பிடிமண்
ரோட்டை
ஒட்டிய பாலத்தின் அடியில் இருந்தது அந்தப் பெட்டிக் கடை. அந்த ரோட்டின் மேலேயே பாலத்தின்
கைப்பிடிச் சுவரில் ஒரு பிள்ளையார் கோவிலும் இருந்தது. பெட்டிக்கடைக்காரரே பிள்ளையார்
கோவிலையும் பூசாரி போல் பார்த்துக் கொண்டு இருந்தார். இன்னோவாவை விட்டு இறங்கிக் கடைக்கருகே
சென்று விசாரித்தார் பழனி, “இங்கே ராஜநாயகம்கிறது யாரு ?” ”நாந்தான்” என்று பெட்டிக்
கடை ஓலையைப் பிடித்தபடி எழுந்து சரிவான பாதையில் மேலேறி வந்தார் கடைக்காரர்.
”இங்க ஜாதகம் எல்லாம் பார்க்கிறதுன்னு சொன்னாங்களே”,ஐயத்தோடு கேட்டார் பழனி. “ஆமா நாந்தான் பார்ப்பேன். இருங்க வரேன். என்றவர் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டு இவருக்கும் நீட்டினார். ”இல்லங்க வேண்டாம். ஒரு ஜாதகம் பார்க்கணும்”
”உள்ள வாங்க. உக்காருங்க” என்று கடையின் உள்ளே அழைத்தவர் ஒரு
ஸ்டூலை எடுத்துப் போட்டார். அங்கே இருந்த இன்னொரு ஸ்டூலில் தான் அமர்ந்து கொண்டு கண்களை
ஓரிரு கணங்கள் மூடிக் கொண்டார். இவர் ஜாதகத்தைக் கொடுப்பதற்காகப் பையில் இருந்து எடுக்கக்
கண்ணைத் திறந்த அவர் ”ஜாதகம் எல்லாம் வேண்டாம். பிறந்த தேதி வருஷம், ஆணா, பெண்ணான்னு
மட்டும் சொல்லுங்க. மிச்சதை நான் சொல்லுறேன்.”
ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொண்ட அவர் இவர் சொல்லச் சொல்ல
வருஷம், மாதம், தேதி, நேரம், ஆண் என்பதையும் குறித்துக் கொண்டார். பின்பு வேறெதுவும்
பேசாமல் எழுத ஆரம்பித்தார். கிட்டத்தட்ட மூன்று பக்கம் இருக்கும். மேலே இருந்த வேப்பமரத்துக்
குயில் கூவியது. இரண்டு மூன்று வண்டிகள் பாலத்தைக் கடந்தன. பக்கத்திலிருந்த குல்மோஹர்
மரத்திலிருந்து செந்நிறப் பூக்கள் உதிர்ந்து உதிர்ந்து குடிசையின் பக்கமாகக் குவிந்து
கிடந்தன. வேப்பம் பழங்களின் கசப்பான இனிப்பு வாசம் வீசியது.
ஒருவழியாக முடித்த அவர் அந்தப் பேப்பரை பழனியிடம் நீட்டினார்.
இவர் வாங்கியதும் அதில் தான் எழுதி இருந்ததைக் கோர்வையாகச் சொல்ல ஆரம்பித்தார். “உங்க
பையனுக்கு 32 வயசு ஆகுது. திருமணம் ஆகி விவாகரத்தாகி இருக்கும். தம்பதிகளுக்குள்ள ஒத்தும
இல்ல. பொண்ணு கொணக்கேடு. கட்டாயப் படுத்திச் சேர்ந்து இருந்தா பையனும் கொணக்கேடாப்
போயிருப்பான். அவன் பிரிஞ்சு வந்ததே சரி. ”
’எல்லாம் உண்மைதான்’ என்பது போலப் பழனி பார்க்க மேலும் தொடர்ந்தார்
ராஜநாயகம், “உங்க பையனுக்கு இன்னொரு திருமணம் உண்டு. ரெண்டு பிள்ளைங்க பொறப்பாங்க.
