எனது பதிநான்கு நூல்கள்

புதன், 10 பிப்ரவரி, 2021

காப்புக் கட்டுப் புதுமையும் கார்த்திகைப் புதுமையும் சுவீகாரப் புதுமையும் திருவாதிரைப் புதுமையும்.

 162. 1751. காப்புக்கட்டுப் புதுமை

வீட்டின் முதற்குழந்தைகளுக்கு ( ஆண் & பெண் ) முதலாம் ஆண்டு பிறந்த விழாவை அதை ஒட்டி வரும் ஒரு நன்னாளில் கொண்டாடுவதே ஆதி காலத்தில் காப்புக் கட்டுப் புதுமை. பின்னாட்களில் ஆறேழு வயது வந்ததும் அக்குழந்தைகளுக்குப் புதுமை கொண்டாடினார்கள். 

1752. முதலில் இருப்பது  என் கணவருக்கும் அவர் தங்கைக்கும் கொண்டாடிய காப்புக்கட்டுப் புதுமைக்கான அழைப்பிதழ் . 69 ஆம் வருடம் பங்குனி மாதத்தில் என் கணவருக்கு 7 வயதும், என் நாத்தனாருக்கு ஐந்து வயதும் ஆனபோது கொண்டாடி இருக்கிறார்கள். 

இந்நிகழ்வில் அனைத்து ஆபரணங்களும் அழகிய பட்டு உடைகளும் அணிந்த குழந்தைகளை வெள்ளித்தாம்பாளத்தில்/ தங்கத்தாம்பாளத்தில்  அமரவைத்து திருஷ்டி கழியச் சுற்றும் ஆலத்தி போல் சுற்றி இறக்குவார்கள். விருந்தினர்களும் குழந்தைகளை ஆசீர்வதிப்பார்கள். காலையும் மதியமும் விருந்து இருக்கும். 

 1753. அதன் பின் கார்த்திகைப் புதுமை.

கார்த்திகை மாதம் கொண்டாடப்படும் புதுமைக்குக் கார்த்திகைப் புதுமை என்று பெயர். இது கல்வி கற்கச் செல்லும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்காக நிகழ்த்தப்படும் கொண்டாட்டம். இந்நிகழ்வில் குழந்தைகளுக்கு அழகிய ஆடை அணிவித்து அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குக் குதிரையில் ஏற்றிச் சென்று வணங்க வைத்து அழைத்து வந்து வித்யாப்பியாசம் செய்து வைப்பார்கள். குழந்தைகள் கோயிலுக்கு குதிரையில் ஏறிச் செல்லும்போது விடிகாலை நேரமாக இருப்பதால் குதிரையின் முன்னே 1754*சூள்பிடி ( தீப்பந்தம்போலப் பிடித்துச் செல்வது ) எடுத்துச் செல்வார்கள். இதுவே சூப்பிடி என்று பேச்சு வழக்கில் மருவி உள்ளது. அதன்பின் பள்ளியில் ( ஏட்டுப் பள்ளிக்கூடம், திண்ணைப் பள்ளிக்கூடம் ) சேர்ப்பார்கள். 

///குழந்தைகளுக்கு வரும் முதல் பிறந்தநாளை புதுமை எனக் கொண்டாடுகிறார்கள். முதன் முதல் பள்ளி செல்லும் போது பிள்ளைகளை கார்த்திகைத் திருநாளில் வீடுகளில் வாழை நட்டு  விளக்கேற்றி விநாயகர் கோயிலுக்கோ, சிவாலயத்துக்கோ குதிரை ஏற்றிச் சென்று சோதி தரிசனம் செய்து வரச் செய்கிறார்கள். இதை சூள்பிடி ( சூப்பிடி என்று இப்போது பேச்சு வழக்கு மருவி விட்டது ) என்ற அணையாத லாந்தர் விளக்குகள், மெழுகுதிரி விளக்குகளைக் குதிரை முன் பிடித்துக் கொண்டு கோயிலுக்கு அழைத்துச் சென்று வருவார்கள்.////

1755*திருவாதிரைப் புதுமை என்பது பாவை நோன்பு போல மார்கழி மாதம் திருவாதிரையின்போது கொண்டாடப்படுவது. பருவ வயதில் அல்லது எட்டிலிருந்து பதின்பருவங்களில் இருக்கும் குழந்தைகளுக்குப் பட்டுச் சிற்றாடை கட்டி ( தாவணி போல் ஒன்று, புடவையை விட கஜம் குறைவாக இருக்கும் ) ஜம்பர் ரவிக்கை போட்டு நெத்திச் சுட்டியில் இருந்து வைரப்பதக்கம் வெள்ளிக் கொலுசு ஈறாய நகைகள் போட்டு அழகு படுத்தித் திருவாதிரைப் பாடல்கள் பாடுவார்கள்.  

1756*திருவாதிரைப் புதுமையின்போது  திருவாதிரைப் பெண்ணின் கையை மாமக்காரர் பிடித்து 108 முறை எழுத்தாணியால் திருவாதிரைத் தோசையக் குத்துவது.

இதை இங்கேயும் பாருங்க. 

மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.
 இந்தக் காப்புக்கட்டுப் புதுமை என்பது குழந்தைகளுக்குத் தெய்வத்தின் துணையைக் காப்பாகப் பெறுவது. 

இது என் மாமனாருக்கும் அவரது சகோதரியாருக்கும் நடந்த காப்புக்கட்டுப் புதுமை அழைப்பிதழ். 1944 ஆம் வருடம்.

1757*இது என் கணவரின் அத்தை மகன் , மகளுக்கு நடந்த காப்புக்கட்டுப் புதுமைக்கு வந்தவர்களுக்கு அளித்த தாம்பூலப் பை. 1958 ஆம் வருடம். 


1758* சுவீகாரப் புதுமை. சுவீகாரம் கூட்டுவதை சுவீகாரப் புதுமை என்பார்கள். என் சித்தப்பாவைப் 1759*பிள்ளை கூட்டியபோது எடுத்தது. இராங்கியத்துக்குப் 1760*பிள்ளை வளரச் சென்றபோது எடுத்தது. 


நகரத்தார் வரலாறு நூல் :- தலை முதல் கால் வரை வைரநகை அணிந்த மகளிர் மார்கழித் திருவாதிரைப் புதுமை ( மணிவாசகரின் மார்கழி நீராடல் என்ற திருவெம்பாவையை ஆதாரமாக வைத்து ) கொண்டாடுகிறார்கள்திரஸ்டன் , நெல்சன் ஆகிய சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இது பற்றி எழுதி இருப்பதாகவும் இது பற்றிய புகைப்படங்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இதில் இருப்பவர்கள் எனது அத்தைகள். வசந்தா அத்தை & மீனா அத்தை,  பெரிய அத்தை சரஸ்வதி & சின்ன அத்தை ருக்மணி. இதில் சித்தாடை எனப்படும் அரைப் புடவை அளவுள்ள தாவணிகளை அணிந்திருப்பார்கள். காசுமாலை, மாங்காய் மாலை போன்றவற்றையும் இன்னும் ஒட்டியாணம், காப்பு, டோலக் , ப்ரேஸ்லெட், புரூச் போன்ற எல்லா நகைகளையும் அணிந்திருப்பார்கள்.  

இதை இங்கேயும் பாருங்க. 

காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.

2 கருத்துகள்:

  1. நன்றி விக்னேஷ் எம் சிதம்பரம்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...