எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 27 மார்ச், 2026

சோகி சிவா - 1


1

 ரெட் ஆக்ஸைட் தடவிய பத்தியில் அமர்ந்து வெள்ளைச்சீலையின் முந்தானைக்குள் இடது கையால் ருத்ராட்சத்தைப் பிடித்து வலதுகையால் உருட்டி எண்ணியபடி வாய்க்குள் பஞ்சாட்சரம் ஓதிக்கொண்டிருந்தாக சோகி ஆச்சி. மந்திரத்தை வாய்க்குள் முணங்கிக்கொண்டே அங்குமிங்கும் பார்வையை ஓட விட்டுக் கொண்டிருந்தாக. உபதேசம் கேட்டதால் உடலின் பதினாறு இடங்களிலும் விபூதிப்பட்டைகள் வெளீரிட்டுக் கொண்டிருந்தன.

நடுவாசலில் பெரிய ஆர்லிக்ஸ் பாட்டிலில் வகிர்ந்து உப்புப்போட்டு நீரில் ஊறவைத்த நார்த்தங்காய்கள் வேடுகட்டி வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்ததன. இன்னொரு பங்குக்காரியான உலகியின் பேரன் பேத்திப் பட்டாளம் லீவுக்கு வந்திருந்தது. வெய்யில் ஏற ஏற நார்த்தங்காயின் வாசமும் மேலேறி மணத்துக் கொண்டிருந்தது.

சேட்டை பிடித்த வானரங்கள் ஒவ்வொன்றும் கல்தூணில் நாகத்தில் ஏறுவதும் பின் பட்டியக்கல் விட்டுப் பட்டியக்கல் ஓடுவதுமாகத் திரிந்தன. ’இன்னும் ஒன்னரை மாசமாகும் இதுக எல்லாம் பள்ளிக்கோடம் போக’. அதுவரைக்கும்  இங்கே ஆட்டபாட்டம்தான்.

’வெய்யில் வீணாய்ப் போகுமே’ என்று தினம் ஒன்றைக் காயவைப்பதும் பிள்ளைகளை மிரட்டுவதும் சோகி ஆச்சியின் வேலை. நேத்திக்கு எல்லாம் கத்திரிவத்தலும் அவரை வத்தலும்தான் காய்ந்தன .கொட்டிப்போனாலும் பொறுக்கி வைக்கலாம். இன்னிக்கு ஆர்லிக்ஸ் பாட்டிலில் ஊறிய நார்த்தங்காய், திருவையாறிலிருந்து அவுக ஒண்ணுவிட்ட பெரியப்பச்சி மகமிண்டி கொண்டாந்தது. ஒரு வாரமா உப்பில் ஊறிய அது இன்னிக்குத்தான் வெய்யிலைப் பார்த்திருந்தது.

காய்ச்சல் அடிச்சால் சோகியாச்சி இந்த ஊறுகாயில் ஒரு துண்டைப் பிய்ச்சுத்தான் ஒடைகஞ்சியில் கரைச்சுக் குடிப்பாக. ஆச்சி தாம்பாளத்தையும் பஞ்சபாத்திரத்தையும் உத்தரிணியையும் எடுத்துக்கினு சாமி வீட்டைப் பூட்டிக்கொண்டு சமையலறையில் வைக்கப் போனாக.

சாமிவீட்டுச் சாவியை மூன்று முறை திருகி ’லடக் லடக்’ என்று பூட்டுவதற்குள் கீழ்வாசலில் ஏதோ களேபரம். “ஆயா இந்த சோமு உங்க ஊறுகா பாட்டிலத் தள்ளிவிட்டுட்டான் “ கல்லா மண்ணா ஆடிக்கொண்டிருந்த அனைத்தும் விதிர்விதிர்த்து நின்றன. சோமு பதறி “ இல்ல ஆயா நான் சுத்தித்தான் ஓடினேன். இந்த அழகுதான் தள்ளிவிட்டான் “ என்றான்.

என்ன தெய்வாதீனமோ உருளச் சாய்ந்த ஹார்லிக்ஸ் பாட்டில் அதைச் சுற்றிக் கனமாக வேடு கட்டியிருந்த வேட்டியின் பலத்தில் படுக்கை வசத்தில் உருண்டபடியே இருந்தது. உப்பில் ஊறிய தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாகக் கசிய ஆரம்பிக்க அனைத்தும் வளவில் இருந்து அவுக ஆயாவீட்டு அடுப்படிக்கு ஓடின.

வேகமாகப் போய் பாட்டிலைப் பிடித்து நிமிர்த்திய சோகி ஆச்சி, “ அடப் பாயிவரப்பாய்ங்களா, பட்டுக்கிடப்பாய்ங்களா இத ஒடைக்கன்னு வந்திருக்காய்ங்க பாரு “ என்று  திட்டிக்கினே எடுத்துக்கிட்டுப் போனாக.