வடக்கு வடகிழக்குத் திசையிலேருந்து பொண்ணு வரும். அவங்களே இஷ்டப்பட்டு வந்து செய்வாங்க.
கவலைப் படாதீங்க நல்லா இருப்பாங்க. இவருக்கு ஆயுள் தீர்க்கமா இருக்கு.” நிறுத்திப்
பழனியின் முகத்தைப் பார்த்தார்.
”ஆனா ஒரு சாபம் இருக்கு உங்க குடும்பத்துல. மூணு தலமொறைக்கு
முந்தி உங்க குடும்பத்துல அண்ணன் தம்பி ரெண்டு பேர் தனது சகோதரிக்குக் கொடுக்க வேண்டிய
சொத்துக்களைக் கொடுக்காததுனால அவங்க கோபமாகி வீட்டு முன்னாடி நின்னு மண்ணை வாரி எறைச்சுச்
சாபமிட்டுட்டாங்க. மேக்கொண்டு புருசனோட கருப்பு கோயில்ல போயி காணிக்கை வைச்சு வேண்டிக்கிட்டுப்
போயிட்டாங்க. அந்த சாபம் உங்க குடும்பத்து மூத்த வாரிசான இவரத் தாக்குது. இன்னும் கூட
உங்களுக்கு ஒடம்பொறப்பு மூணு பேர் உண்டு. அவங்க வாரிசுகளும் செறப்பா வாழல.” கேட்டதும்
சொரேர் என்றது பழனிக்கு. உண்மைதான்.
ராஜநாயகம் தொடர்ந்தார், ”நீங்க இதுக்குப் பரிகாரமா உங்க ஊர்
கருப்பர் கோயில்ல போய் கெடா வெட்டிப் பூசை போட்டு சாமியக் கும்பிட்டு ஒருபிடி மண் எடுத்து
வீட்டுக்குக் கொண்டு போயி மஞ்சத் துணியில முடிஞ்சு வைச்சுக் கும்பிடுங்க. ஒங்க ஒடம்பொறப்புக
வீட்டுலயும் சொல்லுங்க. முப்பது நாளில் மாற்றம் வரும். எல்லாம் சரியாயிரும்.”
“ரொம்ப நன்றிங்கையா” என்று சொல்லி எவ்வளவு என்று கேட்காமல் ராஜநாயகம்
கையில் ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்துவிட்டுப் பழனி கிளம்பினார். ’மூணு தலைமொறைக்கு
முந்தின்னா முத்துப் பேச்சிப் பாட்டியோ. அதுக்கு அப்புறம் நம்ம குடும்பத்துல பெண் வாரிசே
இல்லையே. தாத்தாவோட தம்பி கருப்புசாமி தாத்தாவுக்குப் புள்ளையே இல்லாமப் போயிச் சேர்ந்தாரு. கருப்பையா
தாத்தாவுக்கு அப்பா ஒரே புள்ள. தாத்தா ரெண்டு பேரும் இப்ப இல்ல. ஏன் அப்பா போயே பத்து
வருசம் ஆச்சே. அப்பாவுக்கு அத்தைன்னா தொண்ணூறு வயசுக்கு மேல இருக்குமே. இப்ப அதுவே
இருக்குதோ இல்லியோ.’ பலவித சிந்தனைகளோடு வீடு வந்து சேர்ந்தார் பழனி.
