எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 4 ஜூன், 2024

17.கருத்தரியாமைக்குக் காரணங்களும் தீர்வுகளும்

 17.கருத்தரியாமைக்குக் காரணங்களும் தீர்வுகளும்சில பெண்களுக்குப் பிறப்பிலேயே கருப்பையும் கருமுட்டைகளும் இல்லாமலிருக்கும். சிலருக்குக் கருமுட்டை சரியாக உற்பத்தி ஆகாததால் மாதவிடாய் சரியாக வராது. சிலருக்கு மாதவிடாய் சரியாக இருந்தாலும் கருமுட்டை உற்பத்தி சீராக இருக்காது. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்குக் கருமுட்டை உற்பத்தியே இருக்காது.

 

சிலருக்கு இளம் வயதிலேயே கருவகம் செயல் இழந்து விடும் ( இதற்குப் ப்ரிமெச்சூர் ஓவேரியன் ஃபெயிலியர்) என்று பெயர். கருப்பையில் சுரக்கும் ம்யூக்கல் என்னும் திரவம் கெட்டியாகவும் எதிர்ப்பு சக்தி நிறைந்தும் இருந்தால் கரு இணைவதைத் தடுத்தல், கரு இணை குழாயில் கருமுட்டை நுழைய வாய்ப்பு இல்லாமல் போதல், பெண்ணுக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிடுதல் ஆகியவற்றால் கருத்தரிப்பு நிகழாது.

 

ஆண் விந்துவில் போதிய உயிரணுக்கள் இல்லாமை, இருக்கும் உயிர் அணுக்களும் போதிய சுறுசுறுப்பு இல்லாமல் இருத்தல், பெண்ணின் உடலில் எழும் எதிர்ப்புச் சக்தி ஆணின் விந்தணுக்களைச் செயலிழக்கச் செய்தல்,விரையில் அடிபடுதல், விரையில் ரத்தக் கட்டி, விரையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் ஆணுக்கு உயிர் அணுக்களில் எதிர்ப்பு சக்தி உண்டாகி இதனால் கரு தங்காது.

 

அப்படியே கரு உருவானாலும் கருப்பையில் பதிந்து வளராமல் போகலாம். அப்படியே வளர்ந்தாலும் சில சமயம் அது உயிரற்ற கருவாகவும் இருக்க வாய்ப்புண்டு. கருப்பை வாயில் சுரக்கும் திரவத்திலும், கருமுட்டை இருக்கக்கூடிய திரவத்திலும் கூட இந்த எதிர்ப்பு சக்தி உண்டு. இதனை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து முறியடித்து விடலாம்.

 

தற்போது சோதனைக் குழாய் முறையில் கரு, கருப்பையில் பதிந்து வளர்வது 20 முதல் 30 சதவிகிதமாக உள்ளது. பெரும்பாலும் ஆண் குழந்தைகள் கரு நிலையிலேயே சிதைந்து விடுவதாலும், பிறந்தபிறகு நோய் எதிர்ப்புத் தன்மை குறைவு காரணமாக இறந்து விடுவதாலும் ஆண்குழந்தைகள் பிறப்புக் குறையக் காரணமாகிறது. பெண் குழந்தைகளுக்கு எதையும் தாங்கும் சக்தி கருவிலேயே உருவாகிவிடுகிறது.

 

திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் வரை இயற்கைக் கருத்தரிப்புக்குக் காத்திருக்கலாம். அதன் பின்னும் குழந்தைப் பேறில்லாவிட்டால் மருத்துவரை அணுகலாம். இதுவரை பெண்களுக்குக் குறைபாடு இருந்ததால் சோதனைக் குழாயில் கருவை உருவாக்கி அதைக் கருப்பையில் செலுத்திக் குழந்தைகள் உருவாக்கப்பட்டன.

 

இப்போது ஆணில் உயிர் அணுவில் அசைவோ, சுறுசுறுப்போ இல்லாவிட்டாலும் இண்ட்ரா சைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்‌ஷன் முறை மூலம் பெண்ணின் கரு முட்டையை ஒரு நுண்ணிய ஊசியினால் பிடித்து மற்றொரு மெல்லிய கண்ணாடி ஊசியின் மூலம் வீரியம் இல்லாத உயிர் அணுவை எடுத்துப் பெண் முட்டையினுள் செலுத்தி செயற்கை முறையில் கருத்தரிப்புச் செய்யப்படுகின்றது. 

பிறந்த உடனேயே ஆண்குழந்தைக்கு விரைக்கொட்டை கீழே இறங்காமல் இருந்தால் இரண்டு ஆண்டுகளுக்குள் அறுவை சிகிச்சை செய்து அதைச் சரியான நிலையில் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் நிரந்தர மலட்டுத்தன்மை ஏற்படும். இதேபோல் விந்து உற்பத்தி இல்லாவிட்டாலும் இம்மருத்துவ முறைகளால் பயன் இல்லை.

 

இடுப்பு அழற்சி நோய், பிறப்புறுப்பு நோய்கள், நார்த்திசுக் கட்டிகளால் ஏற்படும் ஃபைப்ராய்டு எனப்படும் புற்றுநோய், நீர்த்திசுக் கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிடாய், உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாற்றம், கருப்பை நீக்கம், எண்டோமெட்ரியோசிஸ் எனப்படும் கருப்பையைப் பாதிக்கும் பிரச்சனை. இவற்றாலும் கர்ப்பம் தரிப்பது சிரமம். இதனால் தவறான திசு வலி ஏற்பட்டுக் கருவுறுதல் சிரமமாகும்.