அவுக அடுப்படிக்கு எதிர் அடுப்படிதான் உலகி ஆச்சி வீட்டு அடுப்படி. அவுக வீட்டில எப்பவும் புள்ளையும் குட்டியும் குஞ்சும் குளுவானுமா இருக்கும். எந்நேரமும் எதாவது வெந்துக்கினே இருக்கும். ஆக்கி அவிச்ச மணியமா இருக்கும். நாள் கிழமைன்னு இல்ல எந்த நாளும் நாலு பேராவது அடுப்படிப் பத்தியில் உக்கார்ந்து உண்ணுக்கினே இருப்பாக.

சீசாவைத் தடவித் தடவிப் பார்த்தாக சோகி ஆச்சி. ஒரு இடத்துல கொஞ்சம் தெறிச்சாப்புல இருந்ததால மோர்மான் ஜாடில ஒவ்வொரு நார்த்தங்காயா எடுத்து வைச்சிக்கினு இருந்தாக சோகி ஆச்சி . ”ஆச்சி புள்ளக தெரியாம தள்ளிப்புடுச்சுக நீங்க அந்த ரெண்டாங்கட்டுப் பட்டியக்கல்லுல வைச்சீகன்னா புள்ளக அங்கன போகமாட்டாக.” அப்பிடின்னாக உலகி ஆச்சி.

”சீசா தெறிச்சுப் போச்சு . அருமையான சீசா. நான் ஊறுகா போட்டா இதுல வைச்சுக் காயவைச்சுத்தான் பீங்கான் ஜாடிக்கோ மோர்மான் ஜாடிக்கோ மாத்துவேன். அருமையான சீசா எங்கல்யாணத்துக்கு சீர்ல வைச்சது. அப்பச்சி மலயாவிலேருந்து ஆர்லிக்ஸ் வாங்கியாந்தா இதுலதான் அள்ளி வைப்போம். மூடில பேர் அடிச்சிருப்பாக “ என்று மூடியைக் காட்டி அதன் பெருமைகளை கோவமாகவும் சலிச்சபடியும் சொன்னாக சோகி ஆச்சி.

’என்ன பண்ணுவது’ என்று பரிதவிப்போடு பார்த்துக்கினு இருந்தாக உலகி ஆச்சி. வேற சீசா கொடுத்தாலும் சோகி ஆச்சி சமாதானப்படப் போவதில்லை. அமைதி காத்துவிட்டுத் தன் அடுப்படிக்குத் திரும்பி அங்கே அடங்கி ஒடுங்கி அமர்ந்திருந்த பேரன் பேத்திகளிடம் “அட அரசாளுவைகளா.. சும்மாவே கெடக்க மாட்டேங்குறீக. தெனம் ஒரு ரோதனையாப் போச்சு. இனி எதையாச்சும் ஒடைச்சீகன்னா ஒங்க ஆத்தா வரும்போது சொல்லிர வேண்டியதுதான். அவ வந்து சாத்துனாத்தான் சரிப்படும் “.

“அட விடுங்காச்சி. சின்னப் புள்ளைகளுக்குத் தெரியுமா . அதுக ஆடத்தான் செய்யும். எப்பப்பாரு எதையாவது ஒண்ணைக் காயவைக்கணும். ஒரண்டை இழுக்கணும். இதே பொழைப்பாய்ப் போச்சு அந்தாச்சிக்கு. ஏன் அடுப்படிக்குள்ள மத்யானம் வரைக்கும் வெய்யில் விழுகுதுல்ல அதுல வைக்கலாமில்ல. இத வெளியில வைக்கிறதே சோதிச்சுப் பார்க்குறதுக்குத்தான். சாமியக் கும்பிட்டுக்கிட்டே ஒரு கண்ணைத் தொறந்து தொறந்து பார்த்துக்கினு இருக்காக. பொருளை மனுச மாதிரிப் பாதுகாக்குறாக. மனுசரப் பொருள் மாதிரி நடத்துறாக . அவுக வாழ்க்கையைப் பார்த்தாலே தெரியலையா. விடுங்காச்சி “ என்று சொல்லிப் போனாள் மேவேலை செய்யும் சோலை.

இதைக் கேட்டுக்கொண்டே வந்த சோகி ஆச்சிக்கு மனசெல்லாம் எரிந்தது. ’வேலைக்காரி கூட நம்மளப் பேசுறாளே. அவ்வளவு எடம் கொடுத்து வைச்சிருக்காக. ’நாம பிறந்த ஓவியம் என்ன? வளந்த ஓவியம் என்ன? வாக்கப்பட்ட ஓவியம் என்ன ?’ என்று நினைத்துக் கொண்டே அடுப்படிக் கதவை அறைந்து சாத்திக் கொக்கி போட்டுவிட்டு அங்கே இருந்த பெஞ்சுக் கட்டிலில் சாய்ஞ்சாக..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...