தம்பிகள்
நால்வருக்கும் ஃபோனைப் போட்டார். ”கருப்பர் கோயில்ல கெடா வெட்டா. ஊருக்குப் போயே பல
வருசம் ஆச்சே அண்ணே.” என்றார் மூத்த தம்பி. ஜோசியம் பார்த்த விபரம் எல்லாம் சொன்னார்
பழனி. நான் மட்டும் போறத விட நீங்க மூணு பேருமே வந்தா நல்லா இருக்கும்டா. ஏன் நாம எல்லாரும்
குடும்பமாக் கூடப் போயிக் கும்புட்டு வரலாம். நா சின்னப் புள்ளையா இருந்தபோது தாத்தா
காலத்துல கெடா வெட்டுக்குப் போயிருக்கேண்டா. நம்ம குலதெய்வத்தை வணங்காததும் கூட நமக்கு
இப்பிடிப் பிரச்சனை வரக் காரணமோ என்னமோ”. சரிதான் அண்ணா என்று சொன்னார் மூத்த தம்பி.
அடுத்த தம்பிகளுக்கும் ஃபோனைப் போட்டு விபரம் சொன்னார் பழனி. நால்வருக்கும் அவர்கள்
பிள்ளைகளுக்கும் தோதான நாளில் போவது என்பது முடிவானது.
சர் சர்ரென்னு
வந்து இறங்கின இன்னோவா கார்கள் நான்கும். கோடை வெய்யில் பிளந்து கொண்டிருந்தது. பிரம்மாண்டப்
புரவி கோவில் வாயிலில் நின்று கொண்டிருக்க சுற்றிலும் நூற்றுக்கணக்கான வேண்டுதல் புரவிகள்
அணிவகுத்தன. அரிவாள்களும் கண்காட்சி வரிசை போல நடப்பட்டு இருந்தன. பழனியும் அவரது நான்கு
சகோதரர்களும் அவர்களது குடும்பத்தினரும் கோயிலுக்குள்ளே சென்றனர்.
உக்கிரமான முத்துக் கருப்பண்ணசாமி அபிஷேகம் முடிந்து முண்டாசுக்
கட்டும் முழுவெள்ளை வெட்டுமாகப் புருவங்கள் நெரிய, கருமீசை துடிக்கச் சந்தனக் காப்பில்
மிரட்டினார். பார்த்ததும் பரவசத்தில் அண்ணன் தம்பிகள் நால்வரும் விழுந்து விழுந்து
கும்பிட்டார்கள். ஒரே ஊதுவத்தி வாசமும் சாம்பிராணி வாசமுமாக நிரம்பி இருந்தது. கெடாவெட்டு
முடிந்து வந்த எல்லாரும் கெடாச்சோறு சாப்பிட்டார்கள். புறப்படும் நேரம் வந்தது. வீட்டில்
வைத்துக் கும்பிட நான்கு குடும்பத்தாரும் மஞ்சள் துணியில் பிடி மண் எடுத்து முடிந்து
கொண்டார்கள். ’அவ்வளவுதானா.. எல்லாம் சரியாயிடுமா’ பழனிக்கு யோசனை வந்தது.
தம்பிகளைப் பார்த்துக் கேட்டார், “சாட்சிக்காரன் கால்ல விழுந்துட்டோம்.
சண்டைக்காரன் கால்லயும் விழுந்துட்டா என்னங்கடா?” நால்வருக்கும் எத்தைத் தின்னால் பித்தம்
தெளியும் என்கிற நிலைமை. பழனியின் பையனுக்கு விவாகரத்து என்றால் இரண்டாவது தம்பியின்
மகனுக்குத் திருமணம் ஆகியும் குழந்தை இல்லை. மூன்றாவது தம்பி மகனின் குழந்தை ஐந்து
வயதாகியும் பேசவில்லை. ஏதோ ஆட்டிசக் குறைபாடு என்றார்கள். நான்காவது தம்பியின் மகனுக்குத்
திருமணமே கூடி வரவில்லை.
