சாதாரணாமாகவே பிறருக்கு நாம் ஒன்றைக் கொடுக்க வேண்டுமென்றால் நல்லதையே கொடுக்க வேண்டும். அதுவும் அவதார புருஷனான இராமபிரான் வரப்போகிறார் என்றால் அவருக்கு சிறப்பானதைத்தானே கொடுக்க வேண்டும். அதனால் மரங்களிலிருந்து நல்ல பழங்களைப் பறித்துக் கொண்டிருக்கிறாள் அந்த வேடுவப் பெண். ஓராண்டு ஈராண்டல்ல எட்டு வயதிலிருந்தே அவள் தினமும் அப்படி என்ன சிறப்பான பழங்களை சேகரிக்கிறாள் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ரிஷியமுகம் ஆசிரமம். அங்கே முனிபுங்கவர்கள் ரிஷிகள் வேதம் ஓதும் சப்தமும், ஹோமத்தின் புகையும் வானோங்குகிறது. இதுதான் சரியான இடம் என்று மதங்க முனிவரின் குடிலுக்கருகில் சென்று அமர்கிறாள் ஒரு சின்னஞ்சிறுமி. அவளுக்கு எட்டு வயதிருக்கும். காதோலைக் குருத்தணிந்து தலையை சேவற்கொண்டையிட்டு காலில் தண்டையயும் அரையில் சிற்றாடையும் அணிந்த அப்பெண்ணின் முகத்தில் தேஜஸ் ஒளிவிடுகிறது.
திருமண சமயம் வீட்டை விட்டு ஆசிரமத்துக்கு ஓடி வந்த அவளைத் தேடி அவளது வேடுவத் தந்தை வருகிறார். ”அம்மாடி பெண்ணே. உன் விருப்பத்துக்கு மாறா திருமணம் செய்யமாட்டோம். நீ ஆசைப்பட்டபடி எந்த ஆட்டையும் பலி கொடுக்காம ஆயிரம் ஆட்டையும் விடுதலை செய்து விட்டுட்டோம். நீ திரும்ப வீட்டுக்கு வா “ என்கிறார். மகளோ மறுக்கிறாள்.