 

எண்டோமெட்ரியோஸில் ஏற்பட்டால் கருப்பையின் உட்புறம் வளரவேண்டிய திசுக்கள் கருப்பையின் வெளியே, பின்னால், குடல்கள், சிறுநீர்ப்பை, இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகள், ஃபலோபியன் குழாய்களில் வளரும். இதனால் திசுக்கள் தடித்தல் உடைதல் ஏற்பட்டு அதிக இரத்தப் போக்கு ஏற்படும். ஆனால் சிக்கிய திசுக்கள் வெளியேறாமல் அந்தப் பகுதியை எரிச்சலடையச் செய்து இறுதியில் வடுக்களுக்கு வழிவகுக்கும். இதனால் கருவுறுதலில் பிரச்சனைகள் ஏற்படும்.

 

எண்டோமெட்ரியோஸிஸால் வலி மிகுதல், உடலுறவின் போது வலி, மாதவிடாயின் போது மற்றும் இடைப்பட்ட காலத்திலும் இரத்தப் போக்கு, மனச்சோர்வு, தூங்க இயலாமை, பாலியல் ஆசை குறைதல், மலட்டுத்தன்மை, குமட்டல், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் மூட்டுவலி ஆகியன உண்டாகின்றன. இதற்கு வலி மருந்துகள், பேட்ச்கள் மற்றும் பிறப்புறுப்பு வளையங்கள் போன்ற ஹார்மோன் சிகிச்சைகள், ப்ரோஜெஸ்டின் – ஒன்லி மாத்திரைகள் மற்றும் டானசோல், செயற்கை ஸ்டீராய்டு ஆகியன பரிந்துரைக்கப்படுகின்றன.

 

பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதால் அவை மாதாதிர சுழற்சியை நிறுத்திவிடும் அபாயமும் ஏற்படுகிறது. இந்த நோயைக் கண்டறியவும் கூடுதல் திசுக்களை அகற்றவும் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகின்றது.

 

மயோமெக்டோமி என்பது கருப்பையின் ஆரோக்கியமான திசுக்களை வெளியே எடுக்காமல் நார்த்திசுக் கட்டிகளை அகற்ற மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை. மயோமெக்டோமிக்குப் பிறகும் பெண்கள் கர்ப்பம் தரிக்க முடியும். மயோலிசிஸ் என்பது நார்த்திசுக்கட்டிகளில் ஒரு ஊசி செருகப்பட்டு லேப்ராஸ்கோபி மூலம் வழிநடத்தப்படுகிறது. மின்சாரம் அல்லது முடக்கம் மூலம் நார்த்திசுக்கட்டிகள் அழிக்கப்படுகின்றன. கருப்பை நார்த்திசுக்கட்டி எம்போலைசேஷன் (UFE) என்பது நார்த்திசுக் கட்டிக்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்களில் ஜெல் துகள்களைச் செலுத்தி இரத்த விநியோகத்தைத் தடுக்கப் பயன்படுகின்றது. இதனால் நார்த்திசுக் கட்டி சுருங்கும்.

 

நார்த்திசுக் கட்டிகள் கொண்ட பெண்களும் கர்ப்பம் தரிக்கலாம். ஆனால் பிரசவத்தின் போது சிசேரியன் மூலம் குழந்தைப் பிறக்கும் அபாயம் மற்றவர்களை விட ஆறுமடங்கு அதிகம், நஞ்சுக் கொடி சீர்குலைவு, யோனி சரிவரத் திறக்காமை, பிரசவத்துக்கு முன் நஞ்சுக்கொடி கருப்பையின் சுவரில் இருந்து உடைந்து விடுவது, இது நிகழும்போது கருவுக்குப் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் இருத்தல், குறைப்பிரசவம், போன்றவை நிகழலாம். 

 

ஹிஸ்டரோசல் பிங்கோகிராம் என்பது பெண்களின் கருவுறாமைக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதற்காகச் செய்யப்படும் ஒரு இமேஜிங் செயல்முறை. கருப்பையில் செலுத்தப்படும் கதிரியக்கச் சாயத்தைப் பயன்படுத்தி எக்ஸ்ரே மூலம் காட்சிப்படுத்தப்படும் முறையாகும். பெண்களில் கருவுறாமை என்பது ஹார்மோன், உருவக் கட்டமைப்பு மற்றும் தம்பதிகளுக்கிடையே உள்ள பிரச்சனைகள் சார்ந்ததாகும்.

 

கோல்போஸ்கோபி என்பது கருப்பை வாய், பிறப்புறுப்பு மற்றும் பிறப்புறுப்புக்குழாய் ஆகியவற்றை உருப்பெருக்கிக் கருவி மூலம் ஆய்வு செய்யப் பயன்படுகின்றது.

 

டி&சி என்பது டைலேஷன் மற்றும் க்யூரேட்டேஜ் என்பது கருப்பை வாயை விரிவுபடுத்துவதையும், கருப்பைப் புறணியின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதையும் மேலும் கருப்பையின் உட்பக்கத்தை உரசித் தேய்த்தல் மற்றும் துருவித் தூய்மையாக்குவதையும் குறிக்கின்றது. ஆரம்பகால கருக்கலைப்பு மற்றும் கருப்பையில் எஞ்சி இருக்கும் திசுக்களை அகற்ற இது பயன்படுகிறது. மேற்கண்ட சோதனைகள் மூலம் கருத்தரிக்காமைக்கான காரணங்களைக் கண்டறித்து சிகிச்சை மேற்கொண்டால் அனைவருக்குமே கருத்தரிக்கும் வாய்ப்பு உருவாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...