“என்னண்ணே சொல்றீங்க” என்றார் இரண்டாவது தம்பி. “அப்பாவோட அத்தை
முத்துப் பேச்சிப் பாட்டி மகவூட்ல இருக்குன்னாங்களே. இங்க பக்கத்துல சிங்கம்புடாரில
தானே இருக்கு அது மக வீடு.” என்று பழனி கேட்க “ஆமாண்ணே. அதுக்குத் தொண்ணூறு வயசிருக்கும்.
புருஷனும் போயிட்டாராம். வீடும் கூட இடிஞ்சு போயிடுச்சாமாம். ஒரே மகதான். அதுக்கும்
ஒரே பய. அவனும் கூட சூட்டிகையான பய இல்லன்னு சொன்னாங்க. அவனுக்கே நம்ம வயசிருக்கும்
” மூன்றாவது தம்பி சொல்லவும் வியப்பாகப் பார்த்தார்.
’எனக்கே தெரியாது. எம்புட்டு விசயம் தெரிஞ்சு வைச்சிருக்கானுவ.’
’புள்ளக வாழ்க்கை சரியில்லைன்னா நம்ம மேல எந்தக் கோளாறும் இல்லாங் காட்டியும் எதுனால
கெட்டுப் போச்சு, என்ன காரணம், ஏது கோளாறுன்னுதானே மனசு தேடுது. முன்னோர் சாபம் சும்மா
விடாதுங்குறாங்களே. அது உண்மையாத்தானே இருக்கு’ வழி நெடுக நால்வருக்கும் இதே சிந்தனைதான்.
நால்வர் குடும்பமும் காரில் ஏறி வழி விசாரித்து முத்து வடுகநாதர்
கோயிலுக்கு அருகில் இருந்த முத்துப் பேச்சிப் பாட்டியின் மகள் வீட்டுக்குச் சென்றார்கள்.
சின்ன ஓட்டு வீடு. வாசலில் சாக்குப் படுதா தொங்கியது. உள்ளே பாட்டி ஒரு நைந்த கயிற்றுக்கட்டிலில்
படுத்திருந்தது. பாட்டியின் மகளும் பேரனும் வீட்டுக்கு வந்த எல்லாரையும் மிரண்டு போய்ப்
பார்த்தார்கள்.
கொண்டு போன பழம் இனிப்புக்களோடு ஒரு சில ரூபாய் நோட்டுக் கட்டுக்களையும்
ஒரு தட்டில் வைத்துப் பாட்டியின் மகளிடம் கொடுத்து விட்டு அனைவரும் தரையில் அமர்ந்தார்கள்.
பழனி அங்கே இருந்த ஒரு சின்ன ஸ்டூலை இழுத்துப் போட்டுப் பாட்டியின் அருகில் அமர்ந்தார்.
மகளின் உதவியால் முத்துப் பேச்சிப் பாட்டி எழுந்து தலையணையில் சரிந்து அமர்ந்தது. ”பாட்டி நா பழனி. இவனுங்க எந்தம்பிங்க. உங்க தம்பி
கருப்பையாவோட பேரனுங்க.”
“கருப்பையாவும் கருப்பசாமியும் வரலியா?” தழுதழுத்தபடி பாட்டி
கேட்க, “பாட்டி அவுங்க எல்லாம் எப்பவோ போயிட்டாங்க. எங்க அப்பா முத்துக் கருப்பன்.
அவரு போயியே பத்துவருசம் ஆச்சே.”. காய்ந்து சுருங்கிப் போயிருந்த பாட்டியின் முகம்
இன்னும் கவலையாய் மாறியது. கண்களில் கலங்கலாக நீர்கோர்க்க “ஐயோ சாமி. என்ன கொடுமை இது.
அவனுகளே இல்லியா. அத்த அத்தன்னு என் முந்தியப் புடிச்சிக்கிட்டுச் சுத்திச் சுத்தி
வருவான் முத்துக் கருப்பன் அவனுமா இல்லை.” என்று கைகூப்பி அழுதது.
