஜாவில் வாணியாக. “சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே , ராசாவேஉன்னை நான் எண்ணித்தான்” எனக் காதலில் உருகுவார். போக்கிரி ராஜாவில் பதிலுக்கு ‘விடிய விடிய சொல்லித்தருவேன்” எனக் கமல் உருகுவார். நான் அடிமை இல்லையில் பிரியா தன் தந்தையின் சூழ்ச்சியால் காதல் கணவரைப் பிரிந்து பாடும் பாடல்கள்தான் வா வா இதயமே, .ஒரு ஜீவன் தான் உன் பாடலை ஓயாமல் இசைக்கின்றது.


அடுத்த வாரிசு  படத்தில் சிம்மாசனத்துக்கான வாரிசான ராதா என நினைத்து வள்ளியான ஸ்ரீதேவியிடம் ஒரு டெஸ்ட் வைப்பார் மஹாராணி வரலெக்ஷ்மி. இளைய வயதில் ராதாவுக்குப் பிடித்த வாத்தியம் எது எனக் கேட்டு அதை வாசிக்க வேண்டும் என்பார். அப்போது ஸ்ரீதேவி அங்கே அடுக்கி இருக்கும் இசைக்கருவிகளைப் பார்வையிடும்போது டோலக்கின் மேல் அவர் கழைக்கூத்தாடியாக ஆடிய காட்சி தென்படும். குபீரெனச் சிரிப்பை வரவழைத்த காட்சி அது. திக்கென மாறும் முகபாவத்தோடு அவர் பியானோவிடம் சென்று அமர்ந்து வாசித்துத் தான்தான் உண்மையான அடுத்த வாரிசு என நிரூபிப்பார்.

எல்லாவற்றிலும் ஹைலைட் வறுமையின் நிறம் சிவப்பு தேவிதான். மெச்சூர்டான பெண்மணி. வேலையின்மையால் பாதிக்கப்பட்ட மூன்று இளைஞர்களில் ஒருவராக ரங்கன் (கமல்). இவர் சந்திக்கும் மேடை நாடக நடிகையாக ஸ்ரீதேவி. இதில் ஒரு பாடல் க்ளாஸ். சிப்பி இருக்குது முத்து இருக்குது என்ற பாடலில் மனதைத் திறந்து காதலைச் சொல்லும் வரிகளும் சரி காட்சி அமைப்பும் சரி எப்போது பார்த்தாலும் பிரமாதமாக இருக்கும்.

தன் கொள்கைகளில் சமரசமாகாத ரங்கனுக்கு வேலை கிடைக்காததால் ஸ்ரீதேவியை ஒருதலையாக அதி தீவிரமாகக் காதலிக்கும் நாடக இயக்குநர் பிரதாப் போத்தனை மணந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார் ரங்கன்.

பிரதாப்பும் ஸ்ரீதேவியும் ஒரு பூங்காவில் காரில் அமர்ந்திருக்கும் போது “தீர்த்தக்கரையினிலே தெற்கு மூலையில் ஷெண்பகத் தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே “ என்ற பாரதியார் பாடலை ரங்கன் பாட, ஏற்கனவே குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் தேவி தன் மனம் முழுவதும் ரங்கனே இருப்பதை உணர்ந்து காரிலிருந்து இறங்கி வந்து ரங்கனோடு சேர்வார்.

மனிதர்களின் தன்மை அறிந்து பசி அறிந்து தேவி இவர்கள் மூவருக்கும் உணவளிக்க முற்பட ஸ்ரீதேவியின் பாட்டி அச்சமயம் இறந்துவிடுவதால் இவர்கள் வாய்க்குக் கொண்டு சென்ற கவளத்தைக் கூட உண்ணாமல் எழுவார்கள். இவ்வகைக் காட்சிகள் படம் முழுவதும்.யதார்த்தத்துக்கு மிக நெருக்கமான படம் இது.

இவ்வளவு எல்லாம் சிறப்பாக வாழ்ந்திருந்தும் சில பிரபலங்களின் மறைவு போல இவரது மறைவும் வருத்தத்துக்கு உரியதாகவும் சர்ச்சைக்கு உரியதாகவும் உள்ளது. 24 ஃபிப்ரவரி 2018 இல் இவர் அமீரகத்தில் தனது 55 ஆவது வயதில் திடீரென மறைந்தார் என்பது அதிர்ச்சிச் செய்தி. காற்றில் அவரது கீதம் காணாத ஒன்றைத் தேடச் சென்றுவிட்டது. அதை முற்றிலும் ஏற்காத நம் மனமோ இன்னும் அவரது கீதத்தை மீட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

1 கருத்து:

  1. அவரது இயற்பெயர் பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ளது புதிதாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...