பாட்டியின் கைகளை ஆதரவாகப் பிடித்த பழனி, “பாட்டி இங்க ஏன் கஷ்டப்பட்டுட்டு
இருக்கீங்க. மகளயும் பேரனையும் கூட்டிக்கிட்டு நம்ம ஊருக்கு நம்ம வீட்டுக்கு வாங்க.
எங்களோட இருக்கலாம். ஒங்க வீடுதானே அது” “கெட்டிக் கொடுத்த பின்னாடி அங்க எனக்கு ஏது
பாத்தியதை. அதைத்தானே என் அண்ணந்தம்பிங்க சொல்லி வெரட்டினாங்க. புருஷன் சொன்னாருன்னு
புத்தி கெட்டுப் போயி நாவேற அங்க வந்து மண்ண வாரி வீசிட்டேன். கருப்பு கோயில்ல காணிக்கையும்
போட்டுட்டேன். மன்னிப்புக் கேக்கக் கூட அங்க எனக்குன்னு யாருமில்லையே. மன்னிச்சிருங்க
ராசாக்களா.”
“ஐயோ பாட்டி. நாங்கதான் ஒங்ககிட்ட மன்னிப்புக் கேக்கணும். அதுக்குத்தான்
வந்தோம். பாருங்க, பொம்பளப் புள்ளங்களச் சீராட்டாத வீடு பாலவனமாய்ப் போயிருங்கிற மாதிரி
எங்க நாலு பேரோட நாலு புள்ளங்களும் செழிக்காமப் போயிட்டாங்களே.” கண்கலங்கினார் பழனி.
தம்பிகளும் கலங்கிப் போய்த்தான் இருந்தார்கள்.
பழனியின் கையைப் பிடித்துக் கொண்ட பாட்டி,”ஐயா ராசாக்களா, அப்ப
எங்கோவம் அவய்ங்களோட்ட மட்டும்தான் இருந்துச்சு. நீங்க எல்லாம் நல்லாச் செழிக்கோணும்
சாமி. இப்ப எங்கொறைன்னு ஏதுமே இல்ல சாமி. நீங்கள்ளாம் எங்க வீட்டுக் குஞ்சு குளுவானுங்க.
ஒங்களுக்கு ஒரு கொறைய நா நெனைப்பனா சாமி.”
”அம்புட்டையும் அந்தக் கருப்பு சரி பண்ணிருவாரு. நா இங்கேருந்தே
வேண்டிக்கிறேன். ஐயா முத்துக் கருப்பண்ணசாமி என் தப்பெல்லாம் மன்னிச்சிருய்யா. இந்தப்
புள்ளைக வாழோணும். எந் தாய் தகப்பன் வீடு செழிக்கோணும்.” சன்னதம் வந்தது போல் உரத்துச்
சத்தமிட்ட முத்துப் பேச்சிப் பாட்டி “இப்ப நீங்கள்ளாம் போயி இங்கன இருக்குற முத்துவடுகநாதரக்
கும்பிட்டு வேண்டிக்கிட்டுப் போங்க. எல்லாரும் நல்லாயிருப்பீங்க” இடக்கையால் தன் வலக்கைமேல்
சாய்ந்த பழனியின் தலையைத் தடவிக் கொடுத்தார்.
அவரது கண்ணீர் முத்துப் பேச்சிப் பாட்டியின் கைகளை நனைத்தது.
அனைவரும் பாட்டி காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டார்கள். அனைவரையும் பரவசத்துடன்
தடவிக் கொடுத்தது பாட்டி. எல்லோரும் புறப்பட்டு வீட்டுக்கு வெளியே வந்து காரில் ஏறும்போது
பழனி திரும்பப் பாட்டி வீட்டு வாசலுக்கு வந்தார். நான்கு பிடி மண்ணை அள்ளித் தன் கைக்குட்டையில்
முடிந்தார். இப்போது சகோதரர் நால்வரின் கார்களும் மனநிம்மதியுடன் கிளம்பின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)